சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, January 30, 2025

சாணக்கியன் 146

 

ஜீவசித்தியின் கடிதம் விரைவிலேயே சாணக்கியருக்கு வந்து சேர்ந்தது. அதில் அவர்கள் படையெடுத்து வரும் விவரம் ஒற்றர்கள் மூலம் தனநந்தனுக்கு எட்டியிருக்கும் விவரத்தையும், ராக்‌ஷசர் அது குறித்துப் பேச அவசரக்கூட்டம் ஒன்றைக் கூட்டி அபூர்வமாக உயர் அதிகாரிகளையும், படைத்தலைவர்களையும் அழைத்துப் பேசியதையும் விவரித்திருந்தான்.  

 

“... ராக்‌ஷசர் சதிகாரர்கள் அந்த அவையிலேயே இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகச் சொல்லி, அதனால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், உடனிருப்பவர்களையும் கவனித்து  அவர்களில் யாராவது சந்தேகத்திற்குரிய விதத்தில் நடந்து கொண்டால் அதைத் தயங்காமல் அவர் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார். கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று எங்களிடம் சொல்லி விட்டு எங்களை அனுப்பி விட்டார். பிறகு வழக்கம் போல் தனநந்தன், அமைச்சர்கள், சேனாதிபதி ஆகியோர் கலந்தாலோசித்தார்கள். போர்த் திட்டங்கள் குறித்தும் வியூகங்கள் குறித்தும் பேசியிருப்பார்கள். சாமரம் வீசும் பணிப்பெண்களைக் கூட அருகில் வைத்துக் கொள்ளாத அவர்கள், காது கேட்கும் தூரத்தில் எந்தக் காவலரையும் இருக்க அனுமதிக்கவில்லை. அதனால் அது குறித்து நாம் அறிந்து கொள்ள வழியிருக்கவில்லை.”

 

”பத்ரசால் போர் வீரர்களின் பயிற்சியில் மும்முரமாக இருக்கிறான். சுதானு மகாவிஷ்ணு கோயிலில் சந்தித்த மகானைத் திரும்பச் சந்திக்க முடியுமா என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறான். சுகேஷைப் பட்டத்து இளவரசராக அறிவிப்பது இப்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. போருக்கான ஆயத்தங்கள் தான் இப்போது இங்கே பிரதானமாக இருக்கின்றன. பாடலிபுத்திரத்திற்குள் நுழைபவர்கள் பல அடுக்கு சோதனைகளுக்குப் பின்பே அனுமதிக்கப்படுகிறார்கள்....”

 

சாணக்கியர் அந்தக் கடிதத்தைப் படித்து விட்டு கீழே வைத்து விட்டு யோசனையில் ஆழ்ந்தார். சந்திரகுப்தன் கேட்டான். “என்ன யோசிக்கிறீர்கள் ஆச்சாரியரே?”

 

“ராக்‌ஷசரின் திட்டங்கள் என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறேன் சந்திரகுப்தா. நாம் அவரைச் சமாளிப்பதற்கு இணையாக பர்வதராஜனையும் சமாளித்தாக வேண்டும். இவன் உடனிருந்தே கழுத்தறுப்பவன் என்பதால் இவனிடம் சர்வஜாக்கிரதையாக நாம் இருக்க வேண்டும்...”

 

சந்திரகுப்தன் கேட்டான். “மற்ற மன்னர்கள்?”

 

சாணக்கியர் சொன்னார். “அவர்களைச் சமாளிப்பது சுலபம். அப்படி இல்லா விட்டாலும் அவர்களை பர்வதராஜன் சமாளித்துக் கொள்வான். நாம் பர்வதராஜனைச் சமாளித்தால் போதும். ஆனால் அது தான் பெரிய வேலை.”

 

சற்று முன் தான் பர்வதராஜன் எல்லைக்கு வந்து சேர்ந்திருந்தான். அவனை வரவேற்க சந்திரகுப்தன் போன போது நீண்ட நாள் கழித்துச் சந்திக்கும் உயிர்நண்பனைப் போல சந்திரகுப்தனை அரவணைத்துக் கொண்ட பர்வதராஜன் உடன்வர மறுத்து விட்டான். “மற்றவர்களும் வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்திருக்கிறது சந்திரகுப்தா. அவர்கள் நான் அழைத்து இந்த முயற்சியில் இணைந்து கொண்டவர்கள் என்பதால் நான் இருந்து வரவேற்று அவர்களை அழைத்துக் கொண்டு வருவது தான் மரியாதை. நீயும் நானும் வேறல்ல. இங்கே அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன். அனைவரும் வந்த பின் நீ எங்களை அழைத்துப் போக வந்தால் போதும்.”  என்று சொல்லி சந்திரகுப்தனை அனுப்பி விட்டான்.

 

அதை சந்திரகுப்தன் சாணக்கியரிடம் தெரிவித்த போது அவர் புன்னகையுடன் சொன்னார். “கூடுமான வரை அவன் அன்று செய்தது போல் மற்ற மன்னர்களுக்கும் நமக்கும் இடையே ஒரு இடைவெளி இருக்கும்படி பார்த்துக் கொள்வான். அப்படியானால் தான் அவனுக்கு நமக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு பாலமாக இருக்க முடியும். அவனை விட்டு விட்டு நாம் எந்த முடிவுகளையும் எடுத்துவிட முடியாது என்ற நிலை இருக்க வேண்டும் என்று நினைக்கிறான் போலிருக்கிறது.....”

 

சாணக்கியர் சொன்னது போலவே பர்வதராஜனின் உத்தேசம் இருந்தது. மலைகேது பயணக்களைப்பு தீர ஓய்வெடுத்துக் கொள்ள நினைக்காமல் தன் தந்தை எல்லையிலேயே மற்றவர்களுக்காகக் காத்திருந்ததை ரசிக்கவில்லை. “அவர்களை இங்கேயும் நாம் இருந்து வரவேற்க என்ன இருக்கிறது தந்தையே. இங்கே அவர்களை வரவேற்க வேண்டியது சந்திரகுப்தன் கடமையல்லவா?” என்று எரிச்சலுடன் சொன்னான்.

 

பர்வதராஜன் சொன்னான். “மகனே சின்னச்சின்ன அசௌகரியங்களை நாம் என்றும் பெரிதுபடுத்தக்கூடாது. நான் இங்கேயே இருந்து அவர்களுக்காகக் காத்திருப்பது அவர்களை உபசரிக்க வேண்டி அல்ல. அவர்கள் சந்திரகுப்தன், ஆச்சாரியர் இருவருடனும் அதிக நெருக்கத்தில் சென்று விடாமலிருக்க வேண்டியே. நாம் போய் விட்டால் மறுபடி சந்திரகுப்தனோடு அவர்களை வரவேற்க இங்கே வர முடியாது. நாம் வராவிட்டால் சந்திரகுப்தன் அவர்களை வரவேற்று அழைத்துச் செல்கையில் அவர்கள் அவனுடன் நெருக்கமாகப் பழகவும், வெளிப்படையாகப் பேசிக் கொள்ளவும் வாய்ப்புகள் அதிகம். அது நமக்கு நல்லதல்ல. இரு தரப்பும் நம் மூலமாகவே தொடர்பில் இருப்பது நமக்கு இரு பக்கமும் பாதுகாப்பு. அதுவே இருதரப்பையும் நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும்.”

