சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, February 10, 2025

யோகி 89


ஷ்ரவன் சொன்னான். “நான் ஆரம்பத்தில் இருந்து சொன்னால் தான் உங்களுக்கு என் வித்தியாசமான பிரச்சினையை சரியாகப் புரிந்து கொள்ள முடியும் சுவாமினி. அதனால தயவு செய்து பொறுமையாய் கேளுங்கள். எங்கள் பூர்வீகம் ராமநாதபுரத்தில் ஒரு குக்கிராமம் என்றாலும், தாத்தா சின்ன வயதிலேயே தொழிலுக்காக ஹைதராபாத்தில் போய் அங்கேயே தங்கி விட்டார். அதனால் எங்கப்பாவே அங்கே தான் பிறந்து வளர்ந்தார். நானும் அப்படித் தான். எனக்கு எட்டு வயதிருக்கும் போது என் பக்கத்து வீட்டுக்கு ஒரு மந்திரவாதி வசிக்க வந்தார். அவர் பெயர் சோமையாஜுலு. மாந்திரீகத்தில் அவர் அந்தக் காலத்தில் மிகப் பிரபலம். எப்போதுமே அவர் வீட்டு வாசலில் கார்கள் நின்று கொண்டே இருக்கும். காலையில் ஏழு மணியிலிருந்து இரவு ஒரு மணி வரைக்கும் வெளியாட்கள் அவர் வீட்டில் இருப்பார்கள்.”

 

ஒரு நாள் இரவு சிரஞ்சீவியின் ஒரு சினிமாப்படம் இரவுக்காட்சி பார்த்து விட்டு நானும், என் அம்மா, அப்பாவும் திரும்பி வந்தோம். அப்போது பக்கத்து வீட்டில் ஏதோ பூஜை நடந்து கொண்டு இருந்தது. அர்த்த ஜாமத்து பூஜைகள் அந்த வீட்டில் நடப்பது சர்வசகஜம். அப்போது அந்த வீட்டு வாசலில் ஒரு நரி நின்னுகிட்டு இருக்கறதை பார்த்துட்டு நான், “ஹை நரின்னு கைகாட்டி சொன்னேன்.

 

என் அம்மாவும், அப்பாவும் நான் கைகாட்டிய இடத்தைப் பார்த்தார்கள். அவர்கள் இருவருக்கும் அந்த நரி தெரியவில்லை. அவர்கள் என்னை விசித்திரமாய் பார்த்தார்கள். பையன் என்னவோ உளறுகிறான் என்று விட்டு விட்டார்கள். ஆனால் அதன் பின்பு நான் பக்கத்து வீட்டில் ஏதாவது மாந்திரீக பூஜை நடக்கும் போதெல்லாம் பலதையும் பார்க்க ஆரம்பித்தேன். ஒருநாள் ஆந்தை, இன்னொரு நாள் வௌவால், ஒரு நாள் மண்டை ஓடு, இன்னொரு நாள் அதுவரைக்கும் பார்த்திருக்காத ஒரு வினோத உருவம்... கடைசியாய் பார்த்த உருவத்தின் வாயில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த நாள் இரவு எனக்குக் கடுமையான காய்ச்சலே வந்து விட்டது. ஆரம்பத்தில் கற்பனையாய் எதோ பையன் உளறுகிறான் என்று நினைத்துக் கொண்டிருந்த என் அப்பாவுக்கு இதில் நிஜமாகவே எதோ இருக்கிறதென்று மெள்ளப் புரிய ஆரம்பித்தது. அவர் ஒரு நாள் அந்த மந்திரவாதியிடமே போய் நடந்ததையெல்லாம் சொல்லி இதெல்லாம் எதனால் என்று கேட்டார்.”

 

சோமையாஜுலு மிகவும் ஆச்சரியப்பட்டார். அவர் என்னைக் கூப்பிட்டு நான் எப்போது, எதைப் பார்த்தேன் என்று விவரமாய்க் கேட்டார். நானும் சொன்னேன். அவர் என்னை அனுப்பிவிட்டு என் அப்பாவிடம் எனக்கு ஒரு விசேஷ சக்தி இருக்கிறதென்று சொன்னார். ”மாந்திரீகத்தால அனுப்பப்பட்ட ஏவல் சக்தி, அனுப்பிய மந்திரவாதிக்கும், அந்தச் சக்தியால தாக்கப்படற ஆளுக்கும் மட்டும் தான் தெரியும். ஆனால் உங்க மகனுக்கும் அதைப் பார்க்கற சக்தி இயல்பாகவே வந்திருக்கு. இது பல லட்சம் பேர்ல ஒருத்தருக்கு மட்டும் தான் வாய்க்கும். இந்த அபூர்வசக்தி உங்க மகனுக்கும் கிடைச்சுருக்குஎன்று சொன்னார்.”

