ராக்ஷசர் ஜீவசித்தியிடம் கேட்டார். “என்ன?”
ஜீவசித்தி தயக்கத்தோடு சொன்னான். “மூன்று
மாதங்களுக்கு முன்பு என்று நினைக்கிறேன். இரண்டு வணிகர்கள்
யாகசாலைக்கருகே முகாமிட்டுத் தங்கி இருந்தார்கள். ஒரு முறை
நான் நள்ளிரவில் காவலர்களைக் கண்காணிக்கச் சென்ற போது அவர்கள் இருவரையும் யாகசாலை அருகே
பார்த்தேன். அந்த நள்ளிரவு வேளையில் ஏன் அங்கே இருக்கிறீர்கள் என்று நான்
அவர்களைக் கேட்ட போது உறக்கம் வரவில்லை என்று சொன்னார்கள். நான் யாகசாலையைப்
பார்த்தேன். அது பூட்டப்பட்டே இருந்தது. அப்படியில்லா
விட்டாலும் அங்கே எந்தப் பொருள்களும் கூட இல்லை என்பதால் அதற்கு மேல் நான் அதிகம் யோசிக்கவில்லை. அவர்களும்
உடனே தங்கள் கூடாரத்திற்குப் போய் விட்டார்கள். இப்போது
எல்லாம் நினைவுபடுத்திப் பார்க்கையில் எனக்கு அவர்கள் மேல் சந்தேகம் வருகிறது.”
ராக்ஷசர் அந்த
வணிகர்கள் குறித்து சற்று முன்பே சந்தேகம் கொண்டதை அவனிடம் சொல்லவில்லை. “இனி அவர்கள்
வந்தால் அவர்களை உடனடியாக சிறைப்படுத்த வேண்டும். அவர்களைக்
கண்டால் தெரிவிக்கச் சொல்லி காவலர்கள் அனைவரிடமும் சொல்லி வை” என்று கட்டளையிட்டார்.
ஜீவசித்தி தலையசைத்து வணங்கி விட்டு
விடைபெற்றான். இந்தத் தகவலை அவரிடம் அவனாகவே ஆரம்பத்தில் தெரிவித்து விட்டதால்
இனி அவருடைய சந்தேகப் பட்டியலில் அவன் பெயர் இருந்திருந்தாலும் நீக்கப்படும் என்று
நம்பினான்.
ஜீவசித்தி வேறொரு அதிர்ச்சியைத் தராமல்
இந்தத் தகவலைச் சொல்லி விட்டு விடைபெற்றது ராக்ஷசருக்கு
ஆறுதலாய் இருந்தது. அவர் சேனாதிபதி பத்ரசாலைச் சந்திக்க விரைந்தார்.
பத்ரசால் தன் வீட்டுக்குத் திடீரென்று
ராக்ஷசர் வந்து நின்றதில் அதிர்ந்து போனான். அவன் அறிந்து
பாடலிபுத்திரத்தில் தனநந்தனைத் தவிர்த்து வேறு யாரும் ராக்ஷசரின்
வரவினால் அகமகிழ்கிறவர்கள் அல்ல. அவரும் முக்கிய காரணம் இல்லாமல் யார் வீட்டுக்கும் போகிறவரும்
அல்ல. அதனால் அவர் வருகையில் அவன் பிரச்சினையை உணர்ந்தான்.
“வரவேண்டும்...
வரவேண்டும்... தாங்கள் சொல்லி அனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேனே. அமருங்கள்” என்று அவரைப்
பரபரப்புடன் அவன் வரவேற்று அமர வைத்தான்.
“அதனாலென்ன
பரவாயில்லை” என்று சொன்ன ராக்ஷசரின்
கூரிய பார்வை அவன் வீட்டை அலசி ஆராய்ந்தது. கண்ணில்
படுகின்ற பொருட்கள் எல்லாம் சேனாதிபதியின் வருமானத்திற்கு உட்பட்டவை தானா என்று அவர்
பார்வை தணிக்கை செய்தது.
ராக்ஷசரின்
வரவில் பிரச்சினையை உணர்ந்த பத்ரசால் அவர் பார்வையால் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்தான். கார்த்திகேயன்
சூதாட்ட விடுதியில் ஒற்றர்கள் கவனிப்பதைச் சொல்லியிருந்ததும் அவன் நினைவுக்கு வந்தது. மகத ஒற்றர்கள்
மன்னனிடம் தங்கள் கண்டுபிடிப்புகளையும், யூகங்களையும் சொல்கிறார்களோ
இல்லையோ கண்டிப்பாக ராக்ஷசரிடம்
சொல்பவர்கள். எல்லாவற்றையும் கேட்டுக் கொள்ள தனநந்தனுக்குப் பொறுமையும்
இல்லை. ஆனால் ராக்ஷசர் கேள்விப்படும்
எந்தத் தகவலையும் தவற விடுபவரோ, மறப்பவரோ அல்ல. அதை வைத்து உடனடி
நடவடிக்கை எடுப்பவரும் கூட என்பதால் பத்ரசால் எச்சரிக்கையடைந்தான். கார்த்திகேயனுடனான
அவனுடைய தொடர்பு எப்படியாவது அவருக்குத் தெரிந்திருக்குமோ?
