ஷ்ரவனுக்கு அவர்களை நெருங்க இது நல்ல உபாயமாகத் தெரிந்தது. அவன் தன்னை யோகிஜியின் கண்மூடித்தனமான
பரமபக்தனாகவும், மூளை சலவை செய்யப்பட்டவனாகவும் காட்டிக் கொள்ளும் முயற்சியை உற்சாகமாகத் தொடர்ந்தான்.
“சில நாட்களாகவே தொடர்ந்து ரெண்டு பயிற்சிகள் செய்துகிட்டிருக்கேன்ஜி.
யோகிஜி ’நெற்றிக்கண்ணைத் திறப்பது எப்படி?’
என்ற யூட்யூபில் சொல்லியிருக்கிற முதல் பயிற்சியையும், ‘சிவசக்தியோடு இணைந்திருப்பது எப்படி’ என்ற யூட்யூபில்
சொல்லியிருக்கிற முதல் பயிற்சியையும் தொடர்ந்து செய்துகிட்டிருக்கேன். “சரியாய் தொடர்ந்து 21 நாட்கள் செய்தால் உங்கள் வாழ்க்கையில்
அற்புதங்கள் நடக்கும்” என்று அந்த இரண்டு யூட்யூப்களிலும் யோகிஜி
சொல்லியிருக்கிறார். நான் யோகிஜி வசிக்கும் இந்தப் புனித இடத்தில்
ஒரு வாரம் இருக்க முடிஞ்சதே கூட ஒரு அற்புதம் தானேஜி. ஆனால் நான்
அதைப் புரிஞ்சுக்காமல் அதற்கு மேலேயும் ஆசைப்பட்டு, யோகிஜியின்
அனுபவங்களில் ஒன்னாவது எனக்குக் கிடைக்கணும்னு முயற்சி செஞ்சது தான் என்னை ஒரேயடியாய்
கவிழ்த்துடுச்சு” என்று சொல்லி விட்டு ஷ்ரவன் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான்.
கண்ணன் மெலிதாகப் புன்னகைத்தார்.
ஷ்ரவன் தொடர்ந்து சொன்னான். “இப்பவும்
அந்தப் பயிற்சிகளைச் செய்துட்டு தான் இருக்கேன். ஆனா யோகிஜி
கிட்ட என் மனசுல என்ன பிரார்த்திக்கிறேன்னா, “யோகிஜி, நீங்க காட்டின
பாதையில நான் போறேன். நீங்க சொல்ற மாதிரியே செய்யறேன். அதுக்கு
என்ன விளைவைத் தரணும்னு நீங்க நினைக்கிறீங்களோ, அதை அடியேனுக்குக்
கொடுங்க. கூடுதலாய் நான் எதையும் கேட்கல. எதிர்பார்க்கல”ன்னு தான்
வேண்டிக்கறேன். நான் இப்ப செய்யறது சரி தானே ஜி”
கண்ணன் சொன்னார். “சரி தான். அப்படி
சரணாகதி ஆக முடிவது மிகவும் கஷ்டம். சின்ன வயதானாலும்
உங்களுக்கு அந்தப் பக்குவம் வந்திருக்கிறது.”
”பட்ட பிறகு
தான புத்தி வந்திருக்கு ஜி” என்று சொல்லி ஷ்ரவன் முகத்தில் வருத்தம் காட்டினான்.
கண்ணன் சொன்னார்.
“பட்ட பிறகும் பலருக்கு புத்தி வருவதில்லை.”
தொடர்ந்து நடந்தபடி அவரிடம் ஷ்ரவன் தனக்கு சமீப காலமாக வரும்
துறவு சிந்தனைகளைச் சொன்னான்.
பணம், வேலை, குடும்ப வாழ்க்கை
ஆகியவற்றில் தனக்கு சமீப காலமாக கடுமையான சலிப்பு தோன்றுவதாகச் சொன்னான். எல்லாமே துன்பத்தில் ஆழ்த்தும் படுகுழிகள் என்று தோன்றுவதாகச் சொன்னான்.
துறவு வாங்கிக் கொண்டு யோகிஜியின் கண் பார்வை விழும் இடத்திற்கு வந்து
விட மனம் துடிக்கிறது என்றும் சொன்னான்.
கண்ணன் அவனது குடும்பத்தைப் பற்றிக் கேட்டார். பின் அவர் தொடர்ந்து கேட்ட
கேள்விகள் அவனுக்கு இருக்கும் சொத்துக்கள் மற்றும் நிதி நிலைமை பற்றியதாக இருந்தன. தங்களிடம் வருபவர்களின் சொத்துக்கள்
மற்றும் நிதி நிலைமை இவர்களுக்கு மிக முக்கியமாக இருப்பதை அவன் கவனித்தான்.
கல்விக்கடன் வாங்கிப் படித்து மேலே வந்த இளைஞனாகத் தன்னைச் சொன்னான்.
