சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, January 6, 2025

யோகி 84



ஷ்ரவன் தொடர்ந்து சொன்னான். “கண் விழிச்சு பார்க்கறப்ப அப்படியே படுக்கைல, உட்கார்ந்த நிலையிலயே குப்புறக் கவிழ்ந்திருந்தேன். எழுந்து அந்த மிருகமோ, அதை அனுப்பின பையனோ தெரியறாங்களான்னு சுற்றிலும் பார்த்தேன். இல்லை. மனசுல என்னையே திட்டிகிட்டேன். “முட்டாளே. யோகிஜி இருக்கற இடத்துல சைத்தான் எப்படிடா  இருக்க முடியும், நீ போன வாரம் பார்த்த சினிமா காட்சி ஆழ்மனசுல பதிஞ்சது தாண்டா உனக்கு தெரிஞ்சுருக்கு. அவருக்குக் கிடைச்ச தெய்வீக அனுபவங்கள்ல ஒன்னாவது உனக்கும் வேணும்னு கேட்டியே. அதைத் தான் அவர் உனக்கு அனுப்பிச்சிருக்கார்டா. இந்த ஒன்னையே உன்னால தாங்க முடியலையே, மயக்கம் போட்டு விழுந்திட்டியே, அவர் அளவுக்கு அனுபவம் கிடைச்சா நீ என்னடா ஆகியிருப்பே?”. உண்மை தானே ஜீ? சில அனுபவங்களை வேண்டறதுக்கு முன்னாடி அதை தாங்கற சக்தியிருக்கான்னு நீ சோதிச்சுப் பார்த்துக்கோன்னு ஒரு யூட்யூப்ல யோகிஜி சொல்லியிருந்தார். அதை நானும் கேட்டிருக்கேன். ஆனாலும் தப்பாய் ஆசைப்பட்டுட்டேனே. அதுக்கு யோகிஜி அவர் இருக்கற இடத்திலேயே அந்த சக்தியையும் அனுப்பி, எனக்கு ஒரு நல்ல பாடத்தையும் கொடுத்திருக்கார். எல்லாம் அவர் வசிக்கிற இடத்துலயே கிடைச்சுது என் பாக்கியம். அப்புறம் கடிகாரத்தைப் பார்த்தால் மணி ஏழரைக்குப் பக்கத்துல ஆகியிருந்துச்சு....”


அந்தத் துறவி அவனை இடைமறித்தார். “உண்மையாகவே நீங்கள் அவர் அருளைப் பெற்ற பாக்கியசாலி தான். இப்போது உங்களுக்கு உடல் எப்படி இருக்கிறது.”

 

ரொம்பக் களைப்பாய் இருக்குது ஜீ. என்னோட சக்தி எல்லாத்தையும் அந்த அனுபவம் உறிஞ்சி எடுத்த மாதிரி இருக்கு. ஆனாலும் சமாளிக்கும் சக்தியை யோகிஜீ கொடுத்திருக்கிறார். அது என் பாக்கியம்சொல்லி விட்டு ஷ்ரவன் உடலைச் சிலிர்த்துக் கொண்டான்.

 

யோகாலயத்துல டாக்டர் இருக்கார். உடல் பிரச்சினை எதாவது இருந்தால். நீங்கள் தயங்காமல் அவர் ஆலோசனையைப் பெறலாம். தேவைப்பட்டால் சிகிச்சையும் பெற்றுக் கொள்ளலாம்.” என்று சொல்லி விட்டு அந்தத் துறவி எழுந்து நின்றார்.

 

ரொம்ப நன்றி ஜீ. இந்த அறையைக் கடக்கும் போது நான் அரற்றும் சத்தம் கேட்டு இவ்வளவு அக்கறையாய் நலம் விசாரிக்க வந்திருக்கீங்க. உங்க அன்பு என்னை மெய்சிலிர்க்க வைக்குது.”

 

எல்லாம் இறைவனின் கருணை. யோகிஜியின் சித்தம்என்று கைகூப்பிய அந்தத் துறவி விடைபெற்றார். 

 

அவர் சென்ற பின்னும் சிறிது நேரம் கைகூப்பியபடி ஷ்ரவன் நின்றான். பின் களைப்பைக் காட்டி தளர்ச்சியுடன் படுக்கையில் சாய்ந்து கொண்டான்.

.

பாண்டியன் ஷ்ரவன் சொன்னதை எல்லாம் மிகவும் கூர்ந்து கவனித்தார். அவன் நடந்ததாய் சொன்னது எதுவும் காமிராப் பதிவுக்கு எதிர்மறையாக இருக்கவில்லை. அவன் பிரம்மானந்தாவின் யூட்யூப்களை தினமும் கேட்டுக் கொண்டிருந்தது உண்மை. அவன் அன்று தியானம் செய்ய உட்கார்ந்தது உண்மை.  ஹாய் சொன்னதும் உண்மை. திடீரென்று துடிக்க ஆரம்பித்ததும் உண்மை. குப்புறக் கவிழ்ந்ததும் உண்மை. சுயநினைவு பெற்று எழுந்ததாய் சொன்ன நேரம் கூட உண்மை.