 

மலைகேது தலையசைத்தான். பர்வதராஜன் சொன்னான். “அதுமட்டுமல்ல மகனே. ஆச்சாரியர் ஆபத்தானவர் என்கிற அபிப்பிராயமும் அவருடனும் சந்திரகுப்தனுடனும் நாம் அதிக நெருக்கத்தில் இருக்கிறோம் என்கிற அபிப்பிராயமும் மூன்று மன்னர்களுக்கும் இருப்பது மிக நல்லது. அதற்கு நாம் சில சில்லறைச் சிரமங்களை ஏற்றுக் கொண்டேயாக வேண்டியிருக்கிறது. முடிவில் நாம் பெறப்போவது மகத சாம்ராஜ்ஜியத்திலும், தனநந்தன் நிதியிலும் சரிபாதி என்பதை மறந்து விடாதே. அதை நாம் வலிமையினால் பெற்று விடப்போவதில்லை. சாமர்த்தியத்தால் தான் பெறப் போகிறோம்.”

 

மலைகேதுவுக்கு மகத சாம்ராஜ்ஜியத்திலும், நிதியிலும் பாதி கிடைக்கப் போகிறது என்ற எண்ணமே ஆகாயத்தில் மிதப்பது போல் உணர வைத்தது.  சில மாதங்கள் முன்பு வரை கனவிலும் நினைத்துப் பார்த்திராத பேரதிர்ஷ்டம் இப்போது கைகூடி வருகிறது. தந்தை சொல்வது போல அது அவர்களது வலிமையினால் பெற முடிந்ததல்ல. தந்தையின் சாமர்த்தியத்தால் தான் பெற முடிந்தது...

 

முதலில் குலு மன்னனும், அடுத்ததாக காஷ்மீர மன்னனும், கடைசியாக நேபாள மன்னனும் படைகளுடன் வந்து சேர்ந்தார்கள். பர்வதராஜன் அவர்களை அளப்பரிய பாசம் காட்டி வரவேற்றான். பயணம் எப்படி இருந்தது என்று விசாரித்தான். அவன் காட்டிய அன்பில் அவர்கள் மனம் குளிர்ந்து போனார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது.    

 

சந்திரகுப்தன் வருவதற்கு முன் அவர்களிடம் மாபெரும் ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ளும் தொனியில் பர்வதராஜன் பேசினான். “நண்பர்களே ஒரு மாபெரும் வெற்றியை அடையக் கிளம்பி விட்டிருக்கிறோம். இதில் வெற்றி நிச்சயம். ஆச்சாரியரின் அறிவாற்றலால் ஆகாதது எதுவுமில்லை. இதில் நாமும் இணைய முடிந்தது நம் பாக்கியம்...”

 

காஷ்மீர மன்னன் சொன்னான். “ஆச்சாரியர் மீதுள்ள நம்பிக்கையால் தான் நாங்களும் தனநந்தனை எதிர்க்கத் துணிந்து வந்திருக்கிறோம் நண்பரே.”

 

பர்வதராஜன் சொன்னான். “அந்த நம்பிக்கை வீண் போகாது நண்பனே. ஒன்றுமில்லாமல் பூஜ்ஜியமான நிலையிலிருந்து கொண்டே அலெக்ஸாண்டரின் யவனப்படையை வென்று வாஹிக் பிரதேசத்தை சந்திரகுப்தனுக்குத் தந்த பேரறிவு படைத்தவர் ஆச்சாரியர். படைபலத்திற்காக நம்மைச் சேர்த்துக் கொண்டிருக்கிறாரேயொழிய மற்றபடி எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொள்வார். அதனால் வெற்றியில் எந்தச் சந்தேகமும் தேவையே இல்லை...” திடீரென்று பர்வதராஜனின் குரல் தாழ்ந்தது. “அந்த அறிவாற்றல் நமக்கு எதிராகப் போய் விடாதபடி பார்த்துக் கொள்ள நான் இருக்கிறேன். ஏனென்றால் அறிவாற்றல் என்பது இரட்டைப் பக்கமும் வெட்ட முடிந்த கத்தி அல்லவா. அது நம்மைப் பாதித்து விடாதபடி நான் பார்த்துக் கொள்கிறேன். எங்களுக்கிடையே இருக்கும் நட்பினால் என்னிடம் சரியாகவே நடந்து கொள்வார். அப்படியே உங்களிடமும் அவர் இருக்கும்படி நான் பார்த்துக் கொள்கிறேன். ஏனென்றால் உங்களை அழைத்தவன் நான். வெற்றி பெற்ற பின்பு அதற்கான ஆதாயம் உங்களுக்குக் கிடைக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியது என் பொறுப்பு.”

 

அவன் சொன்னதைக் கேட்டு மூவர் மனதிலும் ஆச்சாரியர் அறிவு பற்றி பெரும் நம்பிக்கையும், சிறிது பயமும் சேர்ந்தே எழுந்தன என்பது அவர்களைப் பார்க்கையிலேயே பர்வதராஜனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவன் திருப்தியடைந்தான்.  இப்படியே கடைசி வரை இருக்கும்படி பார்த்துக் கொள்வது தனக்கு நல்லது என்று எண்ணிக் கொண்டான்.

 

அவர்களை அழைத்துப் போக சந்திரகுப்தன் வந்து கொண்டிருக்கிறான் என்று தெரிய வரவே அவனை எதிர்கொள்ள பர்வதராஜன் வேகமாகச் செல்ல மலைகேதுவும் அவனைப் பின் தொடர்ந்தான்.

 

காஷ்மீர மன்னன் குலு மன்னனிடம் நெகிழ்ச்சியுடன் சொன்னான்.  “பர்வதராஜன் இவ்வளவு நல்லவன் என்று நமக்கு இத்தனை காலம் தெரியாமல் போய் விட்டதே”

 

(தொடரும்)

என்.கணேசன் 





Monday, January 27, 2025

யோகி 87




 நாளை மாலை ஐஐடி டெல்லியில் பேச பிரம்மானந்தாவை அழைத்திருக்கிறார்கள். அவர் எந்த நிறக் குல்லாவையும், உடைகளையும் அணிந்து கொண்டு செல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தார். அந்தப் பேச்சில் புகுத்த வேண்டிய நகைச்சுவைகள் சிலவற்றை அவர் தேர்ந்தெடுத்திருக்கிறார். பேச அவர்கள் தந்திருக்கும் தலைப்பு, “யோகாவும், தியானமும் நவீன காலத்திற்கு எந்த அளவு உதவும்?”. இது ஒன்றும் கஷ்டமான தலைப்பு அல்ல. பேசுவதற்கு, வேண்டிய அளவு விஷயமிருக்கிறது. இதுவரையில் அவர் பேசியிருப்பதில் சிலவற்றை நினைவில் வைத்திருந்தாலே மூன்று மணி நேரமாவது தாராளமாகப் பேசிவிடலாம். ஆனாலும் இது போன்ற அறிவு மிக்க இளைஞர்கள் முன் சோபிக்க ஆழமான சிலவற்றையும் சொன்னால் தான் நன்றாயிருக்கும். அதற்கு வேண்டிய குறிப்புகளை அவரது சிஷ்யை கல்பனானந்தா பதினோரு மணிக்குக் கொண்டு வருவதாகச் சொல்லியிருக்கிறாள்.

