சிந்து அந்த அரங்கை அடைந்த போது மணி ஐந்தரை. அதிக ஆட்கள்
அங்கே இருக்கவில்லை. விழா அமைப்பாளர்களும், உதவி பெறும்
ஏழைக் குழந்தைகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் மட்டும் தான் வந்திருந்தார்கள். அரங்கில்
முதலிரண்டு வரிசை இருக்கைகளை முக்கியஸ்தர்களுக்கு ஒதுக்கி இருந்தார்கள். அதனால்
மூன்றாம் வரிசையில், மேடையில் பேசுபவர்களுக்குத் தெளிவாகத் தெரியும்படியான, ஒரு இடத்தில்
சிந்து அமர்ந்து கொண்டாள். பின் ஓரளவு கூட்டம் சேர்ந்தது.
அவள் தாய் மிருதுளா சரியாக மணி
5.55க்கு அரங்குக்கு வந்தாள். விழா பொறுப்பாளர்கள் அவளை வரவேற்று மேடைக்கு அழைத்து வந்தார்கள். சிந்துவுக்கு
இன்னும் இருபது வருடங்கள் கூடினால் எப்படி இருப்பாளோ அப்படித் தான் மிருதுளா இருந்தாள். கம்பீரமாகவும், அழகாகவும்
தெரிந்தாள். அவளை வரவேற்று ஒரு பேச்சாளர் பேசிக் கொண்டிருந்த போது தான்
அவள் பார்வையை அரங்கில் அமர்ந்திருப்பவர்கள் மீது பரவ விட்டாள். அவள் பார்வை
சிந்துவின் மீதும் படர்ந்து சிறிது நகர்ந்து மீண்டும் சிந்துவின் மீதே வந்து நிலைத்தது.
தன் பார்வையை நம்ப முடியாதது போல் அவள்
கண்களை இறுக்க மூடித் திறந்து திரும்பப் பார்த்தாள். ஆச்சரியமும், திகைப்பும்
கலந்தவொரு பார்வை பார்த்த அவளை அப்போது தான் பேச அழைத்தார்கள். அவர்கள்
அழைத்த பின்னும் அவள் பல உணர்ச்சிகள் ஒருசேரத் தாக்கப்பட்டவள் போல் சிலையாகச் சில விநாடிகள்
அமர்ந்திருந்தாள். பின் சுதாரித்துக் கொண்டவளாக மெல்ல எழுந்து பேசப் போனாள். ஆனால் பேச்சில்
எந்தத் தங்குதடையும் இருக்கவில்லை. ”இந்தத்
தேசத்தில் எதை எதையோ இலவசமாகத் தருகிறார்கள். ஆனால் இலவசமாகத்
தர வேண்டிய கல்வியை ஏழைக்கு எட்டாத உயரத்தில் வைத்திருக்கிறார்கள். அதைச் சரி
செய்ய ஆட்சியாளர்கள் எதையுமே செய்வதில்லை...” என்று ஆரம்பித்துப்
பேசியவள் முடிவு வரை தெளிவாகவே பேசினாள். பேச்சின் இடையே
சிந்துவையும் பார்த்தாள். சிந்து ஆரம்பத்தில் பாதித்த அளவுக்கு அவளைப் பின்னால் பாதிக்கவில்லை
போல் தோன்றியது.
தனக்குத் தைரியமும் துணிச்சலும் இவளிடமிருந்து
தான் வந்திருக்கிறது என்று சிந்து நினைத்துக் கொண்டாள். ஏனென்றால்
அவள் தந்தை அழுத்தமானவர் என்றாலும் அவரிடம் இந்தத் தலைமைக்குணம் இருக்கவில்லை.
மிருதுளா பேசி முடித்த பின் அந்தக்
கல்வித் தொகை வழங்கும் நிகழ்ச்சி சுமார் அரை மணி நேரம் நடந்தது. பின் தேசிய
கீதம் பாடி விழா முடிந்து எல்லோரும் போக ஆரம்பித்த போது மிருதுளா சிந்துவும் போகிறாளா
என்று பார்த்தாள். ஆனால் சிந்து அமர்ந்திருந்த இடத்தை விட்டு நகரவில்லை.
பின் மிருதுளா மேடையிலிருந்து இறங்க
அவளை வழியனுப்ப விழாப் பொறுப்பாளர்கள் பின்னாலேயே வந்தார்கள். சிந்துவும்
எழுந்து மிருதுளா வரும் வழியில் நின்றாள். மிருதுளாவை
இன்று அவள் விடப்போவதில்லை. மிருதுளா அருகில் வந்து ஆனந்தமான குரலில்
“சிந்து?” என்று கேட்டாள். சிந்து
முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு லேசாகத் தலையாட்டினாள்.
மகளைப் பாசத்துடன்
அணைத்துக் கொண்ட மிருதுளா தன் பின்னால் வந்த விழாப் பொறுப்பாளர்களைத் திரும்பிப் பார்த்தபடி சொன்னாள். ”இது என்
மகள் சிந்து”
சிந்து இதைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ஓடிப்போன
தாய் செய்யும் காரியமல்ல இது. மிருதுளா அவர்கள் முன்னால் அவளைத் தவிர்க்கத் தான் பார்ப்பாள்
என்று சிந்து எதிர்பார்த்திருந்தாள்.
