சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, May 9, 2024

சாணக்கியன் 108

 

லயகேது தன் ஒவ்வொரு படைப்பிரிவையும் தனியாகக் கூட்டிப் பேசினான். புருஷோத்தமன் மரணம் அடைந்த விதம் குறித்த தகவல் அவர்களுக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. உண்மையும், பொய்யும், இரண்டும் கலந்த யூகங்களும் கேள்விப்பட்டு குழப்பமடைந்திருக்கும் அவர்களுக்கு உண்மையை உணர்ச்சி பூர்வமாகத் தெரிவிப்பது அவசியம் என்று சாணக்கியர் இந்திரதத்திடம் சொல்லி அனுப்பி இருந்தார். அவன் உணர்ந்த கோபமும், சோகமும் ஒவ்வொரு வீரனும் உணர்ந்தால் மட்டுமே அவர்களது பரிபூரண ஒத்துழைப்பு கிடைக்கும் என்று அவர் கணித்துச் சொல்லியிருந்தார்.  

 

அனைவரிடமும் புருஷோத்தமன் எப்படி வஞ்சித்துக் கொல்லப்பட்டார் என்று அவன் உணர்ச்சிகரமாக விவரித்த போது அவர்களில் பெரும்பாலானோர் அவன் சோகத்தையும், நிகழ்ந்திருக்கும் அநியாயத்தையும் உணர்ந்து மனம் கொதித்து மனதார அவன் பக்கம் சாய்ந்தார்கள். அந்த அளவு கொதிக்காத மற்றவர்களுக்கும் கூட புருஷோத்தமன் போன்ற மாவீரனை யூடெமஸ் விஷமிட்டுக் கொன்றது அநீதியாகவே தோன்றியது.

 

கேகய வீரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மன்னன் மரணத்திற்குப் பழிவாங்கத் துடித்தார்கள். யவன வீரர்கள் உட்பட மற்ற வீரர்களிடம் மலயகேது, தன் தந்தை அலெக்ஸாண்டரிடம் தோற்ற போது கூட அவரை அலெக்ஸாண்டர் மிக மரியாதையாகக் கௌரவத்துடன் நடத்தியதை நினைவுகூர்ந்தான். நண்பன் என்று சொல்லி நட்பு பாராட்டியதைச் சொன்னான். அப்படிப்பட்ட அலெக்ஸாண்டரின் சத்ரப்பான யூடெமஸ் புருஷோத்தமனை வஞ்சித்துக் கொன்றதன் மூலம் அவனை நியமித்த அலெக்ஸாண்டருக்குக் களங்கம் ஏற்படுத்தி விட்டான் என்று மலயகேது குமுறினான்.


சாணக்கியர் இந்திரதத்திடம் சொல்லியிருந்தார். “யவன வீரர்கள் மனதிலும், மற்ற படை வீரர்கள் மனதிலும் யூடெமஸை சத்ரப் என்ற தலைவன் நிலையிலிருந்து அகற்றி அவனைத் தனிமைப்படுத்த வேண்டும். அவர்கள் தங்கள் தலைவனுக்கு எதிராகப் போரிடுவதாக எண்ணாமல் ஒரு குற்றவாளிக்கு எதிராகப் போரிடுவதாக நினைக்க வேண்டும்.”

 

அவர் சொன்னபடியே மலயகேது படைவீரர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த முடிந்ததை அருகிலிருந்து பார்த்த இந்திரதத் மனம் குளிர்ந்தது.

 

ந்திரதத் யூடெமஸ் சூழ்ச்சி செய்து விஷமிட்டு புருஷோத்தமனைக் கொன்றதைப் பற்றி  அனுப்பிய புகார் கிடைத்தவுடனேயே ஆம்பி குமாரன் க்ளைக்டஸை வரவழைத்து விசாரித்தான். க்ளைக்டஸுக்கு யூடெமஸின் செயல்கள் எதுவும் சரியாகத் தோன்றா விட்டாலும் கூட யவனனான அவனைக் காட்டிக் கொடுக்க மனம் வரவில்லை.  அதனால் தான் எதையும் பார்க்கவில்லை என்று சொல்லி விட்டான். முந்தைய நாள் இரவு தங்களுடன் பேசிக் கொண்டிருக்கும் வரை புருஷோத்தமன் நன்றாகத் தான் இருந்ததாகச் சொன்னான்.

 

ஆம்பி குமாரன் க்ளைக்டஸைக் கூர்மையாகப் பார்த்தபடி தொடர்ந்து கேட்டான். “நீ பார்க்காத போது யூடெமஸ் மதுவில் விஷம் கலந்திருக்க வாய்ப்பிருக்கிறதா?”

 

க்ளைக்டஸ் சொன்னான். “அதை நானெப்படி சொல்ல முடியும்?”

 

“அவர்களிடம் கேட்காமலேயே யூடெமஸ் யானைகளை ஓட்டிக் கொண்டு போய் விட்டதாகப் புகார் சொல்கிறார்கள். அதுபற்றி உன் கருத்து என்ன க்ளைக்டஸ்?”

