சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, May 6, 2019

சத்ரபதி 71


ஷாஹாஜியின் மனம் பல விதமான உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அப்சல்கான் பெரும்படையுடன் பிரதாப்கட் கோட்டை அமைந்திருக்கும் மஹாபலேஸ்வர் மலைப்பகுதிக்குக் கிளம்பி விட்டான் என்று தெரிந்த கணம் முதல் ஏற்பட ஆரம்பித்த இந்த உணர்ச்சிகளின் அலைக்கழிப்பில் இருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை. அவர் அப்சல்கானை அறிந்த அளவு சிவாஜி அவனை அறிந்திருக்க வழியில்லை. சிவாஜி ஏதோ திட்டம் போட்டே செயல்படுகிறான் என்றாலும் அப்சல்கான் ஆபத்தானவன் என்பதை அவன் எந்த அளவு புரிந்து வைத்திருக்கிறான் என்பதையும், அவனால் எந்த அளவு அப்சல்கானைச் சமாளிக்க முடியும் என்பதையும் அவரால் யூகிக்க முடியவில்லை…..
       
கிட்டத்தட்ட இருபதாண்டு காலத்திற்கு முந்தைய ஒரு கொடுமையான நிகழ்வு நினைவுக்கு வந்தது…

பீஜாப்பூர் எல்லைப் பகுதியில் இருந்த ஷிரா பகுதியின் அரசன் ராஜா கஸ்தூரி ரங்கா மிகச்சிறந்த வீரன். வைணவ பக்தன். தன் சிறிய பகுதியைத் திறமையுடன் ஆட்சி செய்து வந்தவன். அப்போது முகமது ஆதில்ஷா அப்பகுதியைத் தன் ராஜ்ஜியத்துடன் இணைக்க முடிவு செய்து விட்டு அப்சல்கானை போருக்கு அனுப்பியிருந்தார். பீஜாப்பூரின் பெரும்படையுடன் போருக்கு வந்த அப்சல்கானுடன் வீரமாகப் போராடித் தன் படையின் பெரும்பகுதியை இழந்த பின்னும் ராஜா கஸ்தூரி ரங்கா சரணடையவில்லை. வீரமரணம் அடைவேனே ஒழிய சரணடைய மாட்டேன் என்று அவன் உறுதியாக இருந்தான்.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து போன அப்சல்கான் ராஜா கஸ்தூரி ரங்காவைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தான். இரு பக்கமும் அமைதி உடன்படிக்கை செய்து கொள்ளலாம் என்றும் சுல்தான் ஆதில்ஷா\விடம் பேசி இந்த அமைதி உடன்படிக்கையை ஏற்க வைக்கிறேன் என்றும் சொன்னான்.

பல முறை அப்சல்கான் கேட்டுக் கொண்டதற்குப் பின் அவன் சொல்வதை நம்பி ராஜா கஸ்தூரி ரங்காவும் பேச்சு வார்த்தைக்குச் சென்றான். பேச்சு வார்த்தைக்கு வந்த ராஜா கஸ்தூரி ரங்காவை எதிர்பாராத விதமாகப் பலமுறை தன் வாளால் குத்திக் கொன்று பின் அப்சல்கான் அந்த ஷிரா பகுதியைக் கைப்பற்றினான். வீரமரணம் அடைய விரும்பிய அந்த வீரனை அப்சல்கான் அப்படி வஞ்சகமாகக் கொன்றது அந்தச் சமயத்தில் மிகப்பெரிய கொடூரமாய் ஷாஹாஜிக்குப் பட்டது. சொல்லப் போனால் ஆதில்ஷா சுல்தானுக்கு ஆதரவாக அவர்கள் இருவருமே இருந்த போதும், ஷாஹாஜி அப்சல்கானிடமிருந்து மானசீகமாய் விலக ஆரம்பித்த தருணம் அது தான். அவனைப் பார்க்கையில் எல்லாம் அவருக்கு ராஜா கஸ்தூரி ரங்கா என்ற வீரன் நினைவுக்கு வர ஆரம்பித்தான். 

அவர் அவனை வெறுத்தது போலவே அவனும் அவரை வெறுத்தான் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. ஆனால் இருவரும் அந்த வெறுப்பைக் காட்டிக் கொள்ளாமல் சுல்தான் ஆதில்ஷா முன்னிலையில் நாகரிகமாக இணக்கத்தைக் காட்டிக் கொண்டார்கள்.

மகன் சாம்பாஜியின் மரணத்திற்குப் பின் அப்சல்கான் மீது அவர் வைத்திருந்த வெறுப்பு பல்லாயிரம் மடங்காகியது அவனைப் பழிவாங்க அவர் . சிவாஜியிடம் மறைமுகமாகச் சொல்லியிருந்தார். இப்போது அப்சல்கானை அவன் தன் இடத்திற்கு வரவழைப்பது அந்த விஷயமாகவே கூட இருக்கலாம். ஆனால் அப்சல்கான் அவருடைய இன்னொரு மகனையும் வஞ்சகமாகக் கொன்று விடும் வாய்ப்பு அதிகமிருக்கிறது என்பதை உணர்ந்த அந்தத் தந்தையின் மனம் தவியாய் தவித்தது.

