சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, March 24, 2025

யோகி 95

 

ஷ்ரவன் குமரேசனிடம் கேட்டான். “அந்த ஆடிட்டர் தனியாய் வர்றாரா, இல்லை அவரோட சேர்ந்து வேற ஆட்களும் வர்றாங்களா?”

 

குமரேசன் சொன்னான். ”பெரும்பாலும் அவர் தனியாய் தான் வர்றார். ஆனால் சில சமயங்களில் அவர் கூட வேறு யாராவது ஒருத்தர் அல்லது இரண்டு பேர் வர்றதுண்டு.”

 

ஷ்ரவன் ஆடிட்டர் திவாகரனைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தான். அவர் சென்னையில் மிகப் பிரபலமான ஆடிட்டர் என்பதும், பல முன்னணி நிறுவனங்களின் ஆடிட்டராக இருக்கிறார் என்பதும் தெரிய வந்தது. செல்வந்தராக இருக்கும் அவரை அவர் மனைவி மூன்று வருடங்களுக்கு முன் விவாகரத்து செய்து விட்டார் என்றும், அவரது ஒரே மகள், தன் தாயுடன் வசிக்கிறாள் என்பதும் தெரிந்தது.

 

திவாகரன் யோகாலயத்துக்கு வெறும் ஆடிட்டர் மட்டும் தானா, இல்லை கூடுதலாய் ஏதாவது இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆடிட்டர் திவாகரன் மீது இதுவரை எந்தப் புகாரும், சட்டவிரோதத்திற்கான நடவடிக்கையும் இல்லை. ஷ்ரவன் ஒரு நபருக்குப் போன் செய்து ஆடிட்டர் திவாகரன், யோகாலயம் தவிர யாருக்கெல்லாம் ஆடிட்டராக இருக்கிறார் என்ற தகவல்களை அனுப்பச் சொன்னான்.    

 

இரண்டு மணி நேரத்தில் விரிவான தகவல்கள் ஷ்ரவனுக்கு மின்னஞ்சலில் வந்து சேர்ந்தன. ஆடிட்டர் திவாகரனின்திவாகரன் & அஸ்ஸோசியேட்ஸ்அவர் ஏழு சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட்கள் கொண்ட குழு. திவாகரன் & அஸ்ஸோசியேட்ஸில் 23 பேர் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் 15 பேர் சி..இண்டர் முடித்தவர்கள். “திவாகரன் & அஸ்ஸோசியேட்ஸ்”  தமிழ்நாட்டின் பெரிய நிறுவனங்கள் சிலவற்றுக்கும், சிறிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பலருக்கும் ஆடிட்டர்களாக இருக்கிறார்கள் என்று ஆரம்பித்து மிகச்சிறிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தவிர அவர்களுடைய மற்ற எல்லா வாடிக்கையாளர்களின் பெயர்கள் விலாசங்கள் அந்த மின்னஞ்சலில் இருந்தன

 

அவற்றை எல்லாம் ஷ்ரவன் நிதானமாகப் படித்தான். டாக்டர் சுகுமாரனின் செவென் ஸ்டார்ஸ் மருத்துவமனையும் அந்தப் பட்டியலில் இருந்தது.  அந்தப் பட்டியலில் சந்தேகத்தைக் கிளப்பும்படியாக எதுவும் வெளிப்படையாகத் தெரியவில்லை. ஆடிட்டர் திவாகரனின் வாடிக்கையாளர்களை ஆராய்வது யோகாலய வழக்குக்கு உதவுமா என்பதும் தெரியவில்லை.  ஆனாலும் குற்றவாளிகளுடன் நெருக்கமாய் இருக்கும் ஒரு நபர் பற்றிய புதிய தகவல் வரும் போது, அந்த நபரின் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும், எல்லா கோணங்களிலிருந்தும் சந்தேகக்கண்ணோடு பார்ப்பது அவசியம் என்பது அவன் தனது துறையில் கற்ற ஆரம்பப் பாடம்.

 

எல்லா விசாரணைகளிலும் ஒரு அதிமுக்கியமான தடயம் அல்லது ரகசியம் அறிய, ஆயிரம் குப்பைகளையும் சேர்ந்து அலச வேண்டியிருக்கிறது. எது குப்பை, எது அதிமுக்கியமான தகவல் என்பதை முன்கூட்டியே யாரும் தெரிந்து கொள்ள முடியாது. சில சமயங்களில் ஒரு குப்பைத் தகவல் மூலம் இன்னொரு நல்ல தகவல் கிடைக்கலாம். அதனால் எதையும் அலட்சியப்படுத்தி விட முடியாது.

