சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, April 5, 2021

யாரோ ஒருவன்? 26



ன்னும் என்ன முக்கியமான உண்மை இருக்கு?” என்று சஞ்சய் ஷர்மா தந்திரமாகக் கேட்டான். சொல்லாமல் விட்டவை நிறைய இருக்கின்றன என்பதால் அவனுக்கு  எந்த உண்மை என்று அறிந்து கொண்டால் அது மட்டும் சொல்ல மறந்து விட்டது என்று சொல்லிக் கொள்ளலாம். அல்லதுஅதைச் சொல்லத் தான் கூப்பிட்டேன். நீங்கள் தான் வரவில்லைஎன்று சொல்லி சமாளிக்கலாம்...

எதுவுமே சொல்லலைன்னு சார் சொன்னார். எல்லாத்தையும் ஒழுங்கா சொல்லிடு. இல்லாட்டி ஐஸ்கட்டிக் குளியலுக்குத் தயாராயிக்கோ. உன் உடம்பு இருக்கிற நிலைமைல ஐஸ்ல குளிச்சு அப்படியே தூங்கினா நீ ரெண்டு நாள்ல ஜன்னி வந்து சாகறது நிச்சயம். இல்லாட்டி நீ கோமாவுல போனாலும் போயிடலாம். அப்படிப் போனாலும் உன்னை ஆஸ்பத்திரிக்கு எல்லாம் யாரும் எடுத்துகிட்டுப் போக மாட்டோம். சொல்றதைச் சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம். சார் உனக்குப் பத்து நிமிஷம் டைம் குடுக்கச் சொல்லியிருக்கார்....” என்று தடியன் சொன்னான்.

சஞ்சய் அவனுடைய வார்த்தைகளிலேயே ஜன்னி வருவது போல உணர்ந்தான். அருகில் வைத்திருக்கும் பக்கெட்டிலிருந்து வரும் ஐஸ்கட்டிக் குளிரே அவனுக்குத் தாங்க முடியாததாய் இருந்தது. கண்டிப்பாய் அந்தத் தண்ணீரை அவன் மீது கொட்டினால் தாங்க மாட்டான். மெல்லச் சொன்னான். “சொல்லிடறேன்

தடியன் போய் லாப்டாப்பைக் கொண்டு வந்து திறந்து ஸ்கைப் தொடர்பில் நரேந்திரன் தெரிந்தவுடன் சஞ்சய் முன்னால் வைத்தான். “பேசு
நரேந்திரனை லாப்டாப் திரையில் பார்த்தவுடனே சஞ்சய்க்கு மறுபடியும் அவனுக்குத் தெரிந்திருப்பது என்ன என்று தெரிந்து கொள்ளத் தோன்றியது.  “நரேந்திரன் என்னை ஏன் இப்படிச் சித்திரவதை செய்யறாய்? நான் எதைச் சொல்லலைன்னு சொல்கிறாய்?” என்று பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு தந்திரமாகக் கேட்டான்.

நரேந்திரன் சொன்னான். “நீ செய்த சதி முழுவதையும் சொன்னால் போதும்

சஞ்சய் இந்தப் பொதுவான பதிலை எதிர்பார்க்கவில்லை. பரிதாபமாக அவனையே பார்த்தான். ஐந்து வினாடிகள் காத்திருந்து விட்டு நரேந்திரன் சொன்னான். “நீ சொல்லி எதுவும் எங்களுக்கு ஆகவேண்டியதில்லை. எல்லாத்தையும் நான் தெரிஞ்சுகிட்டேன். சரிதான்னு உறுதிப்படுத்திக்கறதுக்காகத் தான் உன்கிட்டே கேட்டேன். அதனால சொல்லப் பிடிக்காட்டி பரவாயில்லைஇனிமேல் நான் உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன். குட்பை

சென்ற முறை போல திடீரென்று அவன் போய்விடுவான் போலிருந்ததுசஞ்சய் பதறியபடி சொன்னான். “இல்லையில்லை. நான் சொல்லிடறேன். எதிலிருந்து ஆரம்பிக்கிறதுன்னு தான் யோசிச்சேன்…”

மணாலி போலீஸை விசாரிக்க ரா தலைவர் உன்னை அங்கே அனுப்பினாரில்லையா. அதுல இருந்து ஆரம்பியேன்….”

