சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, May 13, 2019

சத்ரபதி – 72



நேதாஜி பால்கர் சொன்னது போல் அப்சல்கான் பரமதிருப்தியுடன் இருந்தான். அவன் இந்த அளவு சௌகரியங்களை இந்த மலைக்காட்டுப் பகுதிகளில் எதிர்பார்த்திருக்கவில்லை. தங்கிய முகாம்களில் அரண்மனையின் சௌகரியங்கள் செய்யப்பட்டிருந்தன. தரப்பட்ட உணவிலும் ருசியும், தரமும் எந்தக் குறையும் சொல்ல முடியாத அளவுக்கு செய்யப்பட்டிருந்தன. திரும்பி வருகையில் சிவாஜியை உயிருடன் கூட்டி வருவோமா அல்லது இல்லையா என்பதைத் தவிர அவனுக்குத் தன் வெற்றியில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ராத்தொண்டி கணவாயில் இரவை அருமையான உறக்கத்தில் கழித்து விட்டு அவன் மறுநாள் காலை தனக்குப் பிரியமான யானை மீதேறிப் பயணத்தைத் தொடர்ந்தான். சில அடிகள் எடுத்து வைத்த யானை அதற்குப் பின் நகர மறுத்தது.

அப்சல்கான் தன்னால் ஆன முயற்சிகள் அத்தனையும் செய்து பார்த்தான். ஆனால் பலனில்லை. வேறு வழியில்லாமல் இறங்கிய அப்சல்கான் வேறொரு யானையில் ஏறிப்பயணத்தைத் தொடர்ந்தான்.

அந்த நிகழ்வில் அவன் படையினர் பலரும் இன்னொரு அபசகுனத்தை உணர்ந்தார்கள். தவறி விழவே வாய்ப்பில்லாத பீரங்கி அந்த ஓடையில் தவறி விழுந்தது, தலையில்லா முண்டத்தின் தலைமையில் படை போகிறதாக அந்தப் பரதேசி சொன்னது, இப்போது அப்சல்கானின் யானை நகர மறுத்தது எல்லாம் சேர்ந்து அவர்களுக்குக் காத்திருக்கும் ஆபத்தை முன்கூட்டியே அறிவித்தது போல் தோன்றியது.

அந்த அபசகுன ஆபத்து உணர்வை அவர்களுடன் இருந்த மாவல் வீரர்கள் அதிகப்படுத்தினார்கள். சிவாஜி ஆபத்தானவன் என்றார்கள், அவன் மாந்திரீகம் அறிந்தவன் என்றார்கள், அன்னை பவானியின் அருள் பெற்றவன் என்றார்கள், எல்லாச் சூழ்ச்சிகளையும் வெல்லும் சூழ்ச்சியை அறிந்தவன் என்றார்கள், அவன் இது வரை தோல்வி அடைந்தது இல்லை என்றார்கள், அவனை மலை எலி என்றார்கள். மலைக்காடுகளில் தீப்பற்றிக் கொண்டாலும் மலை எலி தன்னைப் பாதுகாத்துக் கொண்டு தப்பித்து விடும் என்றார்கள்…..அந்தத் தகவல்கள் எல்லாம் மலைக்காட்டுப் பகுதியின் அமானுஷ்யத்தில் அவர்களூக்கு மேலும் கிலியை ஏற்படுத்தின. பாதையின் இருபக்கமும் இருந்த காடுகளில் பல கண்கள் தங்களைக் கண்காணிப்பதாக உணர்ந்தார்கள். அவர்கள் செல்லும் பாதையில் மரங்கள் வெட்டப்பட்டிருந்ததால் சூரிய வெளிச்சம் விழுந்ததே ஒழிய அந்தச் சூரிய வெளிச்சம் இருபக்கமும் இருந்த காடுகளுக்குள் ஊடுருவவில்லை என்பதை அவர்கள் கவனித்தார்கள். அந்த அளவு அடர்த்தியான காடுகளுக்குள்  மாந்திரீகனான சிவாஜி என்ன சக்திகளை எல்லாம் காவலுக்கு வைத்திருக்கிறானோ? மனித மனங்கள் அல்லவா? என்னென்னவோ கற்பனை செய்து பயப்பட்டன….

