இல்லுமினாட்டியின்
தலைவரான எர்னெஸ்டோ வாஷிங்டன் பயணத்தை முடித்துக் கொண்டு ம்யூனிக் விமான நிலையத்தில்
இறங்கிய போது அவர் அலைபேசியில் தகவல் வந்தது.
“உங்கள் வீட்டில் ஜான் ஸ்மித் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்”
எர்னெஸ்டோ ஏதோ ஒரு பிரச்சினையான தகவல் காத்துக் கொண்டிருப்பதை
உணர்ந்தார். நேற்றும் ஜான் ஸ்மித் அவரைக் கேட்டு போன் செய்ததாக உதவியாளர் தெரிவித்திருந்தார்.
இன்று நேரடியாகவே பேச ஜான் ஸ்மித் காத்துக் கொண்டிருக்கிறார் என்றால் மிக அவசரத் தகவலாகத்
தான் இருக்க வேண்டும் என்பது எர்னெஸ்டோவுக்குப் புரிந்தது. ஏனென்றால் மூளை விஞ்ஞானியான
ஜான் ஸ்மித் வீணாக்கும் அளவுக்குக் காலம் இல்லாதவர்…
எர்னெஸ்டோவின் அரண்மனை போன்ற பங்களா பல அடுக்குகள் பாதுகாப்புகள்
கொண்டது. இல்லுமினாட்டியின் உயர்மட்ட உறுப்பினர்களைத் தவிர மற்ற உறுப்பினர்களே கூட
முன் அனுமதி பெறாமல் அங்கே நுழைய முடியாது. முன் அனுமதி பெறுவதும் அவ்வளவு சுலபமல்ல.
மற்ற சாதாரண உறுப்பினர்களே கூட, சந்திக்கவிருக்கும் காரணத்தை எழுத்து மூலம் அனுப்பிக்
காத்திருக்க வேண்டும். அது பின் எர்னெஸ்டோவின்
பார்வைக்குப் போகும். அதைப் பார்த்து அவசியம் என்று கருதினால் மட்டுமே அவர் சந்திக்க
அனுமதி அளிப்பார். மற்ற வெளியாட்கள் எத்தனை சக்தி வாய்ந்த ஆட்களானாலும் அவரைச் சந்திக்க
விரும்பினால் அவருடைய உதவியாளருக்கு காரணத்தோடு வேண்டுகோள் விடுக்க வேண்டும். அவர்
அனுமதிக்கத் தகுந்த காரணங்கள் உள்ளதாக நினைத்தால் தான் அந்த வேண்டுகோளை எர்னெஸ்டோவின்
பார்வைக்கே அனுப்பி வைப்பார். இப்படி எத்தனையோ சக்தி வாய்ந்த பிரபல மனிதர்கள் எர்னெஸ்டோவைச்
சந்திக்க இப்போதும் அனுமதிக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம் இல்லுமினாட்டியின்
தலைமைப் பதவி அமெரிக்க ஜனாதிபதியின் பதவிக்குச் சற்றும் குறைந்ததல்ல. சொல்லப் போனால்
இரு அவைகளிலும் பெரும்பான்மை ஆதரவு பெற்றவராக இருக்கும் ஒரு அமெரிக்க ஜனாதிபதியை விடவும்
சக்தி வாய்ந்த பதவியாக இல்லுமினாட்டியின் தலைமைப் பதவி இருந்தது.
விமானத்தில் பயணித்த போதும் சரி, விமானநிலையத்திலிருந்து
தன் அரண்மனை போன்ற பங்களாவுக்கு வந்து சேரும் வரையும் சரி பல அடுக்குப் பாதுகாப்பில்
இருந்த எர்னெஸ்டோ தன் வரவேற்பு அறையில் காத்திருந்த ஜான் ஸ்மித்தைப் பார்த்துப் புன்னகையுடன்
சொன்னார். “நீண்ட பயணம் முடித்து வரும் இந்தக் கிழவனுக்கு நீ ஓய்வு தர மறுக்கிறாய்
ஜான் ஸ்மித். இது நியாயமல்ல….”
