சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, November 18, 2019

சத்ரபதி 99


செயிஷ்டகானின் கோபப்பார்வையைக் கவனித்த பின் தான் ராஜா ஜஸ்வந்த் சிங்குக்குத் தன்னுடைய புன்னகை தவறான சமயத்தில் வெளிப்பட்டு விட்டது என்பது உறைத்தது. அவன் முடிந்த வரை தன் முகத்தை கோபமும் வருத்தமும் கலந்த கலவையாக வைத்துக் கொண்டான்.

மத்தளக்காரர்களின் தலைவன் செயிஷ்டகானிடம் குழப்பத்துடன் சொன்னான். “உறங்கிக் கொண்டிருந்த எங்களை எழுப்பி உங்கள் புகழ் பாடி மத்தளம் அடிக்கத் தாங்கள் அனுப்பிய அதிகாரி கட்டளையிட்டார். ஏதோ வெற்றிச் செய்தி வந்திருக்கிறது போலிருக்கிறது என்று எண்ணி தான் மத்தளம் அடித்தோம்.”

செயிஷ்டகான் கேட்டான். “யாரந்த அதிகாரி?”

மத்தளக்காரர்களின் தலைவன் மேலும் குழம்பி தன் சகாக்களைப் பார்த்தான். அவர்களில் யாராவது அந்த அதிகாரியை நினைவு வைத்திருக்கக் கூடும் என்று எதிர்பார்த்தான். ஆனால் அவர்களும் அவனைக் குழப்பத்துடனேயே பார்த்தார்கள். நள்ளிரவு வேளையில் அரை இருட்டில் வந்து நின்றவன் முகத்தை அவர்களும் சரியாகப் பார்த்திருக்கவில்லை. அவன் குரல் மட்டும் கம்பீரமாகக் கர்ஜித்ததால் அவன் அதிகாரியாகத் தான் இருக்க வேண்டும் என்று அனுமானம் செய்தது தவறு என்று இப்போது அவர்களுக்கு விளங்கியது.

மேலும் சில கேள்விகள் கேட்டு என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொண்ட செயிஷ்டகானின் கோபம் மேலும் கூடியது. ஆனால் நடந்ததை அவர்கள் சொன்னதை வைத்து மனத்திரையில் பார்த்த ஜஸ்வந்த் சிங்குக்கு அது நகைச்சுவையாகத் தோன்றியதால் சற்று முன் ஏற்படுத்திக் கொண்ட சோகத்தையும் வருத்தத்தையும் முகத்தில் தக்க வைப்பது கஷ்டமாக இருந்தது. ஓரக்கண்ணால் அவனைக் கவனித்த செயிஷ்டகானுக்கு இவன் சிவாஜியுடன் கூட்டு சேர்ந்து இருக்கலாம் என்கிற சந்தேகம் தோன்ற ஆரம்பித்தது.

இந்தச் சமயத்தில் அங்கு வந்த படைத்தலைவன் கட்ராஜ்காட் மலைக்குத் தங்களைத் திசை திருப்பி விட்டு சிவாஜி சிங்கக் கோட்டைக்குத் தப்பித்துப் போன செய்தியைத் தலைகுனிந்து கொண்டு சொன்னான்.

ஒரு சாதாரண மலைக்குரங்கு முகலாய கவர்னர் தங்கியிருக்கும் இருப்பிடத்துக்கு ஒரு கூட்டத்துடன் வந்து கவர்னரின் பெருவிரலை வெட்டி, கவர்னரின் மகனையும் கொன்று தப்பித்தும் போய் விட்ட கதை ஔரங்கசீப்புக்குத் தெரிய வரும் போது என்ன ஆகும் என்று எண்ணிய செயிஷ்டகானுக்கு பயம் பற்றிக் கொண்டது. சிவாஜியின் மேல் கடுங்கோபமும் இருந்ததால் என்ன ஆனாலும் சரி, என்ன விலை கொடுத்தாலும் சரி, சிவாஜிக்குத் தகுந்த பதிலடி கொடுக்காவிட்டால் அதை விடப் பெரிய அவமானம் வேறு இல்லை என்று மனக்கொதிப்புடன் எண்ணிய செயிஷ்டகான் “படையைத் திரட்டுங்கள். சிங்கக் கோட்டையைக் கைப்பற்றி அந்த மலைக்குரங்கைப் பிடிக்காமல் இருந்தால் அது நம் படைக்கே கேவலம்…..”