அவன் உள்ளூரப் பதறியபடி அவர் பார்வை
போகும் இடங்களைக் கவனித்தான். அவர் கண நேரத்தில் பலவற்றை கணக்கெடுப்பவராகத் தெரிந்தார். அவன் சமீபத்தில்
தான் பல பொருள்களை வாங்கியிருக்கிறான். அதை வைத்து அவர்
அவனைச் சந்தேகிப்பாரோ?
ராக்ஷசர் சொன்னார். “பல சமயங்களில்
அந்தந்த நேரங்களின் அவசர வேலைகளில் ஒருவரை ஒருவர் விசாரிக்கவோ, புரிந்து
கொள்ளவோ மறந்து விடுகிறோம். நம்மைப் போன்ற முக்கியப் பொறுப்புகள் உள்ளவர்கள் உள்நோக்கம்
எதுவுமின்றி நம்மையறியாமல் செய்யும் தவறு அது. வீட்டில்
அனைவரும் நலம் தானே?”
பத்ரசால் சொன்னான். “அனைவரும்
நலம். என் மனைவி பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தாய் வீடு சென்றிருக்கிறாள். ஓரிரு நாட்களில்
வந்து விடுவார்கள்.”
ராக்ஷசர் தலையசைத்தார். பின் பத்ரசாலைக்
கூர்ந்து பார்த்தபடி சொன்னார். “நம் மன்னர் ஆபத்தான காலத்தில் பயன்படும் என்றெண்ணி மிக ரகசியமாய்
சிறிது நிதியை கங்கைக்கரையில் உள்ள நம் யாகசாலையின் கீழ் புதைத்து வைத்திருந்தார். சமீபத்தில்
அது களவு போய் விட்டது.”
பத்ரசால் உண்மையாகவே அதிர்ந்து போனான். அதிர்ச்சியிலிருந்து
மீண்டவுடன் தனநந்தன் ஒளித்து வைத்த நிதி சிறிதாக இருக்க வாய்ப்பில்லை என்று அவன் மனம்
கணக்குப் போட்டது. மக்களை
வாட்டி வதைத்து, ஊழியர்களுக்கும் தாராளமாகத் தராமல் தனநந்தன் சேர்த்து வைத்த
நிதி களவு போனதில் அவனுக்கு சிறிது மகிழ்ச்சியே ஏற்பட்டது. அதை மறைத்துக்
கொண்டு கவலையையே அவன் வெளிக்காட்டினான்.
ஆரம்பத்தில் அவன் முகத்தில் தெரிந்த
அதிர்ச்சி நடிப்பில்லை என்று தெளிவாகவே தெரிந்ததால் இதில் அவன் பங்கு இருக்க வாய்ப்பில்லை
என்பதை ராக்ஷசர் உணர்ந்தார். அதற்குப்
பின் அவன் முகத்தில் தெரிந்து கண நேரத்தில் மறைந்த மகிழ்ச்சி அவரை யோசிக்க வைத்தது. அவர் ஒற்றர்களிடம்
இக்களவைத் தெரிவித்து அபிப்பிராயம் கேட்ட போதும் கிட்டத்தட்ட இதே உணர்ச்சி தான் அவர்களிடமும்
வெளிப்பட்டது. தனநந்தன் செல்வத்தைச் சேர்த்த அளவு ஊழியர்கள் மற்றும் மக்களின்
நல்லெண்ணத்தைச் சம்பாதிக்கவில்லை என்பதை வருத்தத்துடன் உணர்ந்தார். தனநந்தன்
அதைப்பற்றிக் கவலைப்பட்டதும் இல்லை....
பத்ரசால் கேட்டான். “திருடர்களை
நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லையா?”
“அன்று அரசவைக்கு
வந்து சபதமிட்டுப் போன தட்சசீல ஆசிரியரின் ஆட்கள் தான் வணிகர்களாக மாறுவேடத்தில் வந்து
திருடிக் கொண்டு போயிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஆயுதக்கிடங்கில்
ஏற்பட்ட தீவிபத்தும் அவருடைய சதியாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்...”
பத்ரசால் சந்தேகத்துடன் கேட்டான். “அவர் எப்படி
புதையலைப் பற்றி அறிந்தார்?”
”அது தெரியவில்லை....
மன்னர் முன் இந்த விஷயத்தைப் பிரஸ்தாபிக்க வேண்டாம். தகவலுக்காகவும், நாம் எச்சரிக்கையாக
இருக்க வேண்டியதன் அவசியத்திற்காகவும் தான் இதை உங்களிடம் தெரிவித்தேன்”
பத்ரசால் தலையசைத்தான். ராக்ஷசர் திடீரென்று சொன்னார். “தங்கள்
கழுத்தில் இருக்கும் முத்துமாலை மிக அழகாக இருக்கிறது. சமீபத்தில்
வாங்கியதா? விலை அதிகமிருக்குமே?”
