என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, May 16, 2019

இருவேறு உலகம் – 136


க்ரிஷை உள்ளே அழைத்து வந்தார்கள். கண்கட்டுடனேயே முன் வரிசையில் அமர வைத்தார்கள். பேச்சு மேடையில் மட்டும் மங்கலாய் ஒரு விளக்கு எரிய மற்ற விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டிருந்தன. கண்கட்டுடன் உள்ளே நுழைந்த க்ரிஷை ஏளனமாக பார்த்துக் கொண்டிருந்த விஸ்வம் எழுந்து மேடைக்குப் போனான். அவன் கையில் பிரமிடு நெற்றிக்கண் சின்னம் இருந்தது. பேச்சு மேடைக்குப் பின் நின்றவன் அந்த மேடை மீது எல்லாருக்கும் தெரிகிறாற்போல் அந்த பிரமிடு நெற்றிக்கண்ணை வைத்தான். சிலர் மட்டும் தான் அதை அவனிடம் முன்பு பார்த்திருக்கிறார்கள். இப்போது எல்லோரும் பார்க்கட்டும் என்று வைத்தான். வைத்தவுடன் அந்தக் கண் ஒரு முறை ஒளிர்ந்து மங்கியது. இருட்டில் அமர்ந்திருப்பவர்களின் முகம் தெரியாவிட்டாலும் அவனால் அவர்கள் முகத்தில் தெரிந்திருக்கக்கூடிய பிரமிப்பை உணர முடிந்தது. இந்த ஒரு கணத்திற்காகவாவது க்ரிஷின் கண்களைத் திறக்க வைத்து அவன் முக உணர்ச்சிகளைப் பார்த்திருக்கலாம் என்று தோன்றியது. அத்தனை பேர் கண்களும் அவன் மீது பதிந்திருக்க புன்னகையுடன் கம்பீரமாக விஸ்வம் பேச ஆரம்பித்தான்.

“அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! இல்லுமினாட்டி என்ற மகத்தான இயக்கத்தில் இணைந்திருக்கிறேன். இங்கு யாருமே சாதாரணமானவர்கள் அல்ல. ஏனென்றால் இங்கே சாதாரணமானவர்களுக்கு இடம் இல்லை. இங்கிருப்பவர்கள் எல்லாம் ஏதோ ஒரு விதத்தில் உயர்ந்து தங்களை நிரூபித்துக் கொண்ட பின் இங்கே இணைந்தவர்கள். அப்படிப்பட்ட உங்களில் என்னையும் ஒருவனாக ஏற்றுக் கொண்டதுடன் என்னைப் பற்றி முழுமையாகப் பேச, பேசித் தெளிவுபடுத்த என்னை அழைத்திருக்கிறீர்கள். இதை எனக்களித்த பெரிய கவுரமாக நான் நினைக்கிறேன். இந்த வாய்ப்புக்கு என் நன்றிகள்!”

“இமயமலையின் தெற்கில் உள்ள இந்தியாவில் பெருமையாய் எதுவும் சொல்ல முடியாத ஒரு சாதாரண ஏழைக்குடும்பத்தில் பிறந்தவன் நான். ஆனால் உள்ளத்தில் ஒரு அக்னியோடு பிறந்தவன். எதையும் தெரிந்து கொள்ளும் அக்னி, எதிலும் ஆழம் வரையும், உச்சம் வரையும் போகும், அக்னி, எதையும் அறிந்து முடிக்காமல் தணியாத அக்னி எனக்குள் இருந்தது. ஒன்றை எடுத்துக் கொண்டபின் அதை வசப்படுத்தாமல் நான் இருந்ததில்லை. அதுவரை நான் இளைப்பாறியதில்லை. அரைகுறைகளில் நான் திருப்தி அடைந்ததில்லை. எனக்கு உதவாத விஷயங்களில் உலாவப் போனதில்லை. இந்த அக்னி எத்தனையோ அமானுஷ்ய சக்திகளை வசமாக்க எனக்கு உதவியது. எத்தனையோ உயரங்களுக்கு எடுத்துச் சென்றது. ஆனால் இத்தனையும் எதற்கு, எதைச் சாதிக்க, என்று என்னால் எதையும் குறிப்பாகச் சுட்டிக்காட்ட நீண்ட காலம் முடியவில்லை…..”

