சாணக்கியரைச் சந்தித்த போது பர்வதராஜன் அன்பு, பணிவின் கலவையாக இருந்தான். அவர் கால்களைத் தொட்டு வணங்கிய அவன், மலைகேதுவும் அவர் கால்களைத் தொட்டு வணங்கும் வரை கூப்பிய கைகளைப் பிரிக்கவில்லை. மகனும் தந்தையைப் பின்பற்றி கைகளைக் கூப்பிக் கொண்டு பணிவுடன் நின்றான். அதனால் உடன் வந்திருந்த குலு, காஷ்மீர, நேபாள மன்னர்களுக்கும் சாணக்கியரைக் கால் தொட்டு வணங்கும் கட்டாயம் ஏற்பட அவர்களும் அதையே செய்தார்கள். அனைவருக்கும் அவர் “வெற்றி உண்டாகட்டும்” என்று ஆசிர்வதித்தார்.
அவர்கள் அனைவரும்
அமர்ந்தவுடன் சாணக்கியர் அதிக பீடிகை எதுவும் இல்லாமல் விஷயத்திற்கு வந்தார். “நாம்
பாரதத்திலேயே வலிமையும் வளமும் வாய்ந்த மகத சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்துப் படையெடுத்துக்
கிளம்பி இருக்கிறோம். இப்போது நாம் அனைவரும் சேர்ந்த பின்பும் கூட மகதப் படைகளின் வலிமைக்கு
ஈடாகி விட மாட்டோம். அவர்களிடமிருக்கும் அளவுக்கு நிதியும் நம்மிடம் இல்லை. இந்தக்
குறைபாடுகளை எல்லாம் நம் அறிவின் கூர்மையாலேயே சரி செய்ய வேண்டியிருக்கிறது....”
பர்வதராஜன் இடைமறித்துச்
சொன்னான். “அது தாங்கள் இருப்பதால் ஏற்கெனவே சரிசெய்யப்பட்டு விட்டது என்றே நான் நம்புகிறேன்
ஆச்சாரியரே. தாங்கள் அழைத்தவுடன் வேறெதுவும் கேட்காமல் நாங்கள் அனைவரும் வந்திருப்பதே
தங்களை நம்பித் தான். அதை நேற்று மாலை காஷ்மீர மன்னரும் என்னிடம் தெரிவித்தார்...”
காஷ்மீர மன்னனும்
தலையசைக்க சாணக்கியர் அந்தப் பாராட்டைப் பெரிதுபடுத்தாமல் தொடர்ந்தார். “அறிவு தனநந்தன்
பக்கமும் சிறப்பாகவே இருக்கின்றது. ராக்ஷசர் ஒருவரது அறிவும் திறமையுமே இன்று மகத
நிர்வாகத்தைச் சிறப்பாக நடத்துகிறது என்றே சொல்லலாம். தனநந்தனைப் போன்ற அரசனை வைத்துக்
கொண்டு அந்த அளவு சிறப்பான நிர்வாகத்தைத் தர முடிவது மிகவும் கஷ்டம்.”
எதிரியின் சிறப்பையும்
எந்த விதமான தயக்கமும் இல்லாமல் சொல்ல முடிந்த சாணக்கியரை அவர்கள் வியப்புடன் பார்க்க
சாணக்கியர் தொடர்ந்தார். ”நாம் படையெடுத்து வரப்போவது தனநந்தனுக்குத் தெரிய வந்திருக்கிறது
என்று நமக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அதனால் அவர்களும் நம்மை எதிர்கொள்ளத் தேவையான
ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்திருப்பார்கள். ஆனால் அவர்களுக்குத் தெரியாத ஒன்றிருக்கிறது.
நாம் எங்கே எப்போது எப்படித் தாக்குவோம் என்று அவர்களால் யூகிக்க வழியில்லை. மகதம்
போன்ற பரந்த சாம்ராஜ்ஜியத்தின் நீள அகலங்கள் அவர்களுடைய மிகப் பெரிய பலம் என்றாலும்
விளக்கின் அடியில் சிறு இருட்டு இருப்பது போல, எல்லா பலங்களுக்குப் பின்னாலும் ஏதோ
ஒரு பலவீனம் மறைந்தே இருக்கிறது. அந்த வகையில் மகதத்தின் பலமே பலவீனமும் ஆகிறது. நாம்
அவர்களது பரந்த எல்லைகளில் எங்கேயும் தாக்கலாம். அவர்களிடம் எத்தனை பெரிய படைகள் இருந்தாலும்
அவர்களது எல்லைகளும் பரந்திருப்பதால் எல்லா இடங்களிலும் அந்தப் படைகளை அவர்கள் நிறுத்தி
வைக்க முடியாது. இந்தப் பலவீனத்தையும், அவர்களது மற்ற பலவீனங்களையும் நமக்குச் சாதகமாக
நாம் சரிவரப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.”