 

பிரம்மானந்தா சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தார். மணி 10.55. நாளை போட்டுக் கொண்டு போகும் உடைகளை அவர் தேர்ந்தெடுத்து வைத்து விட்டு அமர்கையில் கல்பனானந்தா வந்தாள். பிரம்மானந்தா மறுபடியும் கடிகாரத்தைப் பார்த்தார். மணி 11.00.

 

கைகூப்பி, தலை தாழ்த்தி நமஸ்கரித்த கல்பனானந்தாவை பிரம்மானந்தா கை உயர்த்தி ஆசிர்வதித்தார். கல்பனானந்தா நாளைய பேச்சுக்கான குறிப்புகள் கொண்ட உறையை அவருடைய மேசையில் வைத்து விட்டுத் திரும்பிய போது பிரம்மானந்தா அவளை அமரச் சொன்னார்.

 

எதிரிலிருந்த மரநாற்காலியில் அமர்ந்த கல்பனானந்தாவிடம் பிரம்மானந்தா ஷ்ரவனின் புகைப்படத்தை நீட்டினார். ”இந்த வாரம் நடந்துகிட்டிருக்கிற வகுப்புகளுக்கு வந்திருக்கிற இந்தப் பையனைப் பற்றி என்ன நினைக்கிறாய் கல்பனா?”

 

அந்தப் புகைப்படத்தை வாங்கிப் பார்த்த கல்பனானந்தா சொன்னாள். “சில சமயத்துல இந்தப் பையன் நடந்துக்கறது விசித்திரமாய் இருக்கு. மற்றபடி புத்திசாலிப் பையன் தான்.”

 

அப்படி என்ன விசித்திரமாய் நடந்துகிட்டான்?”

 

கல்பனானந்தா சற்று யோசித்து விட்டுச் சொன்னாள். “திடீர்னு எதையோ வெறிச்சுப் பார்க்கற பழக்கம் அவனுக்கு இருக்கு. எதைப் பார்க்கறான்னு பார்த்தால், அங்கே எதுவும் இருக்கறதில்லை. அந்த இடம் வெற்றிடமாய் தான் இருக்கு. அந்த சமயத்துல நாம சொல்றது எதுவும் அவன் காதுல விழறதில்லை. கொஞ்சம் நேரத்துல சுதாரிச்சுகிட்டு சரியாயிடறான். ஏன் கேட்கறீங்க யோகிஜி?”

 

நீ சொல்ற இதே விஷயத்தை என்கிட்ட இன்னொருத்தரும் சொன்னார். அதனால தான் கேட்டேன்.”

 

அவனுக்கு மனரீதியான பிரச்சினைகள் எதாவது இருக்கலாம். ஆனால் யோகா, தியானம் மேல ஆழமான ஆர்வமும், கஷ்டமானதைச் சொன்னாலும் அதைப் புரிஞ்சுக்கற அறிவும் கூட அவன் கிட்ட இருக்கு.”

 

இது போன்ற விஷயங்களில் கல்பனானந்தாவின் கணிப்பு மிகச்சரியாகவே இருக்கும். பிரம்மானந்தா யோசித்தார். பின் சொன்னார். “வகுப்புகள் இன்னும் ரெண்டு நாள் தானே இருக்கு. உனக்கு இன்றைக்கோ நாளைக்கோ எதாவது வகுப்பு இருக்கா?”

 

இன்றைக்கு ஒரு வகுப்பு இருக்கு யோகிஜி. சாயங்காலம் கடைசி வகுப்பு

 

நல்லது. வகுப்பு முடிஞ்சவுடனே அவன் கிட்ட பேச்சுக் கொடுத்து அவனைப் பற்றிக் கூடுதலாய் தெரிஞ்சுக்க முயற்சி செய்.”

 

சரி யோகிஜி

 

இனி போகலாம்என்ற பாவனையுடன் பிரம்மானந்தா தலையசைக்க கல்பனானந்தா கிளம்பினாள்.

 

ஆரம்பநிலை வகுப்புகளுக்கு வருபவர்கள் யாரையும் இதுவரையில் பிரம்மானந்தா ஒரு பொருட்டாக நினைத்ததாய் கல்பனானந்தாவுக்கு இதுவரையில் நினைவில்லை. அவர் கவனிக்கும் அளவுக்கு முக்கியமானவர்கள் வந்ததில்லை. எனவே கல்பனானந்தாவுக்கும் ஷ்ரவனைப் பற்றிக் கூடுதலாக அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது.

 

பொதுவாக வகுப்பு வீடியோ பதிவுகள் பாண்டியனின் பார்வைக்கு அனுப்பப்படுவதில்லை. மிகவும் பிரச்சினைக்குரிய நபர்கள் தியான வகுப்புகளில் பங்கெடுத்தால், அந்தப் பிரச்சினைக்குரிய பகுதி மட்டும் அவரிடம் அனுப்பப்படும். ஆனால் கல்பனானந்தா பிரம்மானந்தாவிடம் தெரிவித்த தகவல் தெரிந்தவுடன் பாண்டியன் அந்த முழு வகுப்பு வீடியோ பதிவையும், பிரம்மானந்தாவுடன் சேர்ந்து பார்த்தார்.     

 

கல்பனானந்தா சொன்னது போல ஷ்ரவன் வெறித்துப் பார்க்கும் பகுதி வந்தவுடன் அவர்கள் கூர்ந்து பார்த்தார்கள். ஷ்ரவனின் திகைப்பும் ஆச்சரியமும் தெளிவாகவே அவன் முகத்தில் தெரிந்தது. வகுப்பு வாசலில் இருந்து மேசை வரை யாரோ வருவதைப் பார்ப்பது போல் பார்த்த அவன் பார்வை பின் அங்கேயே சுமார் இரண்டரை நிமிடங்கள் தங்கின. பின் பழையபடி மேசைப்பக்கமிருந்து வாசல் வரை அவன் பார்வை நகர்ந்தது. பின் தான் அவன் கவனம் கல்பனானந்தா சொல்லும் விஷயத்திற்குத் திரும்பியது.

 

பாண்டியன் சொன்னார். “அவன் இந்த வகுப்புலயும் எதையோ பார்த்திருக்கிறான். ஆனால் இன்னைக்குக் காலைல கண்ணன் கிட்ட பேசினப்ப அதுபத்தி அவன் ஒன்னும் சொல்லலையே. ஏன்?”

