பிரம்மானந்தாவுக்கு பாண்டியன் சொன்னதை ஒரேயடியாக அபத்தம் என ஒதுக்கி விட முடியவில்லை. பாண்டியன் சொல்வது போல் ஷ்ரவன் அவரைத் தான் தொடர்ந்து நினைத்துக் கொண்டு இருந்ததாய் சொல்கிறான். அந்த ஓநாயும், அந்த இளைஞனும் ஷ்ரவன் ஓமன் படத்தை சமீபத்தில் பார்த்திருந்ததால் வந்ததாக இருக்கா விட்டால், அவரையே நினைத்துக் கொண்டிருந்ததால் வந்ததாக இருக்கலாம் என்ற யூகத்தைத் தவிர்க்க முடியாது. இது என்ன புதிய தலைவலி!
“தேவானந்தகிரி
கிட்ட இதைப்பத்தி நீங்க உடனே பேசறது நல்லதுஜி. ஏன்னா எதையும்
ஆரம்பத்துலயே சரி செய்யாமல் விட்டுடறது, அதை வளர வைக்கற
மாதிரி ஆயிடும். ஆரம்பத்துல கையால பிடுங்க முடிஞ்சதை, வளர்ந்த
பிறகு கோடாரியை பயன்படுத்தி தான் வெட்டி எடுக்க வேண்டி வரும்.”
பிரம்மானந்தா தலையசைத்து விட்டு உடனடியாக
தேவானந்தகிரிக்குப் போன் செய்தார். ஷ்ரவனின் அனுபவத்தை
அவரிடம் விவரித்துச் சொல்லி விட்டு, அந்த அனுபவத்திற்கு
உண்மையான காரணம் என்னவாக இருக்கும் என்று அவர் கேட்டார்.
தேவானந்தகிரி சொன்னார். “யோகிஜி, உங்களுக்கே
தெரியாததல்ல. சம்பந்தம் இல்லாத ஆள்களை எல்லாம் அந்த ஏவல் சக்திகள் எதுவும்
செய்யாது. ஒன்னா சம்பந்தம் இருக்கணும். இல்லாட்டி
அவன் தவறுதலாய் தன்னைச் சம்பந்தப்படுத்திகிட்டு இருக்கணும். இந்த இரண்டில்
ஒரு காரணம் கண்டிப்பாய் இருக்கணும். அதாவது, ஒரு தகுந்த
குரு கிட்ட தீட்சை வாங்கி, உபதேசம் பெற்றுகிட்டு, அதைத் தொடர்பு
கொள்கிற அளவுக்கு, தொடர்ந்து சிரத்தையாய் பயிற்சி செய்தவனாய் அவன் இருக்கணும். அப்படி
இல்லைன்னா அரைகுறையாய் ஏதாவது தெரிஞ்சு வெச்சுகிட்டு, அதை அந்தப்
பையன் தீவிரமாய் பயிற்சி செய்துகிட்டு இருந்திருக்கணும்.”
பிரம்மானந்தா சொன்னார். “தகுந்த
குரு கிட்ட முறையாய் பயிற்சி எடுத்தவன் மாதிரி அவன் தெரியலை. எங்க யோகாலயால
யோகா, தியானத்தோட இரண்டாம் நிலைப் பயிற்சிக்கே அவன் இப்ப தான் வந்து
சேர்ந்து இருக்கான். யூட்யூப்ல சிலதை எல்லாம் பார்த்துட்டு அதை அவன் தீவிரமாய்
செய்துகிட்டு இருக்கற மாதிரி தெரியுது.”
“அப்படின்னா
தவறுதலாய் அவன் அந்த ஏவல் சக்தியைத் தன் பக்கம் இழுத்திருக்கணும் யோகிஜி.”
“அவன் என்னை
அவனோட மானசீக குருவாய் நினைச்சிருக்கறதா சொல்றான். அப்படி
நினைச்சு செய்திருக்கறதால, யோகாலயால ஏற்கெனவே இருக்கற அந்த ஏவல் சக்தி, அவனைப்
பாதிச்சிருக்கறதுக்கு வாய்ப்பு இருக்கா?”
“அதெல்லாம்
கிடையாது யோகிஜி. யோகாலயத்துல நீங்களே இருக்கீங்க. ஆனாலும்
உங்களைப் பாதிக்காத அந்த ஏவல் சக்தி உங்களை நினைச்சிகிட்டிருக்கற அவனைப் பாதிக்கறதுக்கு
வாய்ப்பே இல்லை”
அவர் சொல்வதும் உண்மை தான். பிரம்மானந்தா
திருப்தி அடைந்தார்.
