சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, May 2, 2019

இருவேறு உலகம் – 134


க்ரிஷுக்கு விஸ்வேஸ்வரய்யா போன் செய்தார். “க்ரிஷ். உங்களை சந்தித்த போது நான் ஒரு உண்மையைச் சொல்லவில்லை. அதற்காக என்னை நீங்கள் மன்னிக்கணும். எனக்கு ஒரு இல்லுமினாட்டி உறுப்பினரைத் தெரியும். அவர் அனுமதி இல்லாமல் உங்களிடம் அதைத் தெரிவிப்பது சரியல்ல என்பதால் நான் சொல்லவில்லை. அவரிடம் நீங்கள் சொன்னதை எல்லாம் சொன்னேன். நீங்கள் சொல்வது போல விஸ்வம் சில மாதங்களுக்கு முன் இல்லுமினாட்டியில் சேர்ந்தது உண்மை என்கிறார். அமானுஷ்ய சக்திகளும் காட்டியதால் பிரபலமாகி விட்டாதாகவும் சொல்கிறார். சீக்கிரமே விஸ்வம் தலைமைப் பொறுப்பு வரை போகும் வாய்ப்பு கூட இருக்கிறது என்கிறார். அவர் நீங்கள் விரும்பினால் விஸ்வத்துக்கு எதிரான உங்கள் கருத்துகளை இல்லுமினாட்டியிடமே நேரடியாகச் சொல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறேன் என்கிறார். என்ன சொல்கிறீர்கள்?”

க்ரிஷ் சிறிது நேரம் பேச்சிழந்தான்.

அவர் மெல்ல சொன்னார். ”இது நீங்கள் என்னிடம் சொன்ன பிரபஞ்ச சக்தி உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு வாய்ப்பாகக்கூட இருக்கலாம் என்று எனக்குத் தோன்றியதால் சொன்னேன். விருப்பமில்லா விட்டாலும், தயக்கம் இருந்தாலும் சொல்லுங்கள் நான் தெரிவித்து விடுகிறேன்…..”

“நான் எங்கே வரவேண்டும்……” க்ரிஷ் கேட்டான்

“ஜெர்மனியில் ம்யூனிக்குக்கு வரவேண்டும். ஆனால் தனியாகத் தான் வரவேண்டும் என்கிறார்.”

க்ரிஷ் யோசனையோடு சொன்னான். “வீட்டில் என்னைத் தனியாகப் போக அனுமதிப்பார்களா என்று தெரியவில்லை. உங்களிடம் நான் அன்றே சொன்னபடி என் உயிருக்கு ஆபத்து இதற்கு முன் வந்திருக்கிறது…….”

“உங்கள் உயிருக்கு இல்லுமினாட்டி உத்தரவாதம் கொடுக்கிறது. அவர்கள் சொன்ன பேச்சை இது வரை மீறியதாக சரித்திரம் இல்லை. விஸ்வம் கூட உங்களுக்கு எதிராக எந்த முயற்சியும் எடுக்க மாட்டார். அப்படி ஏதாவது எடுத்தால் இல்லுமினாட்டி அவருக்கு எதிராகி விடும்….. அதனால் அந்த அளவுக்கு அவரும் போக மாட்டார்……”

க்ரிஷ் தயங்கினான். விஸ்வேஸ்வரய்யா சொன்னார். “நீங்கள் யோசிப்பது புரிகிறது….”

க்ரிஷ் சொன்னான். “எனக்கு சாக பயமில்லை. ஆனால் ஒருத்தி என்னை உயிருக்குயிராய் காதலிக்கிறாள். என் குடும்பமும் என்னை அதிகமாகவே நேசிக்கிறது. அவர்களை வேதனைப்படுத்த விரும்பவில்லை அவ்வளவு தான்…..”

“அது ரகசியமான இயக்கம் என்பதால் உங்களைக் கண்ணைக் கட்டிக் கொண்டு தான் கூட்டிக் கொண்டு போவார்கள் என்றும் அப்படியே தான் நீங்கள் பேச வேண்டியிருக்கும் என்றும் வெளிப்படையாகவே அந்த உறுப்பினர் சொன்னார். நீங்களாக அவர்களைத் தெரிந்து கொள்ள முயற்சி எடுக்காத வரையில் உங்களைப் பத்திரமாக வீடுதிரும்ப வைப்பது இல்லுமினாட்டியின் பொறுப்பு என்கிறார். இல்லுமினாட்டியைத் தொடர்பு கொள்ள வாய்ப்பில்லை, வேண்டுமானால் பிரபஞ்ச சக்தி வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கட்டும் என்கிற மாதிரி நீங்கள் சொன்னதால் தான் சொல்கிறேன்….. இனி முடிவெடுக்க வேண்டியது நீங்கள். உங்கள் முடிவு என்னவானாலும் அவரிடம் அப்படியே சொல்லி விடுகிறேன்….”

