சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 5, 2019

சத்ரபதி 84



லி ஆதில்ஷா இது வரை சிவாஜிக்கு எதிராகத் திட்டம் தீட்டிக் கொண்டு வந்து பிறகு அவன் உதவியை எதிர்பார்த்தவர்களைச் சந்தித்ததில்லை என்பதால் நிமிர்ந்து உட்கார்ந்து ஆர்வத்துடன் “என்ன திட்டம்?” என்று கேட்டான்.
”சிவாஜி இப்போது கேல்னா (விஷால்கட்) கோட்டையில் தான் இருக்கிறான். அங்கு அவனிடம் இருக்கும் படைபலம் பெரிய அளவில் இல்லை. இப்போது அவன் மீது மும்முனைத் தாக்குதல் நடத்தினால் அவனை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.” என்று லாக்கம் சாவந்த் கூறினான்.

அலி ஆதில்ஷா சிறிது யோசித்து விட்டுச் சொன்னான். “வாடி மன்னரே. பன்ஹாலா கோட்டையிலிருந்து சிவாஜி தப்பித்து கேல்னாக் கோட்டைக்குச் சென்றவுடனேயே சிதி ஜோஹரும், ஃபசல்கானும் அங்கும் அவனைத் தொடர்ந்து செல்லத் திட்டமிட்டு பின் அது வெற்றி பெறாது என்று திட்டத்தைக் கைவிட்டதாக நினைவு. அப்போது படைபலம் அவர்களிடம் வேண்டுமளவு இருந்தது. சிவாஜியிடம் இப்போது இருக்கும் படைபலம் தான் அப்போதும் இருந்தது. இன்று நிலைமை எந்த விதத்தில் மேம்பட்டிருக்கிறது என்று நீங்கள் தாக்குதலுக்குத் திட்டம் தீட்டியிருக்கிறீர்கள்?”

லாக்கம் சாவந்த் சொன்னான். “அன்று உங்கள் படை பன்ஹாலா கோட்டை முன் இருந்தது. விஷால்கட் என்று சிவாஜி பெயர் வைத்திருக்கும் கேல்னா கோட்டைக்கு அங்கிருந்து செல்ல குறுக்குவழியாக இருந்த மலைப்பாதை மிகவும் குறுகலாக இருந்ததால் ஒரு படை அந்த வழியாகச் செல்வது கடினம். அந்த வழியில் செல்லாமல் சுற்றி வளைத்துப் போகும் அகன்ற பாதை மிக நீண்டது. அப்படி அவர்கள் செல்வது தெரிந்தால் சிவாஜி என்னேரமும் அங்கிருந்தும் அவர்கள் போவதற்குள் தப்பித்துப் போய் விடும் அபாயம் இருந்தது. அதனால் தான் அவர்கள் அப்போது அந்த எண்ணத்தைக் கைவிட்டார்கள். இப்போது நாம் பன்ஹாலா கோட்டையில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய நிலையில் இல்லாததால் அந்தக் காரணங்கள் இல்லை…..”

அலி ஆதில்ஷா கேட்டான். “சரி. மும்முனைத் தாக்குதலுக்குத் தயாராக இருக்கும் ஆட்கள் யார்? படைகள் யாருடையவை”

லாக்கம் சாவந்த் சொன்னான். “அரசே! முதல் படை என்னுடையதே. சிவாஜியை ஒழித்தால் ஒழிய நிம்மதியாக இருக்க முடியாது என்ற நிலைமைக்கு நான் தள்ளப்பட்டிருப்பதால் முழு முனைப்போடு என் படையை நான் திரட்டிப் போவேன். இரண்டாம் படையாக தங்கள் அனுமதியோடு பாஜி கோர்ப்படேயின் படையை உத்தேசித்துள்ளேன். பாஜி கோர்ப்படே தங்கள் தந்தையின் உத்தரவின் பேரில் ஷாஹாஜியைத் திறமையுடன் சிறைப்படுத்தியவர். வீரத்தால் மட்டுமல்லாமல் சிவாஜியை சூழ்ச்சியாலும் சமாளிக்க முடிந்தவர் அவர். தங்களிடம் வருவதற்கு முன் அவரிடமும் இது குறித்துப் பேசி விட்டுத் தான் வந்திருக்கிறேன். நீங்கள் அனுமதி அளித்தால் இந்தத் திட்டத்துக்கு முழு மனதோடு சம்மதிப்பதாகக் கூறியிருக்கிறார். மூன்றாவது அணிக்குத் தான் நான் தங்களிடம் இருந்தும் ஒரு படையை எதிர்பார்க்கிறேன்….”