அவர் சொல்வதை மிகவும்
கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த அவர்கள் சிலாகித்துத் தலையசைத்தார்கள். பர்வதராஜன் மெல்லச்
சொன்னான். “அப்படியானால் நாம் எங்கே தாக்கப் போகிறோம் என்பது தாக்கும் வரை அவர்களுக்குத்
தெரியக்கூடாது. நாம் அதை மிக ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.”
சந்திரகுப்தன் சொன்னான்.
“சரியாகச் சொன்னீர்கள்”.
பர்வதராஜன் சிறிது
யோசித்து விட்டுக் கேட்டான். “நாம் படையெடுத்து வரும் தகவல் எதிரிகளுக்குப் போய்ச்
சேர்ந்து விட்டது என்றால் நம் போக்குவரத்து குறித்த தகவலும் முன்கூட்டியே அங்கே போய்ச்
சேர்ந்து விடும் என்றல்லவா அர்த்தம். அப்படி என்றால் நாம் தாக்குவதற்காக எங்கே போகிறோம்
என்பதும் அவர்களுக்கு முன் கூட்டியே தெரிந்து விடும் அல்லவா?”
சந்திரகுப்தன் சிறு
புன்முறுவலோடு சொன்னான். ”ஆம். மகத ஒற்றர்கள் புத்திசாலிகள். அவர்கள் பல்வேறு இடங்களில்
இப்போது பரவிக் கிடப்பார்கள். அவர்களுக்கு என்ன தெரிய வேண்டும் என்று நினைக்கிறோமோ
அதை மட்டுமே அவர்களுக்குத் தெரியச் செய்வோம். தெரியக்கூடாதது என்று நாம் நினைக்கும்
எதுவும் அவர்களுக்குத் தெரியப்போவதில்லை.”
“எப்படித் தெரியாமல்
போகும்? இத்தனை பெரிய படைகளின் நடமாட்டம் நாம் மறைக்க முடிந்ததல்லவே”
“நம் படைகளின் நடமாட்டம்
அவர்களுக்குத் தெரியத் தான் போகிறது. ஆனால் நம் உத்தேசம் அவர்களுக்குத் தெரியப் போவதில்லை.
ஏனென்றால் தாக்குதல் சம்பந்தமான முக்கியமான முடிவுகள் எதுவும் தக்க சமயம் வரும் வரை
ஆச்சாரியர் தவிர நம் யாருக்குமே தெரியப் போவதில்லை. ஒரே ஒரு ஆளுக்கு மட்டுமே தெரிந்திருக்கும்
ரகசியம் தான் உண்மையான ரகசியமாக இருக்க முடியும். அதனால் அதை நாம் ஆச்சாரியரிடமே விட்டு
விடுவோம்.”
பர்வதராஜன் திகைத்தான்.
அவனுக்கு சந்திரகுப்தன் சொன்னதில் இருந்த உண்மை புரிந்து தானிருந்தது என்றாலும் அவன்
அறியாத ரகசியங்களை அவனால் சகிக்க முடிந்ததில்லை. அவன் திகைப்பில் ஆழ்ந்து இருக்கையில்
நேபாள மன்னன் சொன்னான். “அதுவும் சரி தான். இப்போது இங்கிருக்கும் நம் ஏழு பேருக்கு
அந்த ரகசியம் தெரிய வந்தால் அதில் நம்மை அறியாமல் யதேச்சையாக ஒருவர் மூலமாக ரகசியம்
கசிந்தாலும் நம் திட்டம் வீணாகி விடும். பிறகு யார் மூலம் கசிந்தது என்று ஆராய்ந்து
கொண்டிருந்து ஒன்றும் ஆகப் போவதில்லை...”
காஷ்மீர மன்னனும்
குலு மன்னனும் கூடத் தலையசைக்கவே பர்வதராஜன் இனி எதிர்மாறாகச் சொல்வது தன் நிலையைப்
பலவீனப்படுத்தி விடும் என்று புரிந்தவனாகச் சொன்னான். “முன்பே நான் சொன்னபடி நாங்கள்
ஆச்சாரியரை நம்பி வந்திருக்கிறோம். நமக்கு வெற்றி தான் முக்கியம். அதற்கு அவர் சொல்கிறபடியே
செய்வோம்.”