“எப்போது வர வேண்டும்?” க்ரிஷ் கேட்டான்.


னியாகப் போக வேண்டும் என்றவுடனேயே உதய் எதிர்ப்பு தெரிவித்தான். ”முட்டாளாடா நீ….”

“பாரு வாழ்க்கைல சில ரிஸ்க் எடுத்து தான் ஆகணும். சாகணும்னு விதி இருந்தா எப்படிப்பட்ட பாதுகாப்பான சூழ்நிலைல இருந்தாலும் செத்து தான் ஆகணும்…. வேணும்னா அம்மா கிட்ட மஞ்சள் துணில நூத்தியொரு ரூபா முடிஞ்சு வெக்கச் சொல்றேன்…..” என்று சொல்லி க்ரிஷ் சிரித்தான்.

தம்பி பிடிவாதமாக நின்றதால் உதய் அரை மனதோடு சம்மதித்தான். தம்பியைக் கட்டிக் கொண்டு சொன்னான். “ஏதாவது ஆபத்து வர்ற மாதிரி இருந்தா அங்கிருந்தே போன் பண்ணுடா. தூதரகம் மூலமா பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யறேன்…..”

க்ரிஷ் ஹரிணிக்குத் தனதறையில் முத்தம் கொடுத்து விட்டுப் போவதைச் சொன்னான். அவள் கண்களில் கலவரம் தெரிந்தது. “போயே ஆகணுமாடா”

“போகலைன்னா, நாளைக்கு ஏடாகூடமா ஏதாவது ஆனா எனக்கு என்னையே மன்னிக்க முடியாது ஹரிணி….” என்று க்ரிஷ் சொல்ல தயக்கத்துடன் கால் மனதோடு அவள் சம்மதித்தாள். அவன் திரும்பி வரும் வரை அவள் பிரார்த்தித்துக் கொண்டு இருப்பாள்….

முழு மனதாக உற்சாகமாக அவன் போகச் சம்மதித்தவள் பத்மாவதி தான். அவளிடமும், கமலக்கண்ணனிடமும் ஜெர்மனியில் ஒர் பல்கலைக்கழகத்தில் பேசக்கூப்பிட்டிருப்பதாக க்ரிஷ் சொன்னான். கிளம்பும் போது அவள் காலில் விழுந்து க்ரிஷ் வணங்கினான். “இது முக்கியமான மீட்டிங்ம்மா. நான் நல்லா பண்ணனும்னு ஆசிர்வாதம் பண்ணு”

பத்மாவதி உடனே போய் ஒரு டப்பாவில் வைத்திருந்த திருநீறை எடுத்து மகன் நெற்றியில் இட்டுச் சொன்னாள். “நல்லா பண்ணுவேடா. பகவான் உன் கூடவே இருப்பார்…”

உதய் மனதில் படர ஆரம்பித்திருந்த பயத்தில் இருந்து விடுபட வேண்டி தாயை வம்புக்கிழுத்தான். “அம்மா திருநீறு அழிஞ்சு போன பிறகும் பகவான் கூடவே இருப்பாரா”

“நம்பிக்கை இருக்கற வரைக்கும் கூடவே இருப்பார் தடியா”

“ஏம்மா பகவானைத் தடியான்னு கூப்டறே. கோவிச்சுக்க மாட்டாரா?” என்று அவன் கேட்க அவனை எதால் அடிப்பது என்று பத்மாவதி சுற்றும் முற்றும் பார்த்தாள்.

க்ரிஷ் தந்தையையும் காலில் விழுந்து வணங்க கமலக்கண்ணன் மனதார ஆசிர்வதித்தாலும் மனம் ஏனோ பதைத்தது. அவன் இப்படிக் கும்பிட்டு விட்டு எங்கேயும் போனதில்லை. தனியாக வேறு போகிறான்….. தனியாக உதயிடம் கேட்டார். “ஏண்டா ஒன்னும் பிரச்னை இல்லையே?”

கவலையை அவர் மனதிலும் பரப்பி எதுவும் ஆகப்போவதில்லை என்று நினைத்த உதய் முகத்தில் தைரியத்தைக் காட்டி “இல்லைப்பா” என்றான். ஆனால் கூடவே அம்மா அடிக்கடி வேண்டும் மூன்று கோயில்களுக்கு அவன் மனதில் வேண்டிக் கொண்டு ரகசியமாக மூன்று நூற்றியொரு ரூபாய்கள் எடுத்து வைத்தான்….