“மிக முக்கியமான விஷயமாக இல்லா விட்டால் நான் உங்களைத் தொந்திரவு
செய்திருக்க மாட்டேன் தலைவரே” என்று ஜான் ஸ்மித் எழுந்து நின்று சொன்னார்
”உட்கார். எதுவாக இருந்தாலும் சுருக்கமாகச் சொல் பார்ப்போம்…”
என்று சொன்னபடி எர்னெஸ்டோ சோபாவில் அமர்ந்தார்.
எர்னெஸ்டோ என்றுமே நீண்ட பிரசங்கங்களையும், விவரிப்புகளையும்
சகித்துக் கொண்டதில்லை. அதற்கு அவரிடம் நேரமுமில்லை. விஷயமில்லாமல் வள வளவென்று பேசினால்,
பேசப் பேசப் பாதியில் எந்தச் சங்கடமும் இல்லாமல் எழுந்து உள்ளே போய் விடக்கூடியவர்
அவர். அதனால் அவரைச் சந்திக்க வருபவர்கள் தாங்கள் சொல்ல வந்ததைச் சுருக்கமாகச் சொல்ல
தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டே வருவார்கள்.
ஜான் ஸ்மித் சொன்னார். “மூன்று நாள் முன்பு நம் கூட்டத்தில்
ஒருவன் இறந்து போன அதே நேரத்தில் அந்தத் தெருவில் இருக்கும் மருத்துவமனையில் இறந்து
கொண்டிருந்த ஒரு போதை மனிதன் பிழைத்துக் கொண்டிருக்கிறான் தலைவரே. பிழைத்தவன் தலைமறைவாகியும்
விட்டான்….”
எர்னெஸ்டோவின் பார்வை கூர்மையாகியது. “தற்செயலாகச் சில அதிசயங்கள்
மனித வாழ்க்கையில் நடப்பதுண்டு ஜான் ஸ்மித்.”
“உண்மை. ஆனால் தற்செயலாய் ஒரே நேரத்தில் பல அதிசயங்கள் நடந்தால்
அதைத் தற்செயல் என்று நினைப்பது தவறல்லவா தலைவரே”
எர்னெஸ்டோ தலையசைத்தார். “சரி நடந்ததை விளக்கமாகச் சொல்….”
ஜான் ஸ்மித் எல்லாவற்றையும் சொன்னார். எர்னெஸ்டோ இடைமறிக்காமல்
கேட்டுக் கொண்டார். உணர்ச்சிகள் எதையும் வெளியே காண்பிக்காமல் எல்லாவற்றையும் கேட்டுக்
கொள்ளும் அவர், கேட்கும் விஷயங்களுக்கு அதிகமாய் முக்கியத்துவம் தருவது போல வெளியே
தெரியா விட்டாலும் அவருடைய கூர்மையான அறிவுக்கு எதுவும் தப்பாது என்பதை ஜான் ஸ்மித்
அறிவார். அதை உறுதிப்படுத்துவது போல் எர்னெஸ்டோ கடைசியில் கேட்டார். “நீ முக்கியமாய்
அவனுடைய மூளை ஸ்கேன் ரிப்போர்ட்கள் பார்த்துத் தான் சந்தேகப்படுகிறாய் போல் தெரிகிறது.
அந்த ஸ்கேன் ரிப்போர்ட்களில் என்ன அதிசயத்தைப் பார்த்தாய் ஜான் ஸ்மித்…”
ஜான் ஸ்மித்தால் திகைக்காமல் இருக்க முடியவில்லை. அவர் சொல்லும்
போது டேனியலின் உடல்நிலையில் முன்பும், பின்பும் ஏற்பட்ட ஏற்பட்ட மாற்றங்கள் ஆச்சரியப்படும்படி
ரிப்போர்ட்களில் தெரிந்தன என்று எல்லா ரிப்போர்ட்களையும் சேர்த்துப் பொதுவாகத் தான்
சொல்லியிருந்தார். எர்னெஸ்டோ மூளை ஸ்கேன்களை மட்டும் குறிப்பாகக் கேட்டது ஜான் ஸ்மித்
மூளை விஞ்ஞானி அதனால் அதில் ஏதாவது வித்தியாசமாய் பார்த்திருக்கலாம் என்ற அனுமானத்தாலா
இல்லை வேறெதாவது காரணம் இருக்குமா என்று ஜான் ஸ்மித்தால் கணிக்க முடியவில்லை.