ஹைதராபாதில் மூன்று செண்ட் நிலத்தில் கட்டப்பட்ட தாத்தாவின் பழைய வீடு
தான் தன்னுடைய ஒரே சொத்து என்றும், பைக் கூட வேலைக்குச் சேர்ந்த
பின் தான் வாங்கியது என்றும் அவன் சொன்னது அவருடைய ஆர்வத்தைக் குறைத்து விட்டது.
அவர்கள் நடக்கையில் எதிரே பக்கத்து
அறை இளைஞர்கள் இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டபடி நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப்
பின்னால் நாலடி தள்ளி ஒரு துறவி நடந்து வந்து கொண்டிருந்தார். அவர் தான்
எப்போதும் ஷ்ரவனின் பின்னால் வருபவர். இன்று ஷ்ரவனைக்
கண்காணிக்க கண்ணன் வந்து விட்டதால், அந்தத் துறவிக்கு
அந்த இளைஞர்களைக் கண்காணிக்கும் வேலை ஒதுக்கப்பட்டு விட்டது போலிருந்தது. ஷ்ரவனுக்கு, தான் மட்டுமல்லாமல்
அந்த இளைஞர்களும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவது திருப்தியைத் தந்தது. இன்னும்
பொதுவாகத் தான் கண்காணிப்பு நடக்கிறது. யோகாலயத்துக்கு
இன்னும் எதிரிகள் குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை.
எதிரே இளைஞர்களைப் பின் தொடர்ந்து வந்தத்
துறவி கண்ணனைப் பார்த்தவுடன் மரியாதையான வணக்கம் தெரிவித்தார். கூடவே அவர்
முகத்தில் பயமும் தெரிந்தது போல் ஷ்ரவன் உணர்ந்தான். அவன் ஏற்கெனவே
யூகித்தபடி இந்த ஆள் யோகாலய அதிகார மையத்திற்கு மிகவும் நெருங்கியவர் போலத் தான் இருக்கிறது. அந்த முக்கிய
ஆளே அவனிடம் அடுத்த தகவல்களைப் பெற வந்திருப்பது, ஆபத்தான
பாதையானாலும் அவன் சரியான பாதையையே தேர்ந்தெடுக்கிறான் என்பதை உறுதிப்படுத்துவது போல்
இருந்தது.
ஷ்ரவன் இங்கு துறவியாக வந்து சேர என்ன வழிமுறை என்று கண்ணனிடம்
கேட்டான். அந்த
வழிமுறையைச் சுருக்கமாகச் சொல்லி விட்டு அவர் அவனிடம் விடைபெற்றார்.
ஷ்ரவன் தனதறைக்கு வந்து சேரும் வரை ஸ்ரேயா எதிர்ப்புறமாகக் கூட, அவனுக்குப் பார்க்கக் கிடைக்கவில்லை.
அறைக்கு வந்தவுடன் அவன் பரசுராமன் உபதேசித்த மந்திரத்தை, பக்தி சிரத்தையுடன் ஜபிக்க ஆரம்பித்தான். உண்மையில் அவன்
கண்ணனிடம் சொன்னதற்கு எதிர்மாறாக, அந்த அமானுஷ்ய அனுபவத்திற்குப்
பிறகு கூடுதல் சக்தியைப் பெற்றதாய் உணர்கிறான். அவனுடைய உணர்வுகளும்
கூட மிகவும் கூர்மையடைந்திருப்பதையும் உணர்கிறான்.
அன்று அவன் ஜபிக்கையில் ஓநாயோ, வேறு எதாவது அமானுஷ்யக்
காட்சியோ தெரியவில்லை. ஆனால் வேறெதாவது முக்கியத் தகவல் கிடைக்குமா
என்று ஷ்ரவன் ஆவலுடன் எதிர்பார்த்தான். குறைந்த பட்சம் அந்த ஓநாய்
கல்பனானந்தாவைப் பார்த்து நின்று விட்டுப் போனது ஏன் என்பதாவது தெரிந்தால் நன்றாக இருக்கும்
என்று அவன் நினைத்தான். இப்படி எதிர்பார்ப்புடன் ஜபிப்பது எதிர்மறையான
பலனைத் தான் தரும் என்று உள்ளுணர்வு சொன்னது.
நடிப்புக்காக சரணாகதித் தத்துவத்தை கண்ணனிடம் பேசியிருந்தாலும், உண்மையிலும் அது தான் சக்தி
வாய்ந்தது என்று அவனுக்குத் தோன்றியது. பக்தி, சிரத்தையுடன் எதிர்பார்ப்பும் சேர்ந்து கொள்ளுமானால் பக்தி, சிரத்தை களங்கப்பட்டு விடும் என்ற ஞானம் மனதில் வலுவாக உறைத்தது. ’வர வேண்டிய நேரத்தில் எல்லாம் நிச்சயம் வரும்!’
எதிர்பார்ப்பை முழுவதுமாக விட்டு விட்டு பக்தி சிரத்தையுடன்
மறுபடியும் ஆரம்பத்திலிருந்து ஷ்ரவன் ஜபிக்க ஆரம்பித்தான்.
