சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, April 15, 2021

இல்லுமினாட்டி 98



சாலமன் அந்த சர்ச் நோக்கிக் காரில் போய்க் கொண்டிருந்தார். வாங் வே எழுதியனுப்பிய கடிதத்தை அங்கு கொண்டு போய்ச் சேர்க்க வேறு யாரையும்  நம்பிக் கொடுத்தனுப்பும் நிலைமையில் அவர்கள் இல்லை. தகவல் ஏதாவது விதத்தில் சிறிது கசிந்தாலும் அவர்களுக்குப் பேராபத்து. இப்போது போவதிலும் கூட ஆபத்து இல்லாமல் இல்லை. வருபவன் எதிரி என்று நினைத்து விஸ்வம் இயங்கினால் அதுவும் கூட ஆபத்தில் முடியலாம். ஆனால் வேறு வழியில்லை. இதை எச்சரிக்கையுடனாவது எதிர்கொண்டு தானாக வேண்டும்.

சாலமன் அங்கே செல்லப் பகல் நேரத்தைத் தான் தேர்ந்தெடுத்திருந்தார். விஸ்வம் கண்ணிமைக்கும் நேரத்தில் தாவித் தாக்க வாய்ப்பு இருக்கிறது என்று தான் எர்னெஸ்டோவுக்கு பல அடுக்குப் பாதுகாப்பு போதாமல் அக்ஷயையும் இல்லுமினாட்டி வரவழைத்திருந்தது. அப்படி இருக்கையில் ஒற்றை ஆளாகப் போகிற அவர் நல்ல வெளிச்சத்தில் மிகவும் கவனமாகப் போக வேண்டியிருக்கிறது. காரின் பின் பக்கத்தில் ஒரு பெயர் அட்டையில்நண்பன்என்று கொட்டை எழுத்துக்களில் எழுதி வைத்திருந்தார்.

அங்கு சென்று சேர்ந்தவுடன் சற்று தொலைவிலேயே காரை நிறுத்தி அந்தப் பெயர் அட்டையை எடுத்துத் தூக்கிப் பிடித்துக் கொண்டு நிதானமாக நடக்க ஆரம்பித்தார்.  


சாலமனின் கார் வந்து நிற்கும் சத்தம் தொலைவில் கேட்டவுடனேயே தியானப் பயிற்சியில் இருந்த விஸ்வம் எச்சரிக்கை அடைந்தான். ஜிப்ஸி வெளியே போயிருந்தான். தனியாக இருந்த விஸ்வம் வேகமாக எழுந்து சென்று மறைந்து நின்று சர்ச்சின் உடைந்த ஜன்னல் வழியே பார்த்தான்.  நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு ஆள்நண்பன்என்ற பெயர் அட்டையைத் தூக்கிப்பிடித்தபடி மிக நிதானமாக நடந்து வந்து கொண்டிருந்தான்.  

நண்பன் என்ற அட்டையைப் பார்த்து வந்திருப்பவன் நண்பன் என்று நம்பும் அளவு விஸ்வம் ஏமாளியல்ல. வேறு யாராவது அந்த ஆளுடன் வந்து பக்கத்தில் எங்காவது ஒளிந்திருக்கிறார்களா என்று விஸ்வம் மின்னல் வேகத்தில் நகர்ந்து மற்ற ஜன்னல்களின் கண்ணாடி இடைவெளிகளில் பார்த்தான். அந்த ஆளுடன் வேறு யாரும் வரவில்லை.  அவன் உத்தேசம் என்னவென்று அனுமானிக்க முடியவில்லை.

முன்னொரு காலம் போல் நினைத்தவுடன் ஒருவன் மனதில் என்ன உள்ளது என்று அறிய முற்படும் அளவு அவனிடம் சக்தி சேமிப்பு இல்லை. ஒவ்வொரு விரயத்தையும் அவன் யோசித்துச் செய்ய வேண்டியிருக்கிறது. முன்பெல்லாம் மாஸ்டரைப் போன்ற சக்தி வாய்ந்தவர்களிடம் ஏதாவது முயலும் போது தான் அவன் சக்தி விரயம் அதிகமாகும். அதற்கு மட்டும் தான் அவன் தயங்குவான். ஆனால் இப்போது அப்படியில்லை. இப்போது நரம்புகள் தளர்ந்த இந்த உடலில் சிறிது செலவு செய்தாலும் அதை மீண்டும் சேர்க்கக் காலம் அதிகம் தேவைப்படுகிறது. அவன் எதிரிகளை வெல்ல அதிகபட்ச சக்திப் பிரயோகம் வேண்டியிருக்கும். அதனால் தான் தினசரி சேமிக்கும் சக்தியில் அதற்கு ஒரு கணக்குப்படிச் சேர்த்தது  போக மீதமிருக்கும் சக்தியை மட்டுமே மற்றவற்றிற்கு அவன் செலவு செய்கிறான்.