 

தன்னை இக்கட்டான நிலையில் மாட்டி விட்டிருக்கும் யூடெமஸை க்ளைக்டஸ் மனதில் சபித்தான்.அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது சத்ரப்”

 

“நீ உடன் இருக்கும் போது யூதிடெமஸ் புருஷோத்தமனிடம் யானைகளை அழைத்துச் செல்ல அனுமதி கேட்டானா?”

 

“இல்லை…. பின் எல்லா நேரங்களிலும் நான் அவர்களுடனே இருக்கவுமில்லை. என் கவனம் வேறு இடங்களிலும் இருந்தது.”

 

“நீ மொழிபெயர்க்காமல் யூடெமஸ் பேசியது எதுவும் புருஷோத்தமனுக்குப் புரிந்திருக்காதே. அதனால் அனுமதி கேட்பதானால் யூடெமஸ் உன் மூலமாக அல்லவா கேட்டிருக்க வேண்டும்.?”

 

“என் மூலமாகக் கேட்கவில்லை. ஆனால் சத்ரப்பான அவர் தன் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதியிலிருந்து யானைகளை அழைத்துச் செல்வதற்கு கேகய அரசனின் அனுமதி தேவையுமில்லையே”

 

“ஆனால் முறை என்று ஒன்று இருக்கிறதல்லவா?”

 

க்ளைக்டஸ் மௌனம் சாதித்தான்.  ஆம்பி குமாரன் யோசித்து விட்டு இது குறித்து அவன் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று முடிவெடுத்தான். அவர்களுக்கும் மேலே யாராவது இருந்தால் அந்த நபர் தீர்மானிக்க வேண்டிய விஷயம் இது என்று அவனுக்குத் தோன்றியது. சமநிலையில் இருப்பவர்கள் மீது அவன் எப்படி தீர்ப்பு சொல்ல முடியும்?

 

அவன் மேற்கொண்டு கேள்விகள் எதுவும் கேட்காமல் சும்மா இருந்தது க்ளைக்டஸுக்கு நிம்மதி தந்தது. ஆனால் கேகயத்தில் நடக்க ஆரம்பித்த அடுத்த கட்ட நிகழ்வுகள் அவன் மனநிம்மதியை மறுபடியும் குலைத்தன. ஒவ்வொரு தகவலாகத் தெரிய வந்த போது அவன் மனம் குமுற ஆரம்பித்தது. மலயகேது சந்திரகுப்தனுடன் கைகோர்த்துக் கொண்டு யூடெமஸை எதிர்க்கத் துணிந்ததை அவனால் சகிக்க முடியவில்லை. என்ன இருந்தாலும் பிலிப்பைக் கொன்ற பாதகர்களோடு யவன அதிகாரத்துக்கு உட்பட்ட கேகய அரசன் சேர்வது தவறென்று அவன் நினைத்தான். அதை அனுமதிப்பது யவன அதிகாரத்தை அப்பகுதியில் மிக பலவீனப்படுத்தி விடும் என்று அவன் உள்ளுணர்வு எச்சரித்தது.

 

அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன் இப்போதைய சத்ரப்பான ஆம்பி குமாரனும் தன்னைப் போலவே குமுறுவான், பதறுவான் என்றெல்லாம் எதிர்பார்த்த க்ளைக்டஸ் ஏமாந்து போனான். ஆம்பி குமாரன் எங்கோ ஒரு மரத்தில் ஏதோ ஒரு கிளை முறிந்தது என்று கேள்விப்பட்டது போல எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருந்தான்.  

 

க்ளைக்டஸ் ஆம்பி குமாரனிடம் மனத்தாங்கலுடன் சொன்னான். “சத்ரப் யூடெமஸ் தவறே செய்திருந்தாலும் நம் அதிகாரத்தின் கீழ் இருக்கும் கேகயம் நம் எதிரியான சந்திரகுப்தனுடன் சேர்ந்து யூதிடெமஸுக்கு எதிராகப் போருக்குத் தயாராவது பெருந்தவறல்லவா?”

 

“யாரும் ஒருவருக்கு எதிராகத் தவறு செய்து விட்டு பதிலுக்கு அவர்கள் பெருந்தவறு செய்யக்கூடாது என்று எதிர்பார்க்க முடியாது. தவறு செய்பவன் தண்டனைக்கான அனுமதியும் தந்து விடுகிறான். புருஷோத்தமன் போரில் தோற்ற பின்பும் கூட அலெக்ஸாண்டர் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டிருக்கும் போது அவர் நியமித்த சத்ரப் அதே புருஷோத்தமனை வஞ்சகமாக விஷம் வைத்துக் கொன்றும் விட்டு, பாதிக்கப்பட்டவர்கள் சும்மா இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அபத்தம்.”

