சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, November 21, 2019

இல்லுமினாட்டி 24


முந்தைய உடலில் முழு சக்திகளுடன் இருந்திருந்ததால் கூடு விட்டுக்கூடு பாய்வது கடைசி கணத்தில் உடல் வலுவை இழந்து கொண்டிருந்த போது கூட விஸ்வத்துக்கு முடிந்தது. அந்தச் சக்திகளில் பாதி இருந்தாலும் யாரையும் ஒழித்துக்கட்டுவது விஸ்வத்துக்கு ஒரு பெரிய விஷயமே அல்ல. இப்போதோ உடனடியாக எதையும் செய்து முடிக்க நிலைமை அவனுக்கு அனுகூலமாக இல்லை. இப்போது புதிய உடலின் மூளையில் பழைய சக்திகளின் நுணுக்கங்களை முழுவதுமாய் அவன் பதிவு செய்து வைத்திருக்கிறான். ஆனால் அவற்றைப் பயன்படுத்தத் தேவையான நரம்பு மண்டல சக்தி, போதையால் அழிந்து போன இந்தப் புதிய உடலில் இல்லை. இனி அற்புதங்கள். ஏதாவது செய்ய வேண்டுமென்றால் அவன் இந்த உடலின் சக்திகளைச் சேமித்துப் பத்திரப்படுத்த வேண்டும். நரம்பு மண்டலச் சக்திகளை வளர்க்க வேண்டும். உடலின் உள் பாகங்களைப் பழுது பார்க்க வேண்டும்போதைக்குப் பழக்கப்பட்ட இந்த உடம்பு போதை மருந்துகள் கிடைக்காததால் அதற்காகப் போராட ஆரம்பித்து விட்டது. கடுமையான தலைவலி, தசைகளின் இறுக்கம், வாந்தி வருகிற உணர்வு எல்லாம் ஆரம்பித்து விட்டது. இதைச் சமாளிக்க வேண்டும்

விஸ்வத்தின் முகத்தில் லேசாகத் தோன்றி மறைந்த வேதனையின் காரணத்தை ஜிப்ஸியால் உணர முடிந்தது. கரிசனத்துடன் கேட்டான். “மருந்துகள் ஏதாவது வாங்கி வரட்டுமா?”

வேண்டாம். போதை உடம்பை அடிமையாக்குவது போலத்தான் மருந்தும் உடம்பை அடிமையாக்குகிறது. மூன்று நாளில் தானாகச் சரியாகி விடும்.” என்றான் விஸ்வம். மூன்று நாட்கள் உடம்பு அசௌகரியத்தை உணர்வது, மருந்தால் உடனடியாகக் குணமாவதை விடத் தேவலைஉடல் சில அசௌகரியங்களை அலட்சியப்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால் உடல் என்னைக் கவனி, எனக்கு சௌகரியம் கொடு என்று சதா முணுமுணுத்துக் கொண்டே இருக்கும். அதைக் கவனிக்கவே அதிக நேரம் போய் விடும். இப்போதே போதையை வேண்டிக் கொண்டு உடல் படும் சங்கடங்கள் அதிகமாகத் தான் இருக்கின்றன. கவனத்தை முக்கியமான விஷயங்களுக்குத் திருப்பி விஸ்வம் அந்த சங்கடங்களை அலட்சியப்படுத்துவதற்காக ஜிப்ஸியிடம் கேட்டான். “எர்னெஸ்டோ ஒழிந்தால் பிரச்னைகள் எல்லாம் ஒழிந்து விடாதே. அவர் போன பின்பு இல்லுமினாட்டியில் என் இடம் என்னவாக இருக்கும்?”