ஜான் ஸ்மித் தன் ப்ரீஃப்கேஸில் கொண்டு வந்திருந்த ஸ்கேன்
ரிப்போர்ட்களின் படங்களை வெளியே எடுத்துக் காண்பித்து விளக்கினார். “டேனியலின் முந்தைய
மூளை ஸ்கேன்களைப் பாருங்கள் தலைவரே…. அவை மூளை செயல் இழந்து கொண்டே வருவதைத் தான் காட்டுகின்றன. படிப்படியாக மரணத்தை எட்டும் மனிதனின்
மூளையின் தன்மையையே அவை தெளிவாகத் தெரிவிக்கின்றன. இவை அவன் பிழைக்க ஆரம்பித்த போது
எடுக்கப்பட்ட ஸ்கேன் ரிப்போர்ட்கள். இவை அதிகபட்ச செயல் திறனைக் காட்டுகின்றது. இது
அறிவியல் அதிசயம் தான். காரணம் அப்படி ஒருவேளை ஒருவன் ஏதாவது ஒரு அதிசயத்தால் உயிர்
பிழைக்கிறான் என்றாலும் கூட அவன் உயிர் பிழைத்து நலமாவதற்கு வேண்டிய செயல்கள் தான்
மூளையில் மெல்லத் தெரிய வரும். இப்படி ஒரே நேரத்தில் மூளையின் அத்தனை பகுதிகளும் படபடவென்று
வேலை செய்யாது…. அதுவும் சில பகுதிகள் டேனியல் தன் வாழ்க்கையில் இது வரை உபயோகித்தே
இருக்காத பகுதிகள்…. அது சாத்தியமே அல்ல…. அவன் அது வரை ஆர்வமே காட்டியிருக்காத விஷயங்களைக்
குறிக்கிற, உபயோகப்படுத்தியே இருக்காத, பகுதிகளின் உச்சக்கட்ட வேலைகள் மூளையில் நடப்பது
இது வரை யாரும் பார்த்திருக்காத அதிசயம் தான்…. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமானால்
அதிக ப்ரோகிராம்கள் இருந்திருக்காத ஒரு பழைய கம்ப்யூட்டரில் பல புதிய ப்ரோகிராம்களை
வேகமாக ஏற்றுவது போலான முயற்சி அது….”
எர்னெஸ்டோ கேட்டார். “அந்தப் புதிய ப்ரோகிராம்கள் எது சம்பந்தமானவை
என்று எனக்குப் புரிகிற மாதிரி எளிமையாகச் சொல்ல முடியுமா ஜான் ஸ்மித்?”
ஜான் ஸ்மித் சொன்னார். ”அமானுஷ்ய சக்திகள், யோகசக்திகள்…..
அவற்றை உபயோகிக்கும் போது மூளையின் எந்தப் பகுதிகள் எல்லாம் செயல்பாடுகளைக் காண்பிக்குமோ
அந்தப் பகுதிகள் எல்லாம் டேனியலின் மூளையில் புதியதாகச் செயலாக்கம் பெற்றிருக்கின்றன”
எர்னெஸ்டோ திகைத்தார். இந்தத் தகவல் தான் டேனியல் என்ற போதை
மனிதன் உயிர் பிழைத்ததுடன் தலைமறைவானதை ஆபத்தாக அறிவிக்கின்றது என்பது அவருக்குப் புரிந்தது.
அது நிச்சயமாக ஜான் ஸ்மித் சந்தேகிப்பதைப் போல அந்த அசாதாரண மனிதனின் அடையாளம் தான்….