அவர்களுக்கு மிருதுளாவின் குடும்பத்தைப்
பற்றிச் சரியாகத் தெரியவில்லை போல் இருக்கிறது. அதனால்
அந்தத் தகவலில் ஆச்சரியப்படாத விழாப் பொறுப்பாளர்களில் மூத்தவர் ஆதங்கத்துடன் சொன்னார். “அடடா தெரியவில்லையே. தெரிந்திருந்தால்
நான் இவரையும் மேடையில் அமர வைத்திருப்பேனே.... இவர் என்னவாக
இருக்கிறார்?”
மிருதுளா மகளைப் பார்த்தாள். சிந்து
சொன்னாள். “நான் சென்னையில் பத்திரிக்கை ஒன்றில் வேலை பார்க்கிறேன்...”
”சந்தோஷம்” என்று அவர்
கை கூப்ப சிந்துவும் கைகூப்பினாள். மிருதுளா “வா சிந்து
போகலாம்” என்று சொல்லி நடக்க ஆரம்பிக்க சிந்துவும் கூடவே நடக்க ஆரம்பித்தாள். அவள் இதையும்
சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. ’கூடவே வசித்து வருகிற
மகளை அழைத்துப் போவது போல அழைத்துப் போகிறாளே, என்னவொரு
நடிப்பு. என்னவொரு அழுத்தம்...’
மிருதுளா வெளியே
காரை நிறுத்திருந்தாள். விழாப் பொறுப்பாளர்களுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு அவள்
காரில் ஏறிக் கொள்ள சிந்துவும் ஏறி அவளருகே அமர்ந்து கொண்டாள். கார் கிளம்பியது.
“எப்படியிருக்கே
சிந்து?” மிருதுளாவின் குரல் கரகரத்தது.
“நல்லாயிருக்கேன்” சிந்து வறண்ட குரலில் சொன்னாள்.
“எப்போ வந்தே சிந்து?”
”காலைல”
“எங்கே தங்கியிருக்கே?”
சிந்து ஓட்டல் பெயரைச்
சொன்னாள்.
“அது எங்க வீட்டுக்குப்
பக்கம் தான். அப்பா எப்படியிருக்கார்?”
”யாருக்குத் தெரியும்.
நான் அவரைப் பாத்து பல வருஷமாச்சு. காலேஜ் முதல் வருஷம் படிக்கறப்ப அந்த வீட்டை விட்டு
வெளியே வந்தது. அதுக்கப்பறம் அந்த வீட்டுக்கும் திரும்பிப் போகல. அவரையும் பார்க்கல”
மிருதுளா திகைப்புடன்
மகளைப் பார்த்தாள். இந்த நேரம் வரை இல்லாத திகைப்பு இந்த விஷயத்திற்கு வருவது சிந்துவுக்கு
ஆச்சரியமாக இருந்தது.
”ஏன் சிந்து” என்று
மிருதுளா கேட்டாள்.
“ஓடிப்போனவளோட பொண்ணு
அந்த வீட்டுல யாருக்கும் வேண்டாம். காலேஜ் போற வரைக்கும் சோறு போட்டதே பெரிய விஷயம்...”
முதல் முறையாக மிருதுளாவின்
முகத்தில் பெரும் வலி தெரிந்தது. காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு மகளிடம் சொன்னாள்.
”புதிர் போட்டுப் பேசாமல் ஆரம்பத்திலிருந்து சொன்னால் தான் எனக்குப் புரியும் சிந்து...”
சிந்து முதல் முறையாக
தன் நினைவுக்குத் தெரிந்த நாட்களில் இருந்து பட்ட சித்திரவதையை அவளிடம் சொல்ல ஆரம்பத்தாள்.
இது நாள் வரை அவள் பட்ட வேதனைகள் அடுத்தவருக்குத் தெரிய வேண்டாம் என்று நினைத்தவள்
அவள். அவர்கள் இரக்கத்துடன் பார்ப்பதை அவள் விரும்பவில்லை. ஆனால் இன்று அவள் வேதனைக்கு
முழுக் காரணமாய் இருந்தவளிடம் தன் சித்திரவதையைச் சொல்கிறாள். மனம் என்று ஒன்றிருந்தால்,
மனசாட்சி என்று ஒன்றிருந்தால் இந்த சமூக சேவகி பதில் சொல்லட்டும், நியாயம் சொல்லட்டும்
என்று சிந்து நினைத்தாள்.
அவள் சொல்ல ஆரம்பித்த
பின் சில வாக்கியங்களின் முடிவிலேயே மிருதுளாவின் கண்களில் நீர் பெருக ஆரம்பித்தது.