சஞ்சய் சிறிது யோசித்த போது நரேந்திரன் சொன்னான். “உன் வாய்ல இருந்து ஒரு பொய் வந்ததுன்னா எனக்குத் தெரிஞ்சுடும். அப்புறமா உன் கிட்ட என் நேரத்தை வீணடிக்க மாட்டேன். அதுல மட்டும் உனக்குச் சந்தேகமே வேண்டாம்....இதுவே நமக்குள்ள பேசிக்கற கடைசி பேச்சு வார்த்தையாய் போயிடும்...”

அவன் வார்த்தைகளிலும் முகத்திலும் இருந்த உறுதியைப் பார்த்தபின் இனி எதையும் மறைப்பது அவனுக்கு அவனே விதித்துக் கொள்ளும் மரண தண்டனையாகப் போய்விடும் என்பதை உணர்ந்த சஞ்சய் எல்லா உண்மையையும் சொல்லி விட இறுதியாகத் தீர்மானித்தான்.


ல்லாவற்றையும் கேட்டு முடித்த போது நரேந்திரன் ஆற்றாமையுடன் கூடிய ஆத்திரத்தை உணர்ந்தான்இந்த நாட்டில் எந்த விதமான பயமும், உறுத்தலும் இல்லாமல் எப்படிப்பட்ட அநியாயத்தை எல்லாம் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கூட்டணி சேர்ந்து அரங்கேற்றி விடுகிறார்கள். அப்படிச் செய்து தப்பித்தும் விடுவது தான் அடுத்த அராஜகத்துக்கு அவர்களை தயார் செய்து விடுகிறது...

சஞ்சய் அவன் சம்பந்தப்பட்டதில் முழு உண்மையையும் சொல்லி விட்டான் என்பது புரிந்தது. மீதியைத் தெரிந்து கொள்ள அவனுக்கு ஆர்வமில்லாததால் அப்படியே விட்டிருக்கிறான். அவர்களும் அவனை ஒரு பொருட்டாக மதித்து எதையும் சொல்லியிருக்கவில்லை. இதில் உண்மையான வில்லன் ஜனார்தன் த்ரிவேதி தான். அவர் மருமகன் என்பதற்காக இந்த வழக்கில் இந்த அளவு ஆர்வம் எடுத்துக் கொண்டு சஞ்சய் ஷர்மாவைக் காப்பாற்றவில்லை. தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தான் மனிதர் உண்மையாகக் கஷ்டப்பட்டு இருக்கிறார். அஜீம் அகமதை அவராவது பார்த்திருப்பாரா இல்லையா தெரியவில்லை. ஆனால் சஞ்சய் பார்த்ததில்லை.

அஜீம் அகமது சாதாரணமாய் யார் கண்ணுக்கும் சிக்குவதில்லை என்றும் அவன் வேலை என்று வரும் போது தான் வெளியே வருவான் என்றும் அவன் ஆட்கள் சொன்னதாய் சஞ்சய் சொன்னான். நரேந்திரன் இது வரை விசாரித்த ஆட்கள் யாருமே அஜீம் அகமதை நேரில் பார்த்திருக்கவில்லை. எல்லோரும் அவனைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்ததையே சொன்னார்கள்.

மகேந்திரனை அவர்கள் எப்படிக் கொன்றார்கள் யார் கொன்றார்கள் என்ற கேள்விகளுக்கு இன்னும் நரேந்திரனுக்குப் பதில் கிடைக்கவில்லை.  சஞ்சய்க்கும் உண்மையாகவே அந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரிந்திருக்கவில்லை. என்ன நடந்திருக்கிறது என்பதை அறிந்தவன் மணாலியின் பழைய சப் இன்ஸ்பெக்டர் மதன்லால் தான் என்று சஞ்சய் சொன்னான். இப்போது சிம்லாவில் இன்ஸ்பெக்டராக இருக்கும் மதன்லாலைப் பார்ப்பதற்கு முன் நரேந்திரன் மறுபடி மணாலி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனான். இப்போதைய இன்ஸ்பெக்டரிடம் அவன் தந்தை மணாலி வந்து சேர்ந்த ஒரு வாரத்தில் பதிவான வழக்குகளை எல்லாம் பார்க்க வேண்டும் என்று சொன்னான்.