 

மத்த வகுப்புலயும் இப்படி நடந்திருக்கலாம். கல்பனா கவனிச்சதால நமக்குத் தெரிஞ்சிருக்கு. மத்தவங்க கவனிக்காமல் இருந்திருக்கலாம்என்று பிரம்மானந்தா யோசனையுடன் சொன்னார். 

 

பாண்டியன் தன் ஆட்களை அழைத்து, அனைத்து வகுப்புகளின் வீடியோ பதிவுகளிலும் ஷ்ரவனைப் பிரத்தியேகமாகக் கவனிக்கச் சொன்னார். அவன் முகம் மாறி திகிலுடனோ, ஆச்சரியத்துடனோ வெற்றிடத்தை வெறித்துப் பார்க்கிறானா என்று கவனிக்கச் சொன்னார். அப்படி இருந்தால் அந்த வீடியோ பதிவுகளின் அந்தக் குறிப்பிட்ட நேரத்தைக் குறித்துக் கொண்டு உடனடியாக வந்து தெரிவிக்கச் சொன்னார்.

 

இதுவரை ஐந்து நாள் வகுப்புகள் முடிந்துள்ளன. ஒரு நாளுக்கு எட்டு மணி நேரம் வகுப்புகள் உள்ளன. ஐந்து நாட்களுக்கு 40 மணிகள் வீடியோ பதிவுகளைப் பார்க்கும் அளவுக்கு அவருக்கு நேரமும், பொறுமையும் இல்லை. அவருடைய ஆட்கள் இரண்டிரண்டு பேராகச் சேர்ந்து ஒவ்வொரு நாள் வீடியோப் பதிவுகளைப் பார்ப்பது என்ற முடிவுடன் பத்து பேர் கொண்ட குழு அந்த வேலையை உடனே ஆரம்பித்தது.

 

செல்வம் தூத்துக்குடி வந்து ஒரு வாரம் ஆகி விட்டது. சென்னையிலிருந்து கிளம்புவதற்குச் சில நாட்கள் முன்னாலிருந்தே நரக வாழ்க்கையை அனுபவித்து வந்ததால் அவருக்குப் புதிய நரகம் ஓரளவு தேவலை என்று தான் முதல் மூன்று நாட்கள் தோன்றியது. அந்தக் காவல் நிலையத்தில் அவருடன் வேலை பார்த்த போலீஸாரும் இயல்பாகப் பழகினார்கள். சென்னையில் அவரைத் திகிலுடனும், சந்தேகத்துடனும் பார்த்தது போல் இங்கு யாரும் பார்த்து அவரைச் சித்திரவதை செய்யவில்லை.

 

ஆனால் நான்காம் நாளில் ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களுக்கும், எதிர்க்கட்சி முக்கியஸ்தர்களுக்கும் இடையே ஒரு தகராறு வெடித்து அடிதடி நடந்து, இருசாராரும் புகார் எழுதிக் கொடுத்ததிலிருந்து தலைவலி ஆரம்பித்தது. இருசாராரும் வந்து ஏன் எதிர்தரப்பு ஆட்களை இன்னும் கைது செய்யவில்லை என்று அதிகாரமாகக் கேள்வி கேட்டனர்.

 

காசை வாங்கிட்டு சும்மா இருக்கீகளாக்கும்என்று இருசாராரும் காசைக் கொடுக்காமலேயே கேள்வி கேட்டார்கள்.  கடுமையான வார்த்தைகளால் அவரைத் திட்டினார்கள். காவல் நிலையம் வந்து நாற்காலிகளில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து அவர்கள் வீட்டு வேலைக்காரனிடம் கேள்வி கேட்பது போல் கேள்வி கேட்டார்கள்.

 

அவர்கள் போனவுடன், உடனிருக்கும் போலீஸ்காரர்கள்வாங்கற சம்பளமே, இதையெல்லாம் கேட்கத்தான்என்று அங்கிருக்கும் யதார்த்த நிலையைச் சொன்னார்கள்.

 

சாதாரண ரவுடியிலிருந்து கட்சிக்காரர்கள் வரை யாரும் அவருக்குப் பயப்படவில்லை. மரியாதை என்ற வார்த்தைக்கு யாருக்கும் அங்கே அர்த்தம் தெரியவில்லை. நிலைமையின் தீவிரம் சுட ஆரம்பித்த போது தான் அங்கும் மொட்டைக் கடிதம் வந்தது.

 

அன்பில்லாத செல்வம்,

பிரச்சினையான இடத்திற்கு வந்திருக்கிறோமே, நமக்கு யாரும் இல்லையே என்று நீ கவலைப்படாதே. உன்னுடன் நானிருக்கிறேன். சேர்ந்தே அனைத்தையும் நாம் சந்திப்போம்.

சவம்

படித்து விட்டு ரத்தம் கொதித்தாலும், செல்வம் கஷ்டப்பட்டு அமைதி காத்து அந்தக் கடிதத்தைக் கிழித்துப் போட்டார்.

 

மறு நாள் இரத்தக் கறையுடன் காவித்துணி பார்சலில் வந்தது.

 

அதற்கடுத்த நாள் பஸ்ஸில் தன்னுடைய பர்ஸ் ஜேப்படி செய்யப்பட்டு விட்டது என்று புகார் கொடுக்க வந்த ஒரு இளைஞன் அவருக்குப் பின்னால் கோரைப்பல்லுடன் ஒரு பெண் வாயில் ரத்தம் வழிய நின்றிருப்பதாகக் கத்திச் சொல்லி விட்டு ஓடினான்.

 

அவர் ஆத்திரம் தாங்காமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய, அங்குள்ள ஒரு போலீஸ்காரர், செல்வம் வேலை பார்த்த முந்தைய சென்னை காவல் நிலையத்திற்குப் போன் செய்து பேச, அங்குள்ளவர்கள் அங்கு முன்பு நடந்ததை எல்லாம் விவரிக்க, செல்வத்தின் முந்தைய சரித்திரம் தூத்துக்குடியிலும் தொடர்ந்தது.

 

(தொடரும்)

என்.கணேசன்


Thursday, January 23, 2025

சாணக்கியன் 145


பொதுவாக தனநந்தன் ஆடல், பாடல், கேளிக்கைகளையும், சதுரங்க ஆட்டத்தையும் துறக்க முடிந்தவன் அல்ல. அவன் உடல்நலமில்லாத சமயங்களைத் தவிர மற்ற நேரங்களில் அவன் விரும்பி ஈடுபடுபவை அவை. மன அமைதி குன்றியிருந்தாலும் அவன் அவற்றில் ஈடுபட்டு மகிழ்ச்சியான மனநிலைக்குச் சீக்கிரமே மாறக்கூடியவன். அப்படிப்பட்ட அவன் முதல் முறையாக அவை எவற்றிலும் ஈடுபட்டு சோகத்தையும், கோபத்தையும் போக்க முடியாதவனாகத் திணறினான். மது கூடத் தற்காலிகமாய் சிறிது நேரம் உறங்க உதவியதே தவிர, மயக்கம் ஓரளவு தெளிந்த பின்னர் இழந்த செல்வத்தையும், அவன் ஏமாந்த கதையையும் நினைவுபடுத்தி அவன் மனக்காயங்களைப் புதுப்பித்தது. யாரைப் பார்த்தாலும் அவனுக்குக் கோபம் வந்தது. யார் பேசினாலும் அவனுக்குக் கசந்தது. அறிவுரைகளோ ஆத்திரத்தை ஏற்படுத்தின. ராக்ஷசர் மீது கூட அவனுக்குக் கோபம் வந்தது.