“ஆனால் சிறு வயதில் இருந்தே ஒரு கனவு மட்டும் எனக்குத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. அந்தக் கனவில் பலமாடிகள் கொண்ட பிரம்மாண்டக் கட்டிடம். அதன் அஸ்திவாரத்தில் ஒரு பெட்டி. அந்தப் பெட்டிக்குள் ஒரு சுவடி. ”அந்தச் சுவடிக்குள் உன்னைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது” என்ற ஒரு குரல் கேட்கும். உடனே விழித்துக் கொள்வேன். அது என்ன கட்டிடம், எங்கே இருக்கிறது, அஸ்திவாரத்தில் ஒரு பெட்டியையும், அதற்குள் ஒரு சுவடியையும் யார் ஏன் வைத்தார்கள், அதில் என்னைப் பற்றி என்ன எழுதி இருக்கிறது இதெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. இங்கே இணைந்த பின்னர் சிலர் அரைகுறையாக சிகாகோவின் இல்லுமினாட்டி கோயில் கதையோடு என் கனவு இணைந்து இருப்பதைச் சொன்னார்கள். அதுவும் முழுமையாக இப்போதும் தெரியாது. ஆனாலும் இல்லுமினாட்டியோடு நினைவு தெரிந்த நாளில் இருந்தே நான் இணைக்கப்பட்டவன், இங்கே வருவதற்காகவே வளர்ந்தவன் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.”

“இல்லுமினாட்டி பற்றித் தெரிவதற்கு முன் இந்தியாவின் ஒரு ரகசிய ஆன்மிக இயக்கம் பற்றிச் சிலர் பெருமையாகச் சொன்னார்கள். அங்கே மாஸ்டர் என்று எல்லோராலும் அறியப்படும் மனிதர் பற்றியும் அங்கு  பெரிய பெரிய மேதைகள் எல்லாம் உறுப்பினர்களாக மேதைகள் இருப்பது பற்றியும் சொன்னார்கள். கிட்டத்தட்ட இல்லுமினாட்டியின் சாயல் அதற்கு இருந்ததாலோ என்னவோ அதனால் ஈர்க்கப்பட்டு நான் இணைந்தேன். உலக நன்மை, மானுட நன்மை வேண்டி அதற்காக ஒரு பெரிய கூட்டம் அங்கே தவம் இருந்தது. அதைப் பெரிய விஷயமாக அவர்கள் பேசவும் செய்தார்கள். எனக்கு அது முட்டாள்தனமாகப் பட்டது. அவனவன் நன்மையை அவனவனே அதிகம் விரும்ப வேண்டும். அதற்காக அவனவனே அதிகம் உழைக்க வேண்டும். அடுத்தவனால் எவனும் உயர்வது தற்காலிகமாக முடியலாமே ஒழிய நிரந்தரமாக அது முடியவே முடியாது. அடுத்தவனுக்காக நீ வேண்டுவதும் உழைப்பதும் அடுத்தவனைச் சோம்பேறியாக்கும் முட்டாள்தனமே ஒழிய அதில் உயர்வு எதுவும் இல்லை என்று உறுதியாக நினைப்பவன் நான்.”

“அந்த இயக்கத்தில் பல வேடிக்கையான முட்டாள்தனங்கள் நிறைய இருந்தன. மாஸ்டர் என்று பலராலும் பூஜிக்கப்படும் ஒரு மனிதர் பல சக்திகளையும் தன் வசப்படுத்தியவர். அவர் குருவால் அவர் பிரிய சிஷ்யன் என்று செல்லமாக அழைக்கப்படுபவர். அவர்கள் இருவரே தலைமையில் இருந்தார்கள். அந்த இயக்கத்திற்கு நிறைய சொத்துக்கள் இருந்தன. நிறைய பணம் இருந்தது. அதை முறையாக நிர்வாகம் செய்யவோ, அதிகப்படுத்தவோ அவர்களுக்குத் தெரியவில்லை. உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் அவர்களாக ஏதாவது அனுப்பினால் அதை வைத்துக் கொள்வார்கள். அவ்வளவு தான். ஒரு தலைமை தன் இயக்கம் உயர்ந்து கொண்டே போக வேண்டும், வளர்ந்து கொண்டே போக வேண்டும் என்று ஆசைப்படவும், அதற்காகக் கடுமையாக உழைக்கவும் வேண்டும் என்று ஆணித்தரமாய் நினைக்கும் எனக்கு அது ஏமாற்றத்தைத் தந்தது. கணக்கில் நான் திறமைசாலியாக இருந்ததால் நிதி நிர்வாகத்தை என்னிடம் விட்டார்கள். பின் அவர்கள் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. நோக்கமும் பயனில்லாதது, தலைவர்களும் உள்ளத்தில் அக்னி இல்லாதவர்கள், உறுப்பினர்களும் சுரத்தில்லாதவர்கள் என்கிற வகையில் இருக்கும் ஒரு இயக்கத்தில் சேர்ந்து விட்டேனே என்று அதில் பின்னால் நான் மனம் கசந்தேன். இப்போது யோசிக்கையில் புரிகிறது நான் ஒரு இல்லுமினாட்டி போன்ற இயக்கத்தை அங்கே எதிர்பார்த்து ஏமாந்திருக்கிறேன் என்று…”

இல்லுமினாட்டி உறுப்பினர்கள் எல்லோரும் மந்திரத்தால் கட்டுண்டவர்கள் போல் அமர்ந்திருந்தார்கள். விஸ்வம் அவர்கள் மனதில் ஒரு பலமான அஸ்திவாரம் போட்டு உயர ஆரம்பித்திருந்தான்.