இன்ஸ்பெக்டர் சலிப்பில்லாமல் அந்தப் பழைய ரெஜிஸ்டர்களை எல்லாம் எடுத்துக் காண்பித்தார். நரேந்திரன் கவனமாக எல்லாவற்றையும் பார்த்தான். அண்ணன் தம்பி வெட்டுக்குத்து வழக்கு ஒன்று இருந்தது, ஒரு சுற்றுலாப் பயணியின் சூட்கேஸைத் திருடிக் கொண்டு போன பழைய கைதியின் வழக்கும் பதிவாகி இருந்தது. ஒரு காரில் வெடிகுண்டு வெடித்து தென்னிந்திய இளைஞன் ஒருவன் இறந்ததும், டாக்சி டிரைவர் காயமடைந்ததும் கூடப் பதிவாகி இருந்தது

அஜீம் அகமது வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணன் என்பதால் நரேந்திரனுக்கு அந்த வழக்கை விரிவாகப் பார்க்கத் தோன்றியது. படித்துப் பார்த்தான். அதிலும் பல கேள்விகளுக்குப் பதில் இல்லை.  அதில் வெடிகுண்டு வைத்தவன் யார், ஏன் வைத்தான் என்றெல்லாம் தெரியவில்லை.  கண்டுபிடிக்க முடியாத வழக்காகவே அதையும் மதன்லால் மூடி விட்டிருந்தான். அந்தத் தென்னிந்திய இளைஞன் எந்த விதத்திலாவது அஜீம் அகமதைப் பகைத்துக் கொண்டிருப்பானோ? அதனால் தான் அவனும் அஜீம் அகமதால் கொல்லப்பட்டிருப்பானோ? மதன்லால் அதற்கும் ஒரு பெரிய தொகை வசூல் செய்து அதைக் கண்டுபிடிக்க முடியாத வழக்காய் மூடிவிட்டிருப்பானோ?

நரேந்திரன் மற்ற வழக்குகளையும் பார்த்தான். அவை எல்லாம் சில்லறை வழக்குகள் தான்.  மகேந்திரன் காணவில்லை என்ற வழக்கு கூட அங்கே பதிவாகி இருக்கவில்லை. அந்தப் புகாரை யாரும் தந்திருக்கவில்லை என்று கூட எடுத்துக் கொள்ளலாம். இவை எல்லாவற்றிற்கும் விடை மதன்லாலிடம் இருக்கலாம்அவனை விசாரிக்க வேண்டும்….

சிறிது யோசித்து விட்டு நரேந்திரன் அந்த வெடிகுண்டு வெடித்து தென்னிந்திய இளைஞன் இறந்த வழக்கை மறுபடியும் படித்தான். அந்த வெடிகுண்டு வெடித்த டாக்சியின் டிரைவர் காயங்களுடன் உயிர்பிழைத்திருக்கும் தகவலைப் பார்த்து விட்டு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கேட்டான். “இந்த டிரைவர் இப்போது உயிரோடு இருக்கிறானா என்று விசாரித்துச் சொல்ல முடியுமா?”

உடனே சிலரிடம் போனில் பேசிய இன்ஸ்பெக்டர், முடிவில் நரேந்திரனிடம் சொன்னார். அந்த டிரைவர் இன்னும் உயிரோடு தான் இதே ஊரில் இருக்கிறான். ஆனால் இப்போது டாக்சி ஓட்டுவதில்லையாம். ஏதோ ட்ராவல் ஏஜென்ஸி நடத்துகிறானாம்….”

நரேந்திரன் அந்த டிரைவரையும் பார்த்துப் பேசிவிட நினைத்தான்.

     

(தொடரும்)
என்.கணேசன்



2 comments:

  1. Superbly moving sir. Very interesting novel.

    ReplyDelete
  2. நரேந்திரன் சஞ்சயிடம் உண்மையை வாங்க விட்டான்...இனி சஞ்சய்யை என்ன செய்வான்?
    நரேந்திரனின் பார்வை தன்போது தொடரின் இன்னொருக பக்கமும் திரும்புகிறது....ஆர்வம் அதிகரிக்கிறது...

    ReplyDelete