சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, May 30, 2024

சாணக்கியன் 111

 

யூடெமஸ் சிறந்த போர்வீரனேயொழிய சிறந்த பேச்சாளன் அல்ல. அதனால் அவனுடைய வீரர்களிடம் எழுச்சியூட்டும்படி பேச வேண்டிய அவசியம் நேர்ந்திருப்பது அவனுக்கு சலிப்பு கலந்த சங்கடத்தை ஏற்படுத்தியது. கேகய நாடு எதிரியுடன் சேர்ந்து படையெடுத்து வரும் துரோகச் செயலைக் கேள்விப்பட்டவுடன் ஒவ்வொரு யவன வீரனும் தானாகவே கொதித்தெழ வேண்டும் என்று அவன் மிகவும் எதிர்பார்த்தான். அது கேகயத்தில் மட்டுமல்லாமல் இங்கும் அவன் வீரர்களிடம் ஏற்படாதது அவனுக்குப் பெரிய ஏமாற்றத்தையே தந்தது. அவனுடைய படைத்தலைவனே கூட தலையைக் கவிழ்த்து வருத்தப்பட்டு அமர்ந்திருந்தானேயொழிய கொதித்தெழவில்லை;  நாடி நரம்புகள் துடிக்க போருக்குத் தயாராகவில்லை. காலம் செல்லச் செல்ல எல்லாரிடமும் வீரம் குறைந்து வருவது அவனுக்கு வருத்தத்தை அளித்தது. படைத்தலைவன் சொன்னது போல் போரிடும் வீரர்களின் துடிப்பான மனநிலையும், உற்சாகமும் மிக முக்கியம் தான். ஆனால் அது தானாக ஏற்படுவதல்லவா அவர்களுக்குப் பெருமை?

 

இதையெல்லாம் யோசித்து பெருமூச்சு விட்டபடி என்ன பேசுவது என்று யூடெமஸ் சிந்திக்க ஆரம்பித்தான். வீரர்களிடம் உள்ளதை உள்ளபடி சொன்னால் கேகயத்து யவன வீரர்கள் போல் அவர்கள் சிந்தித்து விடும் அபாயம் இருப்பதால் அவன் பக்கத்து நியாயத்தைச் சொல்லி அவர்களைப் பொங்கியெழ வைக்க அவன் சில விஷயங்களை ஜோடித்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. அவன் அலெக்ஸாண்டரின் எழுச்சியூட்டும் பேச்சுகள் பல கேட்டிருக்கிறான். அதிலிருந்து சில வாசகங்களையும் சேர்த்துப் பேசினால் நன்றாக இருக்கும். இருந்தாலும் பேசுவதை விடப் போர் புரிவதே சுலபம் என்று அவனுக்குத் தோன்றியது. ஆனால் காலத்தின் கட்டாயத்தால் அந்தக் கடினமான செயலை மனதளவில் பல முறை ஒத்திகை பார்த்த பின் சிறப்பாகவே செய்தான்.


தன் வீரர்களைக் கூட்டி அவன் மிக உருக்கமாகவும், உணர்ச்சிகரமாகவும் பேசினான். “மறைந்த மாவீரர் சக்கரவர்த்தி அலெக்ஸாண்டரின் வீரர்களே! தோல்வியே காணாத சரித்திரம் படைத்திருப்பவர்களே! இன்று நம் சக்கரவர்த்தி நம்மிடையே இல்லாவிட்டாலும் அவர் காட்டிய மாவீரம் நம் மனதில் இருக்கிறது. அவர் வென்ற பகுதிகளைக் கட்டிக் காக்கும் மாபெரும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது. என்னையும், உங்களையும் நம்பி அந்தப் பொறுப்பை அவர் ஒப்படைத்து விட்டுப் போயிருக்கிறார். அவர் இங்கிருந்த வரை இருக்குமிடம் தெரியாமல் அடங்கியிருந்தவர்கள் அவர் திரும்பி என்றும் அவர் வரப்போவதில்லை என்று தெரிந்தவுடன் தைரியம் பெற்று தங்கள் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்து விட்டார்கள். நம் சத்ரப்பாக இருந்த மாவீரர் பிலிப்பைக் கொன்று வாஹிக் பிரதேசத்தைக் கைப்பற்றி விட்டார்கள். அதைக் கேட்டவுடன் ஆத்திரமடைந்த வீர அலெக்ஸாண்டர் எதிரிகளுக்குப் பதிலடி தர என்னையும் காந்தார அரசன் ஆம்பி குமாரனையும் சத்ரப் பதவிக்கு நியமித்து விட்டு காலமானார். அவர் தந்த பணியை நிறைவேற்ற ஓடோடி வந்த எனக்கு காந்தார அரசன் ஆம்பி குமாரனின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. ஏனென்று கேட்டால் அவனுக்கு உயிர்ப்பயம் என்று சொன்னார்கள். ஆனால் அந்த உயிர்ப்பயம் எனக்கில்லை.”