 

ஷ்ரவனின் பார்வைக்கு ஒரு இளைஞனும், ஓநாயும் தெரிந்தது தான் அவரை மிகவும் யோசிக்க வைத்தது. எதிரி ஒரு இளைஞன் என்று தேவானந்தகிரி சொல்லியிருக்கிறார். எதிரியின் ஆட்கள் வெளியே கண்காணித்துக் கொண்டு இருப்பதும் உண்மை தான். அவர்களோடு எதிரியும் கூட இருக்கலாம். ஓநாய் தெரிந்தது பாண்டியனின் சொந்த அனுபவம். மட்டுமல்ல, ஓநாய் அவர் மேல் பாய்ந்து செய்த வேலைக்கு அவருடைய ஆறாத வயிற்றுப் புண்ணும் உதாரணம்.   தேவானந்தகிரி அந்த ஓநாய்உங்கள் பார்வைக்கு அகப்படாது. இனி உங்களைத் தொந்தரவு செய்யாதுஎன்று சொன்னாரேயொழிய அந்த ஏவல் சக்தியை யோகாலயத்திலிருந்தே விரட்டி விட்டேன் என்று சொல்லவில்லை. அதன் அர்த்தம், விளைவுகளில் இருந்து நீங்கள் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள், ஆனால் காரணமான ஏவல் சக்தி இங்கேயே தான் இருந்து கொண்டிருக்கும் என்பது தான். அந்த ஏவல் சக்தி திடீரென்று புதியதொரு ஆளைத் தாக்கியிருக்கிறது. அது ஒன்றும் பிரச்சினை இல்லை. அந்தப் பைத்தியக்காரன் இரண்டு நாட்களில் இங்கிருந்து போய் விடுவான். அடுத்ததாய் இன்னொருவனைத் தாக்கினால் என்ன செய்வது? இது சங்கிலித் தொடர் போல் தொடர்ந்தால் இதற்கு முடிவு தான் என்ன? எத்தனை பேருக்குத் தாயத்து கட்ட முடியும்? வெளியாட்களானால் அவர்களுடைய விதி என்று விட்டு விடலாம். யோகாலயத்து ஆட்களையே தாக்க ஆரம்பித்தால் என்ன செய்வது?

 

அந்தப் பைத்தியக்கார இளைஞனுக்கு அவன் கண்ட காட்சி உண்மை தான் என்பது இன்னும் புலப்படாதது அவருக்கு வேடிக்கையாக இருந்தது. ஓமன் என்ற படத்தை சமீபத்தில் பார்த்தது தான் அந்தக் காட்சியாக வந்திருக்கிறது என்று அவன் எண்ணிக் கொண்டிருக்கிறான். அவன் பிரம்மானந்தரின் மீது வைத்திருக்கும் மிதமிஞ்சிய பக்தி, எது நடந்தாலும் அது அவருடைய அற்புதம் என்று எடுத்துக் கொள்ள வைத்திருக்கிறது.

 

அந்த  ஏவல் சக்தி அவன் கண்களுக்குத் தெரியக் காரணம் என்ன என்று தெரியவில்லை. தாக்கக் காரணம் அவன் அதற்கு ஹாய் சொன்னதாக இருக்கலாம். பைத்தியக்காரன் ஆனாலும் அவனும் அவரைப் போல் தைரியசாலி தான். அதனால் தான் அவன் அந்த ஓநாய்க்கு ஹாய் சொல்லியிருக்கிறான். அது அவன் மீது பாய்ந்திருக்கிறது. அந்த நிகழ்வைக் கற்பனை செய்து பார்த்த போது அவருக்குச் சிரிப்பு வந்தது.

 

தன் கையிலிருந்த தாயத்தை பாண்டியன் பார்த்தார். அவர் சிரிப்பு தானாய் நின்றது. இந்தத் தாயத்து இல்லா விட்டால் அவர் நிலைமையும் பரிதாபம் தான்.  ஷ்ரவனின் உடம்பு துடித்த விதத்தை நினைத்துப் பார்த்தார். சில சமயங்களில் முட்டாளாய் இருப்பதும் நல்லது தான் என்று தெரிகிறது. தனக்குப் பிரச்சினை இருக்கிறது, ஆபத்து இருக்கிறது என்று தெரிந்து கொள்ளாத முட்டாள், நாளைக்கு நாசமாய் போனாலும் சரி, இன்று நிம்மதியாக அல்லவா இருக்கிறான்…?

 

பைத்தியக்கார ஷ்ரவனின் இந்த திகில் அனுபவத்தை பிரம்மானந்தாவுக்குத் தெரிவித்து, தேவானந்தகிரியிடம் உடனே இதுபற்றிப் பேசுவது உசிதம் என்று பாண்டியனுக்குத் தோன்றியது. அவர் பிரம்மானந்தாவைச் சந்திக்க எழுந்தார்.