 

எங்கப்பா பயந்துட்டார். ’என் மகனுக்கு இதெல்லாம் வேண்டாம். இது வராமல் இருக்க எதாவது செய்ய முடியுமாஎன்று கேட்டார். அதற்கு சோமையாஜுலுஇந்த மாதிரி சக்தி தானாய் வரும். தானாய் போகலாம். நாமாய் ஒன்னும் செய்ய முடியாதுஎன்று சொல்லி விட்டார். அதைக் கேட்டு என் அப்பா மிகவும் வருத்தப்பட்டார். அதற்கு சோமையாஜுலு சொன்னார். “இதெல்லாம் எல்லாருக்கும் அமையாது. மாந்திரீகம் பண்ற எனக்கே நான் அனுப்பற ஏவல் சக்தி மட்டும் தான் தெரியும். வேற யாரோ யாருக்கோ அனுப்பிய ஏவல் சக்தியை என்னால் பார்க்க முடியாது. பாதிக்கப்பட்டவன் என் கிட்டயே வந்து கேட்டாலும் நான் அதற்கான விசேஷ பூஜைகள் எல்லாம் செஞ்சா தான் எனக்கே தெரியும். அப்படி இருக்கறப்ப உங்க மகனுக்கு எந்தப் பூஜையும், முயற்சியும் இல்லாமலேயே தெரியுதுன்னு சொன்னால் அது பெரிய பாக்கியம்.”

 

அவர் அது மட்டும் சொல்லவில்லை. அவரிடம் வருகிற, பில்லி சூனியம், ஏவல் சக்திகளால் பாதிக்கப்பட்ட ஆட்களுக்கு இருக்கிற பாதிப்பைப் பற்றிச் சொல்ல என்னை அவருடன் அனுப்ப முடியுமாஎன்று கூட அப்பாவிடம் கேட்டார். ”கஷ்டமான பூஜைகள் இல்லாமயே உங்க பையனால சிலதைப் பார்க்க முடியுது. கொஞ்சம் அவனுக்கு பயிற்சி கொடுத்தா இன்னும் கூட சூட்சுமமான விஷயங்களையும் அவனால பார்த்து சொல்ல முடியும். அதற்கெல்லாம் அதிக நேரம் ஆகாது. உங்க மகனை நான் சொல்ற சமயங்கள்ல அனுப்பி வைச்சா நான் பணமும் தாராளமாய் தர்றேன்என்றும் சொன்னார். நாங்களும் அப்போது பணம் போதாமல் கஷ்டப்பட்டுக் கொண்டு தான் இருந்தோம். ஆனாலும் என் அப்பா அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அந்த மாதிரி பணம் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லி வந்து விட்டார்.”

 

ஒருவிதத்தில் அதுவும் நல்லதாயிற்று. இரண்டு வருடங்கள் கழித்து  சோமையாஜுலுவை சுட்டுக் கொன்று விட்டார்கள். ஒரு முரட்டு அரசியல்வாதி தனக்கு வந்திருக்கிற கஷ்டங்களுக்கெல்லாம் காரணம் சோமையாஜுலு செய்திருக்கும் பில்லி, சூனியம் தான் என்று நினைத்து வாடகைக் கொலையாளிகளை வைத்து சோமையாஜுலுவைக் கொன்று விட்டார். அந்த காலத்தில் அது ஆந்திராவில் மிகவும் பரபரப்பாய் பேசப்பட்டது. நானும் அவர் கூட போய் வந்து கொண்டிருந்தால் என்ன ஆகிருக்குமோ தெரியவில்லை...”

 

கல்பனானந்தா ஷ்ரவனைத் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.  அவளைப் போலவே தான் பாண்டியனும், பிரம்மானந்தாவும் அவன் பேசுவதைத் திகைப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

 

ஷ்ரவன் தொடர்ந்தான். “அவருடைய மரணத்திற்குப் பின்னாலும் அபூர்வமாய் பல வருடங்களுக்கு ஒரு தடவை சிலதை என்னால் பார்க்க முடிந்தது. பெரியவனான பிறகு எதையும் நான் வாய் திறந்து சொல்வதை நிறுத்தி விட்டேன். எனக்கு அபூர்வ சக்திகள் மேல நிறைய ஆர்வம் இருக்கிறது சுவாமினி. ஆனால் நான் உணர ஆசைப்பட்டதெல்லாம் தெய்வீக சக்திகளைத் தான். நம் யோகிஜீக்கு கிடைத்த அந்த தெய்வீக சக்திகளில் ஒரு சிறுதுளி எனக்கு கிடைத்தாலும் அதை நான் பெரிய பாக்கியமாய் நினைப்பேன்…. ஆனால் நான் ஆசைப்பட்டதற்கு எதிர்மாறாய் தான் எனக்கு நடக்கிறது. என்ன செய்வது?”