அவர் உடனே அப்சல்கானின் பழைய சூழ்ச்சிகளை சிவாஜிக்கு விவரித்து, மிக மிக எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தி கடிதம் எழுதி விரைவில் மகன் கையில் சேரும்படியாக ஒரு வீரன் மூலம் அனுப்பி வைத்தார்.

அவர் மனம் ஏனோ அதற்கு மேலும் பதறியது. ராஜா கஸ்தூரி ரங்கா, சாம்பாஜி, அடுத்தது சிவாஜி…?


ப்சல்கான் படை வாய் பிரதேசத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கையில் தான் அபசகுனம் போல் அவர்களுடைய பீரங்கி ஒன்று அங்கிருந்த சிறு ஓடையில் தவறி விழுந்தது. மிகக் குறுகிய அந்த ஓடைப்பகுதியில் அதிக வீரர்கள் நிற்க இடம் இல்லை. எனவே அந்தக் கனமான பீரங்கியைத் தூக்க அவர்களால் முடியவில்லை.

அங்கு ஏற்பட்ட சலசலப்பைப் பின்னால் வந்து கொண்டிருந்த அப்சல்கான் கவனித்தான். “என்ன சத்தம் அங்கே?” என்று அவன் கேட்க ஒரு வீரன் சொன்னான். “பீரங்கி ஓடையில் விழுந்து விட்டது பிரபு”

“அதனால் என்ன? உடனே அதைத் தூக்கி நிறுத்துவதற்கு அவர்களுக்குத் தெம்பு இல்லையா என்ன?”

”அந்தக் குறுகிய ஓடையில் இரண்டு மூன்று பேருக்கு மேல் நிற்க இடமில்லை பிரபு. அந்த மூன்று பேரால் பீரங்கியைத் தூக்கி நிறுத்த முடியவில்லை….”

”நன்றாகச் சாப்பிடுகிறார்களே. அந்தச் சக்தியெல்லாம் எங்கே போகிறது?” என்று கேட்டவனாய் அப்சல்கான் தன் குதிரையை வேகப்படுத்தி முன்னேறினான். பீரங்கி விழுந்திருந்த இடத்தை நெருங்கியதும் ஒரு இளைஞனின் துள்ளலுடன் குதிரையிலிருந்து இறங்கியவனைக் கண்டதும் மரியாதையுடன் வீரர்கள் விலகினார்கள். ஓடையில் இறங்கி நின்றிருந்த வீரர்களை விலகச் சொல்லி அப்சல்கான் சைகை செய்தான். அவர்கள் விலகியதும் ஓடையில் இறங்கிய அப்சல்கான் தன் ஒரு கையால் பீரங்கியைத் தூக்கி எடுத்து வெளியே வைத்தான். அதைக் கண்ட வீரர்கள் முகத்தில் பிரமிப்பு தெரிந்தது. பாராட்டுகளும் வாழ்த்துக்களும் பரவலாக வீரர்களிடமிருந்து எழ அதை ஒரு பொருட்டாக நினைக்காமல் அப்சல்கான் தன் குதிரை மீது ஏறினான்.

மேலும் சிறிது தூரம் போயிருப்பார்கள். வழியில் பைத்தியம் போல் தெரிந்த ஒரு பரதேசி அப்சல்கானை அதிசயமாய் பார்த்தபடி படைக்கு வழி விட்டு ஓரமாக நின்றான். படையின் கடைசிப் பகுதி அவனைக் கடந்த போது தன் ஆச்சரியத்தைச் சத்தமாக வெளிப்படுத்தினான். “என்ன ஆச்சரியம்.? ஒரு தலையில்லா முண்டத்தை நம்பி இத்தனை பெரிய படை போகிறதே”

கடைசியில் சென்ற வீரர்கள் காதுகளில் தெளிவாகவே அந்த வார்த்தைகள் விழ அவர்கள் துணுக்குற்றார்கள். மறுபடி சலசலப்பு எழுந்தது. இப்போது சலசலப்பு பின்னால் இருந்து காதில் விழ அப்சல்கான் திரும்பிப் பார்த்தபடி ”இப்போது என்ன?” என்று கேட்டான். அவன் அருகே இருந்த வீரன் அங்கேயே பின் தங்கி நின்று விசாரித்துத் தெரிந்து கொண்டு விரைந்து வந்து அப்சல்கானிடம் தயக்கத்துடன் தகவலைச் சொன்னான்.

கோபமடைந்த அப்சல்கான் “அந்தப் பரதேசியைப் பிடித்து வாருங்கள்” என்று கட்டளையிட்டான். ஆனால் வீரர்கள் அந்தப் பரதேசியைத் தேடிய போது பரதேசி மாயமாய் மறைந்திருந்தான்.