 

“நான் கேகய மன்னனின் உதவியோடு புரட்சிப்படையினரைத் தோற்கடித்து பிலிப்பின் மரணத்திற்குப் பழி வாங்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அது குறித்து கேகய மன்னனுக்கு நான் அனுப்பிய கடிதத்திற்குச் சரியாகப் பதில் வரவில்லை. நேரடியாகச் சென்று பேசினேன். அவர் மாவீரர் அலெக்ஸாண்டரின் மறைவுக்குப் பின் நம்மிடம் பழைய மரியாதை காட்டவில்லை. ஆனாலும் சத்ரப் பிலிப்பைக் கொன்றவர்களைப் பழிவாங்கி வாஹிக் பிரதேசத்தை மீட்க வேண்டிய அவசியத்தை நான் உறுதியாகச் சொன்னவுடன் எனக்கு யானைப்படை தந்து உதவுவதாகச் சொல்லி வேண்டாவெறுப்புடன்  ஐநூறு யானைகளை மட்டும் அனுப்பி வைக்கச் சம்மதித்தார். அதன் பின் அவர் வயோதிகத்தின் காரணமாக உறக்கத்தில் உயிரிழந்தாரா அல்லது அங்குள்ளவர்களின் சதிச்செயலால் உயிரிழந்தாரா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அவர் உயிரிழப்பதால் எனக்கு எந்த விதமான இலாப நஷ்டங்களும் இல்லை என்பது குழந்தைக்குக் கூட தெரியக்கூடிய உண்மை. அவர் மரணத்தினால் பதவி இலாபமடைந்த அவர் மகன் அதைச் செய்திருக்கலாம். அவன் நாட்டு மக்களிடம் நற்பெயர் வாங்க அவனுடைய சதிக்கு என் மீது பழி போட்டு இருக்கிறான் என்பது எனக்கு இங்கே வந்தவுடன் தான் தெரிந்தது.”

 

“அதன் பின் நடந்த சம்பவங்களைப் பார்க்கையில் அந்தச் சதித்திட்டத்தின் பின்னணியில், சத்ரப் பிலிப்பைக் கொன்று வாஹிக் பிரதேசத்தைக் கைப்பற்றிய புரட்சிப்படைத் தலைவன் சந்திரகுப்தனும் இருக்கிறான் என்பது எனக்குப் பிறகு தான் புரிந்தது. நான் தான் கேகய மன்னனைக் கொன்றேன் என்று சொன்ன பொய்யை வலுப்படுத்தி மக்களை நம்ப வைக்க இருவரும் சேர்ந்து கொண்டு இங்கு படையெடுத்து வரும் நாடகத்தையும் அரங்கேற்றி இருக்கிறார்கள். கேகயம் புருஷோத்தமனுக்கு நம் வீர அலெக்ஸாண்டர் போட்ட பிச்சை. நாம் அந்த நாட்டைத் திருப்பித் தந்து அவர்களைக் கௌரவப்படுத்தியதற்கு அவர்கள் நமக்குத் தரும் பரிசு என்ன பார்த்தீர்களா? தனித்தனியாக வந்தால் நம்மை வீழ்த்த முடியாது என்று புரிந்து கொண்டு சதிகாரர்கள் இருவரும் கைகோத்துக் கொண்டிருக்கிறார்கள். நீதி கேட்க வருகிறார்களாம். நீதியே இல்லாத அந்த மனிதர்களுக்கு அலெக்ஸாண்டரின் வீரர்களான நாம் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். கற்பித்து அலெக்ஸாண்டர் மறைந்தாலும் அவர் நம்மிடம் உருவாக்கிச் சென்ற வீரம் மறையவில்லை என்று நிரூபிக்க வேண்டும். நிரூபிப்போமா?”

 

படைத்தலைவன் அந்தப் பேச்சைக் கேட்டு திகைத்தான். இது என்ன புதுக்கதை என்று தோன்றியது. “ஒரு கிழவன் இறந்ததற்கு இத்தனை முக்கியத்துவம் தர என்ன இருக்கிறது?” என்று நேற்று ஒற்றனிடம் கொந்தளித்துக் கேட்ட யூடெமஸ் இன்று புதிய கதையுடன் வீரர்களிடம் பேசியதைக் கேட்கையில் அவனுக்கு அவ்வப்போது பைத்தியம் பிடித்தாலும் சில சமயங்களில் தெளிவாக ஜோடித்துப் பேசவும் முடிகிறது என்று மனதில் மெச்சத் தோன்றியது.

