சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, May 23, 2024

சாணக்கியன் 110


யூடெமஸின் படைத்தலைவன் தன் பார்வையை யூடெமஸ் மீது வைத்திருந்தால் சிரிப்பைக் கட்டுப்படுத்துவது மிகவும் கஷ்டம் என்று உணர்ந்து தலையைக் கவிழ்த்துத் தரையைப் பார்க்க ஆரம்பித்தான். யூடெமஸுக்கு அவன் பேச்சில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து தான் படைத்தலைவன் சோகத்துடன் தலையைக் கவிழ்த்துக் கொண்டு அமர்ந்து இருக்கிறான் என்று தோன்றியது. அவனைப் புரிந்து கொண்டு அவன் பக்கம் யோசிக்கவும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பது அவனுக்கு மிகவும் ஆறுதலாய் இருந்தது.

 

அவன் ஓரளவு அமைதியடைந்து ஒற்றனிடம் கேகயத்திலிருந்து வரும் படை குறித்த தகவல்களை விசாரிக்க ஆரம்பித்தவுடன் படைத்தலைவன் மெள்ளத் தலையை உயர்த்தி அந்த விவரங்களை உள்வாங்க ஆரம்பித்தான். இரண்டு படைகளையும் சேர்த்துப் பார்த்தால் கூட அவர்கள் படைபலம் சரிசமமாகத் தான் இருந்தது. அவர்களுடைய படைவீரர்கள் முழுமனதுடன் தீவிரமாகப் போரிட்டால் வெற்றி பெறுவது முடியாததல்ல. ஆனால் படைவீரர்களில் பலரும் நியாயம் தங்கள் பக்கம் இல்லை என்று உணர்ந்து தங்களுக்குள் பேசிக் கொண்டதை அவனால் கேட்க முடிந்தது.   

 

சற்று முன் ஒற்றன் கேகயத்தில் இருக்கும் யவன வீரர்கள் எண்ணப் போக்கைச் சொன்னது போலத் தான் இங்குள்ளவர்கள் எண்ணப் போக்கும் இருந்தது. யூடெமஸ் செய்த எதுவும் சத்ரப் என்ற உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவன் செய்யத் தகுந்ததல்ல என்று இவர்களும் அபிப்பிராயப் பட்டார்கள். அதனால் கேகயம் எதிரி சந்திரகுப்தனுடன் சேர்ந்து கொண்டதை இவர்களால் பெருங்குற்றமாக நினைக்க முடியவில்லை. அது குற்றமானாலும் அதைச் செய்யத் தூண்டியது யூடெமஸ் என்பது தான் இங்குள்ள வீரர்கள் எண்ணமாக இருந்தது. அதனால் எந்த அளவு எழுச்சியோடு இவர்கள் போர் புரிவார்கள் என்று தெரியவில்லை.

 

அலெக்ஸாண்டர் தலைமையில் அவனும் இங்குள்ள வீரர்களும் எத்தனையோ முறை போராடியிருக்கிறார்கள். போர்க் காலங்களில் அலெக்ஸாண்டர் அதிக நேரம் போர் வீரர்களுடன் தான் கழிப்பான். அவன் போர் புரியும் விதமும், அவனுடைய யுக்திகளும் சிறப்பாக இருக்கும். வெற்றியை ஒவ்வொரு வீரனின் தனிப்பட்ட வெற்றியாக அவன் உணர வைப்பான்.  அதனாலேயே ஒவ்வொருவரும் தீவிரமாகப் போராடுவார்கள். ஆனால் இப்போது ?

 

யூடெமஸ் படைத்தலைவனிடம் கேட்டான். “உன் அபிப்பிராயம் என்ன படைத்தலைவனே?”

