சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, April 26, 2021

யாரோ ஒருவன்? 29


சில மனிதர்களிடம் சில தகவல்களைச் சொல்வது குளவிக் கூட்டில் கல் எறிவதைப் போன்றது. அடுத்த சில நிமிடங்களில் அந்த இடத்தில் இருக்கும் யாருமே நிம்மதியாக இருக்க முடியாது. வேலாயுதம் தர்ஷினி தீபக்கிடம் பக்கத்து வீட்டுத் தகவலைச் சொன்னதை அந்த வகையிலேயே எடுத்துக் கொண்டார்.  தர்ஷினி சொன்னதைக் கேட்டு தீபக் என்ன சொன்னான் என்று தெரியவில்லை. தர்ஷினிசரிஎன்று சொல்லி அலைபேசியைக் கீழே வைத்தவுடன் லேசான பயத்துடன் அவர் பேத்தியைக் கேட்டார். ”என்னம்மா சொன்னான்?”

அவன் நேர்லயே வர்றானாம்என்று தர்ஷினி சாதாரணமாகச் சொன்னாள்.

வேலாயுதம் பேத்தியைக் கடிந்து கொண்டார். “நீ ஓட்டை வாய்ம்மா. அவன் கிட்ட போய் இதையெல்லாம் சொல்லுவாங்களா? அவனுக்குச் சில சமயங்கள்ல இங்கிதமே போதாது. அவன் நேரா பக்கத்து வீட்டுக்குப் போய்உங்கள் வீட்டுல பாம்பு இருக்கான்னு கேட்டாலும் கேட்டுடுவான்...”

போங்க தாத்தா அவன் அப்படியெல்லாம் கேட்க மாட்டான்என்று அலட்டிக் கொள்ளாமல் சொன்ன தர்ஷினி அங்கிருந்து போய் விட்டாள்.

அவனும் அவளும் சிறு வயதிலிருந்தே மிக நெருங்கிய நண்பர்கள். அந்த நெருக்கம் இப்போது காதலாகவும் மாறியிருந்ததுசிறு வயதிலிருந்த சம அந்தஸ்து இப்போது இல்லை என்பதால் வேலாயுதத்துக்கு அந்தக் காதலில் உடன்பாடு இல்லை. சரத் கல்யாணின் நண்பன் என்றாலும் இப்போது கல்யாணுக்கு வேலைக்காரன் தான். வைஸ் பிரசிடெண்ட் என்று அந்த வேலைக்கு பெயரைக் கௌரவமாகச் சொன்னாலும், அவர்களே கொடுத்த அந்தப் பதவி அவனைச் சம அந்தஸ்துக்கு உயர்த்தி விடாது.  தீபக்கின் கல்வியையும் வேலாயுதம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது தெருவுக்குத் தெரு பல டாக்டர்கள் இருக்கிறார்கள். சரத்துக்கு ரேஸ் கோர்ஸிலேயே சொந்த வீடு இருக்கிறது என்றாலும் அந்த ஒரு சொத்து தான் அவனிடம் இருக்கிறது. அதுவும் வங்கியில் கடன் வாங்கிக் கட்டியது. இன்னும் அதில் கடன் கொஞ்சம் பாக்கி இருக்கிறதாகப் போன வாரம் கூட சரத் சொன்னது அவருக்கு நினைவிருக்கிறது.  இப்போது கல்யாணுக்கு அந்த வீடு மட்டுமல்லாமல் வேறொரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸும், கோத்தகிரியில் ஒரு எஸ்டேட்டும் சொந்தமாக இருக்கிறது.

இந்தக் காரணங்களால் தீபக்தர்ஷினி காதலை அவர் தன் மகனிடம் தீவிரமாக எதிர்த்து வந்தார்.  ஆனால் மகள் மீது அதீத பாசம் வைத்திருந்த கல்யாண் ஆதரவும் தெரிவிக்காமல், எதிர்ப்பும் தெரிவிக்காமல் மௌனம் காத்தான்அவர் ஏதாவது செய்து அந்தக் காதலைக் கத்தரித்து விடச் சொன்ன போதெல்லாம்அந்தச் சமயத்தில் பார்த்துக் கொள்ளலாம்என்று மட்டும் சொல்லி வந்தான்.  

