பத்ரசால் சிறிது தயங்கி விட்டு மெல்லச் சொன்னான். “நேற்று என் கனவில் ஒரு மகான் வந்தான். பழுத்த கிழம். பார்க்கும் போதே ஞானி என்று புரியும்படியான தோற்றம். அவர்.... அவர்....”
சுதானுவுக்குப்
பரபரப்பாக இருந்தது. சேனாதிபதி சொல்லும் மகான் மகாவிஷ்ணு கோயிலில் பார்த்த மகானாக இருப்பாரோ?
ஆர்வத்துடன் சொன்னான். “மேற்கொண்டு சொல்லுங்கள் சேனாதிபதி”
“அவர் உங்களைப்
பற்றி என்னிடம் சொன்னார். அவர் சொன்னது நான் எதிர்பார்க்காதது என்பதால் எனக்கு ஆச்சரியமாய்
இருந்தது. ஆனால் அது கனவு என்பதால் அர்த்தமில்லாததாய் கூட இருக்கலாம்.
சொன்னால் சிரிப்பீர்கள்...”
சுதானு பொறுமை இழந்தான்.
“அழத்தான் கூடாது. சிரிப்பது தப்பில்லை. சொல்லுங்கள் சேனாதிபதி”
பத்ரசால் மெல்லச்
சொன்னான். “சீக்கிரமாகவே உங்கள் தந்தை வனப்பிரஸ்தம் போவார் என்றும் மகதத்தின் அடுத்த அரசராக நீங்கள் ஆவீர்கள் என்றும் சொன்னார்.
அது நடந்தேறும் சமயத்தில் நான் அதற்குத் துணையாக
உங்கள் பக்கம் நிற்க வேண்டும் என்று அறிவுரை சொன்னார். எனக்கு ஒரே திகைப்பாக இருந்தது.
வயதில் மூத்தவராக இளவரசர் சுகேஷ் இருக்கும் போது இளையவர் எப்படி அரசராக முடியும் என்று
கேட்க நான் வாய் திறப்பதற்குள் அவர் மறைந்து விட்டார். எனக்கும் விழிப்பு வந்து விட்டது.”
சுதானுவுக்கு உடலெல்லாம்
சிலிர்த்தது. அவரல்லவோ மகான் என்று தோன்றியது. அவனுக்கு உதவ வேண்டும் என்று சேனாதிபதி
கனவில் வந்து சொல்லியிருக்கிறாரே என்று நெகிழ்ந்து போனான். நேரில் முதலில் சந்தித்த போதும் அவன் எதுவும்
சொல்லாமலேயே அவன் வேண்டுதல் என்ன என்பதைத் துல்லியமாகப் புரிந்து கொண்டு சொன்னவர் அவர்.
சேனாதிபதி கனவிலும் வந்து அவனுக்கு உதவச் சொல்லியிருப்பது அற்புதத்திலும் அற்புதம்
அல்லவா?
புளங்காகிதம் அடைய
வைத்த இந்த அற்புத நிகழ்வில் அவனுக்கு நெருடலாக இருந்த விஷயம் ’வயதில் மூத்தவராக இளவரசர்
சுகேஷ் இருக்கும் போது இளையவர் எப்படி அரசராக முடியும்?’ என்ற சேனாதிபதியின் சந்தேகம்
தான்.
சுதானு தாங்கள்
பேசிக் கொள்வது மற்றவர்கள் காதில் விழுமா என்று மிக எச்சரிக்கையாக சுற்றும் முற்றும்
பார்த்தான். அந்த அளவு அருகில் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு தாழ்ந்த
குரலில் கேட்டான். “வயதைத் தவிர வேறு எதிலாவது என்னை விட சுகேஷ் அரசனாகும் தகுதி படைத்தவன்
என்று நீங்கள் நினைக்கிறீர்களா சேனாதிபதி?”
சேனாதிபதி என்ன
சொல்வது என்று யோசித்தான். உண்மையிலேயே சுகேஷுக்கு வேறு தகுதி இல்லை.
தாயின் செல்ல மகனாக வளர்ந்திருந்த சுகேஷ் தந்தையைப் போல கேளிக்கைகளிலும் அதிக நாட்டம்
கொண்டவனாக இருந்தான். வீரனுக்குத் தேவையான பயிற்சிகளைப் போதுமான அளவு செய்து
தேர்ந்திருந்தாலும் கூடுதல் வீரமோ, ஆளுமையோ, அறிவுத்திறனோ அவனிடம் இருக்கவில்லை என்பது
உண்மை.
பத்ரசால் மெல்லச் சொன்னான். “நீங்கள் சொல்வது போல வயதைத் தவிர வேறு எதிலும் அவருக்குக் கூடுதல் தகுதி கிடையாது தான். அரசர் மனதில் என்ன இருக்கிறதோ அது தெரியாதல்லவா?”