 

இந்தப் பைத்தியக்காரனிடம் உண்மையான கருத்துகளைச் சொல்வது தனக்கு ஆபத்து என்று உணர்ந்த படைத்தலைவன்  சொன்னான். “அவர்கள் இரண்டு படைகளும் சேர்ந்தால் கூட நம்மால் அவர்களை வென்று விட முடியும் சத்ரப்”

 

யூடெமஸ் அதைக் கேட்டு உற்சாகமடைந்தான். அவன் பெருமையுடன் சொன்னான். “நம்மிடம் இருக்கும் யானைப்படையும் நமக்குக் கூடுதல் பலம். கேகயத்திலும் இத்தனை யானைகள் இருந்தாலும் கூட, அத்தனையும் ஓட்டி வருவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக அவர்கள் மிகவும் குறைந்த அளவு யானைப்படையோடு தான் வருகிறார்கள்”

 

’இந்த யானைகள் தான் உன் இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் முட்டாளே’ என்று மனதிற்குள் படைத்தலைவன் கத்தினாலும் வாய்விட்டு எதுவும் சொல்லாமல் தலையை அசைத்தான்.

 

யூடெமஸ் சொன்னான். “நாம் அவர்களை எங்கே சந்திப்பது நமக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறாய்?”

 

படைத்தலைவன் மூன்று இடங்களைச் சொன்னான். அதில் இரண்டு இடங்களில் இருக்கும் பாதகங்களைச் சுட்டிக் காட்டி ஒரு இடத்தை யூடெமஸ் தேர்ந்தெடுத்தான். போர் யுக்திகள், வியூகங்கள் பற்றிப் பேசும் போது அந்த அறிவில் அவனிடம் எந்தக் குறையையும் படைத்தலைவனால் காண முடியவில்லை.

 

போரிடும் இடத்தைத் தேர்ந்தெடுத்து, அந்த இடத்திற்கு எதிரிப்படைகள் வந்து சேர எவ்வளவு நாட்கள் ஆகும் என்பதையும் கணக்கிட்டு அதற்கேற்றபடி போருக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்வதிலும் ஒருமித்த தீர்மானத்தை அவர்கள் எட்டிய பின் படைத்தலைவன் கேட்டான். “நம் வீரர்களிடம் நீங்கள் எப்போது பேசுகிறீர்கள் சத்ரப்?”  

 

அலெக்ஸாண்டர் ஆரம்பித்து வைத்த அந்த சம்பிரதாயத்தை யூடெமஸால் மறுக்க முடியவில்லை என்றாலும் அதுவரை வேகமாகத் தெளிவாகவும், ஆணித்தரமாகவும் முடிவெடுத்து வந்தது போல் சட்டென அவனால் சொல்ல முடியவில்லை. சற்றுத் தயங்கி மெல்லச் சொன்னான். “நாளை பேசுகிறேன்.”

 

விளைவுகளைப் பற்றி முழுமையாக யோசிக்காமல் ஏதோ ஒரு வேகத்தில் பைத்தியக்காரத்தனமாய் செயலைச் செய்து விட்டு இப்போது தடுமாறும் யூடெமஸைப் பார்க்கையில் படைத்தலைவனுக்கு ஒரு கணம் பாவமாக இருந்தது. சற்று முன்பு அறிவுபூர்வமாக போர் வியூகங்களை அலசிய யூடெமஸைப் பார்த்து சிறிது நேரத்துக்கு முன் உள்ளுக்குள் சிரித்தது போல் இப்போது படைத்தலைவனால் சிரிக்க முடியவில்லை.

 

அலெக்ஸாண்டர் எழுப்பிய உற்சாகத்தை யூடெமஸும் வீரர்களிடம் எழுப்ப முடிந்தால் வெற்றி நிச்சயம். ஆனால் ஒற்றனிடம் முன்பு பேசியது போல் அவர்களிடமும் யூடெமஸ் பேசுவானானால் வெற்றி சந்தேகமே! அதைச் சூசகமாகவாவது அவனால் சொல்லாமலிருக்க முடியவில்லை. “வெற்றியைப் பல விஷயங்கள் தீர்மானிக்கின்றன என்றாலும் போரிடும் வீரர்கள் மனநிலை அதில் மிக முக்கியமானது என்று எப்போதுமே சக்கரவர்த்தி அலெக்ஸாண்டர் சொல்வார். அதனால் தான் வீரர்களிடம் பேசுவது பற்றி நினைவுபடுத்தினேன்” என்று சொல்லி அவன் விடைபெற்றான்.