விஸ்வம் தொடர்ந்தான். “அந்த சோம்பேறிக் கூட்டத்தில் இருந்து விலக வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் உறுதியாக எழ ஆரம்பித்தது. அந்த நேரத்தில் தான் இல்லுமினாட்டியின் உறுப்பினர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் இல்லுமினாட்டி உறுப்பினர் என்பது தெரியாமலேயே நட்பானேன். அவரிடம் எனக்கு அடிக்கடி வரும் கனவைப் பற்றிச் சொன்னேன். அவர் உடனடியாக அதற்கு விளக்கம் கொடுத்து விடவில்லை. கேட்டுக் கொண்டார். அவ்வளவு தான். அவர் என்னுடைய சில சக்திகளையும் பார்த்து ஆச்சரியப்பட்டார். பின் சில காலம் கழித்து அந்தச் சக்திகளை அவர் நண்பர்கள் சிலரிடமும் கூட வெளிப்படுத்திக் காட்டச் சொன்னார். பின்னால் தான் தெரிந்தது. அவர்கள் இல்லுமினாட்டி உறுப்பினர்கள் என்று. அவர்கள் இல்லுமினாட்டி பற்றிச் சொன்னார்கள். இணையச் சொன்னார்கள். உடனே இணைந்தேன். என் வாழ்நாள் பூராவும் நான் மதித்த உயர்வாக நினைத்த விஷயங்களே நோக்கமும், கொள்கையுமாய் வைத்திருக்கின்ற இல்லுமினாட்டியில் இணைந்ததை என் பிறவிப்பயனாய் நினைக்கிறேன்.”

”எந்த சக்தியுமே பயன்படுத்தத்தான் இருக்கிறது. அதே போல் எந்தச் செல்வமும் பயன்படுத்தத்தான் இருக்கிறது என்று திடமாக நம்புபவன் நான். அந்த சோம்பேறி இயக்கத்திலிருந்து வரும் போது தேங்கிக் கிடக்கும் அந்தச் செல்வத்தை எடுத்துப் பயனுக்குக் கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டேன். அதற்கு முன் மேலும் செல்வம் சேர்க்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த இயக்க பணக்கார உறுப்பினர்களிடம் பணத்தால் ஆக வேண்டியிருக்கும் சில காரியங்களைச் சொன்னேன். அவர்கள் பெருந்தொகைகளை அனுப்பினார்கள். நான் கடைசி மூன்று மாதத்தில் வசூல் செய்த பணம் அந்த இயக்கம் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக வசூல் செய்த பணத்தை விட அதிகம். மாஸ்டர் என்னும் சோம்பேறி ஒவ்வொன்றிலும் தொடர்ந்து கையெழுத்துப் போடக்கூட சங்கடப்பட்டு எல்லாவற்றிற்கும் ’ஜெனரல் பவர் ஆஃப் அட்டர்னி’ எனக்குத் தந்திருந்தார். அந்தப் பணத்தோடு சொத்துக்களையும் விற்றுச் சேர்த்து எல்லாவற்றையும் பயன்படுத்தும் விதங்களில் மாற்றிக் கொண்டேன். அதில் பாதிக்கும் மேல் இல்லுமினாட்டிக்கு அனுப்பினேன். இதில் ஒரு ரூபாய் கூட நான் எனக்கோ, என் சொந்தச் செலவுக்கோ எடுத்துக் கொள்ளவில்லை. தேங்கிக் கிடக்கும் முட்டாள் செல்வம் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்கிற ஒரே நோக்கம் தான் எனக்கிருந்தது…”