 இழந்ததை விட இருப்பது அதிகம் என்று மனசமாதானம் அடையுங்கள் மன்னாஎன்று அவர் சொன்னதை ஏற்று மன அமைதி அடைய அவனால் முடியவில்லை. யாகசாலையில் பாதாள அறையில் பார்த்த காலி மரப்பெட்டிகள் அடிக்கடி மனக்கண்ணில் நிழலாடி எத்தனை தொலைத்திருக்கிறோம் என்பதை நினைவுபடுத்தி அவன் நிம்மதியைக் கெடுத்தன.   இத்தனைக்கும் இந்த நிகழ்வைச் சூசகமாகப் பல முறை அவன் கனவுகளும் முன்கூட்டியே எச்சரித்திருந்தன. ஆனாலும் ஏமாந்திருக்கிறோம் என்பது அவனுக்கு அவன் மேலேயே கூட கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.   

 இதையெல்லாம் குறைப்பது போல் குடும்பத்திலும் யாரும் அவனைப் புரிந்து கொள்ளவோ ஆறுதல் அளிக்கவோ முற்படவில்லை. மாறாக, விஷயத்தைக் கேள்விப்பட்டு அவனது பட்டத்தரசி அமிதநிதா  “என்னிடம் கூடச் சொல்லாமல் ரகசியம் காத்தது ஏன்?” என்று கோபித்துக் கொண்ட போது, எந்த நேரத்தில் அவளுக்கு எது முக்கியமாக இருக்கிறது என்று எண்ணி, அவனால் அவளை ஓங்கி அறையாமல் இருக்க முடியவில்லை. அவள் கோபம் இரட்டிப்பாகி அவனுடன் பேசுவதை நிறுத்தி இருந்தாள். இரண்டு நாட்களாக அவள் அவன் கண்ணிலேயே படவில்லை. அவன் மகன் சுதானு “அவ்வளவு நிதியை அங்கே வைத்து காவல் காக்காமல் யாராவது இருப்பார்களா? எங்களுக்குத் தருவதில் கஞ்சத்தனம் செய்து மொத்தமாக எல்லாவற்றையும் யாருக்கோ தாரை வார்த்துக் கொடுத்து விட்டீர்களே” என்று கேள்வி கேட்டு தனநந்தன் திட்டிய கடுமையான வார்த்தைகளால் கோபம் கொண்டு அரண்மனையை விட்டு வெளியேறி அருகிலிருந்த காட்டுப்பகுதிக்கு வேட்டையாடப் போய் ஒரு நாள் கழித்து வந்தான்

 எல்லாமாகச் சேர்ந்து துக்கம், பெருந்துக்கம், ஆத்திரம், பேராத்திரம், என மாறி மாறிய மனநிலைகளில் சஞ்சரித்துக் கொண்டிருந்த தனநந்தனை மூன்றாவது நாள் தைரியமாக நெருங்கியவர் ராக்ஷசர் தான். எப்போதுமே அவரை அவன் அலட்சியப்படுத்தியதில்லை, மரியாதைக் குறைவாய் நடத்தியதில்லை. ஆனால் அவனிருந்த மனநிலையில் அவரைப் பார்த்து சிறு புன்னகை பூக்கவும் கூட அவனால் முடியவில்லை. நீங்களும் என்னை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் என்பது போல் பார்த்தான்.

 அவனுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு ராக்ஷசர் சொன்னார். “அரசே மிக முக்கியமான செய்தி

தனநந்தன் கேட்டான். “அந்தச் சதிகாரர்களைச் சிறைப்படுத்தி விட்டீர்களா?” அவனைப் பொருத்த வரை அது தான் அப்போதைக்கு மிக முக்கியமான செய்தியாக இருக்க முடியும்.

 இல்லை மன்னா. சந்திரகுப்தனும், குலு, காஷ்மீரம், நேபாளம், ஹிமவாதகூட அரசர்களும் நமக்கு எதிராகப் படைகளைத் திரட்டிக் கொண்டு  கிளம்பியிருக்கிறார்கள் என்ற செய்தி ஒற்றர்கள் மூலம் கிடைத்திருக்கிறது

 தனநந்தன் உஷ்ணமாகச் சொன்னான். “அவர்கள் தற்கொலை செய்து கொள்ளக் கிளம்பி இருக்கிறார்கள் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் ராக்ஷசரே. அவர்களில் யாராவது நம் வலிமைக்கு ஈடாவார்களா?”

 

ராக்ஷசர் சொன்னார். “தனித்தனியாகப் பார்த்தால் நீங்கள் சொல்வது போல் நம் வலிமைக்கு யாருமே ஈடாக மாட்டார்கள் அரசே. ஆனால் அவர்கள் தனித்தனியாக வரவில்லை. ஒன்று சேர்ந்து வருகிறார்கள்...”

 ஒன்று சேர்ந்தால் அவர்கள் நமக்கு ஈடாகி விடுவார்கள் என்று சொல்ல வருகிறீர்களா ராக்ஷசரே?” 

 நம் அபிப்பிராயங்கள் போரின் முடிவை நிர்ணயித்து விடுவதில்லை அரசே. மேலும் எதிரிகளைக் குறைத்து மதிப்பிடுவது புத்திசாலித்தனமும் அல்ல. எதிரிகள் போருக்குக் கிளம்பி விட்டதால் நாம் வேகமாக யோசித்து போருக்கு ஆயத்தமாக வேண்டும் என்று சொல்லவே வந்தேன். வழக்கமானவர்களுடன், படைத்தலைவர்கள், அதிகாரிகள், ஒற்றர்கள் ஆகியோரில் முக்கியமானவர்களையும் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு வரச் சொல்லி இருக்கிறேன். அதற்குத் தங்களையும் அழைத்துப் போகவே வந்திருக்கிறேன்.” ராக்ஷசர் பொறுமையாகச் சொன்னார்.

 தனநந்தன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான். இப்போதிருக்கும் மனநிலையில் அவனுக்கு எதிலும் ஈடுபாடில்லை. ஆனால் அவனை நிம்மதியாக இருக்க அனுமதிக்காத, சாணக்கின் மகனை இந்தப் போர் மூலம் மட்டுமே தண்டிக்கவும் பழி வாங்கவும் முடியும் என்பதை நினைவுபடுத்திக் கொண்டு அதற்கான வேலைகளில் அலட்சியம் சிறிது கூடாது என்றெண்ணி மெல்லக் கிளம்பினான்.