 

சற்று முன் போன் செய்து பேசிய நபர் ஷ்ரவனை அலைபேசியில் அழைத்து இன்னொரு மிக முக்கியமான தகவலைச் சொன்னார். அவருக்கு அந்தத் தகவலைத் தந்தவர் ஆறு மாதங்களுக்கு முன்பு வரைதிவாகரன் & அஸ்ஸோசியேட்ஸ்ல்  வேலை செய்து கொண்டிருந்த ஒரு இளைஞனாம். அவன் அவருக்கு மிகவும் பரிச்சயமானவனாம். ஆடிட்டர் திவாகரன் தனிப்பட்ட முறையில் கையாளும் வாடிக்கையாளர்கள் சுமார் இருபது பேராவது இருப்பார்களாம். அவர்கள் ஆபிசுக்கு வந்தால் ஆடிட்டர் திவாகரனிடம் மட்டும் தான் பேசுவார்களாம். மற்ற ஆடிட்டர்களிடமோ, வேலையாட்களிடமோ  தாங்கள் வந்த விஷயம் பற்றிப் பேச மாட்டார்களாம். ஒருவேளை ஆடிட்டர் திவாகரன் அங்கு இல்லாவிட்டால் அவர் வரும் வரைக்கும் அவர்கள் காத்திருப்பார்களாம். ஒருவேளை அவர் அன்று வரவில்லை என்றால்,  போய் விட்டு இன்னொரு நாள் வருவார்களாம். அப்படிப்பட்ட வாடிக்கையாளர்கள் பற்றிய எந்த விவரமும், கணக்குகளும் மற்ற ஆடிட்டர்களுக்கோ, வேலை செய்பவர்களுக்கோ எப்போதுமே தெரிய வராதாம். அந்த இருபதில் யோகாலயம் இல்லை. யோகாலயத்தின் வழக்கமான கணக்கு வழக்குகளை மற்ற இரண்டு ஆடிட்டர்கள் தான் பார்த்துக் கொள்கிறார்களாம். ஆனால் ஆடிட்டர் திவாகரன் செய்யும் ஒரே வேலை அந்த இருபது வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது தானாம். அந்த வாடிக்கையாளர்கள் ஓரிரு வருடங்களில் வருவதை நிறுத்தி, வேறு சில புதிய வாடிக்கையாளர்கள் வர ஆரம்பிப்பார்களாம். இப்படி அவரை மட்டுமே சந்திக்க வரும் வாடிக்கையாளர்கள் மாறிக்கொண்டே இருப்பார்களாம்.

 

இந்தத் தகவல் ஷ்ரவனை சந்தேகம் கொள்ள வைத்தது. சில வாடிக்கையாளர்கள் தங்களுக்கென ஒரு ஆடிட்டரைத் தேர்ந்தெடுத்து வைத்துக் கொண்டு, அவரிடம் மட்டுமே நம்பிக்கையுடன் தங்கள் கணக்கு வழக்குகளை வைத்திருப்பது பொதுவாக எல்லா இடங்களிலும் வாடிக்கை தான். ஆனால் அந்த ரக வாடிக்கையாளர்கள் ஓரிரு வருடங்களில் மாறிக் கொண்டேயிருப்பதும், மாறி புதிதாக வருபவர்களும் சிலரும் திவாகரனிடமே வருவதும் இயல்பாக இல்லை. பொதுவாக இது போன்ற இடங்களில் தலைமை ஆடிட்டர் மிக முக்கியமான சில பெரிய வாடிக்கையாளர்களிடம் மட்டும் நேரடித் தொடர்பில் இருப்பார்கள். அவர்களிடமே கூட அதிமுக்கிய விஷயங்களைப் பற்றி பேசித் தீர்மானிக்கும் விஷயங்களுக்கு மட்டுமே நேரம் ஒதுக்குவார்களே ஒழிய மற்றபடி அந்த வாடிக்கையாளர்களின் வழக்கமான வருடாந்திரக் கணக்குகளை எல்லாம் ஆபிசில் உள்ள மற்றவர்கள் தான் பார்த்துக் கொள்வார்கள். அப்படியல்லாமல் அனைத்தையும் தலைமை ஆடிட்டரே பார்த்துக் கொள்ளும் வாடிக்கையாளர்கள் நிறைய பேர் இருப்பது விசித்திரம் தான். சேலம் தொழிலதிபர் சந்திரமோகன் சம்பந்தப்பட்ட மர்மம் போல இதிலும் ஏதோ மர்மம் இருக்கிறது என்றாலும் இதுவும் சைத்ரா வழக்கிற்கு சம்பந்தப்பட்ட மர்மமா, இல்லை வேறா என்று தெரியவில்லை....

