என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, August 12, 2019

சத்ரபதி 85


ற்றன் வந்து தெரிவித்த தகவலில் லாக்கம் சாவந்த் அமைதி இழந்தான். சிவாஜிக்குப் பயந்து தலைமறைவாகச் சிறிது காலம் இருந்த அவன் இப்போது தாக்குதலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருப்பதால் மறைவில் இருந்து வெளியே வர வேண்டியதாகி விட்டது. அது தெரிந்து சிவாஜி இங்கே தான் வந்து கொண்டிருக்கிறானோ என்ற சந்தேகம் தான் அவன் மனதில் முதலில் எழுந்தது.

அதை வாய் விட்டே ஒற்றனிடம் லாக்கம் சாவந்த் கேட்டான். ஒற்றன் சொன்னான். “அவர்கள் நம் திசை நோக்கி வரவில்லை மன்னா”

லாக்கம் சாவந்த் சிறிது நிம்மதி அடைந்தான். அவன் மனம் அடுத்த கேள்விகளில் அலைபாய்ந்தது. அப்படியானால் சிவாஜி எங்கே சென்றிருப்பான்? போனவன் மறுபடி விஷால்கட்டுக்குத் திரும்புவானா இல்லை வேறு எங்காவது செல்வானா? அது தெரிந்தால் அல்லவா அதற்கேற்றபடி அவர்கள் திட்டத்தை மாற்றிக் கொள்ள முடியும்! திடீர் திடீர் என்று முடிவுகள் எடுத்து குழப்புகிறானே சிவாஜி என்றெண்ணியவனாக லாக்கம் சாவந்த் இத்தகவலை பாஜி கோர்ப்படேயிடமும், அவர்களுடன் வர தயாராகிக் கொண்டிருக்கும் பீஜாப்பூர் தளபதியிடமும் தெரிவித்து வரும்படி ஒற்றனிடம் கட்டளை இட்டான்.

ஒற்றன் சிறு தயக்கத்துடன் சொன்னான். “பாஜி கோர்ப்படே ஏதோ வேலையாக முதோலுக்குக் குறுகிய காலப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருக்கிறார் மன்னா. நாளை திரும்பக்கூடும் என்று தெரிகிறது”
லாக்கம் சாவந்த் திடுக்கிட்டான். பாஜி கோர்ப்படே முதோலில் இருந்து தன் இருப்பிடத்தை மாற்றி சில காலமாகி விட்டது. இப்போதும் முதோல் அவன் கட்டுப்பாட்டிலேயே இருந்தாலும் அவன் அதிகமாக பீஜாப்பூரிலும் மற்ற சமயங்களில் வேறுசில பகுதிகளிலுமே இருந்து வருகிறான். ஏனிந்த சமயத்தில் பாஜி கோர்ப்படே முதோல் சென்றான். விஷால்கட்டில் இருந்து முதோல் அதிகத் தொலைவில் இல்லையே.

லாக்கம் சாவந்த் பீதியுடன் ஒற்றனைக் கேட்டான். “சிவாஜியும் அவன் படையும் முதோல் இருக்கும் திசையில் பயணிக்கவில்லையே…”

ஒற்றன் லாக்கம் சாவந்துக்குச் சாதகமான பதில் அளிக்க முடியாமல் தயங்கினான். லாக்கம் சாவந்த் ஆபத்தைப் பரிபூரணமாக உணர்ந்தான். ஒற்றர்கள் மூலம் பாஜி கோர்ப்படேயை எச்சரிக்கும் கால அவகாசமும் அவனிடம் இல்லை…..