க்ரிஷ் கிளம்பும் முன் மானசீகமாக மாஸ்டரையும் கடவுளையும் வணங்கிவிட்டுக் கிளம்பினான். ”இனி என்ன நடக்க வேண்டும் என்று பிரபஞ்சம் தீர்மானிக்கிறதோ அதன்படி நடக்கட்டும். நான் செய்வதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும்” என்ற மனநிலையில் கிளம்பியவனுக்கு நடந்து கொண்டிருப்பவைகளை நிஜம் என்று நம்ப முழுவதுமாக இன்னமும் முடியவில்லை. இல்லுமினாட்டி இருப்பது நிஜம். அதில் விஸ்வம் இணைந்திருப்பது நிஜம். அவன் அதிலும் தலைமை வரை போகும் வாய்ப்பு இருப்பது நிஜம்…. தனி மனிதனாக பலசக்திகளை அடைந்து விட்டிருக்கும் விஸ்வத்துக்கு அது போன்ற அமைப்பின் சாதாரணத் தொடர்பே ஆபத்து. இந்த நிலை இருக்கையில் தலைமை வரை போகும் வாய்ப்பு வந்தால் என்ன ஆகும்?

இங்கே ஒரு விஷயம் இயல்பாய் அவனுக்குத் தோன்றவில்லை. இல்லுமினாட்டி போன்ற உலகளாவிய அமைப்பில் உறுப்பினராவதே சுலபம் அல்ல. அப்படி இருக்கையில் சேர்ந்த சில மாதங்களிலேயே அமானுஷ்ய சக்திகள் சேர்த்திருப்பதாலேயே தலைமை வரை போகலாம் என்பது நம்பக்கூடியதாய் இல்லை. இதில் கூட ஏதாவது இருக்கலாம்…. அல்லது அந்த அனுமானம் பொய்யாகவும் இருக்கலாம்…. ஆனால் உண்மை என்றால் உலகை அழிக்கக்கூடிய அத்தனையும் விஸ்வத்தின் கையில் கிடைத்தது போலத் தான். வேற்றுக்கிரகவாசி நண்பன் சொன்னது நடந்தே தீரும்….. ஆனாலும் வேற்றுக்கிரகவாசி அழிவுக்கு விஸ்வம் தான் காரணம் என்று சொல்லவில்லை. இந்த சமூகத்தின் மனப்போக்கையே காரணம் என்றான். அதைத் தனக்கு விஸ்வம் சாதகமாக்கிக் கொண்டு செயல்படுவான் என்பது போல் சொன்னான். விஸ்வத்தை நீக்கினாலும் இணையான வேறொருவன் வந்தாலும் அழிவு நிச்சயம் தான். அதனால் பிரச்னை விஸ்வம் தான் என்று நினைப்பதும், அவன் போனால் எல்லாம் சரியாகி விடும் என்று நினைப்பதும் கூடச் சரியல்ல. சமூக மாற்றத்திற்கு தனி மனித மாற்றம் முக்கியம். தனி மனித மாற்றத்துக்குச் சமூகச் சூழல் முக்கியம். ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்துள்ள நிலையில் எல்லாவற்றையும் காப்பாற்றக்கூடிய மாற்றத்திற்கு இந்தப் பயணத்தில் சிறு விதையாவது விதைக்க முடியுமா என்று யோசித்தான். எல்லாம் கஷ்டமானது தனிமனிதனுக்குச் சாத்தியமானதல்ல என்று மனம் சொன்னது. பிரபஞ்ச சக்தியின் உத்தேசம் அந்த மாற்றம் என்றால் எதுவும் முடியாததல்ல, எல்லா மாற்றங்களும் ஏதோ ஒரு புள்ளியில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என்பதால் அந்தப்புள்ளியாக நான் கண்டிப்பாக இருந்து விட முடியும் என்று உள்ளிருந்து ஒரு குரல் சொன்னது. க்ரிஷ் ற்சாகமானான்.

”எல்லாம் நீ….. நான் கருவி மட்டுமே…. என் பங்கில் குறை வைக்க மாட்டேன். கருவிக்கு விளைவில் பங்கில்லை. விளைவு இயக்குபவனையே சேர்ந்தது……..” என்ற நினைவோடு கண்களை மூடியவனுக்கு ஆபத்துக்கு அனைத்து வாய்ப்புகளும் நிறைந்த அந்தச் சூழலிலும் உறக்கம் உடனே வந்தது.