 

ஷ்ரவன் இங்கு வந்தபின் கிடைத்த முதல் நாள் இரவு அனுபவத்தை மிகுந்த வேதனை காட்டிச் சொன்னான். சில நாட்களுக்கு முன் பார்த்த ஓமன் ஆங்கிலத் திரைப்படத்தின் விளைவாகத் தான் அது இருக்க வேண்டும் என்று சொன்னான். ஆனாலும் அரை மணி நேரம் உணர்விழக்கும்படியாக மிகுந்த சக்தி வாய்ந்த தாக்குதலாக அது இருந்தது என்றான்.

 

உங்கள் வகுப்பிலும் நான் பார்த்தது அதே ஓநாயைத் தான் சுவாமினி. முதல் தடவை பார்த்த போது அது நாயா ஓநாயா என்ற எனக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் இந்த தடவை நான் பார்த்தது ஓநாய் தான். சந்தேகமேயில்லை. அது உள்ளே நுழைந்து எல்லாரையும் பார்த்தது. பின் போய் விட்டது. அதைப் பார்த்தவுடனே என் கவனமெல்லாம் அங்கே போய் விட்டது. நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று கூட என் காதில் விழவில்லை. மன்னித்து விடுங்கள் சுவாமினி.”

 

கல்பனானந்தா அதிர்ச்சியில் சிலை போல் அமர்ந்திருந்தாள். அவள் அவனைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அவ்வளவு சீக்கிரம் நிதானம் தவறும் நபர் அல்ல என்று ஷ்ரவன் கணித்திருந்தான். அப்படிப்பட்டவள் காட்டிய அதிர்ச்சி, இந்த ஓநாய் சமாச்சாரம் அவள் இப்போது தான் கேள்விப்படுகிறாள் என்பதை சூசகமாக அவனுக்கு அறிவித்தது. அனுப்பியவர்கள் இங்கே அவனுக்கு ஏற்பட்ட முதல் அனுபவத்தை அவளிடம் சொல்லவில்லை போல் தெரிகிறது. ஆனாலும் அவளை இந்தத் தகவல் ஏன் அதிர வைக்கிறது என்று ஷ்ரவனுக்குப் புரியவில்லை. ஆச்சரியம், திகைப்பு சரி தான். ஆனால் அதிர்ச்சிக்கு என்ன காரணம்?    

 

கல்பனானந்தா சீக்கிரமே நிதானத்திற்கு வந்து மெல்ல கேட்டாள். “இந்த தடவை ஓநாயை மட்டும் தான் பார்த்தீர்களா? அந்த இளைஞனை நீங்கள் பார்க்கவில்லையா?”

 

இல்லை சுவாமினி

 

கல்பனானந்தா அமைதியாகச் சொன்னாள். “அபூர்வமாய் ஏவல்சக்தியைப் பார்க்க முடிந்த சக்தி உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அது நீங்கள் விரும்பாத சக்தியானாலும், வருத்தப்பட என்ன இருக்கிறது? பிடிக்கா விட்டால் அலட்சியப்படுத்தி விடலாமே?”

 

ஷ்ரவன் வருத்தத்தோடு சொன்னான். “நான் சின்ன வயதில் பார்த்தது ஏவல் சக்திகளாய் இருக்கலாம். ஆனால் இப்போது பார்ப்பது சினிமாவில் பார்த்ததாக அல்லவா இருக்கிறது சுவாமினி. இது இன்னும் மோசமாகவல்லவா இருக்கு.”

 

ஏன் சினிமாவில் பார்த்தது என்று சொல்கிறீர்கள். இதுவும் உண்மையில் ஏவல் சக்திகளாய் இருந்தால்?”

 

சூரியன் இருக்கும் இடத்தில் எப்படி இருட்டு இருக்க முடியும் சுவாமினி? யோகிஜி வாழ்கிற இடத்தில் எப்படி துஷ்ட ஏவல் சக்திகள் உலாவ முடியும்?”

 

கல்பனானந்தாவின் பார்வை மேலும் கூர்மையாகியது. அவன் மனதில் ஆழத்தில் உள்ளதைப் பார்க்க விரும்புபவள் போல் பார்த்தாள்.


(தொடரும்)

என்.கணேசன்





6 comments:

  1. இப்படிப்பட்ட கதையை ஷர்வன் சொல்லுவான் என்று எதிர்பார்க்கவே இல்லை....

    ReplyDelete
    Replies
    1. did you expect anything better than this ?

      Delete
  2. interesting looking forward next chapter

    ReplyDelete
  3. உளர்கிறான் என்பதை உளறுகிறான் என்று திருத்திவிடுங்கள்

    ReplyDelete
    Replies
    1. திருத்தி விட்டேன். நன்றி.

      Delete
  4. ஷ்ரவன் முகவரி கிடைத்தால் கொஞ்சம் பேப்பரும் பேனாவும் அனுப்பலாம் என நினைக்கிறேன். என்னமா கதை சொல்றான்.

    ReplyDelete