அவர்களது பயங்கள் குறித்தப் பேச்சுகள் அப்சல்கானின் காதுகளையும் எட்டின. கேட்டு விட்டு அப்சல்கான் வயிறு குலுங்கச் சிரித்தான். “பீரங்கி விழுந்தது உடைந்து விடவில்லை. அதை என்னால் என் ஒரு கையால் தூக்கி வைக்க முடிந்தது. அந்தப் பைத்தியக்காரப் பரதேசி உளறினானேயொழிய என்னைச் சந்திக்கப் பயந்து அங்கிருந்து தப்பி ஓடி ஒளிந்து கொண்டான். விலங்குகள் சில சமயம் அடம் பிடிப்பது உண்டு. அது சகஜமே. நான் அடுத்த யானை மேல் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். இதுவும் நின்று விடவில்லை. நான் என் இலக்கை நோக்கிச் சென்று கொண்டு தானிருக்கிறேன். எதுவும் எந்த விதத்திலும் என் பயணத்தைத் தடைப்படுத்தி விடவில்லை. இப்படி இருக்கையில் சகுனங்கள் பார்த்து பயந்து சாகின்றார்களே சில வீரர்கள். இந்தப் பேடிகள் ஏன் படையில் சேர்கிறார்கள்?...”

அவனுடைய பேச்சு படைவீரர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்களுடைய பயம் நீங்கி விடவில்லை. இப்போதும் பக்கவாட்டில் இருந்த காடுகளில் இருந்து அவர்கள் கண்காணிக்கப்படுவதாய் சிலர் தீர்க்கமாகவே உணர்ந்தார்கள். அவர்கள் உணர்ந்தது பொய் அல்ல. உண்மையில் நேதாஜி பால்கரின் படைவீரர்கள் அந்தக் காடுகளுக்குள் பதுங்கி இருந்து அவர்களைப் பார்த்துக் கொண்டு தானிருந்தார்கள்.

அதை அறியாமல் அப்சல்கான் படையுடன் முன்னேறினான்…..

ப்சல்கான் பிரதாப்கட் கோட்டையை நெருங்கி விட்டான். அவனும் அவனுக்கு மிக வேண்டியவர்களும் பாதுகாவலர்களும் தங்க, கோட்டைக்கு ஒரு மைல் தொலைவில் சகல வசதிகளுடன் பெரியதொரு முகாம் அமைக்கப்பட்டிருந்தது. அவன் வந்து சேர்ந்ததை அறிவிக்க கிருஷ்ணாஜி பாஸ்கர் இரு அதிகாரிகளுடன் கோட்டைக்குச் சென்றார். பண்டாஜி கோபிநாத் அவரை வரவேற்று பிரதாப்கட் கோட்டைக்கு வெளியே இருந்த பெரியதொரு கூடாரத்தைக் காட்டினார்.

“ஐயா! பேச்சு வார்த்தை இங்கே தான் நடைபெறப் போகிறது. வசதிகள் போதுமா, தங்களுக்குத் திருப்தி தானா என்று தாங்கள் தெரிவிக்க வேண்டும்” என்று பணிவுடன் கேட்டுக் கொண்டார்.

கூடாரத்தின் உள்ளே அமர பட்டு மெத்தைகள் இருந்தன. கூடாரத்தைப் பல விதமான அழகுத் திரைச்சீலைகள் அலங்கரித்திருந்தன. தரையெல்லாம் மென்மையான அழகுக் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. குற்றம் சொல்ல எதுவுமில்லை. கிருஷ்ணாஜி பாஸ்கர் தன்னுடன் இருந்த இரு அதிகாரிகளைப் பார்த்தார். அவர்கள் திருப்தியுடன் தலையசைத்தார்கள்.