அவர் கண்களை மூடி இரண்டு நிமிடங்கள் யோசித்தார். ஒரு புதிய
உறுப்பினர் இல்லுமினாட்டியில் இணைக்கப்படும் போது அந்த உறுப்பினர் குறித்த எல்லாத்
தகவல்களையும் பல தரப்பிலிருந்து இல்லுமினாட்டியின் மிகச்
சக்தி வாய்ந்த உளவுத்துறை சேகரித்துக் கொள்ளும். இந்த விஷயத்தில்
இல்லுமினாட்டிக்கு ஆயிரம் கண்கள், ஆயிரம் காதுகள், ஆயிரம் கைகள். அப்படி அவர்கள் அவனைப்
பற்றிப் பெற்றிருருக்கிற தகவல்களின் படி அந்த அசாதாரண மனிதன் பல ஆட்களைத் தன் வேலைகளுக்குப்
பயன்படுத்தி இருக்கின்றான் என்றாலும் அது ஒரு எஜமானன் கூலித் தொழிலாளிகளைப் பயன்படுத்தும்
வகையான தொடர்புகள் தான். மற்றபடி அவன் தனியனே. அவனுக்குக் கூட்டாளிகள் யாரும் கிடையாது.
ஆனால் நடந்திருக்கும் சம்பவங்கள் ஒரு கூட்டாளியும்
இருப்பதாகச் சொல்கின்றனவே.
இப்படி இறக்க நேரிடும் என்று அவன் அறிய வாய்ப்பே இல்லை. ஏனென்றால்
பூரண ஆரோக்கியத்துடனும் சக்தியுடனும் இருந்தவன் அவன். இல்லுமினாட்டியும் கூட எதிர்பார்க்காத
நிகழ்வு அது. அப்படி இருக்கையில் அவன் இதை எதிர்பார்த்து வேறெந்த ஏற்பாடுகளையும் செய்திருக்க
முடியாது என்பது நிச்சயம். அவன் ம்யூனிக் வந்த போது அவனுடன் யாரும் வரவில்லை என்பதும்
அவர்கள் நிச்சயமாக அறிந்து கொண்ட உண்மை. அப்படி இருக்கையில் நடந்திருக்கும் சம்பவங்கள்
இல்லுமினாட்டிகே ஒரு சவாலாக இருக்கின்றன.
எர்னெஸ்டோ கேட்டார். “அவனை அழைத்துச் சென்றது யாராக இருக்கும்
என்று ஏதாவது யூகங்கள் உன்னிடம் இருக்கிறதா ஜான் ஸ்மித்”
“இல்லை தலைவரே. ஆனால் இல்லுமினாட்டியால் கண்டுபிடிக்க முடியாத
ஆளோ, தகவலோ இந்த உலகில் இருக்க முடியுமா என்ன?” என்று நம்பிக்கை மிகுந்த தொனியில் ஜான் ஸ்மித் கேட்டார்.
“உண்மை தான். ஆனால் இது வரை யூகிக்கக்கூட முடியாத நிலைமையும்
இல்லுமினாட்டிக்கு வந்ததில்லையே ஜான் ஸ்மித்” என்று எர்னெஸ்டோ யோசனையுடன் சொன்னார்.
(தொடரும்)
என்.கணேசன்
அருமையாக தொடர்கிறது - அமானுஷ்ய நடையில் சூப்பர்- நன்றிகள்
ReplyDeleteஇலுமினாட்டி தலைவரின் தெளிவு அற்புதம்...இவ்வளவு ஆபத்தான விசயத்தையும் படபடப்பு இல்லாமல் கேட்கிறார்... சுருக்கமா சொல் என்கிறார்... அருமை...
ReplyDeletesir arumai semma suspense enga mulaiya parpagitingalay super sir thanku
ReplyDeleteVery interesting episode.
ReplyDeleteSir, only you can do this magic. You have tied all of us through your wonderful episode.
ReplyDelete