அவர் மருமகள் மேகலாவிடம் இதைச் சொல்லியும் பயனும் இல்லை. அவளுக்கும் தீபக் மீது பிரியம் இருப்பதால் அவள் இந்தக் காதலுக்கு மறுப்பு சொல்லப் போவதில்லை. அவளுக்கு அந்தஸ்து ஒரு பிரச்சினையே அல்ல. பெருஞ்செல்வந்தரின் ஒரே மகளாகப் பிறந்த அவளுக்கு பணம் ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை.  

அந்தஸ்து கவுரவம் பார்க்கும் விஷயத்தில் அவள் மகள் தர்ஷினியும் அவளைப் போலவே இருந்தாள். அதனால் அவளிடம் அந்தஸ்தைக் காரணம் காட்டி காதலை நிறுத்த வழியில்லை. “ஏன் தாத்தா பணம் பணம்னு அலையறீங்க?” என்று அவள் அடிக்கடி அவரிடம் சலித்துக் கொள்பவள். பணக்காரியாகவே பிறந்து செல்வச்செழிப்பிலேயே வளர்ந்து வரும் அவளுக்கு  பணத்தின் அருமை தெரிய வாய்ப்பில்லை. ஏழ்மை என்ன என்று உணர்ந்து போராடி இருக்கும் அவருக்கு அதன் அருமை நன்றாகவே தெரியும்...  

இப்போது அவர் கவலை அவர்கள் காதலைத் தாண்டி பக்கத்து வீட்டு விஷயத்தில் தீபக் வந்து என்ன செய்வான் என்பதில் தங்கியது. தீபக் பல விதங்களில் அவருக்கு மாதவனை நினைவூட்டினான்.  எதிலும் ஒரு வேகம், அதீத ஆர்வம், உற்சாகமான ஈடுபாடு....

என்னப்பா தீவிர யோசனை?” என்று கல்யாண் அருகே வந்து கேட்ட போது பரபரப்புடன் அவர் நடந்ததைச் சொன்னார். “இத்தனைக்கும் உன் பொண்ணு கிட்ட பாம்பு சீறல் சத்தம் அடிக்கடி பக்கத்து வீட்டுல இருந்து கேட்குதுன்னு மட்டும் தான் சொல்லியிருந்தேன். மத்த எதையும் சொல்லலை. அதுக்கே அந்த ஓட்டை வாய் அவனைக் கூப்பிட்டுச் சொல்லிட்டாள்....”

முதலில் கல்யாணும் நெற்றியைச் சுருக்கினாலும் பின் அவன் புன்னகையுடன் சொன்னான். “சில சமயங்களில் நம்மள மாதிரி ஆள்களோட அணுகுமுறையை விட அவன் மாதிரி ஆள்களோட அதிரடி நடவடிக்கை பலன் தரும். பக்கத்து வீட்டுக்காரன் கவனத்தை நம்மால் இன்னும் நம் பக்கம் திருப்ப முடியலை. அவன் எப்படியாவது அங்கே உள்ளே நுழைஞ்சுட்டா, அப்பறமா நாமளும் அவன் பின்னாலயே போய் சேர்ந்துக்கலாம். விடுங்கள். நடக்கறது எல்லாம் நல்லதுக்குத் தான்...”

கல்யாண் சொல்வதும் சரியாகவே தோன்ற இருவரும் தீபக்கின் வரவுக்காகக் காத்திருந்தார்கள்.