அலி ஆதில்ஷா அவன் சொன்னதைப் பற்றி ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டு யோசித்தான். முழுப் படையையும் வைத்துக் கொண்டு சிவாஜியைக் கவனிப்பதா, கர்நாடகத்தைக் கவனிப்பதா என்று யோசித்துக் கொண்டிருந்த அவனுக்கு இது மிக நல்ல வாய்ப்பாகத் தோன்றியது. ஒரு படைப்பிரிவை இவர்களுடன் அனுப்பி விட்டு மீதிப் படையுடன் கர்நாடகக் கிளர்ச்சியை அடக்கக் கிளம்புவது இரு பக்கத்தையும் சமாளிக்கும் மிக நல்ல வாய்ப்பாகத் தான் தோன்றியது.

லாக்கம் சாவந்த் தொடர்ந்து சொன்னான். “கடந்த கால நிகழ்வுகளை சற்றே யோசித்துப் பாருங்கள் அரசே. சிவாஜி என்றைக்குமே பெரிய படைகளைப் போரிட்டு வென்றதில்லை. எதிர்க்கும் படைகள் பெரிதாக இருக்கும் போதெல்லாம் அவன் சூழ்ச்சியைத் தான் பயன்படுத்தித் தான் வென்றிருக்கிறான். அவனுடைய சூழ்ச்சிக்கு நாம் இடம் கொடுக்காமல் இருந்தால் போதும் அவனை எளிதில் தோற்கடித்து விடலாம்…”

அலி ஆதில்ஷாவுக்கு அவன் சொன்னது சரியென்றே தோன்றியது. அவன் அப்சல்கானை அனுப்பிய போதும், சிதி ஜோஹரை அனுப்பிய போதும் லாக்கம் சாவந்த் சொன்னது போலவே அல்லவா நடந்திருக்கிறது. அலி ஆதில்ஷா ஒரு தீர்மானத்திற்கு வந்தவனாகக் கூறினான். “சரி. உங்கள் திட்டப்படியே நடக்கட்டும். உங்களுடன் நான் எந்த மாதிரியான, எந்த அளவிலான படை அனுப்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?”


சிவாஜியை எதிர்க்க மூன்று படைகள் தயாராகிக் கொண்டிருந்த செய்தி மிகவும் ரகசியமாக வைத்துக்கொள்வதற்கு லாக்கம் சாவந்த் முழுமையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தான். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான ஆட்கள் மட்டும் தான் இந்த மும்முனைத் தாக்குதல் பற்றி அறிந்திருந்தார்கள். மற்ற படைவீரர்கள் போர்த்தாக்குதலுக்கு ஆயத்தமாகிக் கொண்டு இருந்தார்களே ஒழிய எங்கே யாரைத் தாக்கப் போகிறோம் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. லாக்கம் சாவந்த் இந்த ரகசியத்தின் முக்கியத்துவத்தைத் தனித்தனியாக பாஜி கோர்ப்படேயிடமும், தங்களுடன் இணையவிருக்கும் பீஜாப்பூர் படைத்தலைவனிடமும் சொல்லியிருந்தான். “சிவாஜியின் ஒற்றர்கள் எல்லா இடங்களிலும் ஊடுருவியிருக்கிறார்கள். அவர்கள் மூலம் சிவாஜி நம் திட்டத்தை அறிந்து விட்டால் அதற்கு எதிராக ஒரு சூழ்ச்சி வலையை சிவாஜி பின்னி விடுவான். அவனை வெல்ல ஒரே வழி அவன் எதிர்பார்க்காத நேரத்தில் அவனைத் தாக்குவது தான்….”

அவன் சொன்னதில் இருந்த உண்மையை மற்ற இரு தரப்பும் உணர்ந்திருந்ததால் அவர்களும் மிக எச்சரிக்கையாக தங்கள் திட்டம் வெளியே கசிந்து விடாமல் பார்த்துக் கொண்டார்கள்.

ஆனால் அவர்கள் அந்தத்திட்டத்தை ரகசியமாக வைத்துக் கொள்வதில் காட்டிய அந்த அக்கறையை மற்ற தங்கள் நடவடிக்கைகள் விஷயத்தில் கடைப்பிடிக்கவில்லை. குறிப்பாக, சிவாஜிக்கு எதிராகத் தாக்குதலுக்குச் செல்வதற்கு முன் பாஜி கோர்ப்படே தன் முதோல் பகுதியில் மிக முக்கியமான பணி ஒன்றைச் செய்து முடிக்க முன்னூறு வீரர்களுடன் விரைந்து சென்று வர முடிவெடுத்தான். அது எந்த முக்கியத்துவமும் இல்லாத ஒரு சாதாரண நிகழ்வு என்பதால் அதை ரகசியமாக வைத்துக் கொள்வதன் அவசியத்தை அவன் உணரவில்லை….