ஜிப்ஸி சொன்னான். “எர்னெஸ்டோவின் மரணம் இயல்பானதாக வெளியே தெரியும் வரை அதிகமான எதிர்ப்பு இருக்காது. அதே சமயம் க்ரிஷ் நுழைவதற்கு முன் உனக்கு இருந்த அமோக ஆதரவும் இப்போது இருக்க வழியில்லை. அந்த சமயத்தில் இல்லுமினாட்டியில் இருந்த மனோபாவம் வேறு. நீ இல்லுமினாட்டி சுவடி அடையாளம் காண்பித்த பாதுகாவலன், உன்னிடம் இருந்த சக்திகளும் பிரம்மாண்டமானவை, உன் தலைமையில் இல்லுமினாட்டி இன்னும் பல மடங்கு அதிகார உச்சத்தைச் சந்திக்கும், என்ற எதிர்பார்க்கும் மனநிலை பெரும்பாலான உறுப்பினர்களிடம் இருந்தது. இப்போது இல்லுமினாட்டி அடையாளம் காட்டியது உன்னைத் தான் என்கிற நம்பிக்கையை க்ரிஷ் ஒட்டு மொத்தமாக அழித்து விட்டான்அதனால் எர்னெஸ்டோ ஒழிந்தாலும் மற்றவர்களுடன் போட்டி போட்டுத் தான் நீ தலைமைப் பதவிக்குப் போக முடியும்

விஸ்வத்திற்கு அதை இப்போது நினைத்தாலும் வயிறெரிந்தது. அவன் கவனமாக மிக அழகாக இல்லுமினாட்டியில் உருவாக்கி வைத்திருந்த பிம்பத்தை க்ரிஷ் அலட்டிக் கொள்ளாமல் சுக்குநூறாக உடைத்து விட்டான்.

ஜிப்ஸி அவனைத் தேற்றுவது போல் சொன்னான். “ஆனால் உன் பழைய இடத்தை க்ரிஷ் பிடித்துக் கொள்ள முடியவில்லை. அவன் பேசி முடித்த போது வேலை செய்த மேஜிக் இப்போது வேலை செய்யவில்லை. எந்த மேன்மையான விஷயமும் கேள்விப்படும் நேரத்தில் ஏற்படுத்தும் பரவசத்தையும், உறுதியையும் தொடர்ந்து மனிதர்களிடம் தொடர்ந்து தக்க வைப்பதில்லை. மென்மையாகவும், நேர்மையாகவும் இருந்து இல்லுமினாட்டியை வளர வைக்க முடியும் என்று பல உறுப்பினர்களுக்கு நம்ப முடியவில்லை என்பது தான் இப்போதைய நிலை.”

விஸ்வம் புன்னகையோடு கேட்டான். “இப்போது நான் இல்லுமினாட்டி உறுப்பினரா இல்லையா. இல்லுமினாட்டியின் விதிமுறைகள் என்ன சொல்கின்றன?”

ஜிப்ஸி லேசாகச் சிரித்துக் கொண்டே சொன்னான். “இல்லுமினாட்டியில் மட்டுமல்ல உலகத்தின் எந்தச் சட்டத்திலும், விதிமுறையிலும் உனக்கு திட்டவட்டமான இடமில்லை. உலகத்தைப் பொருத்த வரை நீ இனி டேனியல் தான். உலகம் உடலை வைத்தே யாரையும் அடையாளம் காண்கிறது. இல்லுமினாட்டிக்கு நீ டேனியல் உடம்பில் இருப்பது தெரிந்து விட்டது என்றாலும் அவர்கள் சௌகரியப்பட்டபடி தீர்மானிக்கலாம். விஸ்வம் என்ற உறுப்பினராக உன்னை வரவேற்கவும் செய்யலாம், டேனியல் என்ற சம்பந்தப்படாத போதை ஆசாமியாக உன்னைக் கைகழுவியும் விடலாம். எல்லாம் தீர்மானிப்பவர்களைப் பொருத்தது என்பதால் யாரைத் தீர்மானிக்க விடுகிறோம் என்பதைப் பொருத்ததே உன் நிலைமை.”