“அந்தப் பரதேசியைக் காணவில்லை பிரபு. எப்படியோ மாயமாய் மறைந்து விட்டான்” என்று வீரர்கள் வந்து சொன்ன போது அப்சல்கான் சிரித்தான். “வாய்க் கொழுப்பு இருக்கும் அளவு மனோதைரியம் அவனுக்கு இல்லையே. தப்பி ஓடி விட்டானே பேடி”

ப்சல்கான் ஒற்றைக்கையால் பீரங்கியை தூக்கி எடுத்த செய்தியும், ஷாஹாஜி அனுப்பியிருந்த செய்தியும் சிவாஜிக்கு ஒன்றன் பின் ஒன்றாக வந்து சேர்ந்தன. எதிரியின் அசுரபலமும், நயவஞ்சகமும் தெளிவாகவே அடையாளம் காண்பிக்கப்பட்டு விட்டன. எச்சரிக்கை அவசியம் என்பதில் அவனுக்குச் சந்தேகம் இல்லை. ஆனாலும் அவன் பின் வாங்கப் போவதில்லை.

அவன் தன் நண்பர்களையும் ஆலோசகர்களையும் மறுபடி அழைத்துப் பேசினான். ”அப்சல்கான் இப்போது படையுடன் எங்கே வந்து சேர்ந்திருக்கிறான்?”

”ராத்தொண்டி கணவாய் வந்து சேர்ந்திருக்கிறதாய் செய்தி வந்திருக்கிறது.” என்றான் தானாஜி மலுசரே.

“அவர்களுக்கு செய்து தரப்பட்டிருக்கும் வசதிகளுக்குக் குறையொன்றுமில்லையே?”

“ஒரு குறையுமில்லை. அப்சல்கான் இந்த அளவு வரவேற்பையும், உபசரிப்பையும் எதிர்பார்த்திருக்கவில்லை என்று சொன்னதாகத் தகவல்கள் வந்திருக்கின்றன மன்னா.” சிவாஜியின் சேனாதிபதி நேதாஜி பால்கர் சொன்னான்.

சிவாஜி திருப்தியடைந்தான். அப்சல்கான் நெருங்கி விட்டான். இன்னும் இரண்டு நாட்களில் இங்கு வந்து விடுவான்….. சிவாஜி சொன்னான். “இந்தப் போரில் நாம் வெல்வது உறுதி. நம் திட்டத்தை நான் பலமுறை யோசித்துப் பார்த்து விட்டேன். நாம் தோற்க வழியே இல்லை. ஆனால் அப்சல்கானுடனான சந்திப்பில் நான் உயிரோடு திரும்பி வருவதை அந்த அளவு உறுதியாகச் சொல்ல  என்னால் முடியவில்லை…”

அனைவருமே திடுக்கிட்டார்கள். தானாஜி மலுசரே சொன்னான். “சிவாஜி நீயே இப்படிச் சொன்னால் எப்படி?”

சிவாஜி அமைதியாகச் சொன்னான். “தைரியம் என்பது யதார்த்த நிலையை மறுப்பதாகி விடக்கூடாது தானாஜி. வீரன் என்றைக்குமே மரணத்தின் அருகிலேயே இருக்கிறான். அது அவனை எப்போது தழுவும் என்பது இறைவன் மட்டுமே அறிந்த தகவல். மரணம் கொடுமையானதும் அல்ல. உடல் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே உள்ளே தன்மான உணர்வுகள் மரிப்பது தான் கொடுமையிலும் கொடுமை. அதனால் மரணத்தில் எனக்கு வருத்தமில்லை. மீண்டும் மீண்டும் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒருவேளை என் மரணம் நிகழ்ந்தாலும் நீங்கள் சோகத்திலோ, சோர்விலோ செயல் இழந்து விடக்கூடாது என்பது தான். சுயராஜ்ஜியம் என்ற நம் கனவைத் தொலைத்து விடக்கூடாது என்பது தான்….”

தானாஜி மலுசரேயும், மற்றவர்களும் பேச வார்த்தைகள் வராமல் தலையசைத்தார்கள்.  



(தொடரும்)
என்.கணேசன்

6 comments:

  1. Greatly impressed by Sivaji's courage and patriotism. Thanks for writing this novel in such wonderful way.

    ReplyDelete
  2. சிவாஜியின் வீரம் மெய் சிலிர்க்க வைக்கிறது.

    ReplyDelete
  3. அப்சல்கான் பீரங்கியை தூக்கியதும்... தூக்கும் முன் வீரர்களை ஏளனம் செய்வதும் அருமை(நான் கூட சில சமயங்களில் அப்படி நடந்து கொள்வதுண்டு😁😁😁😁)....

    சிவாஜியின் வீர உரை மெய்சிலிர்க்க வைக்கிறது...அருமை

    ReplyDelete
  4. After reading the words of Sivaji, speaking about the possibility of his death, tears rolled down my eyes. What a great story of this brave man?

    Sir, thanks a lot for your wonderful writing. I guess Shatrapati is going to end in the coming weeks.

    ReplyDelete
  5. Sir! Thanks a lot for extending the suspense till May 2020.

    ReplyDelete