பாஜி கோர்ப்படேக்கு சிவாஜி முதோலை நெருங்கிக் கொண்டிருக்கும் போது தான் தகவல் கிடைத்தது. அவனுக்குத் தெரிந்து சிவாஜிக்கு முதோல் வர இரண்டே காரணங்கள் தான் இருந்தன. ஒன்று சிவாஜிக்கெதிரான மும்முனைத் தாக்குதலுக்கு அவன் தயாராகிக் கொண்டிருப்பது. ஆனால் மிக ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் அந்தச் செய்தி கண்டிப்பாக சிவாஜியை எட்டியிருப்பது சாத்தியமில்லை. இரண்டாவது ஷாஹாஜியை அவன் கைது செய்து பீஜாப்பூர் சுல்தானிடம் ஒப்படைத்த பழைய கணக்கு. அதற்குப் பழிவாங்கக்கூடாது என்று ஷாஹாஜியிடம் பீஜாப்பூர் சுல்தான் அன்று சத்தியம் வாங்கியிருந்தார். ஷாஜாஜி மகனுக்கும் சேர்த்து சத்தியம் செய்து தரவில்லையே…. எனவே சிவாஜியின் வரவுக்கு இரண்டாவது காரணமே உண்மைக்காரணமாக இருக்கும் என்பதை அவன் யூகித்தான்.

முதோல் மீது யாரும் படையெடுத்து வரும் சூழல் இல்லை என்பதால் முதோலில் பெரும்படை இல்லை. பாஜி கோர்ப்படே அழைத்து வந்திருக்கும் வீரர்களின் எண்ணிக்கையும் மிகச்சிறியது. இங்கே சிவாஜியுடன் போரிட்டு வெல்வது கண்டிப்பாகச் சாத்தியம் இல்லை. தப்பித்துச் செல்லவும் கால அவகாசம் இல்லை… வேறு வழியில்லாமல்  பாஜி கோர்ப்படே இருந்த சிறுபடையுடன் சிவாஜியை எதிர்க்கத் தயாரானான்.

சிவாஜி எமனாகவே முதோலுக்குள் படையுடன் நுழைந்தான். அவன் பாய்ந்த பக்கமெல்லாம் மரணங்களே சம்பவித்தன. அவன் சூறாவளியாக வேகமாகத் தாக்கினான். பாஜி கோர்ப்படேயின் வீரர்கள் சிலர் அவனிடம் சரணடைந்து தப்பித்தனர். பாஜி கோர்ப்படே தன் வீரர்கள் சரணடைந்தும், மரணமடைந்தும் தன் அணி குறைந்து கொண்டே வருவதைக் கவனித்தான். கடைசியில் அவன் ஒருவனாக சிவாஜியை எதிர்த்து நிற்கையில் கடைசியாக சிவாஜியிடம் பேசிப் பார்த்தான்.

“சிவாஜி. நான் பீஜாப்பூர் சுல்தானின் சேவகன். அவர் ஆணையிட்டதை நிறைவேற்றக் கடமைப்பட்டவன். உன் தந்தை ஷாஹாஜியுடன் எனக்குத் தனிப்பட்ட விரோதம் எதுவுமில்லை. அவரைக் கைதுசெய்து ஒப்படைக்க சுல்தான் ஆணையிட்டதால் அதை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கிருந்தது. அதற்கு இத்தனை காலம் கழித்தும் என்னைக் குற்றவாளியாக்கி நீ தண்டிக்க முனைவது தர்மம் அல்ல. நியாயமும் அல்ல….”

சிவாஜி அமைதி இழக்காமல் சொன்னான். “பாஜி கோர்ப்படே. சுல்தானின் ஆணையை நிறைவேற்ற நீ என் தந்தையிடம் போரிட்டு அவரைக் கைது செய்துக் கொண்டு சென்றிருந்தால் நான் அதைக் குற்றப்படுத்த மாட்டேன். ஆனால் நல்லவனாக நடித்து உன் இருப்பிடத்திற்கு விருந்தின் பேரில் வற்புறுத்தி அழைத்து அங்கும் வஞ்சித்தே அவரைக் கைது செய்திருக்கிறாய். எதிரிக்கு மன்னிப்பு உண்டு. மரியாதையும் உண்டு. துரோகிக்கு அந்த இரண்டிற்கான தகுதியும் இல்லை. அதனால் அவன் அதைப் பெறுவதுமில்லை”

சொல்லி முடித்த அடுத்த கணம் சிவாஜியின் வாள் பாஜி கோர்ப்படேயின் கையிலிருந்த வாளை வானில் பறக்க வைத்து அடுத்த கணம் அவன் நெஞ்சையும் துளைத்தது.