சாணக்கியர் சொன்னார்.
“உங்கள் நம்பிக்கை வீண் போகாது.... அடுத்தபடியாக நமக்கு மிகவும் அனுகூலமாக இருக்கப்
போகும் அவர்களது மிகப்பெரிய பலவீனம் மகத மக்கள். தனநந்தனின் கடுமையான வரிகள் மக்களிடம்
கடும் அதிருப்தியை விளைவித்திருக்கின்றன. அவர்கள் அவன் ஆட்சிக்கு மாற்றான ஒரு ஆட்சி
வருமானால் மகிழ்ச்சியோடு ஆதரவு தரும் மனநிலையில் இருக்கிறார்கள். அதனால் நாம் எங்கு
சென்றாலும் மகதப் படையினரிடமிருந்து எதிர்ப்பு வரலாமே ஒழிய மக்களிடமிருந்து ஆதரவே கிடைக்கும்.
இதுவும் நமக்குச் சாதகமே.”
சந்திரகுப்தன் சொன்னான்.
“இந்த சாதக அம்சத்தைப் பயன்படுத்தி சிறிது காலமாகவே ரகசியமாக பல பகுதிகளில் மக்களிடம்
தொடர்பை வலுப்படுத்தி வந்திருக்கிறோம். அது இந்தச் சமயத்தில் கண்டிப்பாக நமக்கு உதவும்.”
குலு மன்னன் வியப்புடன்
சொன்னான். “நீங்கள் முன்கூட்டியே இதை எல்லாம் செய்து வைத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது”
சாணக்கியர் சொன்னார்.
”இன்று ஒரு கனி நமக்குக் கிடைக்க வேண்டுமானால் பல வருடங்களுக்கு முன்பே மரத்தை நட்டு
வைத்திருந்தால் மட்டுமே அது சாத்தியமல்லவா? தேவையின் நேரத்தில் விதைப்பது பயன் தராதல்லவா?
அது போலத் தான் இதுவும். இது மட்டுமல்ல நாங்கள் வேறு பல வேலைகளையும் முன்பே செய்ய ஆரம்பித்திருக்கிறோம்.
அறுவடைக் காலத்தில் தான் உங்களை அழைத்திருக்கிறோம்”
பர்வதராஜன் திருப்தியுடன்
தலையசைத்தான். விதைக்கும் காலத்திலிருந்தே உடனிருந்து நீர் ஊற்றிப் பராமரித்துக் கஷ்டப்பட்டுக்
கடைசியில் கனியைப் பறிக்க வைக்காமல், கனி பறிக்க மட்டும் அழைத்தது தான் இந்தத் திட்டத்திலேயே
அவனுக்கு மிகவும் பிடித்த பகுதி. அதுவும் பறித்ததில்
பாதி வேண்டும் என்று அவன் பேரம் பேசி சம்மதிக்க வைத்திருக்கிறான். கூட இருக்கும் இந்த
முட்டாள் மன்னர்கள் பசியாறச் சில கனிகளே தாராளம். மீதி எல்லாம் தனக்கு என்ற எண்ணமே
அவனுக்கு உற்சாகத்தைத் தந்தது.
பாடலிபுத்திரத்தின் உள்ளே நுழையக் காத்திருப்பவர்கள் வரிசை
அன்று மிக நீண்டிருந்தது. அதிக ஆட்கள் வந்திருக்கிறார்கள் என்பதால் வரிசை நீண்டிருக்கவில்லை. மாறாக ஒவ்வொருவரையும் சோதித்துப் பார்க்க
காவலர்கள் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார்கள். வணிகர்களையும், பெரிய
மூட்டைகளுடன் வந்திருப்பவர்களையும் சோதனை செய்து திருப்தி அடைய அவர்களுக்கு நீண்ட நேரம்
தேவைப்பட்டது. ஆனால் சந்தேகம் எதையும்
ஏற்படுத்தாத வெறும்
யாத்திரீகர்கள், குறைந்த
உடைமைகளுடன் வந்திருந்தால் அவற்றைச் சீக்கிரமே பரிசோதித்து விட்டு உள்ளே அனுமதித்தார்கள்.
அந்த வரிசையின் கடைசியில்
முதிர்ந்த மகானின் வேடமணிந்து சின்ஹரன் நின்றிருந்தான்.
(தொடரும்)
என்.கணேசன்
பரபரப்பாக செல்கிறது....நன்றி
ReplyDelete