ஷ்ரவனின் அன்றைய வகுப்புகள் வழக்கம் போல் இருந்தன. பிரம்மானந்தர்
புராணம் திணிக்கப்படாமல் இருந்திருந்தால், அவற்றில்
குறை சொல்ல எதுவுமில்லை. இத்தனை முறை அவர் பெயரைச் சொல்லியே ஆக வேண்டும் என்று இலக்கொன்றை
வைத்திருப்பவர்கள் போல், கற்றுத் தந்த துறவிகள் அவர் பெயரை வலுக்கட்டாயமாகச் சேர்த்துச்
சொன்னார்கள். அதைக் கேட்டு முகத்தில் சலிப்பைக் காட்டிய மூவரில் ஸ்ரேயாவும்
ஒருத்தி என்பதை ஷ்ரவன் கவனித்தான்.
அன்று மதிய உணவு, மாலை தேனீர்
வேளைகளில் அவனைக் கூடுதலாக யோகாலயத்து ஆட்கள் கவனிப்பது அவனுடைய கவனத்திற்கு வந்தது. கூடுதலாகக் கவனிக்கப்பட வேண்டியவன்
என்ற உயர்நிலைக்கு மாறியது எப்படி என்பது ஷ்ரவனுக்குப் தெரியவில்லை. கூடுதல் நம்பிக்கையைப் பெற
வேண்டும் என்று முயற்சித்து, கூடுதல் சந்தேகத்தை அவர்களிடம் ஏற்படுத்தி
விட்டோமோ என்று அவன் யோசிக்க ஆரம்பித்தான்.
அன்று காலை நேர வகுப்புகளில் ஓநாய் பிரவேசிக்கவில்லை. மாலை நேரம் தேனீர் வேளை
முடிந்து கடைசி வகுப்பு கல்பனானந்தாவினுடையது. அந்த வகுப்பில்
மறுபடி ஓநாய் வருமா? கூடுதல் தகவல் எதாவது சொல்லுமா? என்று ஷ்ரவன் ஆவலுடன் எதிர்பார்த்தான். அவள் வகுப்பிலும்
ஓநாய் பிரவேசிக்கவில்லை. ஆனால் கல்பனானந்தாவும் தன் வகுப்பு நேரத்தில்
அவனைக் கூடுதலாகப் பார்த்தாள். ’இவளுமா?’
அனைவரும் அவனைக் கூடுதலாகக் கண்காணிக்க என்ன காரணம் என்பது வகுப்பு
முடியும் வரை அவனுக்குப் பிடிபடவில்லை.
வகுப்பு முடிந்தபின் கல்பனானந்தா எப்போதும் போல் உடனடியாக வெளியேறி விடாமல்
நின்றிருந்தாள். ஒரு முதியவர் அவளிடம் எதையோ கேட்கச் சென்றார்.
அதைப் பார்த்து இன்னொருவரும் அவர் பின்னால் சென்றார். அவர்கள் இருவரும் அவளிடம் எதையோ கேட்டார்கள். அவள் அவர்கள்
கேட்டதற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாலும் அவள் பார்வை ஷ்ரவன் மீதே அதிகம் இருந்தது.
ஷ்ரவனுக்கு அவள் அவனிடம் எதையோ சொல்லவோ, கேட்கவோ விரும்புகிறாள்
என்று தோன்றியது. மற்றவர்கள் எல்லாரும் வெளியேற ஷ்ரவன் கல்பனானந்தா
அருகில் சென்றான். அவள் அவசரமாக தன்னிடம் கேள்வி கேட்ட இருவருக்கும்
பதில் சொல்லி விட்டு அவனிடம் சிறு புன்னகையுடன் சொன்னாள். “உங்களிடம்
கொஞ்சம் பேச வேண்டியிருக்கிறது. பேசலாமல்லவா?”