பாஜி கோர்ப்படே வீழ்த்தப்பட்ட செய்தி அலி ஆதில்ஷாவை எட்டிய போது சுல்தானுடன் லாக்கம் சாவந்தும் இருந்தான். அவன் பயந்தது நடந்தே முடிந்து விட்டது. அவனது திட்டம் செயல்படுத்த ஆரம்பிக்கும் முன்னேயே  முடிந்து போவதில் அவனுக்கு உடன்பாடில்லை. பாஜி கோர்ப்படே இறந்து விட்ட போதிலும் அவன் திட்டம் நல்ல திட்டம் தான் என்று அவன் உறுதியாக நம்பினான். அவன் சுல்தானிடம் உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னான்.

“மன்னா. பாஜி கோர்ப்படேயின் மரணம் நமக்கு இழப்புத் தான் என்றாலும் அவருடன் நம் திட்டத்தையும் சேர்த்துப் புதைத்து விட வேண்டியதில்லை. பாஜி கோர்ப்படேக்குப் பதிலாக வேறொரு திறமையான படைத்தலைவரை உடனடியாக நியமியுங்கள். நாம் முன்பு போட்ட திட்டப்படி செயல்பட்டால் நமக்கு வெற்றி நிச்சயம். இதில் நம் தயக்கமும், கால தாமதமும் சிவாஜிக்குச் சாதகமாகி விடும். அதை நீங்கள் அனுமதிக்கக் கூடாது”

அலி ஆதில்ஷா உடனடியாகப் பதில் ஏதும் சொல்லாமல் யோசித்தான். அவன் யோசிக்க யோசிக்க லாக்கம் சாவந்த் பெரும் பதட்டத்தை உணர்ந்தான். பாஜி கோர்ப்படேக்கு அடுத்தபடியாக சிவாஜியின் பார்வை திரும்புவது தன் மீதாக இருக்குமோ என்ற பயம் லாக்கம் சாவந்தை வாட்டி வதைத்தது.

அலி ஆதில்ஷாவுக்கு பாஜி கோர்ப்படேயின் மரணம் தற்போதைய சூழ்நிலையில் பின்னடைவாகத் தான் தோன்றியது. புதிய புதிய பிரச்சினைகள் பல பக்கங்களிலிருந்தும் வெடித்துக் கொண்டிருக்கின்றன. தீர்வுகளுக்கான வழிகளோ குழப்பமாகத் தெரிகின்றன. சிவாஜி மட்டும் பிரச்சினைகளில் அவ்வப்போது மூழ்கினாலும் சீக்கிரமாகவே விடுபட்டு விஸ்வரூபம் எடுக்கிறான்…..

பெருமூச்சு விட்ட அலி ஆதில்ஷா கடைசியில் லாக்கம் சாவந்த் கேட்டுக் கொண்டபடி இன்னொரு படைத்தலைவனை பாஜி கோர்ப்படேக்குப் பதிலாகத் தேர்ந்தெடுத்து, முன்பு தீர்மானித்தபடி சிவாஜிக்கு எதிரான மும்முனைத்தாக்குதலைத் துவங்கக் கட்டளையிட்டான்.

லாக்கம் சாவந்த் புத்துயிர் பெற்றதைப் போல் உணர்ந்தான்.