அடுத்ததாக பேச்சு வார்த்தையின் போது எத்தனை ஆட்கள் கூட இருப்பார்கள் என்று முடிவு செய்ய பண்டாஜி கோபிநாத் அவர்களுடன் சென்று அப்சல்கானைச் சந்தித்தார். அப்சல்கான் முன்கூட்டியே உஷாராக இருந்ததால் இந்த முறை பண்டாஜி கோபிநாத் காலில் விழுந்த போது அதிர்ந்து விடவில்லை.

வணங்கிப் பணிவுடன் எழுந்து கேள்விக்குறி போல் பாதி வளைந்த நிலையில் பண்டாஜி கோபிநாத் சொன்னார். “பேச்சு வார்த்தையின் போது அதிக ஆட்கள், வீரர்கள் உடன் இருப்பதை மன்னர் சிவாஜி விரும்பவில்லை. பிரபு. பேச்சு வார்த்தை நடத்த இருக்கும் நீங்கள் இருவரும் நிராயுதபாணியாக இருப்பது தான் நியாயம் என்று மன்னர் நினைக்கிறார்ஏதாவது ஒரு ஆயுதம் தரித்தபடி உங்களுடன்  இருவரும் அவருடன் இருவரும் இருந்தால் போதும் என்று நினைக்கிறார்”

அப்சல்கான் உடனடியாகச் சம்மதம் தெரிவித்து விடாமல் அவரைச் சந்தேகத்துடன் பார்த்தான்.

“உங்களுக்கு வெறும் இரண்டு பேர் உடனிருப்பது அச்சத்தை ஏற்படுத்தினால்….. “ பண்டாஜி கோபிநாத் மெல்ல இழுத்தார்.

அப்சல்கான் வாய் விட்டுச் சிரித்தான். “அச்சமா,…… எனக்கா…. யாரிடம் அச்சத்தைப் பற்றிப் பேசுகிறாய் கோமாளியே…..”

“அடியேனை மன்னிக்க வேண்டும் பிரபு…. தங்கள் தயக்கத்தினால் தான் நான் அவ்வாறு கேட்டேன்…..”

“சரி என்று சிவாஜியிடம் சொல். என்னுடன் சையத் பாண்டாவும், கிருஷ்ணாஜி பாஸ்கரும் வருவார்கள்…..”

மறுபடியும் அவனை வணங்கி விட்டு பண்டாஜி கோபிநாத் சென்றார். அவர் சிவாஜியிடம் தகவலைச் சொன்ன போது யேசாஜி கங்க் சொன்னான். “சையத் பாண்டா மிகச்சிறந்த வாள் வீரன். அதி பலசாலி. அவன் ஒருவனே மூன்று பேருக்குச் சமம்”

சிவாஜி அதை அறிந்திருந்தான். ஆனால் இத்தனை தூரம் இறங்கி வந்திருக்கும் அப்சல்கானிடம் இதற்கும் மறுப்பு தெரிவிப்பது அவனுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தும் என்று தோன்றியது. தன்னுடன் யாரை அழைத்துப் போவது என்று யோசித்து மாவீரனும் இளைஞனுமான ஜீவ மஹல்லா என்பவனையும், ஜாவ்லியில் சந்திராராவ் மோரைக் கொன்றவனான சம்பாஜி காவ்ஜியையும் அழைத்துப் போக முடிவு செய்தான்.

இருபக்க அதிகாரிகளும் மறுநாள் மாலையில் சந்திப்பதாகப் பேசி முடிவு செய்தார்கள். அதை அவன் அதிகாரிகள் வந்து சொன்னதும் சிவாஜி உறங்கப் போனான். அன்றிரவின் உறக்கம் முழுமையாக இருந்தது.. சிவாஜியின் நண்பர்களும் படைத்தலைவர்களும் அவனால் அப்படி உறங்க முடிந்ததை வியப்புடன் பார்த்தார்கள். அவர்களால்  அன்றிரவு உறங்க முடியவில்லை….

