சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, August 21, 2019

அறிய வேண்டியதும், அடைய வேண்டியதும்!


கீதை காட்டும் பாதை – 60 


பகவத்கீதையை மேலோட்டமாகப் படிக்கிறவர்களுக்குப் பல இடங்களில் ஸ்ரீகிருஷ்ணர் தானே எல்லாம் என்று சுயபுராணம் பாடுவது போலத் தோன்றலாம். ஆனால் ஆழமாகப் படித்து உட்பொருள் அறிந்து சிந்திப்பவனுக்கு நம்மைப் பற்றியே சொல்லப்பட்டிருக்கிறது என்ற மகத்தான ஞானம் புலப்பட்டு, இனி செய்ய வேண்டியது என்ன என்ற தெளிவு பிறக்கும்.

ஸ்ரீகிருஷ்ணர் புருஷோத்தம யோகத்தில் அடுத்ததாகச் சொல்லியிருக்கும் சில சுலோகங்களைப் பார்ப்போம்:

அகில உலகையும் விளங்கச் செய்யும் சூரியனில் உள்ள ஒளியும், சந்திரனிலும் அக்னியிலும் உள்ள ஒளியும் என்னுடைய தேஜஸே என்று அறிவாயாக!

நான் பூமியினுள் புகுந்து என்னுடைய பலத்தினால் எல்லா உயிரினங்களையும் தாங்குகிறேன்.

நானே எல்லா உயிர்களின் இதயத்திலும் அந்தர்யாமியாக இருந்து கொண்டிருக்கிறேன். என்னிடமிருந்து தான் நினைவும், அறிவும், சந்தேகங்களிலிருந்து தெளிவும் ஏற்படுகின்றன. எல்லா வேதங்களிலும் அறிய வேண்டிய பொருள் நானே. வேதாந்தத்தை உருவாக்கியவனும், உட்பொருளை அறிந்தவனும் நானே!

உலகில் ஒளி தந்து நாம் அனைத்தையும் காண வழிவகுப்பது சூரியன், சந்திரன் மற்றும் அக்னி தான். இன்று மின்விளக்குகள் இருக்கின்றன என்றாலும் அந்த மின்சாரமும் அக்னியின் ஒரு அம்சமாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றின் ஒளிஎன்னுடைய தேஜஸேஎன்று பகவான் சொல்கிறார். அந்த வகையில் யோசித்தால், பகவானுடைய தேஜஸ் இல்லையென்றால் எல்லையற்ற இருளில் நாம் முடங்கி விடுவோம்.

அடுத்ததாக என்னுடைய பலத்தினால் எல்லா உயிரினங்களையும் தாங்குகிறேன் என்றும் எல்லா உயிர்களின் இதயத்திலும் அந்தர்யாமியாய் இருக்கிறேன் என்றும் பகவான் கூறுகிறார். உனக்குள்ளே இருப்பவனும், உன்னைத் தாங்குபவனும் அந்தப் பரம்பொருள் என்றால் மனிதனே நீ ஏன் துக்கப்பட வேண்டும், நீயேன் சக்தியற்றவனாய் உன்னை நினைத்துக் கொண்டு புலம்ப வேண்டும்? எல்லாம் நானே என்று அறிவிக்கும் இறைவன் உனக்குள்ளும் நானே என்றும் சேர்ந்து சொல்லும் போது எல்லாம் நீயேஎன்பதும் உண்மையே அல்லவா? உற்சாகமாகவும், ஆனந்தமாகவும் உன் வாழ்க்கையை நீ பிரம்மாண்டமாக ஆக்கிக் கொள்ளாமல் தடுப்பது உன் அறியாமையே அல்லவா?

நாம் முன்பே சொன்னது போல, நாம் தரித்திருக்கும் சிறு வேடமே நம் அடையாளம், அதுவே நிஜம் என்று அறியாமையால் தேவையில்லாமல் அல்லவா நம்மை நாமே சுருக்கிக் கொள்கிறோம். அண்டவெளியில் எல்லாம் வெற்றிடம் நிரம்பியிருக்க ஒரு மண்பானை தனக்குள் இருக்கும் சிறு இடத்தை தன் இடமாகச் சொல்லிக் கொள்கிறது. அந்தச் சிறிய உள் இடம் பானை உருவாவதற்கு முன்னும், பானை உடைந்த பின்னும்  இருக்கக்கூடிய எல்லையில்லாத வெற்றிடமே அல்லவா?

