சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, November 7, 2019

இல்லுமினாட்டி 22


னோகருக்குச் சிறையிலிருந்து விடுதலை கிடைக்கா விட்டாலும்  தனிமையின் கொடுமையிலிருந்து விடுதலை கிடைத்தது. அந்த விடுதலை நல்லதா, கெட்டதா என்று ஆரம்பத்திலேயே அவனால் யூகிக்க முடியவில்லை. அவனுடைய சிறையறைக்கு வந்து சேர்ந்த கைதிக்கு சுமார் 25 வயதிருக்கும். கருப்பாகவும், திடகாத்திரமாகவும் இருந்தான். நிறைய பேசுபவனாக இருந்தான். உள்ளே வந்தவுடனேயே அவன் மனோகரைக் கேட்டான். “என்ன கொலையா, கொள்ளையா?”

எந்தக் குற்றம் செய்து இங்கே வந்திருக்கிறாய் என்று அவன் கேட்கிறான் என்பது சில வினாடிகள் கழித்து தான் மனோகருக்கு விளங்கியது. பெயரைக் கேட்பதற்கு முன் அப்படிக் கேட்டது மனோகருக்குப் பிடிக்கவில்லை. அதனால் பதில் சொல்லாமல் அவனை முறைத்துப் பார்த்தான்.

அது அந்தக் கைதியைப் பாதிக்கவில்லை. அவன் புன்னகையோடு சொன்னான். “சரி விடு. நீ என்ன சுதந்திரப்போராட்டத்துக்காகவா உள்ளே வந்திருப்பே. நீயும் என்னை மாதிரி ஒரு கேப்மாரி… எதாவது பண்ணி உள்ளே வந்திருப்பே. ஆனா பிடிபடறது உனக்கு இது தான் முதல் தடவையா?”

நீயும் என்னை மாதிரி ஒரு கேப்மாரி என்று அவனோடு தன்னை இணைத்துச் சொன்னது பிடிக்கா விட்டாலும் முதல் தடவை பிடிபடுவதை அவன் கண்டுபிடித்தது ஆச்சரியப்படுத்த மனோகர் கேட்டான். “உனக்கெப்படித் தெரியும்?”


அந்தக் கைதி சொன்னான். “முதல் தடவை மாட்டி உள்ளே வந்தவன் தான் அதை வெளியே சொல்ல கூச்சப்படுவான். என்னை மாதிரி பல தடவை உள்ளே வந்தவங்க எதைச் சொல்றதுக்கும் வெக்கப்பட்டுக்கறதுல்ல. நான் ராஜேஷ். எல்லாரும் ராஜ்ன்னு கூப்டுவாங்க. எந்த மாதிரியான பூட்டயும் லாக்கரயும் சாவியில்லாமலேயே திறந்துடுவேன். அதுல நான் கில்லாடி. நான் எத்தனை தடவ உள்ளே வந்திருக்கேன்னு கணக்கு வெச்சுக்கல. இந்த ஜெயில் எனக்கு இன்னொரு வீடு மாதிரி. வார்டன், காவலாளிங்க எல்லாம் ப்ரண்ட்ஸ் மாதிரி…”

அவன் நிறுத்தாமல் பேசிக்கொண்டே போனான். அந்தச் சிறை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டுச் சிறைகள் வேறு இரண்டிலும் கூட சில காலம் இருந்திருப்பதை எந்தக் கூச்சமுமின்றி ராஜேஷ் சொன்னான். சிறை அதிகாரிகளையும், காவலர்களையும் தனிப்பட்ட முறையில் நன்றா ‘கவனித்துக்’ கொள்வதால் இந்த மூன்று சிறைகளிலும் தனக்கு வேண்டிய சலுகைகள் கிடைப்பதைப் பெருமையாகச் சொன்னான்.