பாஜி கோர்ப்படேயின் மரணச் செய்தி ஷாஹாஜி நீண்ட காலமாக மனதில் உணர்ந்து வந்த அவமானத்தைத் துடைத்து வைப்பதாக இருந்தது. இரண்டு பழைய கணக்குகளைத் தீர்க்காமல் இந்த உலகில் இருந்து விடைபெற்றுக் கொள்ளக் கூடாது என்று அவர் உறுதியாக நினைத்திருந்தார். அவர் அன்பு மகன் உயிரிழக்கக் காரணமாக இருந்த அப்சல்கான் கணக்கும், வஞ்சனையால் அவர் சிறைப்படக் காரணமாய் இருந்த பாஜி  கோர்ப்படே கணக்கும். இரண்டு கணக்குகளையும் அவர் மகன் சிவாஜி தீர்த்து அவருக்குள் எரிந்து வதைத்துக் கொண்டிருந்த அக்னியை அணைத்து விட்டான். இனி இறந்தாலும் அவருக்குக் கவலையில்லை.

சிவாஜியை நினைக்க நினைக்க அந்தத் தந்தைக்குப் பெருமையாக இருந்தது. சிறுவனாக அவன் இருந்த போது அவனைக் குறித்து அவர் கவலைப்பட்டதும், அவனை எச்சரித்து பீஜாப்பூரில் அறிவுரைகள் சொன்னதும் இப்போதும் அவருக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்போது ஜீஜாபாய் சொல்லியிருந்தாள்:

“நாம் தான் நம் கனவுகளைத் தொலைத்து விட்டோம். அவனிடமாவது அந்தக் கனவுகள் தங்கட்டும். அவனுக்காவது அவற்றை நிஜமாக்கும் பாக்கியம் வாய்க்கட்டும்”

சிவாஜியும் உறுதியாகச் சொல்லியிருந்தான்: “தனியாக நான் இல்லை தந்தையே. என்னுடன் இறைவன் இருக்கிறான்”

இறைவன் அவனுடன் இருந்து அவன் கனவுகளை மெய்ப்பித்து வருவதாக இப்போது அவருக்குத் தோன்றுகிறது… அதேசமயம் இப்போது அலி ஆதில்ஷா தேர்ந்தெடுத்திருக்கிற மும்முனைத் தாக்குதல் அவரைப் பயமுறுத்தியது. அது அப்பழுக்கில்லாத  திட்டம். இதில் சிவாஜி சிக்கினால் மீள்வது மிகவும் கடினம் தான்….

இறைவன் இதிலும் அவர் மகனுக்குத் துணையிருந்து வெற்றி பெற்றுத் தர வேண்டும் என்று அந்தத் தந்தை மனம் பிரார்த்தித்தது.


(தொடரும்)
என்.கணேசன்

5 comments:

 1. சுஜாதாAugust 12, 2019 at 5:32 PM

  சிவாஜி காலம் கருதிக் காத்திருந்து பாஜி கோர்ப்படேயை வீழ்த்தியது சூப்பர். பதுங்கி இருக்கும் போதும் எதையாவது செய்து கொண்டே இருக்கும் அவன் இந்த முப்படைத் தாக்குதலை எப்படி சமாளிக்கப் போகிறான்?

  ReplyDelete
 2. Sivaji's way of dealing every situation is simply superb! Real genius in warfare.Eagerly waiting to know how he handles three forces at a time.

  ReplyDelete
 3. மிக விருவிருப்பாக கொண்டு செல்கிறீர்கள்! நன்றி.
  One correction may be needed - in the paragraph where Shahaji hears about the news, it’s given as பாஜி பசல்கர் instead of பாஜி கோர்படே.

  ReplyDelete
 4. சிவாஜியின் துரோகிகளை மன்னிக்காத குணம் அருமை...
  எதிர் அணி அடுத்த திட்டத்தையாவது வெற்றிகரமாக முடிப்பார்களா...? இல்லை அதிலும் தடை உண்டாகுமா...??

  ReplyDelete