சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, May 15, 2019

அறிவுக்கு எட்டாத அதிசய நிகழ்வுகள்!


ஆன்மிகப் பயணத்தில் ஆத்மசக்திகள் - 2
  

ரண்டு செயற்கைப் பட்டாம்பூச்சிகளை உருவாக்கிப் பறக்க விட்ட நிகழ்ச்சி கர்னல் ஓல்காட்டை வியக்க வைத்தது என்றால் பிறிதொரு சமயத்தில் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் செய்து காட்டிய அற்புதம் கர்னல் ஓல்காட்டைப் பிரமிக்கவே வைத்தது. அந்த அற்புதச் செயலைப் பார்ப்போம்.

ஒரு கடும்பனிக் காலத்தில் அமெரிக்காவில் ப்ளாவட்ஸ்கீ அம்மையார், ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். கர்னல் ஓல்காட் அவருக்கு உதவிக் கொண்டிருந்தார். வெளியே தரையில் ஒரு அடிக்கும் மேலே பனி படர்ந்திருந்தது. நள்ளிரவைக் கடந்தும் அவர்கள் உத்தேசித்திருந்த பணி முடியவில்லை. கர்னல் ஓல்காட்டுக்குத் தாகமாக இருந்தது. அவர்இப்போது திராட்சை சாப்பிட்டால் நன்றாக இருக்கும் போல் தோன்றுகிறதுஎன்று ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் சொன்னார். 

சரி சாப்பிடலாம்என்று ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் சொன்னார்.

இந்த நள்ளிரவு நேரத்தில் எந்தக் கடை திறந்திருக்கும்?” என்று கர்னல் ஓல்காட் கேட்டார்.

அதனாலென்ன. நாம் சாப்பிடுவோம்என்று ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கூறினார்.

குழப்பமடைந்த கர்னல் ஓல்காட்எப்படி?” என்று கேட்டார்.

ப்ளாவட்ஸ்கீ அம்மையார்இதோ காட்டுகிறேன். முதலில் மேசை விளக்கின் வெளிச்சத்தைக் குறையுங்கள்என்று சொன்னார்.

அது மின்சாரம் இல்லாத காலகட்டமாதலால் எண்ணெய் விளக்குகளும், காஸ் விளக்குகளும் தான் மேசை விளக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. காஸ் மேசை விளக்கின் வெளிச்சத்தைக் குறைக்கும் திருகாணியை கர்னல் ஓல்காட் திருகியதில் ஒரேயடியாக விளக்கு அணைத்து விட்டது.

விளக்கொளியைக் குறைக்கத் தான் சொன்னேன். அணைக்கத் தேவையிருக்கவில்லை. மறுபடி சீக்கிரம் பற்ற வையுங்கள்என்று ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சொல்ல கர்னல் ஓல்காட் மேசையிலேயே இருந்த தீப்பெட்டியை எடுத்து விளக்கை மறுபடி பற்ற வைத்தார்.

மறுபடி அறை விளக்கொளியால் நிறைந்த போது அருகில் இருந்த புத்தக அலமாரியில் இரண்டு பெரிய கருப்புத் திராட்சைக் கொத்துகள் இருந்தன. பழைய சம்பவத்தில் பட்டாம்பூச்சிகள் செயற்கையாக இருந்தது போல அந்தத் திராட்சைக் கொத்துகள் செயற்கையாக இருக்கவில்லை. இருவரும் திராட்சைகளை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தார்கள். சுவைத்த பிறகு கர்னல் ஓல்காட் அடைந்த பிரமிப்புக்கு அளவேயில்லை. அவர் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரைக் கேட்டார். “எப்படி இது சாத்தியம்?”

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அதை யக்ஷினி வித்தையாகச் சொன்னார். அந்த வித்தையில் சில மேலான சக்திகள் பயன்படுத்தப்படுகின்றன. சில நேரங்களில் மேலான சக்திகள் அமானுஷ்ய சக்தி படைத்த மனிதர்களாகவும் இருக்கிறார்கள். அப்படி அருவமாகவும், உருவத்துடனும் இமயமலை போன்ற இடங்களில் பலர் இருப்பதையும் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சொல்லியிருந்ததை முன்பே பார்த்தோம். அந்த அமானுஷ்ய சக்தியாளர்களைமகாத்மாக்கள்என்றும்மாஸ்டர்ஸ்என்றும் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் போன்றோர் அழைத்தார்கள். அவர்களில் சிலரை கர்னல் ஓல்காட்டுக்கும் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் ஒரு நாட்டையோ, உலகின் ஒரு பகுதியையோ மட்டும் சார்ந்தவர்கள் அல்ல. உலகில் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அவர்கள். அவர்கள் பொதுமக்கள் மத்தியில் அதிகம் வருவதில்லை. அப்படியே வர நேர்ந்தாலும் சக்தியாளர்களாகத் தங்களைக் காண்பித்துக் கொள்வதில்லை. அவர்கள் தேர்ந்தெடுக்கும் மனிதர்களை மட்டுமே அவர்கள்  தொடர்பு கொள்வார்கள். இதையெல்லாம் காலப்போக்கில் கர்னல் ஓல்காட் அறிந்தார். அந்தத் திராட்சைக் கொத்தைக் கொண்டு வந்து தந்ததும் அப்படிப்பட்ட மகாசக்திகளில் ஒன்று என்று அறிந்து கொண்ட கர்னல் ஓல்காட்டுக்கு அதைப் பற்றி அதற்கு மேல் அதிக விளக்கங்கள் தர ப்ளாவட்ஸ்கீ அம்மையார் முற்படவில்லை.  