“ரெண்டு நாளுக்கு முன்னாடி தான் இந்த ஜெயிலுக்கு வந்தேன். மூனு கேடிகளோட என்னையும் அடச்சிருந்தாங்க. அவனுங்க நேரங்காலமில்லாம சண்டை போடுவானுக. ராத்திரி கூட சண்டை ஓயாது. ரெண்டு நாளா சரியாத் தூக்கமேயில்ல. குடுக்கறத குடுத்து, விஷயத்த சொல்லி வேற ரூமுக்கு அனுப்புங்கன்னு அதிகாரிகள கேட்டுகிட்டேன். உடனே இங்கே அனுப்பிட்டாங்க. எப்புடி என்னோட பவரு? ஆமா உன் பேரு என்ன?”


விஸ்வம் டேனியலின் புகைப்படத்தோடு வெளியிட்ட அறிவிப்புக்குக் காரணமாக ‘இல்லுமினாட்டி’ என்று ஜிப்ஸி சொன்ன ஒற்றை வார்த்தையைக் கேட்டு உடனடியாக எதையும் சொல்லாமல் ஜிப்ஸியைக் கூர்ந்து பார்த்தான். அந்தக் கூர்மைப்பார்வையில் ஜிப்ஸி சின்னதாய் தர்மசங்கடத்தை உணர்ந்தது போலிருந்தது. ஜிப்ஸி கேட்டான். ”ஏன் அப்படிப் பார்க்கிறாய்?”

விஸ்வம் அதற்குப் பதில் சொல்லாமல் ஜிப்ஸியைக் கேட்டான். “நீ யார்?”

மறுபடியும் டேனியலின் குரல் விஸ்வத்துக்கு அன்னியமாக இருந்தது. வேறொரு உடலில் தங்கியிருந்து அந்த உறுப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு இயங்குவது சுலபமானதல்ல. இந்த உடலை எந்தக் காலத்திலும் அவனுடையதாய் அவனால் உணர்வது முடியாத காரியமாய்த் திரும்பவும் தோன்றியதுஆனால் வேறு வழியில்லை, இப்போதைக்கு இதிலிருந்தே இயங்க வேண்டும் என்ற உண்மையை ஜீரணித்து ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் என்று அவன் தன் மனதிற்குக் கண்டிப்புடன் கட்டளையிட்டான்.

ஜிப்ஸி பதில் சொல்லாமல் யோசனையுடன் விஸ்வத்தைப் பார்த்தான். விஸ்வம் அமைதியாகச் சொன்னான். “என் வாழ்க்கையின் முக்கியமான கட்டங்களில் எல்லாம் வந்து இவ்வளவு தூரம் எனக்கு உதவியிருக்கிறாய். இத்தனை காலம் நம் முதல் சந்திப்பை நான் யதேச்சையாக நடந்தது என்று நினைத்திருந்தேன். பின் இரண்டாம் முறை சந்தித்து இல்லுமினாட்டி பற்றிச் சொன்னாய். அது யதேச்சையல்ல என்பது எனக்குத் தெரிந்திருந்தாலும் ஏதோ எனக்கு உதவுவதற்காகத் திரும்பவும் ஒருமுறை வந்து சொல்கிறாய் என்று நினைத்தேன். மூன்றாவது சந்திப்பு நடக்காது. அது தேவையிருக்காது என்றாய். பழைய உடலில் நான் இருக்கையில் நம் சந்திப்பு நடக்கவுமில்லை. ஆனால் மூன்றாவது முறையும் என் வாழ்க்கையில் குறுக்கிட்டிருக்கிறாய். அதுவும் முக்கியமான கட்டத்தில். நான் இந்த உடலில் வந்து சேர நீ உதவியிருக்கிறாய். இப்போது இல்லுமினாட்டி கையில் நான் கிடைத்து விடாமல் நீ என்னைக் காப்பாற்றியுமிருக்கிறாய். இப்போது யோசித்தால் முதல் தடவையிலிருந்தே உன்னைப் பற்றி நான் நினைத்தது எதுவும் சரியல்ல என்பது புரிகிறது. தயவு செய்து இனியாவது எதையும் மறைக்காமல் நீ சொல். யார் நீ? ஆரம்பத்திலிருந்தே நீ ஏன் என்னைப் பின் தொடர்கிறாய்?”