 

மனதில் இப்படியொரு எண்ணம் வந்தவுடன் ஷ்ரவனின் மூளையில் ஒரு சிறு பொறி தட்டியது. ஒருவேளை தொழிலதிபர் சந்திரமோகனுக்கும், ஆடிட்டர் திவாகரனுக்கும் இடையே ஏதாவது சம்பந்தம் இருக்க வாய்ப்புண்டோ?

 

சேலத்தில் தொழிலதிபர் சந்திரமோகனின் மனைவி அலைபேசி அடிப்பதை திகிலுடன் பார்த்தாள். இப்போது அழைப்பது யார் என்று தெரியவில்லை. இப்போதெல்லாம் ஒவ்வொரு முறை அலைபேசி அடிக்கும் போதும், அவளுக்குத் திகிலாகவே இருக்கின்றது. சந்திரமோகன் காணாமல் போகும் வரை அவர்களைப் போல் அதிர்ஷ்டசாலிகள் யாருமில்லை என்றே அவள் நினைத்து இருந்தாள். ஆனால் விதி குறுகிய காலத்தில் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு விட்டது. அவள் கணவன் காணாமல் போனதில் இருந்து அவளும் அவளுடைய மகளும் அனுபவிக்கும் பயமும், துயரமும் கொஞ்ச நஞ்சமல்ல.

 

கைநடுங்கியபடி அவள் மெல்ல அலைபேசியை எடுத்தாள். “ஹலோ

 

ஹலோ நான் மாயவரம் மாதவன் பேசறேன்ம்மா. பத்து நாளுக்கு முன்னாடி சேலத்துக்கு ஒரு வேலையாய் வந்தப்ப உங்க வீட்டுக்குக் கூட அவரைத் தேடிட்டு வந்தேனே, ஞாபகம் இருக்கா.”

 

உம்சொல்லுங்க சார்

 

அப்பறம் சந்திரமோகனைப் பற்றி வேறெதாவது தகவல் தெரிஞ்சுதா?”

 

இல்லைங்க…”

 

இன்னும் போலீசுக்கும் ஒரு துப்பும் கிடைக்கலையாக்கும்.”

 

அப்படி தான் தெரியுதுங்க. அவங்க எந்த தகவலும் தரலை.”

 

எனக்கு அங்கேயிருந்து வந்ததுலயிருந்து சந்திரமோகன் யோசனையே தான். என்னடா மனுசன் இப்படி யாருகிட்டயும் சொல்லிக்காமயே போயிட்டாரு. எங்கே போயிருப்பார், என்ன சமாச்சாரம்னு ஒரே யோசனை…”

 

அவள் ஒன்றும் சொல்லவில்லை.

 

எனக்கு திடீர்னு இன்னொரு விஷயம் நினைவுக்கு வந்துச்சு. நம்ம ஆடிட்டர் சென்னையில தானே இருக்கார். ஒருவேளை சந்திரமோகன் அவரைப் பார்க்கப் போயிருப்பாரோ? போனவர் அவர் கிட்ட ஏதாவது சொல்லியிருப்பாரோன்னு திடீர்னு யோசனை வந்துச்சு. அந்த ஆடிட்டர் பெயர் ஞாபகம் வரலை.  ஹா…. திவாகரன்…. திவாகரன் தானே அவர் பெயர்?”

 

சந்திரமோகன் மனைவியின் இதயம் சம்மட்டி அடிகள் அடிக்க ஆரம்பித்தன. “ஆமாஅங்கேயும் விசாரிச்சுட்டேன். அங்கேயும் இவர் போகலையாம்…. ஏதாவது தகவல் கிடைச்சால் நானே உங்களுக்கு போன் பண்ணி சொல்றேன்.”என்று சொல்லி அலைபேசி இணைப்பைத் துண்டித்து விட்டு, பேசியவர் எண்ணை அவள் உடனடியாகத் தடை செய்தாள். இந்த ஆள் வில்லங்கமான ஆள் போல் தான் தெரிகிறது! 

 

(தொடரும்)

என்.கணேசன்



என்.கணேசனின் நூல்களை வாங்க வாட்சப்பில் 94863 09351 எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்.

1 comment:

  1. யோகாலையத்து ஆட்கள்....ரௌடிகளை விட மோசமான ஆளாக இருப்பாங்க போலவே...

    ReplyDelete