 

யவன வீரர்களும் முன்பு கேள்விப்பட்ட கதையே வேறு இன்று இவன் சொல்லும் கதையே வேறு என்று திகைத்தாலும் யூடெமஸ் சொல்வது போல் புருஷோத்தமன் இறப்பதால் யூடெமஸுக்கு என்ன இலாபம் என்று தோன்றியது. யூடெமஸ் சொல்லியிருப்பது போலத் தான் நடந்திருக்கும் என்று நம்பவும் தோன்றியது. எதிரிகள் சதி செய்து யூடெமஸின் மீது பழி சுமத்தி படையெடுத்தும் வருவது அநீதியின் உச்சம் என்று தோன்றியது. அவர்கள் எழுச்சியுடனும், உறுதியுடனும் “நிரூபிப்போம்” என்று ஒன்றுசேர்ந்து உச்சக் குரலில் கத்த யூடெமஸ் புன்னகைத்தான். யாரையும் ஏமாற்றுவது கஷ்டமான காரியம் அல்ல என்று தோன்றியது. முயன்றால் அவனும் ஒரு அலெக்ஸாண்டர் ஆக முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.

 

புஷ்கலாவதியில் யூடெமஸ் தன் வீரர்களிடம் அவிழ்த்து விட்டிருக்கும் புதுக் கதையை ஒற்றன் வந்து சொன்ன போது மலயகேது கடுங்கோபம் அடைந்தான். இளம் வயதானதாலும், வாழ்க்கையின் நிதர்சன அனுபவங்கள் இல்லாமையாலும் இது போன்ற அயோக்கியத்தனங்களைப் பார்த்திராததால் அவன் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தான். ஆனால் சந்திரகுப்தன் அதில் ஆத்திரப்பட எதுவும் இல்லை என்பது போலவே இருந்தான். அவன் மலயகேதுவிடம் சொன்னான். “உன் ஆத்திரத்தைப் போர்க்களத்தில் காட்டுவதற்காகப் பத்திரப்படுத்திக் கொள். எதையும் தகுந்த இடத்தில் வெளிப்படுத்துவது தான் புத்திசாலித்தனம்.”

 

மலயகேது அந்த அறிவுபூர்வமான வார்த்தைகளில் இருந்த உண்மையை உணர்ந்து ஓரளவு அமைதியானான். சந்திரகுப்தனிடமிருந்து கற்க இன்னும் நிறைய இருக்கின்றன...

 

சந்திரகுப்தன் மலயகேதுவிடம் சொன்னான். “போரில் வீரர்கள் தங்கள் தலைவன் சொன்னது போல் போரிடக் கடமைப்பட்டவர்கள் என்றாலும் அவர்கள் போர் புரியும் உக்கிரம் போரின் நோக்கத்தைப் பொருத்தே பெரும்பாலும் அமையும். தங்களையும் தங்கள் பெருமைகளையும், தற்காத்துக் கொள்ளப் போரிடும் போதும், நியாயத்திற்காகப் போரிடும் போதும் அவர்கள் கூடுதல் வீரத்தோடு போரிடுகிறார்கள். அதனால் யூடெமஸ் அவர்களை உற்சாகப் படுத்த ஒரு கதை சொல்லியிருக்கிறான். அவனைப் பொருத்த வரை அதுவே புத்திசாலித்தனம்...”

 

இந்திரதத் சொன்னார். “நாம் நம் பங்குக்கு கேகயத்தில் நடந்த சதியை சில யவன வீரர்கள் மூலம் முன்பே அங்கு கசிய விட்டிருக்கிறோம். அது அவனுக்குத் தெரிந்திருக்கும். அதனால் ஒரு மாற்றுக் கதையை உருவாக்க வேண்டிய அவசியம் அவனுக்கு வந்திருக்கிறது”

 

மலயகேது கேட்டான். “அப்படியானால் உண்மையை அவன் வீரர்கள் எப்படித் தெரிந்து கொள்ள முடியும்?”

 

சந்திரகுப்தன் புன்னகையுடன் சொன்னான். “நாம் நம் வழியில் ஆணித்தரமாகப் புரிய வைப்போம் கவலைப்படாதே”

 

(தொடரும்)

என்.கணேசன் 



1 comment:

  1. யூடெமஸ் ஏதாவது சொதப்புவான் என்று எதிர்பார்த்தேன்.... ஆனால், நன்றாகவே பேசியிருக்கிறான்....

    ReplyDelete