”இல்லுமினாட்டியில் இணைந்தவுடனேயே இல்லுமினாட்டி போலவே சிந்திக்கவும் ஆரம்பித்த நான் உலகின் தீவிர வாத இயக்கங்கள் சிலவற்றோடு வேறு வேறு பெயர்களில் தொடர்பு கொண்டேன். ஒவ்வொன்றிலும் அதன் ஆதரவாளனாகக் காட்டிக் கொண்டேன். அதற்கு ஆதரவாக அவர்கள் பேசுவதற்கு அதிகமாகப் பேசினேன். அவர்களுக்கு சோம்பேறி இயக்கத்தின் பணத்தின் ஒரு பகுதியையும் அனுப்பினேன். இப்போது அவர்களுக்கு வேண்டப்பட்டவனாக, அவர்கள் இயக்கத்தில் ஒரு முக்கியஸ்தனாக நான் இருக்கிறேன். இப்படி சக்திவாய்ந்த ஐந்து தீவிரவாத இயக்கங்கள் நான் சொன்னால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற நிலைமையை ஒரு இல்லுமினாட்டியான நான் ஏற்படுத்தி வைத்திருக்கிறேன். இனி எதிர்காலத்தில் இந்தத் தீவிரவாத இயக்கங்கள் உலகின் எல்லாத் தீர்மானங்களிலும் பெரும்பங்கு வகிக்கும். அதனால் இவற்றை நாம் கைப்பிடிக்குள் வைத்திருந்தால் பல நேரங்களில் பல நாடுகளில் நம் அதிகாரம் வேண்டிய விதத்தில் எடுபடும். இதை நான் இது வரை யாரிடமும் சொன்னதில்லை. அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று பெருமை பேசுவதை விட அதைச் செய்தேன், இதைச் செய்தேன் என்று எதையும் செய்து முடித்துக்காட்டிச் சொல்வது ஒரு இல்லுமினாட்டிக்குச் சிறப்பு என்று நினைக்கிறேன்….”

கைத்தட்டல் பலமாய் எழுந்து அடங்கச் சிறிது நேரமானது. பணிவை முகத்தில் காட்டிய விஸ்வம் கடைசியாகச் சொன்னான்.

“இல்லுமினாட்டியில் இணைந்த பிறகு எனக்கு இன்னொரு கனவு தொடர்ந்து வந்தது. இமயமலைப் பனியில் ஒரு குகை இருப்பதாகவும், அதற்குள் சிறிய பிரமிடு ஒன்று இருந்து அதற்குள் ஒரு கண் ஜொலிப்பதாகவும் இருந்தது அந்தக் கனவு. தொடர்ந்து வந்ததால் கனவில் தென்பட்ட இமயமலைப்பகுதியின் வித்தியாசமான அமைப்பைச் சொல்லி அப்படி ஒரு இடம் இருக்கிறதா என்று விசாரித்தேன். இருக்கிறது என்று தெரிந்தவர்கள் சொன்னார்கள். அங்கே போனேன். அங்கே ஒரு தவசி தவ நிலையில் இருந்தார். அவருக்கு எதிரே பாறையில் ஒரு சிவனின் முகச் சிற்பம் இருந்தது. அதன் நெற்றியில் இருந்து மின்னிக் கொண்டிருந்த இந்தச் சின்னத்தை எனக்கு எடுத்துக் கொடுத்தார்.” விஸ்வம் அந்த முக்கோண நெற்றிக் கண்ணை எடுத்து அனைவருக்கும் காட்டினான். அது ஒரு முறை ஒளிர்ந்து மங்கியது.

இல்லுமினாட்டி உறுப்பினர்கள் அந்த அற்புதத்தைப் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். விஸ்வம் திருப்திகரமாகத் தொடர்ந்தான். “எனக்குத் தந்து விட்டு அவர் இறந்து விட்டார்.  அவர் யார் இதை ஏன் என் கையில் கொடுத்து விட்டு இறந்தார் என்பது எனக்கு அப்போது தெரியாது. ஆனால் என் கையில் கிடைத்தது சிவனின் நெற்றிக்கண் அல்ல, இல்லுமினாட்டி சின்னம் என்பதில் எனக்கு மகிழ்ச்சி…. பிறகு தான் அந்தத் தவசி அகஸ்டின் என்ற ஒரு இல்லுமினாட்டி என்றும், சுமார் நூறு வருடங்களுக்கு முன் இந்தியா வந்து யோகக்கலை கற்று இல்லுமினாட்டியை அழிவில் இருந்து காப்பாற்றத் தவமிருக்கப் போனவர் என்றும் சொன்னார்கள். ஒரு இல்லுமினாட்டி தவசி கையால் எனக்கு இந்த சின்னம் கிடைத்ததன் அர்த்தத்தை உங்களுக்கே யோசிக்க விடுகிறேன். பிறந்ததில் இருந்து இது வரை என்னைப் பற்றியும், என் எண்ணங்களைப் பற்றியும், என் செயல்களைப் பற்றியும் எதையும் மறைக்காமல் உங்களிடம் நான் மனம் திறந்து சொல்லி இருக்கிறேன் நண்பர்களே…. வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி”

கைதட்டலால் அந்த அரங்கம் அதிர்ந்தது!

(தொடரும்)
என்.கணேசன்

3 comments:

  1. Powerful speech by Viswam. How Krish is going to counter his arguments, I wonder?

    ReplyDelete
  2. Krish will make a wonderful speech than Vishwam.

    ReplyDelete
  3. மர்ம மனிதனின் போச்சு அற்புதம்... அடுத்து இதற்க்கு பதிலடி கிரிஷ் எப்படி கொடுப்பான்?

    ReplyDelete