அப்படியானால் எர்னெஸ்டோ தீர்மானிக்கக்கூடாது என்பது மிகவும் அவசியமாவதை விஸ்வம் உணர்ந்தான். அவன் உடல் களைப்படைய ஆரம்பித்தது. அவன் இந்த உடலைப் பலப்படுத்தி,  சக்திகளை சீக்கிரமாக மீட்டெடுக்க வேண்டும். அது சாதாரண காரியம் அல்ல. ஆனால் விஸ்வமும் சாதாரணமானவனல்ல…   


வாங் வேக்கு நேற்று ஒரு ரகசியத் தகவல் வந்து சேர்ந்திருந்தது. இல்லுமினாட்டியின் உளவுத்துறை மிக முக்கியம், அதி அவசரம் என்ற வகையிலான ஒரு ரிப்போர்ட்டை தலைவர் எர்னெஸ்டோவின் தனிப் பார்வைக்கு அனுப்பிக் கொடுத்திருக்கிறது என்ற தகவல் தான் அது. பெரும்பாலும் அது போன்றதொரு ரிப்போர்ட் எர்னெஸ்டோ பார்வைக்குச் சென்றால் அவரிடமிருந்து அதன் பிரதி அல்லது சாராம்சம்  மற்ற தலைமைக்குழு உறுப்பினர்களுக்கு சில மணி நேரங்களிலேயே போய்ச் சேரும். எல்லோருக்குமான செய்தி என்றால் அடுத்த நாள் மற்றெல்லா உறுப்பினர்களுக்கும் கூடப் போய்ச் சேரும். எர்னெஸ்டோ உளவுத்துறை ரிப்போர்ட்களை இது வரை ரகசியமாக தன் அளவிலேயே வைத்துக் கொண்ட நபர் அல்ல. ஆனால் ரிப்போர்ட் கிடைத்து 24 மணி நேரம் கழிந்த பின்னும் எர்னெஸ்டோவிடமிருந்து தலைமைக்குழு உறுப்பினர்களுக்குக் கூட அது குறித்த எந்தச் செய்தியும் வரவில்லை. அது வாங் வேக்கு நெருடலாகவே இருந்தது. இல்லுமினாட்டியில் மிக முக்கியமானது எதுவும் நடந்து அல்லது நடக்கவிருந்து அதுபற்றி இது போன்ற கட்டத்தில் தான் அறியாமலிருப்பது நல்லதல்ல என்று அவர் அறிவு எச்சரித்தது. அகிடோ அரிமா ஜப்பானுக்குப் போய் விட்டிருந்தபடியால் அவரிடமும் அது குறித்து விவாதிக்க வழியில்லை. இதெல்லாம் போனில் பேசுவது உசிதமும் அல்ல. அந்த ரிப்போர்ட்டில் என்ன இருந்தது என்பதை அறிந்து கொள்ளாமல் மண்டை வெடித்து விடும் போல இருந்தது. பல விதமாக யோசித்து அவர் தூக்கத்தையும், நிம்மதியையும் தொலைத்திருந்தார்.

சில அபூர்வ சமயங்களில் எர்னென்ஸ்டோ தன் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருசிலரை அழைத்து சில விஷயங்களை அலசுவதும் உண்டு என்பதால் அப்படி யாரையாவது அழைத்து எர்னெஸ்டோ பேசியிருக்கிறாரா என்று தெரிந்து கொள்ள வாங் வே துடித்தார். யோசித்து அவ்வளவாக முக்கியமல்லாததாக இருந்தாலும் தலைவரிடம் சொல்ல வேண்டியிருந்த ஒரு நிர்வாக விஷயத்தைத் தேடி எடுத்துக் கொண்டார். பின் எர்னெஸ்டோவின் உதவியாளருக்குப் போன் செய்தார். அந்த உதவியாளர் பத்து வருடங்களாக அந்த வேலையில் இருப்பதால் வாங் வேக்கு நன்றாகப் பரிச்சயமானவர்

ஹலோ

ஹலோ நான் வாங் வே பேசுகிறேன். தலைவர் இருக்கிறாரா? அவரிடம் பேசலாமா?”