ஜிப்ஸி அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்து விட்டு மெல்லச் சொன்னான். “நண்பனே. நீ சொன்னது உண்மை தான். நம் சந்திப்புகள் எதுவும் தற்செயலாக நடந்தது அல்ல. உன் விதியும் என் விதியும் பின்னிப் பிணைந்தே இருக்கின்றன நண்பனே. அதனால் தான் சரியான ஒரு முகூர்த்தத்தில் முதல் முறையாக உன்னைச் சந்திக்க நேர்ந்தது. பார்த்தவுடன் உன்னை நான் அடையாளம் கண்டேன். எல்லையில்லாத சக்திகளை நீ பெற முடிந்தவன் என்பதை என்னால் உணர முடிந்தது. அதனால் உன்னை அந்தச் சக்திகள் நோக்கித் திருப்பி விட்டேன். நான் என் உள்ளுணர்வில் கண்டது பொய் அல்ல என்பதற்கு அறிகுறியாய் நீயும் பல சக்திகளை வசப்படுத்தினாய். ஒருவேளை அப்படி நீ சக்திகளை வசப்படுத்தாமல் இருந்திருந்தால் உனக்கு அடுத்த இலக்கைக் காட்டி இருக்க மாட்டேன். அடுத்த இலக்காய் இல்லுமினாட்டியைக் காட்டிய போது அதில் நீ நிச்சயம் இணைந்து அதன் தலைவனாய் வருவாய் என்று நான் நூறு சதம் எதிர்பார்த்தேன். அதனால் தான் இனி நம் சந்திப்பு இருக்காது, என் உதவியும் உனக்குத் தேவைப்படாது என்று சொல்லி இருந்தேன். நான் எதிர்பார்த்த மாதிரியே நீ இல்லுமினாட்டியில் சேர்ந்தாய். அங்கே அத்தனை பேரையும் கவர்ந்தாய். ஆனால் கடைசி நிமிஷத்தில் இல்லுமினாட்டி கூட்டத்தில் க்ரிஷின் வரவு இருக்கும் என்று நானும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் பேச்சும், அந்தச் சின்னமும் சேர்ந்து எல்லாவற்றையும் மாற்றும் என்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. உன் மரணத்தைக் கண்டிப்பாக நான் எதிர்பார்த்திருக்கவேயில்லை. தடைகளால் தடுக்கப்பட்டு நின்று விட நீ பிறந்தவன் அல்ல. அடுத்த வழி ஒன்று இருக்கிறது என்று காட்டினேன். நீ வழக்கம் போல ஜெயித்து விட்டாய்….”

ஜிப்ஸி எல்லாவற்றையும் சொல்லி விட்ட பாவனையில் புன்னகைத்தான். ஆனால் விஸ்வம் ஏமாந்து விடவில்லை. அவன் கேட்டான். “நான் கேட்டதற்கு நீ பதில் சொல்லவில்லை. நீ யார்? உன் நோக்கம் என்ன? இத்தனை உதவி எனக்குச் செய்ததில் உனக்குக் கிடைக்கப் போகும் லாபம் என்ன?”  

ஜிப்ஸி சிறிய தயக்கத்துக்குப் பின் சொன்னான். ”நண்பனே. உன்னிடம் நான் பொய் சொல்ல விரும்பவில்லை. அதே நேரம் என்னைப் பற்றிய எல்லா உண்மைகளையும் உடைத்துச் சொல்லும் நிலைமையிலும் நான் இல்லை. நான் செய்து கொடுத்திருக்கும் ஒரு சத்தியம் உன்னிடம் உண்மையைச் சொல்ல விடாமல் என்னைத் தடுக்கிறது. ஆனால் நான் உன் நண்பன் என்பதையும், உன் நலத்தில் உனக்கு நிகராய் அக்கறை காட்டுபவன் என்பதையும் மட்டும் இப்போது சொல்ல நான் ஆசைப்படுகிறேன். கண்டிப்பாக ஒருநாள் உண்மை எல்லாமே உனக்குத் தெரிய வரும். அது வரை நீ என்னை நம்ப வேண்டும்…”