மறுநாள் அதிகாலையில் எழுந்து குளித்து அன்னை பவானியின் சிலை முன் அமர்ந்து நீண்ட நேரம் சிவாஜி பிரார்த்தித்தான். அவளிடம் மனம் விட்டுப் பேசினான். அவள் ஆசிர்வதிப்பதாய் உணர்ந்தான். அவன் உடலெல்லாம் பரவசமாகியது. புதியதொரு சக்தியை உணர்ந்தான்.

ப்சல்கானை அவன் வீரர்கள் பல்லக்கில் தூக்கி வந்தார்கள். கூடவே சையத் பாண்டாவும், கிருஷ்ணாஜி பாஸ்கரும் குதிரைகளில் வந்தார்கள். பேச்சு வார்த்தை நடக்கவிருக்கும் கூடாரத்தை நெருங்கியவுடன் முதலில் சையத் பாண்டா கூடாரத்திற்குள் சென்று பார்வையிட்டான். திரைச்சீலைகளின் பின்னால் யாராவது மறைந்திருக்கிறார்களா என்று நிதானமாக ஒவ்வொரு இடமாகப் பார்த்து பின் திருப்தி அடைந்தவனாய் வெளியே வந்து அப்சல்கானைப் பார்த்துத் தலையசைத்தான்.

அப்சல்கான் அவர்கள் இருவருடனும் கூடாரத்திற்குள் நுழைந்தான். மெத்தையில் அமர்ந்தபடியே கிருஷ்ணாஜி பாஸ்கரிடம் கேட்டான். “எங்குமே இவனிடம் செல்வச் செழிப்புக்குக் குறைவில்லை. செல்வத்தை வாரி இறைத்து அலங்கரித்து இருக்கிறானே? இவனுக்கு ஏது இத்தனை செல்வம்?”

கிருஷ்ணாஜி பாஸ்கர் புன்னகையுடன் சொன்னார். “இதெல்லாம் அவன் அபகரித்த பீஜாப்பூரின் செல்வம் தான் பிரபு. ஆனால் அவன் அதை இந்த அளவு வாரி இரைத்திருப்பது உங்களுக்காகத் தான். உங்களைத் திருப்திப்படுத்தத் தான்… தங்கள் மனம் கோணக்கூடாது என்று சிவாஜி நினைக்கிறான்”


அப்சல்கான் சிரித்தான். அடுத்தவன் மனம் கோணக்கூடாது என்று நினைப்பதே ஒருவனது பலவீனம் தான் என்று அவன் நினைத்தான். இந்தப் பலவீனனை வெற்றி கொள்வது பெரிய விஷயம் அல்ல. சிவாஜி தந்திரசாலி என்றால் அவன் பலமடங்கு தந்திரமானவன். பீஜாப்பூர் சுல்தானை எதிர்த்துக் கொண்டிருக்கும் சிவாஜியைச் சிறைப்பிடித்து எடுத்துப் போக முடியுமா இல்லை கொன்று பிணமாகத் தான் எடுத்துச் செல்ல வேண்டுமா என்ற யோசனையில் ஆழ்ந்தபடி சிவாஜிக்காகக் காத்திருந்தான்.

(தொடரும்)
என்.கணேசன் 

2 comments:

  1. We learn about those historical people and their thought processes clearly by your writing and we travel back to that time while reading this novel.

    ReplyDelete
  2. என்ன நடக்கப் போகிறது என்று தெரியலையே..... 'அன்னையின் ஆசி சிவாஜிக்கு கிடைத்திருப்பதால், இம்முறையும் சிவாஜியே வெல்வான்' என நினைக்கிறேன்.

    ReplyDelete