இப்போது அப்படிச் சேர்த்திருக்கும் மீதமுள்ள சக்தி க்ரிஷ் வீட்டிற்கு அவன் அனுப்பி வைத்திருக்கும் சிந்து மனதை ஊடுருவி அங்குள்ள நிலவரத்தை அறிய வேண்டிச் சேர்த்து வைத்திருப்பது. ஜிப்ஸியும் இல்லாமல் அவன் தனியாக இருக்கையில் இந்த ஆளின் உண்மையான உத்தேசம் அறிய வேண்டுமானால் அந்தச் சக்தியை அவன் செலவு செய்தேயாக வேண்டும்.. வேறு வழியில்லை.... சிந்துவை பத்து நாட்கள் கழித்துப் பார்த்துக் கொள்ளலாம்.

சாலமன் திடீரென்று தன் மீது ஒரு அதீத சக்தியின் ஆக்கிரமிப்பை உணர்ந்தார். அது அவரை அப்படியே கட்டிப்போட்டது போல் நிற்க வைத்தது. அவரால் அடுத்து ஒரு அடி எடுத்து வைக்க முடியவில்லை. எத்தனையோ முறை விஸ்வத்தின் சக்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறார். சில வர்ணனைகளைப் படித்திருக்கிறார். ஆனால் முதல் முறையாகத் தனிப்பட்ட முறையில் அதை உணரும் போது தான் அதன் வலிமை அவருக்குப் புரிந்தது. அவருடைய எண்ணங்களையும் நோக்கங்களையும் யாரோ பார்வையிடுவது போன்ற பிரமை அவருக்கு வந்தது. சுமார் மூன்று நிமிடங்கள் அந்த நிலை நீடித்தது.  பின் மெல்ல விலகியது. அந்த மூன்று நிமிடங்களும் அவர் அந்தச் சக்தியிலிருந்து விடுவித்துக் கொண்டு ஒரு அடியாவது எடுத்து வைக்க முயன்றார். இல்லுமினாட்டியின் உபதலைவரால் அது முடியவில்லை. விஸ்வத்தைப் பார்த்து இல்லுமினாட்டியே ஏன் பயப்படுகிறது என்பது இப்போது தான் தெள்ளத் தெளிவாக அவருக்குப் புரிந்தது.

அந்தச் சக்தியின் ஆக்கிரமிப்பு விலகியதும் மெல்ல முன்னேறி வந்தவர் சர்ச்சின் உடைந்த ஜன்னல் வழியாக அந்தக் கடிதத்தை வைத்து அது காற்றுக்குப் பறந்து விடாதபடி அதன் மீது ஒரு சின்னக் கல்லையும் வைத்து விட்டுத் திரும்பி நடக்க ஆரம்பித்தார். போகும் போது எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் கார் ஏறி ஒரு கிலோமீட்டராவது தாண்டும் வரை அவரையும் அறியாமல் அவரிடம் ஒரு படபடப்பு இருந்தது.


விஸ்வம் சாலமனின் கார் கிளம்பும் வரை அந்தக் கடிதத்தைத் தொடவில்லை. வந்திருப்பவர் யார், என்ன உத்தேசம் என்று அந்த ஆளை ஆக்கிரமித்திருந்த மூன்று நிமிட காலத்தில் தெளிவாகத் தெரிந்து கொண்டு விட்டபடியால் அதன் பின் அவன் அவசரப்படவில்லை. கார் கிளம்பும் சத்தம் கேட்ட பிறகு வாங் வேயின் கடிதத்தை எடுத்துப் படித்தான்.

சிறிது நேரத்தில் ஜிப்ஸி வந்தான். அவன் கையில் உணவுப் பொருட்கள் இருக்கும் பை இருந்தது. அதை ஒரு ஓரமாக வைத்து விட்டு அவன் விஸ்வம் கையில் இருந்த கடிதத்தைக் கேள்விக்குறியோடு பார்த்தான்.. விஸ்வம் அமைதியாக அந்தக் கடிதத்தை அவனிடம் நீட்டினான்.