அப்போது ஆரம்பித்த கண்ணீர் மகள் பட்டப்படிப்பு முதலாண்டில் இருந்து தானே சமாளித்ததைச்
சொன்ன போது கதறியழ ஆரம்பித்தாள். ஆனால் சிந்துவை அந்தக் கதறல் பாதிக்கவில்லை. யாரிடமும்
சொல்லத் தயங்கியதையும் தாயிடம் சொன்னாள். “வேலை பார்த்தேன். கிடைச்ச பணம் பத்தலை. திருட
ஆரம்பிச்சேன். எங்கேயும் பிடிபடாமல் திருடுவேன்... நீ என்னை விட்டுட்டு ஓடிப்போன பிறகு
எனக்கு செக்ஸ் மேல வெறுப்பு வந்திருந்தது. இல்லாட்டி எவன் கூடயாவது படுத்தும் கூடச் சம்பாதிச்சிருப்பேன்....
எப்படியோ சமாளிச்சேன். ஆனால் அந்த ஆள் கிட்ட நான் பணம் கேட்கலை... அதை விடப் பிச்சை
எடுத்தால் கூடத் தப்பில்லைன்னு பட்டுச்சு”
அதோடு அவள் நிறுத்திக்
கொண்டாள். அதற்குப் பின் விஸ்வத்தைச் சந்தித்ததில் இப்போது உதயின் காதலியாய் நடிப்பது
வரை அவள் எதையும் மிருதுளாவிடம் சொல்லவில்லை.
“சிந்து... சிந்து...
“ என்று அவளுடைய கைகளைப் பிடித்துக் கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டு அழும் மிருதுளாவின்
மீது இப்போதும் அவளுக்கு இரக்கம் வரவில்லை. யாரோ தெருவில் அழுது கொண்டிருக்கும் ஒரு
அன்னியரைப் பார்ப்பது போல் அவள் தாயை ஒரு நிமிடம் பார்த்தாள். சுமார் பத்து நிமிடம்
மிருதுளா அழ சிந்து ஜன்னல் வழியாகத் தெருவை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். அந்தத்
தெருவில் நடக்கும் மனிதர்களையும், செல்லும் வாகனங்களையும் சிந்து இலக்கில்லாமல் பார்த்துக்
கொண்டிருந்தாள்.
பத்து நிமிடங்களில்
அழுகையை நிறுத்திக் கொண்ட மிருதுளா மகளிடம் சொன்னாள். “நீ என்னை எவ்வளவு தூரம் வெறுக்கிறாய்னு
எனக்குப் புரியுது. அது தப்பில்லை. உன் நிலைமைல நானிருந்தாலும் வேற விதமாய் நினைச்சிருக்க
வழியில்லை... தப்பு என் பேர்ல தான். அந்த ஆள் உன்னையும் வெறுப்பார்னு நான் எதிர்பார்க்கலை...
அதனால தான் ஏமாந்துட்டேன்...”
சிந்து ஒன்றும்
சொல்லவில்லை. ஓடிப்போனவள் மீது இருக்கும் கோபம் மகள் மீதும் ஒரு தகப்பனுக்கு வருவது
நியாயமில்லை தான். ஆனால் அதை எதிர்பார்க்கவில்லை என்று சொல்லும் இந்தச் சமூக சேவகியை
அவள் நம்பத் தயாராயில்லை.
“உன் கதையைச்
சொல்லிட்டே. என் கதையையும் நீ கேட்கணும்.... நான் விவாகரத்து
பண்ண முடிவெடுத்த நாள்ள இருந்து உன் அப்பா கிட்ட கெஞ்சாத நாளில்லை. “என் குழந்தையை
நான் எடுத்துட்டுப் போறேன்”னு தினமும் அழுதழுது கேட்டேன். அந்தச் சண்டாளன் ”என் குழந்தை கடைசி வரைக்கும் என் கூட
தான் இருக்கும்”னு சொல்லிப் பிடிவாதமாய் மறுத்துட்டார் சிந்து....”
இதென்ன புதுக்கதை
என்று சிந்து திகைப்புடன் மிருதுளாவைப் பார்த்தாள்.
(தொடரும்)
என்.கணேசன்
We are also surprised. What is the truth?
ReplyDeleteதாய் மகள் சந்திப்பு பிரமாதம். நேரில் பார்ப்பது போல் ஃபீல் பண்ண வைத்து விட்டீர்கள்.
ReplyDeleteI started liking Sindhu very much and feel that she and Uday should get married. I am attached to the point that she is confessing with her mom on her emotionas and how did she grow up. I believe the father was bad and he did hide the information from Sidhu. I also expect that Sindhu will turn out loving Uday tryuly and will either die for them or live if Krish and Akhshay conquers Viswam before he does anything oto Sindhu.
ReplyDeleteஎங்களுக்கும் ஆச்சரியமாக தான் உள்ளது... நான் மிருதுளாவை தவறாக தான் நினைத்தேன்.... இப்போது இது புதுக் கதையாக இருக்கிறது...
ReplyDeleteமிருதுளா சொல்வதில் எனக்கு நம்பிக்கையில்லை. இவ்வளவு காலம் சிந்து எங்கிருக்கிறாள், எப்படியிருக்கிறாள் என்றறிய முயற்சி செய்யாதவள்; இப்போது சொல்வதை நம்புவது ஏற்புடையதாய் இல்லை.
ReplyDelete