வார்த்தைகள் இயல்பாக வந்தாலும் அவர்
பார்வை கூர்மையாக அவனைக் கவனித்தது. பத்ரசால் எச்சரிக்கை அடைந்தான். இந்த முத்துமாலை
போல் அவர் பார்வையில் என்னென்ன பட்டிருக்கிறதோ?
பத்ரசால் தன் உள்ளத்தில் உணர்ந்த படபடப்பை
வெளியே காட்டாமல் இருக்க மிகவும் பாடுபட்டான். முகத்தில்
மகிழ்ச்சியும் பெருமிதமும் காட்டிச் சொன்னான். “ஆம் பிரபு. தெற்கிலிருந்து
வந்த வணிகர்களிடம் வாங்கியது. விலையும் அதிகம் தான்”
அவன் அதை ஏற்றுக் கொண்டு சொன்னது அவருக்கு
ஆச்சரியமாக இருந்தது. அவன் தொடர்ந்து சொன்னான். “உண்மையில்
சில காலம் முன்பு வரை இப்படி ஒரு முத்துமாலையை விலைகொடுத்து வாங்கி மகிழும் நிலைமை
எனக்கிருக்கவில்லை. ஆனால் மிகப்பெரிய பாடம் ஒன்றைக் கற்றுக் கொண்டதால் என் நிதி
நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டது.”
ராக்ஷசர் முகத்தில்
வியப்பைக் காட்டி சொன்னார். “அந்தப் பாடம் என்னவென்று சொன்னால் என் நிதி நிலைமையை நானும்
உயர்த்திக் கொள்வேன் சேனாதிபதி”
பத்ரசால் புன்னகையுடன் சொன்னான். “நீங்கள்
முன்பே கற்றுப் பின்பற்றி வரும் பாடம் அது பிரபு. நான் தான்
கற்றுக் கொள்ளாமல் ஏமாந்து விட்டேன். முன்பெல்லாம் சூதாட்ட
விடுதியில் எப்போதும் என் நிதியை நான் இழந்து விட்டுத் தான் வீடு திரும்புவேன். விட்டதைப்
பிடிக்கும் முயற்சியில் நிதியை விடாது தொலைக்கும் வழக்கம் என்னிடமிருந்தது. சில மாதங்களுக்கு
முன் ஒரு வணிகன் பாடலிபுத்திரத்திற்கு வந்தான். அவனை சூதாட்ட
விடுதியில் தான் சந்தித்தேன்.
அவன் சூதாட்டத்தை ஒரு பொழுதுபோக்கு விளையாட்டாகவே எடுத்துக்
கொண்டதை நான் கவனித்தேன். வெற்றியானாலும் சரி தோல்வியானாலும் சரி ஒரு ஆட்டத்திற்கு
மேல் அவன் தொடராமல் அன்றைய அதிர்ஷ்டம் அவ்வளவு தான் என்று எடுத்துக் கொண்டு போய் விடுவான். அவனுடைய
கட்டுப்பாடு எனக்குப் பிடித்திருந்தது. நானும் அதை அன்றிலிருந்து
பின்பற்ற ஆரம்பித்தேன். நான் தொடர்ந்து பணத்தை இழப்பது நின்று போனதால் என் நிதி நிலைமை
மேம்பட ஆரம்பித்தது. இப்போது நான் செல்வந்தனாகவே உணர்கிறேன்”
ராக்ஷசரின்
சந்தேகம் ஓரளவு நீங்கியது. சிறிது நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்து விட்டு அவர்
விடைபெற்றார். வாசல் வரை சென்று அவரை வழியனுப்பி விட்டு வந்த பத்ரசால் பெரிய
கண்டத்திலிருந்து தப்பியவன் போல் உணர்ந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
ராக்ஷசர் எப்போதுமே
ஓரளவு சந்தேக நிவர்த்தியோடு திருப்தி அடைபவர் அல்ல. அவர் பத்ரசால்
சொன்னது போல் ஒரே ஒரு சூதாட்டத்தோடு நிறுத்திக் கொள்ளும் வணிகன் பாடலிபுத்திரம் வந்திருக்கிறானா, அவனோடு
பத்ரசால் பேசியிருக்கிறானா என்பதை விசாரித்தார். ஒரு ஒற்றன்
அது உண்மை என்றும் அந்த வணிகன் வந்து போனதிலிருந்து தான் பத்ரசாலின் நிதி நிலைமையில்
முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றும் சொன்னான்.
ராக்ஷசர் புதிதாக
ஒரு சந்தேகம் எழும்ப, மெல்லக் கேட்டார். “அந்த வணிகன்
அடிக்கடி இங்கு வருபவனா?”
ஒற்றன் சொன்னான். “இல்லை பிரபு. ஒரே ஒரு
முறை தான் அவன் இங்கே வந்திருக்கிறான். பிறகு நாங்கள் அவனை
இங்கே பார்க்கவில்லை.”
ராக்ஷசரின்
சந்தேகம் முழுமையாக நீங்கியது.
(தொடரும்)
என்.கணேசன்
No comments:
Post a Comment