ஷ்ரவன் சொன்னதாய் கண்ணன் குறிப்பிட்ட இரண்டு யூட்யூப்களையும்
பிரம்மானந்தா பார்த்தார். இரண்டிலுமே அவர் சொல்லியிருந்த பயிற்சிகள் அந்தந்த நேரத்தில்
அவருக்குத் தோன்றியபடி பேசியிருந்த பயிற்சிகள். அரைத்த
மாவையே அரைப்பது போல அனைவரும் சொன்னதையே சொல்வதில் அவருக்குச் சில வருடங்களாகவே சலிப்பு
தோன்றி வருகிறது. அப்படிச் சொன்னால், கேட்டுக்
கொண்டிருப்பவர்களின் முகத்தில் ‘அது தான் தெரியுமே’ என்பது
போன்ற முகபாவனையை அவர் பார்க்க வேண்டி வருகிறது. அந்தப்
புராதனப் பயிற்சிகளை, சிலர் அவரை விட அற்புதமாக விளக்கி விவரித்திருக்கிறார்கள். அதையும்
சிலர் நினைவுகூர்ந்து விடுகிறார்கள். அதனால் எந்தப் பயிற்சியிலும்
இது வரை யாரும் சொல்லாத ஒன்றைக் கற்பனை செய்து சேர்த்துச் சொல்லி, கேட்பவர்களிடம் சுவாரசியத்தையும், ஆச்சரியத்தையும்
ஏற்படுத்தி அதைப் பார்த்து ரசிக்கும் ஒரு வழக்கம் சில வருடங்களாக அவரிடம் இருந்து வருகிறது. அதுவரை
யாருமே சொல்லாததை முதல் ஆளாய்ச் சொல்லியிருக்கும் பெருமையும் அவரை வந்து சேர்வதையும்
அவர் விரும்பினார். ஆனால் அந்தப் பயிற்சிகளை அவரே செய்து பார்த்ததில்லை. அவருக்கு
அதற்கு நேரமும் இல்லை.
ஆனால் அவருடைய தீவிர பக்தர்கள் அவர்
சொன்னதைச் செய்து, தங்கள் அனுபவங்களை அவரிடம் சொல்லி மெய்சிலிர்த்திருக்கிறார்கள். அதைக் கேட்கையில்
அவருக்குப் பெருமையாக இருக்கும். ’நான் சரியாகத் தான் சொல்லியிருக்கிறேன்.’ என்று தோன்றும்.
ஆனால் அதையே தொடர்ந்து செய்ய அவருடைய
பக்தர்களுக்கும் அலுத்து விடும். அதனால் அவர் மாறுதலுக்காக வேறொரு தலைப்பில் இன்னொரு பயிற்சியை
அறிமுகப்படுத்துவார். அந்தப் பயிற்சியிலும் அவருடைய கற்பனை சிறிதாவது கலந்திருக்கும். அதைச் செய்வதால்
கிடைக்கும் விளைவை பிரம்மாண்டமாகச் சொல்வார். ’இதை மட்டும்
நீ செய்து வந்தால் போதும். வேறெதையும் நீ செய்யத் தேவையில்லை. இது ஒன்றே
மற்ற எல்லாவற்றையும்
பார்த்துக் கொள்ளும்’ என்றெல்லாம் சொல்வார்.
உண்மையில் அந்த ஒன்றையே காலம் முழுவதும்
செய்து கொண்டிருக்கும் பொறுமையும், விடாமுயற்சியும்
யாருக்கும் இருப்பதில்லை. அதனால் அவர் அடுத்த ஒரு பயிற்சியைக் கண்டுபிடித்துச் சொல்ல
வேண்டிய கட்டாயம் சீக்கிரமே வந்து விடும். இப்படியாகத்
தான் அவருடைய தற்கால உபதேச அருள்வாக்குகள் சென்று கொண்டிருக்கின்றன.
விஷயம் தெரிந்த சில அதிகப்பிரசங்கிகள் “இது புதிதாக
இருக்கிறதே. இது யோக நூல்களில் சொல்லியிருக்கிற அடிப்படை விதிகளுக்குப்
பொருத்தமாக இல்லையே” என்று அவரிடம் கேட்பதுண்டு.
அப்போதெல்லாம் அவர் “என்ன செய்வது? இதை எனக்கு
உபதேசித்திருக்கும் வேதநாயகனான சுந்தர மகாலிங்கம் அந்த யோக நூல்களை எல்லாம் படிக்கவில்லை
போலிருக்கிறது” என்று சொல்லிச் சிரித்து அந்த அதிகப் பிரசங்கிகளின் வாயை
அடைப்பதுண்டு.
ஆனால் இது வரை அவர் சொன்ன பயிற்சிகளைச்
செய்து விட்டு ஒரு ஏவல் ஓநாயைப் பார்த்திருக்கும் பாக்கியம் ஷ்ரவனைத் தவிர வேறு யாருக்கும்
கிடைக்கவில்லை. இவனை எந்த
ரகத்தில் சேர்ப்பது என்று பிரம்மானந்தா யோசிக்க ஆரம்பித்தார்.
No comments:
Post a Comment