அவனும் புன்னகையுடன் தலையசைத்தான். அந்த முதியவரும்,
மற்றவரும் சென்று விட, கல்பனானந்தா தன்னுடன் வரும்படி
ஷ்ரவனிடம் சமிக்ஞை செய்துவிட்டு, வகுப்பறையை ஒட்டியிருந்த ஒரு
அறைக்கு அவனை அழைத்துச் சென்றாள். அங்கு பெரிய மேஜையும் ஆறு நாற்காலிகளும்
இருந்தன. கல்பனானந்தா
ஒரு நாற்காலியில் அமர்ந்து மேஜைக்கு அந்தப் பக்கம் இருக்கும் எதிர் நாற்காலியில் அவனை
அமருமாறு சைகை செய்தாள். அவள் காட்டிய நாற்காலியில் ஷ்ரவன் அமர்ந்தான்.
அவனுக்கு நேர் எதிரே கண்காணிப்பு காமிரா இருந்தது. அதைக் கவனித்தது போல் ஷ்ரவன் காட்டிக் கொள்ளவில்லை.
நீண்ட காலம் பழகியவள் போல் சினேகத்துடன் புன்னகைத்த கல்பனானந்தா
அவனிடம் கேட்டாள். “வகுப்புகள் எல்லாம் நீங்கள் எதிர்பார்ப்பது போல் இருக்கின்றனவா? இல்லை, ஏதாவது குறையை நீங்கள் உணர்கிறீர்களா?”
“ஒரு குறையும் சொல்வதற்கில்லை. அருமையாக இருக்கின்றன,
ஸ்வாமினி” என்று தன் நெஞ்சில் கைவைத்து ஷ்ரவன்
சொன்னான்.
“மகிழ்ச்சி. முடிந்தவரை எளிமைப்படுத்தி தான் எல்லாவற்றையும்
சொல்கிறோம். ஆனால் அதற்கும் மேல் எளிமைப்படுத்த முடியாதல்லவா?”
“உண்மை தான் சுவாமினி”
”ஏன் உங்களை அழைத்துக் கேட்டேன் என்றால், நீங்கள் இந்தப்
பாட விஷயங்களில் இயல்பான ஆர்வம் இருப்பவர் போல நான் உணர்ந்தேன். அதனால் நாங்கள் கற்றுத் தரும் முறையில் குறையிருந்தால் மற்றவர்களைக் காட்டிலும்
அதிகமாக உங்களால் அதை உணர முடியும். அதனால் நீங்கள் குறை என்று
எதையாவது சொன்னால் நாங்கள் அதைச் சரிசெய்து கொள்ளலாம் அல்லவா?”
“யோகிஜி வழிநடத்தியபடி வகுப்புகளை நீங்கள் நடத்தும்போது குறை எப்படி இருக்க
முடியும் சுவாமினி”
”நன்றி. தனிப்பட்ட முறையில் ஒரு கேள்வி கேட்டால் நீங்கள்
தவறாக நினைத்துக் கொள்ள மாட்டீர்களே?”
“கண்டிப்பாய் நினைக்க மாட்டேன் சுவாமினி, கேளுங்கள்”
“நேற்று என் வகுப்பில் திடீரென்று உங்கள் கவனம் நான் சொல்வதிலிருந்து விலகி
விட்டதை நான் கவனித்தேன். நீங்கள் வெற்றிடத்தை வெறித்துப் பார்க்க
ஆரம்பித்து விட்டீர்கள். சிறிது
நேரம் கழித்து தான் உங்கள் கவனம் நான் சொல்வதில் திரும்பியது. எனக்கு நான் தான் சுவாரசியமாகப்
பாடம் நடத்தத் தவறி விட்டேனோ என்று சந்தேகம் வந்து விட்டது.”
ஷ்ரவனுக்கு இப்போது கூடுதல் கண்காணிப்பின்
காரணம் புரிந்து விட்டது. நேற்று அவன் பார்த்தது என்ன என்பது அவர்களுக்குத் தெரிய வேண்டும். காசர்கோடு
மந்திரவாதி தாயத்து கட்டி விட்டுப் போய் பாண்டியனுக்கும், சுகுமாரனுக்கும்
பாதிப்பு குறைந்து விட்டாலும் அந்த ஓநாய் யோகாலயத்திற்கு வந்துள்ள ஷ்ரவனைத் தாக்கியது
அவர்களுக்குப் புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி மற்றவர்களையும்
அது தாக்க வாய்ப்பு இருக்கிறதா என்று பயப்படுகிறார்கள். இப்போது
ஓநாய் அவன் கண்ணுக்கு மட்டும் தான் தெரிகிறது என்பதால் தான் அவனுக்குத் தெரிவதை எல்லாம்
உடனுக்குடன் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.