 ராக்ஷசர் தனநந்தனிடம் பொறுமையாகச் சொன்னார். “அரசே. இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் யார் என்ன அபிப்பிராயம் சொன்னாலும் நாம் முழுமையாகவும், பொறுமையாகவும் கேட்க வேண்டும். அந்த அபிப்பிராயங்களில் நாம் அதிருப்தியை வெளிக்காட்டினால் உண்மையான அபிப்பிராயங்களும், தகவல்களும் அவர்களிடமிருந்து வருவது நின்று விடும். அது நமக்கு நல்லதல்ல

 அந்த அபிப்பிராயத்தைக் கேட்கவே கூட தனநந்தனுக்குக் கசந்தது.  ஆனால் அவர் சொன்னதை மறுக்க முடியாமல் தலையசைத்தான்.

ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்து அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் தனநந்தனின் தோற்றத்தில் இந்த மூன்று நாட்களில் தெரிந்த மாற்றம் கண்டு திகைத்தபடி எழுந்து நின்றார்கள். தனநந்தன் அமர்ந்து விட்டு அவர்களையும் அமரச் சைகை செய்தான்.    

 அவர்கள் அமர்ந்தவுடன் ராக்ஷசர் சந்திரகுப்தனும், குலு, காஷ்மீரம், நேபாளம், ஹிமவாதகூட அரசர்களும் மகதத்தின் மீது படையெடுத்துக் கிளம்பியிருக்கும் தகவலை அங்கிருந்தவர்களிடம் தெரிவித்தார்.   

 பத்ரசால் கேட்டான். “வரும் படைகளின் எண்ணிக்கை பற்றிய தகவலும் கிடைத்திருக்கிறதா?”

அவரவர் பகுதியிலிருந்து கிளம்பிய படையினரின் எண்ணிக்கை கிடைத்திருக்கிறது....” என்று சொன்ன ராக்ஷசர் அதை விவரித்துச் சொன்னார். “ஆனால் அவர்கள் எங்கே, எப்படி எத்தனை பேராகப் பிரிந்து வருவார்கள் என்று தெரியவில்லை. விஷ்ணுகுப்தர் தன் திட்டத்தை வெளியே கசிய விடுவார் என்று தோன்றவில்லை.”

பத்ரசால் சொன்னான். “படைபலத்தைப் பொருத்த வரை நாம் வலிமையாகவே இருக்கிறோம். ஆனால் ஆயுதக்கிடங்கு சேதமானதால் புதிய ஆயுதங்கள் உடனடியாக நமக்குத் தேவைப்படுகின்றன. அதன் உற்பத்திக்கான உத்தரவை நீங்கள் பிறப்பித்திருந்தாலும் கஜானா அதிகாரியிடமிருந்து நிதி கிடைக்காததால் ஆயுத உற்பத்திப் பணி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்று தெரிகிறது...”

 ராக்ஷசர் சொன்னார். “கஜானா அதிகாரி மன்னரின் அனுமதிக்காகக் காத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். நம் எதிரிகளை அழித்து நம் இழப்புகளை ஈடுசெய்ய மன்னரும் உறுதியாக இருப்பதால் தேவைப்படும் நிதிக்கு உடனே அனுமதி வழங்கப்பட்டு விடும். அதனால் ஆயுதங்கள் குறித்த கவலை வேண்டாம்.”

 தனநந்தன் தலையசைத்தான். ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்திருந்த ஜீவசித்தி ராக்ஷசரின் சமயோசிதத்தை ரசித்தான். எதற்கு நிதி தேவைப்பட்டாலும் தனநந்தனிடம் சீக்கிரம் அனுமதி கிடைத்து விடாது. நீண்ட காலம் காத்திருந்த பின்னரும், பல கேள்விகள் கேட்டு தேவைப்பட்டதில் பாதி தான் கிடைக்கும். நிலைமை அப்படி இருக்கையில்நம் எதிரிகளை அழித்து நம் இழப்புகளை ஈடுசெய்ய மன்னரும் உறுதியாக இருப்பதால் உடனே அனுமதி வழங்கப்பட்டு விடும்.” என்று சொல்லி உடனடியாக பிரச்சினையைத் தீர்த்த விதம் அவனுக்குப் பிடித்திருந்தது. இவர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் தனநந்தன் எப்போதோ அழிந்து போயிருப்பான் என்று நினைத்துக் கொண்டான்.

 அடுத்ததாக ராக்ஷசர் சொன்னார். “நமது போர் ஆயத்தங்களை நாம் ஆலோசிக்கும் முன் உங்கள் அனைவரையும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று எச்சரிப்பது என் கடமை என்று நினைக்கிறேன். ஆச்சாரிய விஷ்ணுகுப்தரின் ஆட்கள் மறைமுகமாக நம் மண்ணில் இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்ற உண்மை நம் ஆயுதக்கிடங்கு எரிப்பு போன்ற சில சம்பவங்களால் உறுதியாகியிருக்கின்றது. அவருடைய ஆட்களுக்கு நம் ஆட்களின் உதவியும் கிடைத்திருக்கும் என்றும் நான் சந்தேகப்படுகிறேன். யாரந்த ஆட்கள் என்று நாம் அடையாளம் காண்பது மிக முக்கியம். வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூடியுள்ளவர்களில் கூட ஓரிரு ஆட்கள் இருக்கலாம் என்கிற அளவுக்கு எனக்குச் சந்தேகம் இருக்கிறது. எனவே உங்களைச் சுற்றி நடப்பவைகளையும், சுற்றியுள்ளோரின் நடவடிக்கைகளையும் தயவு செய்து கூர்ந்து கவனியுங்கள்.  அவற்றில் சந்தேகத்தை எழுப்பும்படியான வித்தியாச நடவடிக்கைகளைக் காண நேர்ந்தால் அவர்கள் எத்தனை பெரிய பதவியில் இருப்பவர்களானாலும் சரி சிறிதும் தயங்காமல் என் கவனத்திற்குக் கொண்டு வாருங்கள். மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்.”