 

ந்திரகுப்தனுடனான முதல் சந்திப்பு மலயகேதுவுக்கு மறக்க முடியாததாய் இருந்தது. உற்சாகம், வீரம், புத்திசாலித்தனம், நற்பண்புகளின் மொத்த உருவமாக சந்திரகுப்தன் அவனுக்குத் தெரிந்தான். முதல் சந்திப்பிலேயே இருவரும் நண்பர்களாகி விட்டார்கள். அதைக் கண்ட இந்திரதத் மகிழ்ந்தார். முடிசூடியவுடன் போருக்குக் கிளம்பியிருக்கும் மலயகேது மீது அவருக்கு ஒரு தந்தையின் பாசம் இருந்தது. முன்னொரு போரில் சகோதரர்களை இழந்து, யூடெமஸின் சதியால் தந்தையையும் இழந்து ராஜ்ஜிய பாரத்தைச் சுமந்த கையோடு போருக்கும் கிளம்பியிருக்கும் மலயகேது சந்திரகுப்தனிடம் ஒரு சகோதரனைப் பார்ப்பது போல் உணர்ந்தான்.

 

இந்திரதத் அவருடைய நண்பரான சாணக்கியர் பற்றியும், சாணக்கியரின் புகழ் பெற்ற மாணவனான சந்திரகுப்தன் பற்றியும் பெருமையாக நிறைய ஏற்கெனவே சொல்லியிருந்தார்.  சிலவற்றை எல்லாம் கேட்கும் போது மலயகேதுவுக்கு இந்திரதத் மிகைப்படுத்திச் சொல்வது போல் தோன்றியும் இருக்கிறது. ஆனால் சந்திரகுப்தனைப் பார்த்த பிறகு எதுவும் மிகையல்ல என்று அவனுக்குப் புரிந்தது. மாணவனைப் பற்றிக் கேள்விப்பட்டது எதுவும் மிகையல்ல என்றால் ஆசிரியரின் பெருமைகளிலும் மிகைப்படுத்துதல் இருக்காது என்று மலயகேது முடிவுக்கு வந்தான்.

 

இரண்டு படைகளும் சந்தித்துக் கொண்ட இடத்திலிருந்து சேர்ந்து பயணித்தார்கள். வழி நெடுக சந்திரகுப்தனைப் பார்த்து மலயகேது நிறைய கற்றுக் கொண்டான். சந்திரகுப்தன் தன் வீரர்களுடன் ஒரு நண்பனைப் போல் பழகியதை அவன் பார்த்தான். அவன் தந்தை வீரர்களை மிகவும் மதிப்போடும், கௌரவத்தோடும் நடத்தினாலும் கூட இப்படி சகஜமாகப் பழகியதில்லை. ஆரம்பத்திலிருந்தே அரசகுமாரனாகவும், பின் அரசனாகவும் அவர் இருந்தது காரணமாக இருக்கலாம் என்று தோன்றியது.