க்யான் சந்த் நரேந்திரன் போன பிறகு கவலையில் மூழ்கினான். கடந்த காலத் தவறுகள்  இத்தனை காலம் கழித்து மறுபடியும் கேள்விகளை எழுப்பும் என்று அவன் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை.  வந்து போன ரா அதிகாரி லேசுப்பட்டவனாகத் தெரியவில்லை. அவன் பார்த்த பார்வையே அவனை உறுதியானவனாகக் காட்டியிருந்தது. எதற்கும் அவன் வந்து போனதைப் பழைய இன்ஸ்பெக்டர் மதன்லால் காதில் போட்டு வைப்பது நல்லதென்று தோன்றியது. மதன்லாலின் போன் நம்பர் அவனிடம் இருக்கவில்லை. தொடர்பு வைத்திருக்கும்படியான நல்ல மனிதன் அல்ல அவன். ஆனால் விதி மறுபடி தொடர்பைத் தொடரக் கட்டாயப்படுத்துகிறது. அவன் என்ன செய்ய முடியும்? இரண்டு போலீஸ் நண்பர்களைத் தொடர்பு கொண்டு மதன்லாலின் அலைபேசி எண்ணை வாங்கிய க்யான் சந்த் உடனே மதன்லாலை அழைத்தான்.

நமஸ்தே மதன்லால்ஜி. மணாலியிலிருந்து க்யான் சந்த் பேசறேன்....”

மதன்லாலுக்கு அவனை உடனடியாக நினைவுபடுத்திக் கொள்ள முடியவில்லை. “க்யான் சந்தா? எந்த க்யான் சந்த்?” என்று தன் கட்டைக் குரலில் கேட்டான்.

ஜீ. டாக்சி டிரைவர்  க்யான் சந்த்ஜீ.... என்னோட டாக்சில தான் வெடிகுண்டு வெடிச்சி....” என்று க்யான் சந்த் குறிப்பு காட்டி நிறுத்தினான்.

மதன்லால் உடனே நினைவு கூர்ந்தான். “ம்ம்ம்…. சொல்லு என்ன விஷயம்?”

ஜீ!  ரால இருந்து ஒரு அதிகாரி அந்தப் பழைய விபத்து விஷயமாய் என்னை விசாரிக்க இன்னைக்கு வந்திருந்தார்உங்களையும் விசாரிக்க வரலாம்…. அதைச் சொல்ல தான் போன் செஞ்சேன்…”

மதன்லால் சிறிது நேரம் ஒன்றும் சொல்லவில்லை. அவனுக்கும் அந்தத் தகவல் அதிர்ச்சியாகத் தான் இருந்திருக்க வேண்டும்…. பின் மெல்லக் கேட்டான். “அந்த ஆளுக்கு என்ன தெரிய வேண்டுமாம்? எதை முக்கியமாய் கேட்டான்?”

அஜீம் அகமது பத்திக் கேட்டார். அப்பறம் டாக்சியில் யாருக்காக வெடிகுண்டு வைக்கப்பட்டது எந்த நேரத்தில் வைக்கப்பட்டதுன்னு கேட்டார்.”

நீ என்ன சொன்னாய்?”

எனக்குத் தெரியாதுன்னு சொல்லிட்டேன்

சரி தான். வரட்டும் நானும் அதையே சொல்லிடறேன். நமக்குத் தெரியாததை நாம எப்படிச் சொல்ல முடியும்?



(தொடரும்)
என்.கணேசன்     

6 comments:

  1. Moving very interesting. I wonder what Deepak will do. Madanlal seems to be notorious.

    ReplyDelete
  2. தீபக் வந்தாவது இந்த சஸ்பென்ஸ்க்கு ஒரு முடிவு கட்டுவான்....

    ReplyDelete
  3. வணக்கம் சார். தற்போது புதிய நாவல் ஏதாவது எழுதிக் கொண்டிருக்கிறீர்களா?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம். தற்போது சாணக்கியன் என்ற சரித்திர நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

      Delete
    2. சாணக்கியன் நாவல் எப்போது புத்தகமாக கிடைக்கும்?

      Delete
    3. இந்த வருட இறுதிக்குள்.

      Delete