மிக மிக முக்கியமான விஷயமானால் மட்டும் அவரிடம் பேசுங்கள். அப்படி இல்லா விட்டால் இரண்டு நாள் பொறுத்துப் பேசுங்கள். இல்லாவிட்டால் மெயில் அனுப்புங்கள். அது தான் நல்லது. ஏனென்றால் முக்கியமில்லாத விஷயமென்றால் திட்டு வாங்கக்கூடிய வாய்ப்புண்டு

ஏன் தலைவர் அவ்வளவு பிசியா?”

நேற்றிரவு அவர் தூங்கிய போது மணி இரண்டு. இன்று காலை ஐந்து மணிக்கே எழுந்து விட்டார்…”

ஏன் விருந்தாளிகள் யாராவது இருக்கிறார்களா என்ன?”

விருந்தாளிகள் யாருமில்லை. நேற்றுக் கொடுத்திருந்த அப்பாயின்மெண்ட்களைக் கூடக் கேன்சல் செய்து விட்டார். யாரையும் பார்க்கவுமில்லை. ஏதோ தீவிர மிக முக்கியமான வேலையை எடுத்துக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது.”

அப்படியானால் அவரைத் தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை. நான் பேசவிருக்கும் விஷயத்தை நிதானமாகக் கூடச் சொல்லிக் கொள்ளலாம். அவசரமேயில்லை.”

வாங் வே போனை வைத்து விட்டார். எர்னெஸ்டோவுக்கு உளவுத்துறை அனுப்பியிருக்கிற தகவல் சாதாரணமானதாக இருக்க வழியேயில்லை. ஏனென்றால் எர்னெஸ்டோ எப்படிப்பட்ட சூழலிலும் ஏழு மணி நேரத் தூக்கத்தைத் தியாகம் செய்யாதவர். அவசர வேலை வந்து தூங்கப் போகும் நேரம் பின்னிரவானால் மறு நாள் மதியம் தான் எழுந்திருப்பார். அப்படிப்பட்டவர் மூன்றே மணி நேரம் தூங்கி எழுந்து வேலை பார்க்கிறார். அதே போல் கொடுத்த அப்பாயின்மெண்ட்களை அனாவசியமாக அவர் கேன்சல் செய்பவரும் அல்ல. அப்படிப்பட்டவர் அதையும் செய்திருக்கிறார் என்றால் கிடைத்திருக்கிற தகவல் பெரிதாக அவரைப் பாதிக்கிற தகவலாகத் தான் இருக்க வேண்டும். என்ன அது என்ற கேள்வி வாங் வே மனதில் விஸ்வரூபம் எடுத்து நின்றது.

(தொடரும்) 

என்.கணேசன்

5 comments:

  1. Though Viswam is villain he shows strength in certain characteristics. One of the most memorable characters by you.

    ReplyDelete
  2. தூள் கிளப்பிட்டு ஊகிக்க முடியாதபடி போகுது இல்லுமினாட்டி. வியாழக்கிழமையில் மகிழ்ச்சியும் டென்ஷனும் தான் எங்களுக்கு.

    ReplyDelete
  3. இந்த பதிவும் சஸ்பென்ஸ் ல தான் முடிந்து இருக்கா?
    அடுத்த வியாழன் வரை வெயிட் பண்ண ணுமே.....

    ReplyDelete
  4. அருமை.. waiting waiting waiting for January

    ReplyDelete
  5. விஸ்வம் உடலை கையாளும் விதம் அற்புதம்... அவன் உறுதியை பார்க்கும் போது டேனியல் உடலை பழைய நிலைக்கு கொண்டுவந்து விடுவான்... போலிருக்கே...

    ReplyDelete