அதைப்படித்துப் பார்த்து விட்டு ஜிப்ஸி கேட்டான். “யாரிடமிருந்து வந்திருக்கிறது என்பதை உன்னால் யூகிக்க முடிந்ததா?”

“முடிந்தது. என் சக்தியைச் சிறிது விரயம் செய்த பின்....” விஸ்வத்தின் குரலில் சிறிது வருத்தம் தெரிந்தது. ஜிப்ஸியால் அவன் மனதைப் புரிந்து கொள்ள முடிந்தது. வாழ்க்கையில் எல்லா சக்திகளையும் சிறிது கூட யோசிக்காமல் விரயம் செய்து தொலைத்தும், எதை எல்லாம் இழந்திருக்கிறார்கள் என்ற பிரக்ஞை சிறிதுமில்லாத மனிதர்கள் ஏராளமாக இருக்கும் இந்த உலகில் ஒவ்வொன்றின் முக்கியத்துவமும் புரிந்து சேமித்துக் காத்து வாழும் இவனைப் போன்ற ஒருசிலரும் இருக்கிறார்கள்...

விஸ்வம் சொன்னான். “ஆனால் அந்த சீனாக்காரனை முழுவதுமாகத் தெரிந்து கொள்ள நான் என் சக்தியை விரயம் செய்ய விரும்பவில்லை. உன்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்...”

ஜிப்ஸி வாங் வேயைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான்.



சிந்து டெல்லியில் தாய் மிருதுளா வீட்டுக்கு அருகிலேயே ஒரு ஓட்டலில் அறை எடுத்துத் தங்கினாள். அந்த ஓட்டலில் இருந்து பத்து நிமிடங்கள் நடந்தால் தாயின் வீட்டை அவள் அடைந்து விடலாம். தாயை அவள் வீட்டுக்கே போய்ச் சந்திக்க சிந்துவுக்கு விருப்பமிருக்கவில்லை. அவளுக்குத் தாயின் இரண்டாம் கணவனையோ, அவள் மகனையோ சந்திக்கப் பிடிக்கவில்லை. தாயிடம் போனில் பேசி ஏதாவது ஒரு பொது இடத்திற்கு அவளை வரவழைத்துப் பேசலாம் என்று எண்ணியிருந்தாள். அழைத்தால் அவள் வருவாளா, வந்தாலும் என்ன சொல்வாள் என்றெல்லாம் யோசித்துப் பார்த்தாள். ஏதேதோ கற்பனைகள் விரிந்தன. அவற்றிலும் ஒன்றுக்கொன்று சம்பந்தமிருக்கவில்லை. வேண்டாவெறுப்பாகப் பேசுவதிலிருந்து கண்ணீருடன் பேசுவது வரைக்கும் பல மாதிரிகள் மனதில் வந்து போயின.

நல்ல வேளையாக அவள் போனில் பேசும் முன் அன்றைய ஆங்கில தினசரிப் பத்திரிக்கையில் அவளது தாய் தலைமையேற்று நடத்தும் ஒரு சமூகப் பொதுநல நிகழ்ச்சி பற்றிய விளம்பரம் வந்திருந்ததை சிந்து பார்த்தாள். 25 ஏழைக்குழந்தைகளின் கல்விக்காக நிதி திரட்டி அவர்களுக்கு அளிக்கும் ஒரு பொது நிகழ்ச்சி அன்று மாலை ஆறு மணிக்கு ஒரு அரங்கில் நடைபெறுகிறது. கூகுளில் அந்த அரங்கு எங்கே இருக்கிறது என்று சிந்து பார்த்தாள். ஓட்டல் இருக்கும் இடத்திலிருந்து 16 கிலோமீட்டர்கள் என்று கூகுள் தெரிவித்தது.

அன்று மாலை அந்தப் பொது நிகழ்ச்சிக்கு முன்னதாகவே சிந்து கிளம்பினாள்.   

(தொடரும்)
  
என்.கணேசன்

3 comments:

  1. Very interesting in both situations. I admire Viswam's will power and I am curious how Sindhu will handle her mother.

    ReplyDelete
  2. Sir, this is very shortened episode, I am disappointed. I did expect a seen of Sindhu with her mother. Also, could not see Akshay for long time and missing him.

    ReplyDelete
  3. நல்ல வேளையாக சாலமன் வந்து விஸ்வத்தை சக்தி விரயம் செய்ய வைத்ததால்...! சிந்து உயிர் பிழைத்தாள்....

    ReplyDelete