சுதானு
எரிச்சலோடு சொன்னான். “அரசர் மனதில் நிதியைத் தவிர வேறு எதற்கும் பிரதான இடம் கிடையாது
சேனாதிபதி. அது என்னைக் காட்டிலும் உங்களுக்கு மிக நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும்….”
சேனாதிபதி
தலையசைத்தான். மகதத்தில் அந்த உண்மையை அறியாதவர்கள் சமீபத்தில் வந்த புதியவர்களாகத்
தானிருக்க வேண்டும். பழைய ஆயுதங்கள் சேதமடைந்ததால் போருக்குப் புதிய ஆயுதங்கள் அவசியம்
என்பது தெரிந்திருந்த போதும் ஆயுதங்கள் தயாரிக்க நிதியை தனநந்தனிடம் வாங்க ராக்ஷசர்
பட்ட பாட்டை அருகிலிருந்து பார்த்தவன் அவன். பல இடங்களிலிருந்து கொல்லர்களை அவர் அவசரமாக
வரவழைத்து விட்ட பின்னரும் நிதியைப் போதுமான அளவு தருவதற்கு தனநந்தன் நிறைய யோசித்தான்.
”இவ்வளவு
வேண்டுமா?” என்று ஆரம்பித்தவன் கடைசியில் “மக்களிடம் கூடுதல் வரி வசூலித்து தான் இந்தச்
செலவைச் சரிசெய்ய வேண்டும்” என்று சொல்ல ஆரம்பித்தான்.
ராக்ஷசர்
பொறுமையாகச் சொன்னார். “போரில் வென்ற பிறகு எதிரிகளின் நிதியையும் கண்டிப்பாக நாம்
கைப்பற்றுவோம் அரசே. அதற்குப் பிறகும் பற்றாக்குறை ஏற்பட்டால் வரி பற்றி யோசிப்போம்.
ஆனால் போரில் வெல்ல இப்போதைக்கு நமக்கு ஆயுதங்கள் மிக முக்கியம் அல்லவா?”
பின் தான் தனநந்தனிடமிருந்து
நிதி தேவையான அளவு கிடைத்தது. இப்போது இரவு பகலாக ஆயுதத் தயாரிப்பு வேலைகள் நடந்து
வருகின்றன. அருகிலிருக்கும் மற்ற நாடுகளிலிருந்தும் ஆயுதங்கள் வாங்குவதற்கான அதிவேக
முயற்சிகளும் ராக்ஷசர் எடுக்க ஆரம்பித்திருந்தார். அவர்
மட்டும் அப்படி இயங்காமலிருந்தால் முன்பே தோல்வி நிச்சயமானது போலத் தான் என்று பத்ரசால்
நம்பினான். சுதானு தன் தந்தையைப் பற்றிய கருத்துகளை இப்படி வெளிப்படையாகச்
சொல்லலாம். ஆனால் சேனாதிபதியான தான் சொல்ல முடியுமா என்று நினைத்தபடி பத்ரசால் மெலிதாய்
புன்னகைத்தான்.
பத்ரசாலையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சுதானுவுக்குத் தன் கருத்தை அவன் முழுமையாக ஏற்றுக் கொள்கிறான் என்பது புரிந்து நிம்மதியாயிற்று. சில நாட்களாகவே மகத மன்னனாக அரியணையில் அமரும் கனவில் அவன் அதிகம் மிதந்து வருகிறான். சுகேஷை விட அவனுக்கே தகுதி அதிகம் என்று ஆரம்பத்தில் நினைக்க ஆரம்பித்திருந்த அவன் இப்போது தனநந்தனையும் விடத் தகுதி தனக்கே அதிகம் இருக்கிறது என்று நினைக்க ஆரம்பித்திருக்கிறான்.
கங்கைக் கரையில் புதைத்திருந்த புதையலைத் தொலைத்திருந்த தனநந்தன் இப்போது கிட்டத்தட்ட புத்தி சுவாதீனமில்லாதவனாகவே மாறி விட்டதாய் சுதானு உணர்கிறான். ஏதாவது சில சமயங்களில் மட்டுமே தனநந்தன் சரியாக இருப்பது போல் தெரிகிறது. அவன் இரவு சரியாக உறங்குவதில்லை. என்னேரம் எழுந்து பார்த்தாலும் விழித்தபடி இருக்கிறான் என்று தாரிணி சொல்கிறாள். சில சமயங்களில் அவன் சாணக்கின் மகனைத் திட்டிக் கொண்டிருக்கிறான் என்றும் அவள் சொல்கிறாள். இப்படிப் பித்துப் பிடித்தவன் அரசனாக இருப்பது பொருத்தமாக சுதானுவுக்குத் தோன்றவில்லை. போருக்கான அவசிய ஆயுதங்களைத் தயாரிக்கும் நிதியைத் தரக்கூடத் தயக்கம் காட்டுவது தற்கொலைக்குச் சமானம் அல்லவா? முட்டாள் தனமாக எங்கோ நிதியைப் புதைத்து விட்டு அதைக் காக்கும் முயற்சி கூட எடுக்காமல் இருந்திருப்பதைப் பார்க்கையில் எப்போதோ இந்தப் பைத்தியம் ஆரம்பித்திருக்கலாம் என்ற சந்தேகம் அவனுக்கு ஏற்படுகின்றது.