அந்தப் படைத்தலைவன் ராஜா ஜஸ்வந்த் சிங்கைப் பார்த்தான். சிங்கக் கோட்டை, ராஜ்கட் கோட்டைகளில் பதுங்கியிருக்கும் சிவாஜியைப் பிடிப்பது சுலபமல்ல என்பது பலமுறை தெரிவித்த செய்தி. சிங்கக்கோட்டைக்கு சிவாஜி சென்றடையும் முன் வெல்வது கஷ்டமாக இருந்திருக்காது. ஆனால் அவன் பாதுகாப்பாகச் சென்று உள்ளே நுழைந்து விட்ட பிறகு அவனைப் பிடிப்பது முகலாயப் படைக்குக் கூட கஷ்டமே. அதை மறுபடி ராஜா ஜஸ்வந்த் சிங்கும் செயிஷ்டகானுக்கு விளக்கினால் தேவலை என்று அவன் நினைத்தான்.

ராஜா ஜஸ்வந்த் சிங் முன்பே செயிஷ்டகானின் கோபத்திற்கு ஆளாகி இருந்ததால் வாயைத் திறக்கவில்லை. செயிஷ்டகான் தன்னுடைய தலைமையிலேயே மாபெரும் படையைத் திரட்டிக் கொண்டு சிங்கக்கோட்டைக்குக் கிளம்பத் தீர்மானித்தான். சமவெளியைப் போல் சகாயாத்ரியில் அமைந்திருக்கும் அந்தக் கோட்டையை அடைந்து போரிடுவது கடினமானதாக இருக்கலாம். ஆனால் எதுவும் முகலாயப்படையால் முடியாததல்ல. இது வரை சிவாஜி சந்தித்ததெல்லாம் சிறு சிறு படைகள் தான். முகலாயப்படை அவனுக்கு மிகப் பெரிய பாடம் கற்பிக்கும் என்று ஆத்திரத்துடன் மனதில் கறுவிக் கொண்டான்.


சிங்கக் கோட்டையில் தங்கியிருக்கும் சிவாஜியிடம் ஒற்றன் வந்து சொன்னான். “மன்னா. செயிஷ்டகான் மிகப்பெரிய படையைத் திரட்டிக் கொண்டு இங்கு வரக்கிளம்பியிருக்கிறான்.”

சிவாஜி புன்னகைத்தான். “நல்லது”

’ஆத்திரத்தில் கொதிக்கும் மனிதன் அப்போதைய நிலைமைக்குப் பழிவாங்க அவசரப்படுவானேயொழிய சிந்தித்து செயல்பட மாட்டான். அதை அவன் ஆத்திரம் அனுமதிக்காது.’ என்று என்ணித் திருப்தி அடைந்த அவன் தன் ஆலோசகர்களையும், நண்பர்களையும், படைத்தலைவர்களையும் உடனே வரவழைத்தான். 


செயிஷ்டகானின் முகலாயப்படை சிங்கக் கோட்டை இருக்கும் மலையில் ஏற ஆரம்பித்தது. பொதுவாக எதிரிப்படைகள் இப்படி மலையில் இருக்கும் கோட்டையை நோக்கி ஏற ஆரம்பிக்கையில், வந்து கொண்டிருக்கும் படையைக் கோட்டையிலிருப்பவர்கள் ஏதாவது வகையில் தாக்குதல் நடத்துவது தான் வாடிக்கை. அதற்காக செயிஷ்டகானின் படையினர் கேடயங்களையும் வைத்துக் கொண்டு தான் மலையேறினார்கள். ஆனால் இந்த முறை சிங்கக்கோட்டையில் இருந்து எந்தத் தாக்குதலும் வரவில்லை.