விஷால்கட்டில் இருந்த சிவாஜிக்கு பாஜி கோர்ப்படேயின் அந்தப் பயணம் குறித்த செய்தி ஒற்றர்கள் மூலம் சென்று சேர்ந்தது. பாஜி கோர்ப்படே, முதோல், முன்னூறு வீரர்கள் என்ற வார்த்தைகளில் அவன் அழுத்தத்தை உணர்ந்தான். பாஜி கோர்ப்படே அவன் தந்தை ஷாஹாஜியைச் சூழ்ச்சியால் சிறைப்படுத்தி பீஜாப்பூர் சுல்தானிடம் ஒப்படைத்தவன். முதோல் விஷால்கட் கோட்டையிலிருந்து வேகமாகச் சென்றால் அரை நாள் பயணம் மட்டுமே. முன்னூறு வீரர்கள் என்பது மிக அற்பமான எண்ணிக்கை. வழிப்பறிக் கொள்ளையர்களிடமிருந்து ஒருவனைக் காப்பாற்ற அந்த எண்ணிக்கை போதுமேயொழிய மற்றபடி சரியாகத் திட்டமிடப்பட்ட ஒரு அதிரடித் தாக்குதலைச் சமாளிக்க அது போதவே போதாது….  சிவாஜி பழையதொரு கணக்கை முடித்து விடுவது என்று தீர்மானித்து எழுந்த போது நள்ளிரவாகி இருந்தது.

மூவாயிரம் குதிரை வீர்ர்களை அவன் தயார்ப்படுத்த கட்டளையிட்ட போது அவன் படைத்தலைவன் கேட்டான். ”பாஜி கோர்ப்படே வெறும் முன்னூறு வீரர்களுடன் தானே செல்கிறான். அவனை வெல்ல நாம் மூவாயிரம் வீரர்களுடன் செல்ல வேண்டுமா என்ன?”

சிவாஜி தன் படைத்தலைவர்களும், வீரர்களும் எதிர்க்கேள்வி கேட்பதை என்றுமே தடுத்தவன் அல்ல, கேள்விகள் கேட்பதை நிறுத்தினால் பதில்கள் பெறுவதும் நின்று போகும். பதில்கள் பெறா விட்டால் கேள்விகளுடன் குழப்பங்களும் சேர்ந்து தங்கும். குழப்பமுள்ள வீரர்கள் முழு அறிவோடும், முழு மனதோடும் போரிட முடியாது. அதனால் ரகசியக் காரணங்கள் இருந்தால் ஒழிய பதில்களை அளிக்க அவன் மறுத்ததில்லை.

சிவாஜி சொன்னான். “பாஜி கோர்ப்படே அழைத்துப் போகிற ஆட்களின் எண்ணிக்கை கடைசி நேரத்தில் கூட மாறலாம். மேலும் அவன் மாவீரன் என்பதனால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளக் கடுமையாகவே போராடுவான் அதனால் அதிக ஆட்களை அழைத்துப் போவது நல்லது தான். முக்கியமாக அவன் என்னிடமிருந்து உயிரோடு தப்பிப்பதை நான் விரும்பவில்லை….”

அன்னை பவானியை வணங்கி விட்டு சிவாஜி மூவாயிரம் படைவீரர்களோடு நள்ளிரவு முடிவடையும் முன் கிளம்பினான்.

வர்கள் கிளம்புவதை விஷால்கட் கோட்டைக்கு வெளியே தொலைவிலிருந்த ஒரு பாறையின் பின்னால் மறைந்திருந்து லாக்கம் சாவந்தின் ஒற்றன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் இதைச் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை.  லாக்கம் சாவந்த் தங்கள் தாக்குதல் ஆரம்பிக்கும் வரை அங்கு நடக்கும் ஒவ்வொன்றையும் உடனுக்குடன் அறிந்து சொல்லுமாறு அவனைப் பணித்திருந்தான். இப்படி திடீரென்று கிளம்பும் படை குறித்து லாக்கம் சாவந்திற்குத் தெரிவிக்க அவனும் விரைந்து சென்றான்.


(தொடரும்)
என்.கணேசன்

2 comments:

  1. எதிர் அணி ஒரு கணக்கு போட்டால், இங்கு வேறு மாதிரி நடக்கப் போகிறதே....
    "எப்போதும் சும்மா இருக்காமல் சுறுசுறுப்பாக தன் கடமைகளை செய்து கொண்டிருந்தால்.... நம்மை சுற்றி பின்னப்படும் சூழ்ச்சி வலைகள் தானாகவே அறுந்துவிடும்" போல....

    ReplyDelete
  2. இதுதான் இறையருளும் புத்திசாலித்தனத்துக்கும் உள்ள வித்தியாசம்

    ReplyDelete