 

(தொடரும்)

என்.கணேசன்





Monday, January 20, 2025

யோகி 86


ஷ்ரவனுக்கு அவர்களை நெருங்க இது நல்ல உபாயமாகத் தெரிந்தது. அவன் தன்னை யோகிஜியின் கண்மூடித்தனமான பரமபக்தனாகவும், மூளை சலவை செய்யப்பட்டவனாகவும் காட்டிக் கொள்ளும் முயற்சியை உற்சாகமாகத் தொடர்ந்தான். “சில நாட்களாகவே தொடர்ந்து ரெண்டு பயிற்சிகள் செய்துகிட்டிருக்கேன்ஜி. யோகிஜிநெற்றிக்கண்ணைத் திறப்பது எப்படி?’ என்ற யூட்யூபில் சொல்லியிருக்கிற முதல் பயிற்சியையும், ‘சிவசக்தியோடு இணைந்திருப்பது எப்படிஎன்ற யூட்யூபில் சொல்லியிருக்கிற முதல் பயிற்சியையும் தொடர்ந்து செய்துகிட்டிருக்கேன். “சரியாய் தொடர்ந்து 21 நாட்கள் செய்தால் உங்கள் வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்கும்என்று அந்த இரண்டு யூட்யூப்களிலும் யோகிஜி சொல்லியிருக்கிறார். நான் யோகிஜி வசிக்கும் இந்தப் புனித இடத்தில் ஒரு வாரம் இருக்க முடிஞ்சதே கூட ஒரு அற்புதம் தானேஜி. ஆனால் நான் அதைப் புரிஞ்சுக்காமல் அதற்கு மேலேயும் ஆசைப்பட்டு, யோகிஜியின் அனுபவங்களில் ஒன்னாவது எனக்குக் கிடைக்கணும்னு முயற்சி செஞ்சது தான் என்னை ஒரேயடியாய் கவிழ்த்துடுச்சுஎன்று சொல்லி விட்டு ஷ்ரவன் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான்.

 

கண்ணன் மெலிதாகப் புன்னகைத்தார்.

 

ஷ்ரவன் தொடர்ந்து சொன்னான். “இப்பவும் அந்தப் பயிற்சிகளைச் செய்துட்டு தான் இருக்கேன். ஆனா யோகிஜி கிட்ட என் மனசுல என்ன பிரார்த்திக்கிறேன்னா, “யோகிஜி, நீங்க காட்டின பாதையில நான் போறேன். நீங்க சொல்ற மாதிரியே செய்யறேன். அதுக்கு என்ன விளைவைத் தரணும்னு நீங்க நினைக்கிறீங்களோ, அதை அடியேனுக்குக் கொடுங்க. கூடுதலாய் நான் எதையும் கேட்கல. எதிர்பார்க்கலன்னு தான் வேண்டிக்கறேன். நான் இப்ப செய்யறது சரி தானே ஜி

 

கண்ணன் சொன்னார். “சரி தான். அப்படி சரணாகதி ஆக முடிவது மிகவும் கஷ்டம். சின்ன வயதானாலும் உங்களுக்கு அந்தப் பக்குவம் வந்திருக்கிறது.”

 

பட்ட பிறகு தான புத்தி வந்திருக்கு ஜிஎன்று சொல்லி ஷ்ரவன் முகத்தில் வருத்தம் காட்டினான்.

 

கண்ணன் சொன்னார். “பட்ட பிறகும் பலருக்கு புத்தி வருவதில்லை.”

 

தொடர்ந்து நடந்தபடி அவரிடம் ஷ்ரவன் தனக்கு சமீப காலமாக வரும் துறவு சிந்தனைகளைச் சொன்னான். பணம், வேலை, குடும்ப வாழ்க்கை ஆகியவற்றில் தனக்கு சமீப காலமாக கடுமையான சலிப்பு தோன்றுவதாகச் சொன்னான். எல்லாமே துன்பத்தில் ஆழ்த்தும் படுகுழிகள் என்று தோன்றுவதாகச் சொன்னான். துறவு வாங்கிக் கொண்டு யோகிஜியின் கண் பார்வை விழும் இடத்திற்கு வந்து விட மனம் துடிக்கிறது என்றும் சொன்னான்.

 

கண்ணன் அவனது குடும்பத்தைப் பற்றிக் கேட்டார். பின் அவர் தொடர்ந்து கேட்ட கேள்விகள் அவனுக்கு இருக்கும் சொத்துக்கள் மற்றும் நிதி நிலைமை பற்றியதாக இருந்தன.  தங்களிடம் வருபவர்களின் சொத்துக்கள் மற்றும் நிதி நிலைமை இவர்களுக்கு மிக முக்கியமாக இருப்பதை அவன் கவனித்தான். கல்விக்கடன் வாங்கிப் படித்து மேலே வந்த இளைஞனாகத் தன்னைச் சொன்னான். ஹைதராபாதில் மூன்று செண்ட் நிலத்தில் கட்டப்பட்ட தாத்தாவின் பழைய வீடு தான் தன்னுடைய ஒரே சொத்து என்றும், பைக் கூட வேலைக்குச் சேர்ந்த பின் தான் வாங்கியது என்றும் அவன் சொன்னது அவருடைய ஆர்வத்தைக் குறைத்து விட்டது.

 

அவர்கள் நடக்கையில் எதிரே பக்கத்து அறை இளைஞர்கள் இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டபடி நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் நாலடி தள்ளி ஒரு துறவி நடந்து வந்து கொண்டிருந்தார். அவர் தான் எப்போதும் ஷ்ரவனின் பின்னால் வருபவர். இன்று ஷ்ரவனைக் கண்காணிக்க கண்ணன் வந்து விட்டதால், அந்தத் துறவிக்கு அந்த இளைஞர்களைக் கண்காணிக்கும் வேலை ஒதுக்கப்பட்டு விட்டது போலிருந்தது. ஷ்ரவனுக்கு, தான் மட்டுமல்லாமல் அந்த இளைஞர்களும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவது திருப்தியைத் தந்தது. இன்னும் பொதுவாகத் தான் கண்காணிப்பு நடக்கிறது. யோகாலயத்துக்கு இன்னும் எதிரிகள் குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை.    

 

எதிரே இளைஞர்களைப் பின் தொடர்ந்து வந்தத் துறவி கண்ணனைப் பார்த்தவுடன் மரியாதையான வணக்கம் தெரிவித்தார். கூடவே அவர் முகத்தில் பயமும் தெரிந்தது போல் ஷ்ரவன் உணர்ந்தான். அவன் ஏற்கெனவே யூகித்தபடி இந்த ஆள் யோகாலய அதிகார மையத்திற்கு மிகவும் நெருங்கியவர் போலத் தான் இருக்கிறது. அந்த முக்கிய ஆளே அவனிடம் அடுத்த தகவல்களைப் பெற வந்திருப்பது, ஆபத்தான பாதையானாலும் அவன் சரியான பாதையையே தேர்ந்தெடுக்கிறான் என்பதை உறுதிப்படுத்துவது போல் இருந்தது.  

 

ஷ்ரவன் இங்கு துறவியாக வந்து சேர என்ன வழிமுறை என்று கண்ணனிடம் கேட்டான். அந்த வழிமுறையைச் சுருக்கமாகச் சொல்லி விட்டு அவர் அவனிடம் விடைபெற்றார்.