செயிஷ்டகான் சிவாஜி அவர்கள் படையைப் பார்த்துப் பயந்து போய் ஒளிந்து கொண்டிருப்பான் என்று நினைத்துக் கொண்டான். அவன் யானை மேல் ஏறிப் பாதுகாப்பாகப் படையின் நடுவில் இருந்தான். கைவிரல் போன இடத்தில் மருந்து வைத்துக் கட்டுப் போட்டிருந்த போது விரல் வலி தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருந்தது. அந்த வலியும், மகன் மரணமும் சிவாஜியைத் தாக்கி நசுக்க வேண்டும் என்ற வெறியை செயிஷ்டகானின் மனதில் தூண்டிக் கொண்டே இருந்தன.

சிவாஜியும் இந்தக் கோட்டைக்குள் எத்தனை நாள் தான் தாக்குப் பிடிப்பான் என்று பார்ப்போம் என்று மனதினுள் செயிஷ்டகான் சொல்லிக் கொண்டான். சாகன் கோட்டையை விடாமுயற்சியுடன் கைப்பற்றியது போல இதையும் கைப்பற்றி சிவாஜியைப் பணிய வைத்து உடனடியாக மருமகனுக்குச் செய்தி அனுப்ப வேண்டும் என்று அவன் துடித்தான். இது வரை நடந்ததற்கு ஔரங்கசீப் கோபம் அடைந்தாலும் பின்னால் அனுப்பப் போகும் வெற்றிச் செய்தி அவன் கோபத்தைத் தணிக்கும் என்று செயிஷ்டகான் நம்பினான். ஆனால் மலைக் குரங்கு மலை எலியாகவும் மாறி எங்காவது தப்பித்து விடும் வாய்ப்பும் இருக்கிறது. அதை அனுமதிக்கக் கூடாது என்று மனதில் உறுதி பூண்டான்.

முகலாயப் படை மலையின் மேல் கஷ்டப்பட்டு ஏறியது. தனிமனிதர்கள் ஏறுவதே கஷ்டமானது தான். அப்படியிருக்கையில் ஆயுதங்கள், கேடயங்கள் எல்லாம் வைத்துக் கொண்டு நடந்து ஏறுவதும், குதிரைகள், யானைகளுடன் ஏறுவதும் சிரமமாகவே இருந்தது. ஆனால் மேலே இருந்து சிவாஜியின் படை தாக்கத் துணியாததால் அந்தச் சிரமமும் ஓரளவு சகிக்க முடிந்ததாகவே இருந்தது.  இதுவே முடியாத காரியம் என்பது போல் இந்தப் படைத்தலைவர்கள் பயமுறுத்தி இருந்தது அர்த்தமற்றது என்று செயிஷ்டகானுக்கு அனுபவத்தில் புரிந்தது. தூரத்தில் சிங்கக் கோட்டை பார்வைக்குக் கிடைத்தவுடன் அவனும் அவன் வீரர்களும் உற்சாகம் அடைந்தார்கள். போர் முரசு கொட்டிக் கொண்டே ஏந்திய வாளும், கேடயமுமாய் முகலாய்ப் படை சிங்கக் கோட்டையை நெருங்க ஆரம்பித்தது.

அவர்கள் நெருங்கும் வரை அமைதியாகக் காத்திருந்த சிவாஜியின் படை முன்பே கோட்டையில் பீரங்கிகளைச் சரியான மறைவான இடங்களில் வைத்துக் காத்துக் கொண்டிருந்தார்கள். முகலாயப்படை நெருங்க ஆரம்பித்தவுடன் பீரங்கிகள் குண்டு மழையைப் பொழிய ஆரம்பித்தது. அதை எதிர்பார்த்திராத முகலாயப் படை திக்குமுக்காடியது. பலரும் கொத்துக் கொத்தாய் மடிந்து விழ ஆரம்பித்தார்கள். செயிஷ்டகானின் யானை மேலும் குண்டு பாய்ந்து அதுவும் அலறிக் கொண்டே கீழே விழுந்தது.