விஸ்வம் உறங்கவில்லை.  இயல்பாகவே உறக்கம் குறைவான அவனுக்கு இப்போதைய சூழல் பல விதங்களிலும் சாதகமாக இருந்த போதிலும் நெருடலாகவே இருந்தது. க்ரிஷ் உடனே கிளம்பி வருவான் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. உதய் எந்த தைரியத்தில் தம்பியை அனுப்பினான்? எதை நம்பி இப்படி இந்த முட்டாள் தனியாக வருகிறான்? இல்லுமினாட்டி கூட்டத்துக்கு வரும் முன்பே அவனை முடித்து விடலாமா என்று கூடத் தோன்றியது. ஆனால் இல்லுமினாட்டி க்ரிஷ் முட்டாள்தனமாக எதாவது செய்யாத வரை அவன் திரும்பிப் போகும் வரை பாதுகாப்பாக இருக்கும் என்று நவீன்சந்திர ஷா சொன்னது நினைவுக்கு வந்தது. அதை விட முக்கியமாய் ஏலியன் அவன் பாதுகாப்புக்குத் தனி ப்ரோகிராம் ஒன்றைப் போட்டு விட்டுப் போயிருக்கலாம் என்ற சந்தேகம் இன்னும் அவனை விட்டு விலகவில்லை. சில சக்திப் பிரயோகங்கள் அனுப்பியவர்கள் மீதே திரும்பி வரும்படியான சூட்சும வித்தைகளை சிறந்த யோகிகள் அறிவார்கள். ஏலியன் அவர்களை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தவன். அதைப் போட்டு க்ரிஷைப் பாதுகாத்து விட்டே போயிருக்கவும் வாய்ப்பு உண்டு. ’எப்போதாவது விஸ்வம் அவனைத் தாக்க முயல்வான். அப்போது அவனே அதில் திரும்பத் தாக்கப்பட்டு சாவான் என்று கூட நினைத்திருக்கலாம். அதனால் தான் என் பக்கமே வராமல் போயிருக்கிறான்’.

கடைசியில் விஸ்வம் க்ரிஷைக் கொல்லும் நினைவுகளை அடியோடு மனதில் இருந்து அழித்தான். க்ரிஷ் வரட்டும். இல்லுமினாட்டிக்குப் பிடிக்காத, புரியாத நீதி, நேர்மை, நியாயம், அன்பு, கடவுள், கருணை என்று எல்லாம் பேசி அவர்கள் பொறுமையைச் சோதிக்கட்டும். அவர்கள் அவனைப் புறக்கணிப்பது தான் அவனுக்குச் சரியான தண்டனை, மூக்குடைப்பு.

இந்த எண்ணம் ஓடிய போது பிரமிடு-நெற்றிக்கண் ஒரு முறை ஒளிர்ந்து மங்கியது. விஸ்வம் அதைப் பார்த்துப் புன்னகைத்தான். என் அதிர்ஷ்டச் சின்னம் இருக்கும் வரையில் நானே பிரம்மன்! நானே விதி எழுதுபவன்! நானே இல்லுமினாட்டி! மூட நம்பிக்கைகளை ஆதரிக்காத இல்லுமினாட்டி அந்தப் பழஞ்சுவடியையும் அது சொல்லியிருப்பதையும் மூடநம்பிக்கையாக நினைக்கவில்லை. அதை மிக உறுதியாக நம்புகிறார்கள். இல்லுமினாட்டியில் இணைவதே சுலபமல்ல என்ற நிலைமையிருக்கையில் சிகாகோ கோவிலின் பழஞ்சுவடிக் கதையைச் சொல்லி இல்லுமினாட்டிக்குள் நுழைந்தேன். அதில் தலைமைப் பதவி ஒவ்வொரு இல்லுமினாட்டியின் பெருங்கனவாக இருக்கும். இந்தப் பிரமிடுச் சின்னம் கொண்டு வந்து அதில் அடையாளம் சொல்லப்பட்ட நபர் நானே என்று காட்டி இதை வைத்தே சீக்கிரம் தலைவனுமாவேன். அதிர்ஷ்டவசமாக இந்தச் சின்னம் அவ்வப்போது மின்னவும் செய்கிறது. விதியே வேகமாக எனக்கு இப்படி வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கையில் எனக்கு கவலைப்பட என்ன இருக்கிறது?.....

பிறகு அவனும் நிம்மதியாக உறங்கினான்.

(தொடரும்)
என்.கணேசன்   

5 comments:

  1. Tension is building up. fantastic.

    ReplyDelete
  2. விறுவிறுப்பான சூழல், அருமையான கதைக்களம்

    ReplyDelete
  3. இதனுடைய முடிவு எங்கே போகும் என கணிக்க முடியவில்லை...அருமை ஐயா....

    ReplyDelete
  4. Hi innum ethanai episode irukku suspense is killing

    ReplyDelete