வேதங்களை உருவாக்கியவனும், வேதங்களின் உட்பொருளும் அந்தப் பரம்பொருளே என்று சொல்லி அந்தப் பரம்பொருளின் எல்லையற்ற சக்திகளை விளக்கி விவரிக்கும் போதெல்லாம் அந்தப் பரம்பொருள் உனக்குள்ளிருந்து கொண்டு, உன்னைத் தாங்கிக் கொண்டிருக்கும் சக்தியைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்ற உணர்வை நீ சேர்ந்து பெற வேண்டாமா? அந்த வகையில் இறைவன் உன்னைப் பற்றியே அல்லவா பேசிக் கொண்டிருக்கிறார். ”எல்லாம் நீயே” “உன்னையே நீ அறிவாய்என்ற வேத வாக்குகளை எல்லாம் நீ இப்படி அல்லவா புரிந்து தெளிந்து புத்துணர்ச்சி பெற வேண்டும்?

புருஷோத்தம யோகத்தின் முடிவில் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்:

பரதகுலத் தோன்றலே, எவனொருவன் புருஷோத்தமனான என்னை நான் சொல்லிய முறையில் மோகமின்றி நன்றாக அறிவானோ அவன் எல்லா விதங்களிலும் என்னையே தொழுகிறான்.

குற்றமற்றவனே, இதுவரை மிகவும் ரகசியமான இந்த சாஸ்திரத்தை உனக்குச் சொன்னேன். இதை அறிந்து கொண்ட மனிதன் ஞானியாகவும், செய்ய வேண்டியதைச் செய்தவனாகவும் ஆகிறான்.

உன்னையே அறிவாய் என்று சொன்னால் மனிதன் இந்த உடல், அதனுடன் சேர்ந்த அற்பசக்திகள் வைத்து அறியாமையுடன் தான் தன்னைக் கணித்துக் கூனிக் குறுகுவான். இறைவனை அறியும் பிரம்மாண்டத்தை விவரித்து இந்தப் பிரம்மாண்டமே உனக்குள் இருக்கிறது, உன்னைத் தாங்குகிறது என்று இந்த விதமாகச் சொன்னால் அணு அண்டமாக விரியும்.

அந்தப் பரம்பொருளை எல்லா விதங்களிலும் தொழச் சொல்வது உனக்குள் இருக்கும் இறைவனைத் தொழச் சொல்வது தான். எல்லா விதங்களிலும் அதையே ஆராதித்து, அதையே தொழுது கௌரவிப்பது மனிதன் தன் உயர்வுகளையும், தெய்வத்தன்மையையும் மேலோங்க வைத்து கௌரவிப்பது தான். அந்த ஒரு ஆத்மஞானம் தான் நாம் அறிய வேண்டிய மகாரகசியம். அந்த இறைத்தன்மையை விடாது பிடித்துக் கொண்டு, அது மேலோங்க வாழ்ந்தால் முடிவில் நாமும் அதுவாகி அமைதியடைவோம்.

சமுத்திரத்தில் இருக்கும் குமிழி உடைந்து சமுத்திரமாவது போல, மண்பாண்டம் உடைந்து எல்லையில்லா வெட்ட வெளியாவது போல நாமும் அந்த இறைநிலை அடைவது தான் நாம் அடைய வேண்டிய நிலை.

இத்துடன் பகவத்கீதையின் பதினைந்தாவது அத்தியாயமான புருஷோத்தம யோகம் முடிவடைந்தது.

பாதை நீளும்

என்.கணேசன்



4 comments:

  1. அற்புதம் ஐயா... நீங்கள் கூறிய மண்பானை உதாரணம் அருமை...மேலும் ஆழமாக புரிந்த கொள்ள உதவியது.

    ReplyDelete
  2. Sir waiting for illuminati

    ReplyDelete
  3. Pl. publish as a book. I searched Bhagavat Gita in your published books and couldn't able to find.

    ReplyDelete