 

அவன் சந்திரகுப்தனைப் பார்த்து பிரமித்த ஒரு விஷயம் இருந்தது. ஒரு வேலையில் முழுமையாக ஈடுபட்டு அதைச் செய்து கொண்டிருந்தாலும் கூடச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்ற பிரக்ஞை சந்திரகுப்தனுக்கு இருந்தது அவனை ஆச்சரியப்படுத்தியது. அந்த வேலையைச் செய்து கொண்டே சந்திரகுப்தன் அனாயாசமாக மற்ற வேலைகள் குறித்து மற்றவர்களுக்கு நினைவுபடுத்தவும், அவர்களை வழிநடத்தவும் செய்தான். ஒருவன் ஒரே சமயத்தில் இத்தனை விஷயங்களில் கவனம் வைக்க முடியுமா என்று மலயகேது சந்திரகுப்தனிடம் வெளிப்படையாகவே வியந்த போது சந்திரகுப்தன் சிரித்துக் கொண்டே சொன்னான். “நீ என் ஆச்சாரியரைச் சந்திக்கவில்லை. அதனால் தான் என்னைப் பார்த்து ஆச்சரியப்படுகிறாய்.”

 

மலயகேது வியப்புடன் பார்க்க சந்திரகுப்தன் சொன்னான். “சில சமயங்களில் அவருக்குப் பல கண்கள், பல காதுகள், திவ்ய சக்திகள் இருப்பதாக எனக்குத் தோன்றும். அவரைச் சுற்றி நடப்பது மட்டுமல்லாமல் அப்படியே தொடர்ந்து நடந்தால் எது எப்படி முடியும் என்றெல்லாம் கூட ஆருடம் சொல்வார். மாற்ற வேண்டியதை உடனே மாற்றி விடுவார். உன் அமைச்சரைக் கேள். அவர் நண்பரைப் பற்றி இன்னும் நிறைய சொல்வார்”

 

மலயகேது இந்திரதத்தைப் பார்க்க இந்திரதத் பெருமையுடன் சொன்னார். “எல்லாவற்றைப் பற்றியும் எந்த நேரத்திலும் சிந்தித்து முடிவுகளை எட்டக் கூடியவன் என் நண்பன். நாமெல்லாம் அடுத்த கட்டத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கையில் அவன் அதற்கும் ஐந்து கட்டங்கள் தாண்டி யோசித்து ஒரு தெளிவுக்கு வந்திருப்பான். இறைவன் அறிவுப் பொக்கிஷம் முழுவதையும் அவன் ஒருவனிடமே கொடுத்து வைத்திருக்கிறார் என்று எனக்குச் சில சமயங்களில் தோன்றும்...”

 

மலயகேது ஆச்சாரியரை இது வரை பார்த்திராதது தன் துர்ப்பாக்கியம் என்று நினைத்தான். அப்படிப்பட்ட ஒரு மனிதரிடம் இளம் வயதிலேயே கற்க முடிந்தது சந்திரகுப்தனின் பேரதிர்ஷ்டமாக அவனுக்குத் தோன்றியது.

 

யூடெமஸ் தன் படைகளுடன் எங்கு காத்திருக்கிறான் என்ற தகவல் அவர்களுக்குக் கிடைத்தது. அவனிடமிருக்கும் படைகள் குறித்த விவரங்களும் ஒற்றர்கள் மூலம் அவர்களுக்குக் கிடைத்தன. அதற்கேற்றபடி என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று சந்திரகுப்தன் புத்திசாலித்தனமான யுக்திகளை எல்லாம் சொல்ல கூர்ந்து கேட்டு மனதில் பதித்துக் கொண்ட மலயகேது சந்திரகுப்தனிடம் சொன்னான். “நண்பனே நான் ஆசைப்படுவது ஒன்றே ஒன்றுக்குத் தான். யூடெமஸ் என் கையால் மரணமடைய வேண்டும். நான் அதைச் செய்யாமல் என் தந்தையின் ஆத்மா சாந்தியடையாது என்று மனப்பூர்வமாக நம்புகிறேன். அதற்கான வாய்ப்பை மட்டும் எனக்கு ஏற்படுத்திக் கொடு. அது முடிந்து நான் மரணமடைந்தாலும் எனக்கு வருத்தம் இருக்காது...”

 

(தொடரும்)

என்.கணேசன்  

1 comment:

  1. சந்திரகுப்தன் போரிடுவதை காண ஆவலாக உள்ளேன்....

    ReplyDelete