அவன் மூளை மிக வேகமாய் வேலை செய்ய ஆரம்பித்தது. பிரம்மானந்தர்
சொன்ன பயிற்சியை அவன் செய்து கண்டிப்பாய் ஓநாய் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது
அவர்களுக்குத் தெரியாமலிருக்காது. இனியும் அந்தப் பயிற்சியையே காரணம் சொல்லிக் கொண்டிருந்தால்
ஒரு கட்டத்தில் அவர்களுக்கு அவன் மேல் சந்தேகம் ஏற்படுவது உறுதி. இவனே எதிரியாக
இருக்கலாம் என்ற யூகத்தை அவர்கள் விரைவாகவே எட்டி விடலாம். அதனால்
அவர்கள் நம்பும்படியாக வேறு ஒரு காரணத்தை அவன் சொல்ல வேண்டும், அவர்களுக்கு
நண்பனாகவும், தேவைப்படும் நபராகவும் அவன் ஆக, இந்த வாய்ப்பைப்
பயன்படுத்திக் கொள்ள முடியும். அதனால் தான் அந்த ஓநாய் கல்பனானந்தாவின் வகுப்புக்கு வந்து
அவளையே பார்த்து நின்று ’அடுத்ததாய் இவள் மூலமாய் வாய்ப்பு வரும், பயன்படுத்திக்
கொள்’ என்று அவளை அவனுக்கு அடையாளம் காட்டி விட்டுச் சென்றிருக்கிறது.
இப்போது அவன் சொல்லப் போகும் காரணம்
அவர்கள் நம்பக்கூடிய காரணமாகவும், கூடுதல் சந்தேகத்தைக் கிளப்பாத அளவுக்கு உண்மைத் தன்மை இருக்கும்
காரணமாகவும் இருக்க வேண்டும்....
அவன் பதில் எதுவும் சொல்லாமல் யோசிப்பது
அவளுக்கு, தயக்கமாகவும், சொல்ல மனமில்லாமையாகவும்
தோன்றியிருக்க வேண்டும். அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு மெல்லச் சொன்னாள். “சொல்லத்
தயக்கமாக இருந்தாலோ, விருப்பம் இல்லாமல் இருந்தாலோ சொல்ல வேண்டாம். பரவாயில்லை.”
ஷ்ரவன் அதற்குள் ஒரு திட்டத்தைக் கச்சிதமாய்
எட்டியிருந்தான். “அப்படியெல்லாம் இல்லை ஸ்வாமினி. நான் சொல்வது
உங்களுக்குப் பைத்தியக்காரத்தனமாய் தோன்றலாம். அதையெல்லாம்
சொல்லி நான் உங்கள் நேரத்தை வீணடித்து விட்டதாகத் தோன்றலாம். அதை யோசித்து
தான் தயங்கினேன். மற்றபடி எனக்கும், நான் தினமும்
வணங்கும் யோகி பிரம்மானந்தாஜி அவர்களின் பிரதான சிஷ்யையான உங்களிடம் என் பிரச்சினையைச் சொல்லி
என் மனப் பாரத்தைக் குறைத்துக் கொள்ள ஆசை தான்.”
”பரவாயில்லை
ஷ்ரவன், சொல்லுங்கள். யோகிஜியின் பக்தர்களுக்கு
வரும் பிரச்சினை எங்களுடைய பிரச்சினையும் கூட. அதனால்
எதைச் சொல்லவும் நீங்கள் தயங்க வேண்டியதே இல்லை.”
பாண்டியனும் பிரம்மானந்தாவும் நேரடியாக
அந்தப் பதிவைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள்
பார்வைக்கு இந்தப் பதிவு செல்லும் என்று ஷ்ரவன் அறிந்திருந்தாலும் அவர்கள் நேரலையிலேயே
இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியவில்லை.
கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில்
இருக்கிறோம் என்பதைப் பரிபூரணமாக அறிந்திருந்த ஷ்ரவன் சற்றுத் தலைதாழ்த்தி அவளைக் கைகூப்பி
வணங்கி விட்டு சொல்ல ஆரம்பித்தான்.
(தொடரும்)
என்.கணேசன்