 

ஷ்ரவன் தனதறைக்கு வந்து சேரும் வரை ஸ்ரேயா எதிர்ப்புறமாகக் கூட, அவனுக்குப் பார்க்கக் கிடைக்கவில்லை. அறைக்கு வந்தவுடன் அவன் பரசுராமன் உபதேசித்த மந்திரத்தை, பக்தி சிரத்தையுடன் ஜபிக்க ஆரம்பித்தான். உண்மையில் அவன் கண்ணனிடம் சொன்னதற்கு எதிர்மாறாக, அந்த அமானுஷ்ய அனுபவத்திற்குப் பிறகு கூடுதல் சக்தியைப் பெற்றதாய் உணர்கிறான். அவனுடைய உணர்வுகளும் கூட மிகவும் கூர்மையடைந்திருப்பதையும் உணர்கிறான்.

 

அன்று அவன் ஜபிக்கையில் ஓநாயோ, வேறு எதாவது அமானுஷ்யக் காட்சியோ தெரியவில்லை. ஆனால் வேறெதாவது முக்கியத் தகவல் கிடைக்குமா என்று ஷ்ரவன் ஆவலுடன் எதிர்பார்த்தான். குறைந்த பட்சம் அந்த ஓநாய் கல்பனானந்தாவைப் பார்த்து நின்று விட்டுப் போனது ஏன் என்பதாவது தெரிந்தால் நன்றாக இருக்கும் என்று அவன் நினைத்தான். இப்படி எதிர்பார்ப்புடன் ஜபிப்பது எதிர்மறையான பலனைத் தான் தரும் என்று உள்ளுணர்வு சொன்னது.

 

நடிப்புக்காக சரணாகதித் தத்துவத்தை கண்ணனிடம் பேசியிருந்தாலும், உண்மையிலும் அது தான் சக்தி வாய்ந்தது என்று அவனுக்குத் தோன்றியது. பக்தி, சிரத்தையுடன் எதிர்பார்ப்பும் சேர்ந்து கொள்ளுமானால் பக்தி, சிரத்தை களங்கப்பட்டு விடும் என்ற ஞானம் மனதில் வலுவாக உறைத்தது. ’வர வேண்டிய நேரத்தில் எல்லாம் நிச்சயம் வரும்!’

 

எதிர்பார்ப்பை முழுவதுமாக விட்டு விட்டு பக்தி சிரத்தையுடன் மறுபடியும் ஆரம்பத்திலிருந்து ஷ்ரவன் ஜபிக்க ஆரம்பித்தான்.

 

ஷ்ரவன் சொன்னதாய் கண்ணன் குறிப்பிட்ட இரண்டு யூட்யூப்களையும் பிரம்மானந்தா பார்த்தார். இரண்டிலுமே அவர் சொல்லியிருந்த பயிற்சிகள் அந்தந்த நேரத்தில் அவருக்குத் தோன்றியபடி பேசியிருந்த பயிற்சிகள். அரைத்த மாவையே அரைப்பது போல அனைவரும் சொன்னதையே சொல்வதில் அவருக்குச் சில வருடங்களாகவே சலிப்பு தோன்றி வருகிறது. அப்படிச் சொன்னால், கேட்டுக் கொண்டிருப்பவர்களின் முகத்தில்அது தான் தெரியுமேஎன்பது போன்ற முகபாவனையை அவர் பார்க்க வேண்டி வருகிறது. அந்தப் புராதனப் பயிற்சிகளை, சிலர் அவரை விட அற்புதமாக விளக்கி விவரித்திருக்கிறார்கள். அதையும் சிலர் நினைவுகூர்ந்து விடுகிறார்கள். அதனால் எந்தப் பயிற்சியிலும் இது வரை யாரும் சொல்லாத ஒன்றைக் கற்பனை செய்து சேர்த்துச் சொல்லி, கேட்பவர்களிடம்  சுவாரசியத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி அதைப் பார்த்து ரசிக்கும் ஒரு வழக்கம் சில வருடங்களாக அவரிடம் இருந்து வருகிறது. அதுவரை யாருமே சொல்லாததை முதல் ஆளாய்ச் சொல்லியிருக்கும் பெருமையும் அவரை வந்து சேர்வதையும் அவர் விரும்பினார். ஆனால் அந்தப் பயிற்சிகளை அவரே செய்து பார்த்ததில்லை. அவருக்கு அதற்கு நேரமும் இல்லை.

 

ஆனால் அவருடைய தீவிர பக்தர்கள் அவர் சொன்னதைச் செய்து, தங்கள் அனுபவங்களை அவரிடம் சொல்லி மெய்சிலிர்த்திருக்கிறார்கள். அதைக் கேட்கையில் அவருக்குப் பெருமையாக இருக்கும். ’நான் சரியாகத் தான் சொல்லியிருக்கிறேன்.’ என்று தோன்றும்.

 

ஆனால் அதையே தொடர்ந்து செய்ய அவருடைய பக்தர்களுக்கும் அலுத்து விடும். அதனால் அவர் மாறுதலுக்காக வேறொரு தலைப்பில் இன்னொரு பயிற்சியை அறிமுகப்படுத்துவார். அந்தப் பயிற்சியிலும் அவருடைய கற்பனை சிறிதாவது கலந்திருக்கும். அதைச் செய்வதால் கிடைக்கும் விளைவை பிரம்மாண்டமாகச் சொல்வார். ’இதை மட்டும் நீ செய்து வந்தால் போதும். வேறெதையும் நீ செய்யத் தேவையில்லை. இது ஒன்றே மற்ற  எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும்என்றெல்லாம் சொல்வார்.

 

உண்மையில் அந்த ஒன்றையே காலம் முழுவதும் செய்து கொண்டிருக்கும் பொறுமையும், விடாமுயற்சியும் யாருக்கும் இருப்பதில்லை. அதனால் அவர் அடுத்த ஒரு பயிற்சியைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் சீக்கிரமே வந்து விடும். இப்படியாகத் தான் அவருடைய தற்கால உபதேச அருள்வாக்குகள் சென்று கொண்டிருக்கின்றன.

 

விஷயம் தெரிந்த சில அதிகப்பிரசங்கிகள்இது புதிதாக இருக்கிறதே. இது யோக நூல்களில் சொல்லியிருக்கிற அடிப்படை விதிகளுக்குப் பொருத்தமாக இல்லையேஎன்று அவரிடம் கேட்பதுண்டு.

 

அப்போதெல்லாம் அவர்என்ன செய்வது? இதை எனக்கு உபதேசித்திருக்கும் வேதநாயகனான சுந்தர மகாலிங்கம் அந்த யோக நூல்களை எல்லாம் படிக்கவில்லை போலிருக்கிறதுஎன்று சொல்லிச் சிரித்து அந்த அதிகப் பிரசங்கிகளின் வாயை அடைப்பதுண்டு.

 

ஆனால் இது வரை அவர் சொன்ன பயிற்சிகளைச் செய்து விட்டு ஒரு ஏவல் ஓநாயைப் பார்த்திருக்கும் பாக்கியம் ஷ்ரவனைத் தவிர வேறு யாருக்கும் கிடைக்கவில்லை.  இவனை எந்த ரகத்தில் சேர்ப்பது என்று பிரம்மானந்தா யோசிக்க ஆரம்பித்தார்.

 

(தொடரும்)

என்.கணேசன்