யானையிலிருந்து கீழே குதித்த செயிஷ்டகான் கூச்சலும் குழப்பமுமாய் திண்டாடிய தன் படையைப் பரிதாபமாகப் பார்த்தான். யானை மேல் பட்ட குண்டு அவன் மேல் பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று நினைத்த அவன் இரண்டாம் முறையாக இறைவன் அவனைக் காப்பாற்றி இருப்பதாக நினைத்தான். ஒரு முறை விரலோடு போயிற்று. இரண்டாம் முறை யானையோடு போயிற்று. இனியும் அவன் அங்கேயே நின்றால் மூன்றாம் முறை காப்பாற்றப்படச் சாத்தியமே இல்லை என்று உள்ளுணர்வு சொல்ல, படையைப் படைத்தலைவர்களிடம் ஒப்படைத்து ஒரு சிறு குழுவுடன் வேகமாக மலையிலிருந்து இறங்கினான்.

ஆத்திரத்துடன் மலையேறி அவசரமாக மலையிறங்கும் செயிஷ்டகானை இகழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்து விட்டு படைத்தலைவர்கள் பல திசைகளில் அலறிக் கொண்டு ஓடும் படை வீரர்களை ஒழுங்குபடுத்தி தாங்கள் கொண்டு வந்திருந்த குண்டுகளை வீசிப் பதில் தாக்குதல் ஆரம்பிக்க வைத்தார்கள். ஆனால் அதற்குள் படையின் மூன்றில் ஒரு பாகம் வீழ்ந்திருந்தது. செயிஷ்டகானே தப்பித்துப் போன பிறகு அந்தப் படை வீரர்களிடம் உற்சாகத்தையும், தைரியத்தையும் திரும்பக் கொண்டு வருவது அவ்வளவு சுலபமாக இல்லை.


ஓரளவு ஒழுங்கைப் படையில் திரும்பக் கொண்டு வர அவர்கள் முயன்று கொண்டிருந்த நேரத்தில் சிங்கக் கோட்டையின் கதவுகள் திடீரென்று திறக்கப்பட்டு நேதாஜி பால்கரின் தலைமையில் சிவாஜியின் படை வேகமாகப் பாய்ந்து வந்து முகலாயப்படையைத் தாக்க ஆரம்பித்தது.

(தொடரும்)
என்.கணேசன்

8 comments:

  1. Super strategy. Sivaji is great. Ganeshan also (for writing this novel)

    ReplyDelete
  2. You are bringing sivaji in front of our eyes... Hats off!

    ReplyDelete
  3. சிவாஜிக்கு அன்னை பவானியின் துணையும்... காலமும் சாதகமாகவே இருப்பது...முற்றிலும் உண்மையே....

    இப்போது கூட அவனுக்கு சாதகமாகவே எல்லாம் நடக்கிறது...

    ReplyDelete
  4. எனக்கு சில கேள்விகள் உண்டு, ஆசிரியரின் பதில் தேவை.

    1. நேதாஜி பால்கர் மராட்டியரா அல்லது சௌராஷ்டிர இனத்தைச் சேர்ந்தவரா?
    2. அவரை மக்கள் பிரதி சிவாஜி என அழைத்தது உண்மையா?

    ReplyDelete
    Replies
    1. நேதாஜி பால்கர் மராட்டிய மண்ணிலேயே பிறந்து வளர்ந்தவர். அவர் தந்தை ஷாஹாஜியிடம் பணிபுரிந்தவர். ஆனால் அவர் சௌராஷ்டிர இனத்தைச் சேர்ந்தவரா என்று தெரியவில்லை. நேதாஜி பால்கர் மறைந்திருந்து திடீர்த் தாக்குதல்கள் செய்வதில் வல்லவராக இருந்ததால் அவரை பிரதி சிவாஜி என்று அழைத்ததாகச் சொல்கிறார்கள்.

      Delete
    2. மிக்க நன்றி அய்யா!!

      Delete
  5. சிவாஜி புன்னகைத்தான். “நல்லது” >>>>
    புரிந்துவிட்டது

    ReplyDelete