விஸ்வம் கண்களை மூடிக் கொண்டான். இந்த ஜிப்ஸியை நம்பாமல் இருக்கக் காரணமில்லை. இப்போதைய நிலைமையில் இந்த ஜிப்ஸியைத் விட்டால் அவனுக்கு வேறு நாதியுமில்லை. விஸ்வம் முடிந்த வரை மற்ற நிலவரங்களை எல்லாம் புரிந்து கொள்ள முயன்றான். அவன் கேட்டான். “இந்த வீட்டுச் சொந்தக்காரன் நியூயார்க்கில் இருப்பதாகச் சொன்னாய். அவனுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?”

“ஒரு சம்பந்தமும் இல்லை. வீடு காலியாக இருக்கிறது. அவன் இப்போது வர வாய்ப்பில்லை. அதனால் தைரியமாகவும், பாதுகாப்பாகவும் இங்கே நாம் தங்கியிருக்கிறோம். அவ்வளவு தான்.”

விஸ்வம் வாய்விட்டுச் சிரித்தான். திருட்டுத்தனமாய் ஒரு வீட்டில் தங்கியிருப்பதை எந்தப் பயமும், குற்றவுணர்வும் இல்லாமல் ஒரு  சர்வசாதாரணமான விஷயத்தைச் சொல்வது போல் அவன் சொன்ன விதம் அவனுக்குப் பிடித்திருந்தது. ஆள் அழுத்தமானவன்…

ஜிப்ஸியும் மெல்லப் புன்னகைத்து விட்டுச் சொன்னான். “இல்லுமினாட்டிக்குத் தெரியாமல் நாம் நிறைய தூரம் போக வழியில்லை. அதனால் தான் உள்ளதிலேயே எல்லா விதங்களிலும் பாதுகாப்பான இந்த வீட்டை நான் தேர்ந்தெடுத்தேன்…”

விஸ்வம் கேட்டான். “சரி இனி நாம் என்ன செய்யப்போகிறோம்?”

(தொடரும்)


என்.கணேசன்

6 comments:

  1. புதிய கைதி மனோகர் ஆளா இல்லை செந்தில்நாதன் செட் பண்ணினவரா? ஜிப்ஸியும் விஸ்வமும் இனி என்ன செய்யப் போகிறார்கள்? இப்படி கேள்விகளுக்குப் பதில் ஜனவரியில் தான் எங்களால் விடை கண்டுபிடிக்க முடியும் போலிருக்கு. சார் ஜனவரியில் நாவல் வெளியிடாமல் ஏமாற்றி விடாதீர்கள்.

    ReplyDelete
  2. Each episode is building tension. You cannot even guess what is next.

    ReplyDelete
  3. Wowww sir. ஜிம்மி யை பற்றி தெரிந்து கொள்ள மிக ஆவலாக இருக்கிறேன். Story we didn't guess sir. Semmmma. Vera level ....

    ReplyDelete
  4. Sorry அது ஜிப்ஸி ..‌‌‌‌‌typo error

    ReplyDelete
  5. ஜிப்சிக்கு என்ன கதை இருக்கிறது... அது,எப்போது வெளிபடும்னு தெரியலையே....!!!
    ஜிப்சி சத்தியம் தடுக்கிறது என கூறுகிறான்...அப்ப அவன் பின் யாரேனும் செயல்படுகிறார்களா?

    ReplyDelete
  6. மனோகர் இருக்கும் அறைக்கு வந்த கைதியினால் மனோகர் உயிர்க்கு ஆபத்து வருமோ?
    விஸ்வம் சம்பந்தப்பட்ட யாவரும் இருக்க கூடாது என்று தீர்த்து கட்டும் முயற்சியோ??
    க்ரிஷுக்கு உதவிய ஏலியன்..... நண்பன் தான்.... நல்லவன் தான்...
    அப்போ விஸ்வம்க்கு உதவிய ஜிப்ஸி கண்டிப்பாக நல்லவனாக இருக்க முடியாது.

    ReplyDelete