 

வர வர ஆம்பி குமாரன் சாமர்த்தியமாகப் பேசுகிறான் என்று க்ளைக்டஸுக்குத் தோன்றியது. அவன் சொல்வதில் உண்மை இருக்கிறது என்று தோன்றினாலும் கூட யவனர்களுக்கு எதிரான சக்திகள் வலுப்பெறுவதை அவனால் தாங்க முடியவில்லை.  அதனால் சொன்னான். “ஆனால் சத்ரப் யூடெமஸ் தான் புருஷோத்தமனைக் கொல்லவில்லை என்று சொல்கிறாரே?”

 

“பின் யார் கொன்றிருக்க முடியும்? வெளியிலிருந்து அங்கே போனவர்கள் இரண்டே பேர். ஒன்று சத்ரப் யூடெமஸ். இன்னொன்று நீ. யூடெமஸ் கொல்லவில்லை என்றால் நீ கொன்றாய் என்றாகி விடும். இந்தச் செயலை நீ செய்து விடவில்லையே?”

 

க்ளைக்டஸ் பதறிப் போய் மறுத்தான். யூடெமஸின் பைத்தியக்காரத்தனம் எப்படிப்பட்ட நிலைமையில் தன்னையும் இழுத்திருக்கிறது என்று எண்ணி அவன் மனம் வெதும்பிய போது யூடெமஸிடமிருந்து தூதன் அங்கு வந்து சேர்ந்தான். யூடெமஸின் செய்தியை மொழிபெயர்த்துச் சொல்லும் துர்ப்பாக்கியமும் க்ளைக்டஸுக்கு வந்து சேர்ந்தது.

 

ஆம்பி குமாரன் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு விட்டு உடனடியாகப் பதிலைத் தூதனிடம் சொன்னான்.

 

“தூதனே! சத்ரப் யூடெமஸுக்கு என் வணக்கங்களைத் தெரிவி. கேகய விவகாரத்தில் என்னைக் கலந்தாலோசித்து சத்ரப் யூடெமஸ் எதையும் செய்யவில்லை. என்னைக் கேட்டுக் கொண்டு அங்கே செல்லவில்லை. என்னைக் கேட்டுக் கொண்டு அங்கே எதையும் செய்யவில்லை. சந்தேகத்திற்கு இடம் தரும் வகையில் அங்கே நடந்து கொண்டதோடு, கேகய மன்னர் இறந்து கிடக்கும் வேளையில் நன்றாக விடியும் வரை கூடப் பொறுத்திருக்காமல் யானைகளைக் கிளப்பிக் கொண்டு சென்றதும் அவர் பதவிக்கு சோபை தருவதாய் நான் நினைக்கவில்லை. இப்படி என்னை எதிலும் கலந்தாலோசிக்காமல், சக்கரவர்த்தி அலெக்ஸாண்டர் தந்த பதவியின் கண்ணியத்திற்கு ஏற்ற வகையில் நடந்தும் கொள்ளாமல் அவராக உருவாக்கிய சிக்கலில் நான் எந்த விதத்திலும் கலந்து கொள்ள விரும்பவில்லை என்று அவருக்குத் தெரிவிப்பாயாக. தனிப்பட்ட வகையில் தேவையில்லாமல் அவர் ஏற்படுத்திக் கொண்ட பிரச்னையை அவர் தனியாகச் சந்திப்பதே சரி…”

 

க்ளைக்டஸ் அதிர்ந்தான். என்ன சொன்னாலும் யூதிடெமஸ் கோரிக்கை விடுத்ததற்காக வேண்டா வெறுப்பாகவாவது படைகளை அனுப்ப வேண்டி இருக்கும் பொறுப்பை சத்ரப்பான ஆம்பி குமாரன் உணர்வான் என்று அவன் நம்பியிருந்தது வீணானது. ஆம்பி குமாரன் சொன்னதை மொழிபெயர்த்து தூதனிடம் சொன்ன போது அவனுக்கு வருத்தமாகத் தானிருந்தது.  

 

(தொடரும்)

என்.கணேசன்

5 comments:

  1. This week's episode is wonderful

    ReplyDelete
  2. finally Ambi kumaran is talking sense .

    ReplyDelete
  3. "புருஷோத்தமன் கொலை ஒரு பெரிய குற்றமல்ல., ஆனால், அவர்கள் அதற்கு எதிர்வினையாற்றுவது தவறு" ...க்ளைக்டஸ் என்ன தான் நல்லவனாக இருந்தாலும் அன்னியன்...அன்னியன் தான்....

    ReplyDelete
  4. ஆம்பிகுமாரனை ஆரம்பகாலத்தில் இருந்த பார்த்து வருபவர்களுக்கு....அவனின் தற்போதைய செயல்,சிந்தனை எல்லாம் ஆச்சரியப்படுத்தும் படி அற்புதமாக உள்ளது.....

    ReplyDelete
  5. “யாரும் ஒருவருக்கு எதிராகத் தவறு செய்து விட்டு பதிலுக்கு அவர்கள் பெருந்தவறு செய்யக்கூடாது என்று எதிர்பார்க்க முடியாது. தவறு செய்பவன் தண்டனைக்கான அனுமதியும் தந்து விடுகிறான்." அருமையான மற்றும் உண்மையான கருத்து.

    ReplyDelete