யோசித்துப் பார்க்கையில்
எல்லாம் அவன் அரசனாக அனுகூலமான சூழ்நிலைகளாகவே தெரிகின்றன. பைத்தியக்காரத் தந்தையை
வனப்பிரஸ்தம் அனுப்புவதும் நல்லதொரு ஆலோசனையாகத் தெரிகிறது. மகான் அவனிடம் சொல்லாமல்
விட்டதை சேனாதிபதி கனவில் சொல்லி உதவியிருக்கிறார். அவன் முன்பு ஆசைப்பட்டபடி தனநந்தன்
அவனை பட்டத்து இளவரசனாக அறிவித்திருந்தாலும் கூட, தந்தை எப்போது இறப்பான் என்று அவன்
காத்திருக்க வேண்டியிருந்திருக்கும். தந்தை வனப்பிரஸ்தம் போனால் அந்தப் பிரச்சினையும்
இல்லை. இப்போது மீதியிருக்கும் ஒரே பிரச்சினை சுகேஷ் தான்....
சுதானு பத்ரசாலிடம்
சொன்னான். “அந்த மகான் உங்கள் கனவில் வந்து சொன்னதைச் சொன்னீர்கள் சேனாதிபதி. ஆனால்
அது குறித்து உங்கள் முடிவு என்ன என்பதை நீங்கள் சொல்லவில்லையே”
பத்ரசால் சொன்னான். ”கனவில்
வந்தது மகானா இல்லை என் அர்த்தமில்லாத கற்பனையின் விளைவா என்றே எனக்கு விளங்காமல் இருக்கும்
போது நான் என்னவென்று சொல்வது இளவரசே”
சுதானு சொன்னான்.
“உங்கள் கனவில் வந்தது உண்மையாகவே மகான் தான் சேனாதிபதி. நீங்கள் வர்ணித்த அந்த மகானை
நானும் என் தாயும் உண்மையாகவே சந்தித்திருக்கிறோம். ஒரு முறை அல்ல இரு முறை”
சேனாதிபதி முகத்தில்
திகைப்பை வெளிப்படுத்தினான். சுதானு அந்த இரு சந்திப்புகளையும் பற்றி சொன்னான். பத்ரசால்
உடனே சொன்னான். ”அப்படியானால் அந்த மகான் சொன்னபடியே நடப்பதை என் பாக்கியமாகக்
கருதுகிறேன் இளவரசே”
சுதானு அந்தப் பதிலில் பரமதிருப்தி
அடைந்தான். “எனக்கு உதவுபவர்களை நான் சேவகர்களாக நினைப்பதில்லை சேனாதிபதி. அவர்களை
நண்பர்களாகவே நினைப்பேன். அவர்களிடம் நான் என்றும் தாராளமாக இருப்பேன். அதை நீங்கள்
போகப் போகத் தெரிந்து கொள்வீர்கள்.”
பத்ரசால் மெல்லச் சொன்னான். “ஆனால் ராக்ஷசர்....”
சுதானு கேட்டான். “அவருக்கு
என்ன?”
“அவர் நம்
நடவடிக்கைகளில் அதிருப்தி அடையலாம். மன்னரான பின் உங்களையாவது
ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் என் மீது ஏதாவது குற்றம் சாட்டலாம். ஏனென்றால்
அவர் உங்கள் தந்தையின் தீவிர விசுவாசி.”
சுதானு உறுதியான குரலில் சொன்னான். “என் நண்பர்கள்
மீது அவர் குற்றம் சாட்டுவதை என் மீது குற்றம் சாட்டுவதைப் போலவே நான் நினைப்பேன் சேனாதிபதி. நம் நடவடிக்கைகளில்
அவர் அதிருப்தி அடைந்தால் அவர் தாராளமாக மகதத்திலிருந்து வெளியேறி விடலாம். இங்கிருக்கிற
வரை அவர் நம்மை அனுசரித்துப் போக வேண்டியவர் என்பதே என் நிலைப்பாடு.”
பத்ரசால் நிம்மதி அடைந்தான்.
(தொடரும்)
என்.கணேசன்
No comments:
Post a Comment