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் மூலமாக ஒரு சில மகாத்மாக்கள் அல்லது மாஸ்டர்கள் கர்னல் ஓல்காட்டுக்கு அறிமுகமான பின் அவருடைய ஆன்மிகப் பணிகள் அதிகரித்தன. சில பணிகளை அந்த மகாத்மாக்கள் தன்னிடம் ஒப்படைத்ததாக கர்னல் ஓல்காட் கூறுகிறார். எல்லா சமயங்களிலும் அந்த மகாத்மாக்கள் நேரில் வந்து அவருக்கு ஆலோசனைகள் தெரிவிப்பதோ, குறிப்புகள் சொல்வதோ, வேலைகள் ஒப்படைப்பதோ இல்லை. ஓரிரு முறை மட்டுமே அவர் அவர்களைக் கண்டிருக்கிறார். மற்ற சமயங்களில் அந்த உயர் ஆத்மாக்களிடமிருந்து தகவல்கள் சற்றும் எதிர்பாராத விதங்களில் எல்லாம் வந்தன. அவருக்குத் தனிப்பட்ட முறையிலோ, அலுவல் முறையிலோ மற்றவர்கள் எழுதி இருக்கும் கடிதங்களில் காலியாக இருக்கும் பகுதிகளில் எல்லாம் ஒரு மகாத்மா அல்லது மாஸ்டரின் குறிப்புகள் அவருக்கு இருக்கும். சில சமயங்களில் கடிதம் எழுதுகையில் விடப்பட்டிருக்கும்மார்ஜின்களில் கூட குறிப்புகள் எழுதப்பட்டிருக்கும். கடிதத்தை எழுதி அதை ஒட்டிய பிறகு அதன் உள்ளே இது போன்ற குறிப்புகளை எப்படி எழுதிச் சேர்க்க முடியும் என்று பல முறை கர்னல் ஓல்காட் வியந்திருக்கிறார். ஆனால் இது போன்ற அற்புதங்களைப் பார்த்து பழகிய பின் அந்த உயர்ந்த ஆத்மாக்களால் மனித அறிவுக்கு எட்டாத எத்தனையோ அற்புதங்களைச் செய்ய முடியும் என்பது அவர் மனதில் ஆணித்தரமாகப் பதிந்து விட்டது.

ஆனால் இந்த ஒட்டப்பட்ட கடிதங்களில் குறிப்புகள் எழுதப்படும் அற்புதம் ஒரு சந்தர்ப்பத்தில் மேலும் ஒரு பேரற்புதமாக கர்னல் ஓல்காட்டின் வாழ்க்கையில் நடந்தேறியது. அந்த சமயத்தில் கர்னல் ஓல்காட் ஒரு நூலை எழுதி முடித்திருந்தார். அவர் அந்த நூலை எழுதிக் கொண்டிருந்த காலத்தில் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அமெரிக்காவின் பல பகுதிகளில் பயணித்துக் கொண்டிருந்தார். நியூயார்க் நகரில் இருந்த கர்னல் ஓல்காட் அந்த நூலை எழுதி முடித்த சமயம் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அமெரிக்காவில் பிலடெல்பியாவில் தங்கி இருந்தார். கர்னல் ஓல்காட்டின் நூல் வேலை முடிந்து விட்டதால் தியோசபிகல் சொசைட்டி வேலைகள் சில செய்ய அவரை ப்ளாவட்ஸ்கீ அம்மையார் பிலெடெல்பியாவுக்கு அழைத்தார். கர்னல் ஓல்காட்டும் ஓரிரு நாட்களில் திரும்பும் எண்ணத்தில் அங்கு சென்றார்.