பாண்டியனுக்கு தேவானந்தகிரி குழம்பாமல், குழப்பாமல், கேள்விகளுக்கு
உடனடியாய் தெளிவான பதில்கள் சொன்ன விதம் பிடித்திருந்தது. திடீர்
என்று அவருக்கு ஒரு சந்தேகம் வர அவர் கேட்டார். “சுவாமி
நான் பாண்டியன் பேசறேன். எனக்கு ஒரு சந்தேகம் என்னன்னா அந்த ஏவல் சக்தி ஓநாயால பாதிக்கப்பட்ட
நான் ஆரம்பத்துல இருந்தே வயித்துப் பகுதில பிரச்சனையை அனுபவிச்சுட்டு வர்றேன். ஆனால் அந்தப்
பையன் அப்படி பாதிக்கப்பட்ட மாதிரி தெரியலையே. அரைமணி
நேரம் குப்புறப்படுத்துக் கிடந்தானே ஒழிய பிறகு எழுந்து அவன் சாதாரணமாய் எந்தப் பிரச்சினையும்
இல்லாமல் சாப்பிட்டுகிட்டு இருக்கானே. அது எப்படி?”
“உங்க மேல
அந்த சக்தி ஏவப்பட்டிருக்கு. அதனால எந்த நோக்கத்துக்காக, எதை எல்லாம்
செய்யணும்னு அதுக்கு விதிச்சிருக்கோ அதை எல்லாம் அந்த ஏவல் சக்தி செய்யுது. அதனோட பலன்களைத்
தான் அனுபவிச்சீங்க. ஆனால் நீங்கள் சொல்றதைப் பார்த்தா அந்தப் பையன் தவறுதலாய்
அந்த ஏவல்சக்தியை ஏதோ ஒரு விதத்துல குறுக்கிட்டவனாய் தெரியறான். அதனால அது
அவனைத் தூக்கி எறிஞ்சுட்டு போயிருக்கு. அதுக்கு மேல அவனை
ஒன்னும் செய்யற அவசியம் அந்த ஏவல் சக்திக்கு இல்லையே.”
பாண்டியன் தெளிவடைந்தார். “இது மாதிரி
திரும்ப இங்கே மத்தவங்களுக்கும் நடக்க வாய்ப்பில்லையே”
“அவனை மாதிரியே
நடந்துக்கற வேற ஆட்கள் அங்கே இல்லாமல் இருக்கறவரைக்கும் அது திரும்ப நடக்க வாய்ப்பில்லை.”
“இப்போதைக்கு
ஒரு பைத்தியக்காரன் தான் இங்கே இருக்கான். வேற யாரும்
அவனுக்குப் போட்டி இல்லை” என்று கூறி பாண்டியன் சிரித்தார்.
“அப்படின்னா
கவலைப்பட வேண்டியதில்லை. ரொம்ப அபூர்வமாய் தான் இப்படியெல்லாம் நடக்கும். ஏன்னா சரியான, முறையான
பயிற்சி இல்லாமல் அந்த சக்திகளைத் தொடர்பு கொள்றதே கஷ்டம். சம்பந்தமில்லாதவங்கள்
கண்ணுக்கு அந்த சக்திகள் தெரியவும் தெரியாது. அதனால அந்தப்
பையனோட அனுபவத்தை ஒரு விதிவிலக்காய் எடுத்துகிட்டு தைரியமாய் இருக்கலாம்”
பேசி முடிந்தவுடன் எழுந்தபடி பாண்டியன்
பிரம்மானந்தாவிடம் சிரித்துக் கொண்டே சொன்னார். “ஆனாலும்
தொடர்ந்து ஷ்ரவனைக் கண்காணிச்சுகிட்டு இருக்கறது நல்லதுன்னு நினைக்கிறேன். அடுத்ததாய்
அந்தப் பைத்தியக்காரன் எதாவது புது சாகசம் செஞ்சாலும் செய்யலாம்.”
பிரம்மானந்தா புன்னகைத்தார். பாண்டியன்
போய் விட்டார்.
பிரம்மானந்தா மனதில் ஷ்ரவன் எந்தப்
பயிற்சியை எப்படிச் செய்து இந்தக் காட்சியைப் பார்த்திருப்பான் என்கிற கேள்வி எழுந்தது. அவன் அதைப்
பற்றி கண்ணனிடம் சொல்லவேயில்லை!
ஷ்ரவன் அன்று அதிகாலை நடைப்பயிற்சிக்குக் கிளம்பிய போது, எப்போதும்
அதே சமயம் கிளம்பும் ஸ்ரேயாவைப் பார்க்க முடியவில்லை. அவள் முன்பே
போய் விட்டாளா, இல்லை இனிமேல் தான் போவாளா என்று தெரியவில்லை.