 

பிரம்மானந்தாவும் ஷ்ரவனின் விசித்திர அனுபவத்தின் காமிராப் பதிவைத் திகைப்புடன் பார்த்தார்அவன் கண்ணனிடம் சொன்ன விளக்கத்தின் பதிவையும் முழுமையாகப் பார்த்தார்.

 

பாண்டியன் கேட்டார். “நடந்ததையும், அவன் சொன்னதையும் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க யோகிஜி

 

பாண்டியனைத் தவிர வேறு யார் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தாலும், பிரம்மானந்தா ஷ்ரவன் அவருக்குத் தந்திருந்த பெருமையை மறைமுகமாக அங்கீகரித்திருப்பார். “எல்லாம் அந்த சுந்தர மகாலிங்கத்தின் திருவிளையாடல். நான் வெறும் அவனுடைய கருவி மாத்திரம்என்று பணிவாகச் சொல்வதன் மூலம் நான் அந்த சுந்தர மகாலிங்கத்தின் கருவி என்ற பெருமையை கேட்பவர் மனதில் நிலைநிறுத்தியிருப்பார். ஆனால் பாண்டியனிடம் அப்படிச் சொல்ல முடியாது.

 

அவர் அப்படிச் சொன்னாலும் பாண்டியனிடம் எந்த உணர்ச்சியும் இருக்காது. கற்பனையும், கதையளப்பும் வரம்பு மீறிப் போகும் போது சில சமயங்களில் பாண்டியன் முகத்தில் சலிப்பு தெரியும். ’ஏன் யோகிஜி என்னையும் இம்சிக்கிறீர்கள்?’ என்று சொல்வது போல் தெரியும். அதனால் அதை எல்லாம் அவரிடம் பிரம்மானந்தா எப்போதோ நிறுத்தி விட்டார்.

 

பாண்டியனிடம் அவர் சொல்லாமல் மறைத்த தகவல்கள் ஏதாவது இருக்க முடியுமானால், அது அவர்  பாண்டியனைச் சந்திக்கும் முன் நடந்திருக்கும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையின் தகவல்களாகத் தான் இருக்கும். அதைக் கூட அவர் பாண்டியனிடம் ஏன் சொன்னதில்லை என்றால், அவை அவரே நினைவுகூரக் கூசுபவை என்பது தான் காரணம். ப்ரேமானந்தாக அவர் அடிமட்ட நிலையில் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றிய உண்மைகளை அவர் யாரிடமும் பேசியதில்லை.  அதிகப்பிரசங்கித்தனமாக யாராவது அது குறித்துக் கேட்டாலும், தன் அபாரக் கற்பனைகளைச் சொல்லி அவர் அந்த உண்மைகளை மூடி மறைத்துச் சமாளித்திருக்கிறார்.

 

பாண்டியன் அவர் வாழ்க்கையில் நுழைந்த பிறகு அவர்கள் இருவருக்கும் இடையே எந்த ரகசியமும் இருந்ததில்லை. இந்த உலகில் அவர் முழுமையாக நம்பும் ஒரே மனிதர் பாண்டியன் மட்டும் தான். அவர் நடிக்காத, நடிக்கத் தேவையிருக்காத ஒரே மனிதரும் பாண்டியன் மட்டுமே. ஒருவேளை அவர் நடித்தாலும், வழக்கம் போல் கற்பனையாய் கதையளந்தாலும், பாண்டியன் சம்பிரதாயத்திற்காகக் கூட அதைச் சிலாகிக்கவோ, பாராட்டவோ செய்யாமலிருப்பதில் பிரம்மானந்தாவுக்கு பாண்டியன் மீது சிறு ஆதங்கம் உண்டு. ஆனால் மறைமுகமாய் அவர் மேல் மதிப்பும் எழுந்ததுண்டு.

 

அதனால் ஷ்ரவனின் அனுபவத்தைப் பார்த்ததையும், அவன் சொன்னதையும்  பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு பிரம்மானந்தா உண்மையையே சொன்னார். “என்ன நினைக்கறதுன்னு கூடத் தெரியலை பாண்டியன். சம்பந்தமே இல்லாமல் அவனுக்கும் ஓநாய் ஏன் தெரியுது? குழப்பமாய் தான் இருக்கு.” 

 

பாண்டியன் சொன்னார். ”உங்களையே அவன் நினைச்சுகிட்டிருந்தது ஒருவேளை அவனையும் இதுல சம்பந்தப்படுத்தியிருக்குமோன்னும் தோணுது. அதான்…”

 

பிரம்மானந்தா முகத்தில் கிலி ஒரு கணம் தோன்றி மறைந்தது.

(தொடரும்)

என்.கணேசன்






 

3 comments:

  1. I don't find this convincing as Pandiyan is clever enough to find out if it was a wolf.

    ReplyDelete
  2. Shravan நிச்சயமாக யோகிஜிக்கும் பாண்டியனுக்கும் ஒரு கிளியை ஏற்படுத்தி விட்டால் ஓநாய் பார்த்தேன் என்று அவர்கள் தேடும் இளைஞன் அவன் தான் என்று அவர்களுக்கு இன்னும் தெரியவில்லை

    ReplyDelete