ஆனால் பிலடெல்பியாவுக்குச் சென்ற பின் கர்னல் ஓல்காட்டின் வேலைகள் ஓரிரு நாட்களில் முடியக்கூடியதல்ல என்பது அவருக்குப் புரிந்தது. அவர் மேலும் சில நாட்கள் அங்கு தங்க வேண்டி வந்தது. முன்பே இது தெரிந்திருந்தால் நியூயார்க் முகவரிக்கு வரும் கடிதங்களை பிலடெல்பியாவில் அவர் தங்கும் முகவரிக்கு திருப்பியனுப்பி வைக்கத் தெரிவித்திருக்கலாம் என்று அவருக்குத் தோன்றியது. ஏதோ ஒரு உள்ளுணர்வு உந்த அவர் பிலடெல்பியா வந்த மறுநாளே அங்குள்ள தபால் நிலையத்திற்குப் போய் தன் பெயரில் ஏதாவது கடிதங்கள் வந்தால் அந்தத் தபால்களை இப்போது தங்கியிருக்கும் முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி விண்ணப்பக்கடிதம் தந்து விட்டு வந்தார்.

ஆனால் அவர் பிலடெல்பியாவில் தங்கும் இடம் அங்கு வந்த பின் தான் முடிவானதால் நியூயார்க்கில் உள்ள அவருடைய ஆட்களுக்கு அவர் பிலடெல்பியா முகவரியைத் தந்து விட்டு வந்திருக்கவில்லை. அதனால் இப்போதைக்கு இங்கு எந்தத் தபாலும் வர வழியே இல்லை. ஆனாலும் அவர் தபால் நிலையத்தில் விண்ணப்பித்து வந்திருந்த மாலையே அவருக்குச் சில தபால்களை உள்ளூர் தபால்காரர் கொண்டு வந்து அவர் கையில் கொடுத்த போது அவர் திகைத்து விட்டார். ஆச்சரியத்துடன் அவர் அந்தத் தபால்களில் இருந்த முகவரியைப் பார்த்தார். எல்லாவற்றிலும் அவருடைய நியூயார்க் முகவரியே இருந்தது. நியூயார்க்கிலிருந்து எப்படி பிலடெல்பியாவுக்கு அந்தத் தபால்கள் வந்து சேர்ந்தன என்று மூளையைக் கலக்கி யோசித்தும் அவருக்குப் பதில் கிடைக்கவில்லை.

அவர் தபாலில் பதித்திருக்கும் தபால் முத்திரைகளைப் பார்த்தார். முன் பக்கம் எந்தெந்த இடங்களிலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறதோ அந்தந்த இடங்களின் தபால் முத்திரைகள் இருந்தன. ஒன்று தென்னமெரிக்காவில் உள்ள ஒரு நகரமாக இருந்தது. தபாலின் பின் பக்கத்தில் பிலடெல்பியாவின் தபால் முத்திரை இருந்தது. நியூயார்க் முகவரிக்கு அனுப்பப்பட்ட தபால்கள் நியூயார்க் போயிருந்தால் பின்பக்கம் நியூயார்க் தபால் முத்திரையும் கண்டிப்பாக இருந்திருக்கும் அல்லவா? அங்கு இங்குள்ள முகவரி எழுதப்பட்டபின் தான் அங்கிருந்து இங்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கும். எதிலுமே அப்படித் திருப்பி அனுப்பியிருக்கும் குறிப்புகளும் இல்லை. நியூயார்க் தபால் முத்திரையும் இல்லை. பிலடெல்பியா முகவரி இல்லாமலேயே அவை எப்படி பிலடெல்பியாவுக்கு நேராக வந்து சேர்ந்திருக்க முடியும் என்று குழப்பத்துடன் கர்னல் ஓல்காட் தபால்களைப் பிரித்த போது வழக்கம் போல் அவருக்குக் குறிப்புகள் அனுப்பும் மகாத்மாவின் கையெழுத்தில் குறிப்புகள் மார்ஜின்களிலும், காலி இடங்களிலும் எழுதப்பட்டிருந்தன. அனுப்பியவர்கள் வேறு வேறு ஆட்கள். வேறு வேறு ஊர்களிலிருந்து அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் அனைத்திலும் மார்ஜின்களிலும், காலி இடங்களிலும் இருந்த குறிப்புகள் மட்டும் அந்த மாஸ்டரின் ஒரே கையெழுத்தில் இருந்தன. அப்படியானால் அந்த உயர்சக்தி மனிதரின் திருவிளையாடலால் தான் அத்தனை கடிதங்களும் நியூயார்க் போகாமலேயே பிலடெல்பியா வந்து சேர்ந்திருக்கின்றனவா அல்லது ப்ளாவட்ஸ்கீ அம்மையாரின் பங்கும் இதிலிருக்கிறதா என்பது அவருக்குப் புரியவில்லை.

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 16.4.2019

1 comment:

  1. சுவரஸ்யமாக செல்கிறது...தொடர்கிறோம் ஐயா...

    ReplyDelete