அவன் அவள் அறையைக் கடந்து நடக்க ஆரம்பித்தான். நாளையோடு
வகுப்புகள் முடிகின்றன. பின் அவளைப் பார்க்க வாய்ப்பில்லை. ஒரு வாரம்
அல்லது பத்து நாட்கள் கழித்து வந்து இங்கே துறவியாக இணைந்து கொள்வது என்று அவன் திட்டமிட்டிருக்கிறான்...
அவன் பின்னால் யாரோ வேகமாக நடந்து வருவதை
அவன் உணர ஆரம்பித்தான். வழக்கமாகப் பின் தொடர்பவர்கள் ஒரு சீரான இடைவெளியில் தான்
இங்கே இது வரை தொடர்ந்திருக்கிறார்கள். அவன் யாருடன் செல்கிறான், என்ன பேசுகிறான்,
என்பதை அறிய முயற்சிக்கும் யோகாலயத்து ஆட்கள் அவர்கள் என்பது தெரிந்தது
தான். ஆனால் தற்போது வரும் நபர் அவனுடன் இணைந்து நடக்கவோ,
அவனைத் தாண்டிச் செல்லவோ வருவது போல் ஷ்ரவனுக்குத் தோன்றியது.
ஆனாலும் அவன் திரும்பிப் பார்க்கவில்லை. அவன் தன் வழக்கமான வேகத்திலேயே நடந்தான்.
“காலை வணக்கம்” என்ற சத்தம் கேட்டது. ஷ்ரவன் திரும்பினான். நேற்று அவன் அறைக்கு வந்து அவனுடன்
பேசிய துறவி தான் வேகமாக வந்து காலை வணக்கம் தெரிவித்தார்.
ஷ்ரவன் புன்னகையுடன் காலை வணக்கம் சொன்னான். அப்போது தான் அவர் பெயரைக்
கேட்டான். கண்ணன் என்று சொன்னார்.
கண்ணன் அவனுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தார். “இப்போது எப்படி இருக்கிறீர்கள்?
உடல் நலப்பிரச்சினைகள் எதுவும் இல்லையல்லவா?”
ஷ்ரவன் சொன்னான்.
“நன்றாக இருக்கிறேன்ஜி. கொஞ்சம் களைப்பாய் இருக்கிறது.
அவ்வளவு தான்”
கண்ணன் புன்னகையுடன் கேட்டார். “நேற்று இரவிலோ,
இன்று காலையிலோ அந்த மாதிரி அமானுஷ்ய அனுபவங்கள் எதுவும் வரவில்லையா?”
ஷ்ரவனும் புன்னகையுடன் பதிலளித்தான். “ஒரு நல்ல மாணவனுக்கு ஒரே
பாடம் இரண்டாவது தடவை சொல்லித்தரத் தேவையில்லை. நான் ஒரு நாளிலேயே
சரியாய் பாடம் கற்றுக் கொண்டு விட்டேன். அதனால் யோகிஜி எனக்கு
அடுத்த அனுபவத்தைத் தரவில்லை. யோகிஜி நிஜமாகவே கருணைக்கடல் தான்
ஜி.”
கண்ணன் ஒரு நிமிடம் அவனுடன் மௌனமாக
நடந்து கொண்டிருந்து விட்டுக் கேட்டார். “நேற்று நீங்கள்
சொன்னதைப் பற்றி நான் நிறைய யோசித்தேன். சுவாரசியமாகவும் அமானுஷ்யமாகவும்
இருந்தது. நீங்கள்
என்ன பயிற்சி செய்து கொண்டிருந்த போது இந்த மாதிரி நடந்தது என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா?”
ஷ்ரவனுக்கு இன்றும் இந்த ஆள் எதற்கு அவனுடன் பேச வந்திருக்கிறார்
என்பது இப்போது புரிந்தது. அவன்
மனதில் சிரித்துக் கொண்டான்.
அவர்கள் அவன் என்ன பயிற்சியைச் செய்து அந்த ஓநாயை வரவழைத்தான் என்பதைத்
தெரிந்து கொள்ளத் துடிக்கிறார்கள். அதனால் தான் இந்த ஆளை அனுப்பியிருக்கிறார்கள்.
(தொடரும்)
என்.கணேசன்
Very interesting👏
ReplyDeleteகண்டிப்பாக இந்த முறையும் என்ன பயிற்சி? என்று சொல்வதற்கு சரியான கதை ஷர்வனுக்கு கிடைக்கும்...
ReplyDeleteஏனெனில் பிரம்மானந்தா...
'மழைப்பொழிவை கணிப்பேன்,
வேற்றுகிரகவாசிகளை சந்தித்தேன்,'
என்பது போல பல கதைகளை யூடிப்பில் விட்டுள்ளார்...அதில் ஒன்றை சொல்வான்....