என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, May 24, 2018

இருவேறு உலகம் – 84வர்கள் அந்த சாதுவை ஒரு அருவியின் அருகே கண்டுபிடித்தார்கள். தூரத்தே தெரிந்த பனிமூடிய மலை முகடுகளை அந்த சாது வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர்கள் வரும் சத்தம் கேட்டுத் திரும்பியவர் இருவரையும் கண்களைச் சுருக்கிப் பார்த்தார். குற்றவாளி அவரைத் தமிழ்நாட்டு காவல்துறை அதிகாரியாய் அறிமுகப்படுத்தினான். அந்த சாது உணர்ச்சியே இல்லாமல் செந்தில்நாதனைப் பார்த்தார். நீ எவனாக இருந்தால் எனக்கென்ன என்பது போல் இருந்தது அவரது தோரணை.

“இவர் உங்களிடம் நான்கைந்து வருடங்களுக்கு முன்பு சக்திகள் பற்றி கற்றுக் கொள்ள வந்த ஆளைப் பற்றி ஏதோ கேட்டுத் தெரிந்து கொள்ள வந்திருக்கிறார்” என்று அந்தக் குற்றவாளி சொன்னான். அப்போதும் அந்த சாது முகத்தில் எந்த மாற்றமுமில்லை. செந்தில்நாதன் அது போன்ற ஆட்களை நன்றாக அறிவார். அழுத்தமான ஆட்கள். அசராத ஆட்கள்……

அந்த சாதுக்கு எந்தப் போதை மருந்து மிகவும் பிடித்தமானது என்று கேட்டு அதை வாங்கி முன்பே சட்டைப் பையில் போட்டு வைத்திருந்த செந்தில்நாதன் அதைக் கையில் எடுத்து அந்த சாது பார்க்கும்படி வைத்துக் கொண்டார். அந்த சாது கண்களில் மின்னல் வெட்டிச் சென்றது. ஆனாலும் பெரிய ஆர்வத்தைக் காட்டி விடவில்லை.

அந்த சாது எதாவது சொல்வாரா என்று சிலநிமிடங்கள் பொறுத்துப் பார்த்த செந்தில்நாதன் அமைதியாக குற்றவாளியிடம் சொன்னார். “சரி வா. போகலாம்……..” சொன்னதோடு நிற்காமல் அங்கிருந்து அவர் கிளம்பியும் விட குற்றவாளி திகைப்புடன் இருவரையும் பார்த்து விட்டு செந்தில்நாதன் பின்னால் ஓடிச் சென்றான்.

அந்த சாது அமானுஷ்யமாய் ஒருவித கூக்குரல் எழுப்பினார். செந்தில்நாதன் திரும்பிப் பார்த்தார். அந்த சாது வருமாறு சைகை செய்தார். செந்தில்நாதன் மெல்லத் திரும்பி வந்தார். அந்த சாது அவரையும் நன்றாகப் புரிந்து கொண்ட மாதிரி இருந்தது.

“அவனைப் பற்றி என்னத் தெரிந்து கொள்ள வேண்டும்?” குரல் மிகவும் கரகரப்பாக இருந்தது.

“தெரிந்த எல்லாவற்றையும் சொல்லுங்கள். முக்கியமாக எதற்கு உங்க கிட்ட வந்தார்? என்ன எல்லாம் கத்துகிட்டார்? … ஆனா எல்லாத்துக்கும் முன்னாடி அவனுக்குக் கத்துக்குடுக்க உங்க கிட்ட என்ன இருந்தது. அதை எப்படி நீங்கள் கத்துகிட்டீங்கன்னு சொன்னால்  நல்லது……” செந்தில்நாதன் தூய்மையான ஹிந்தியில் கேட்டார்.

ஒரு கசப்பான தகவலைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டது போல சாதுவின் முகம் மாறியது. மறுபடி தூரத்தில் தெரிந்த பனிமூடிய மலை முகட்டைப் பார்த்தார். அதைப் பார்த்தபடியே மெல்லச் சொல்ல ஆரம்பித்தார்.
                    
“பன்னிரண்டு வயதில் எங்கள் கிராமத்தில் மதம் பிடித்து ஓடிவந்த ஒரு யானையைத் தன் பார்வையிலேயே ஒரு சன்னியாசி ஸ்தம்பிக்க வைத்தார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த நான் பிரமிப்புடன் அந்த சன்னியாசியிடம் அது எப்படி சாத்தியமானது என்று கேட்டேன். அப்போது அந்த சன்னியாசி சுருக்கமாகச் சொன்னார். “நோக்குவர்மம்” அதிலிருந்தே நோக்குவர்மம் மேல் எனக்குத் தீராத ஆர்வம். அவர் பின்னாலேயே போய் விட்டேன்….. பத்து வருடம் அவரிடம் நான் அதைக் கற்றுக் கொண்டேன். அதில் நல்ல தேர்ச்சியும் பெற்றேன்.  இந்த இமயமலையில் எந்த விலங்கும் என்னை நெருங்கியதில்லை. என்னை வீழ்த்த முயன்றதில்லை. என்னைப் பார்த்து அவை எல்லாம் தப்பி ஓடின….. அவை மட்டுமல்ல மனிதர்களும் பயந்து ஓடினார்கள். அப்படி ஓடாதவர்களை என் பார்வையாலேயே ஓட வைத்தேன்….. ஒரு காலத்தில் இந்தப் பகுதியில் நான் கதாநாயகன்….”

சொல்லும் போதே சுய பச்சாதாபமும், விரக்தியும் வெளிப்பட்டதை செந்தில்நாதன் கவனித்தார். ”அந்த சன்னியாசியுடன் இருந்த வரை எல்லாம் சரியாக இருந்தது. அவர் இறந்து போனவுடன் ஏதோ ஒரு வெறுமை உணர்ந்தேன். அதற்குப் போதை மருந்தாக இருந்தது. ஆறுதலாக இருந்தது. பின் அவசியமாக மாறியது….. ஆனால் கற்ற வித்தை அப்படியே இருந்தது…..”

செந்தில்நாதன் இடைமறித்தார். “இது போன்ற சக்திகள் கெட்ட பழக்கங்களால் அழிந்து போய் விடும் என்று யாரோ சொன்னார்களே”

“சக்தியைப் பிரயோகிக்கும் காலத்தில் அந்தப் போதை எந்த இடைஞ்சலையும் செய்து விடாத வரையில், சக்திக்குத் தேவையான எதையும் குறைத்து விடாத வரையில் ஒரு மனிதன் சக்தியை இழந்து விடுவதில்லை….. முக்கியமாக சக்திப் பிரயோகத்தின் போது மனிதன் முழுக்கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும்…..”

“அந்த ஆள் உங்களிடம் நோக்கு வர்மம் படிக்கத்தான் வந்தானா?”

ஆமாம் என்று தலையசைத்த அந்த சாது கையை நீட்டினார். செந்தில்நாதன் கையில் வைத்திருந்த மூன்று சிறு பொட்டலங்களில் ஒரு பொட்டலத்தை அவரிடம் தர சாது அதைப் பெற்றுக் கொண்டு வாஞ்சையாகத் தடவினார். அதைத் திறந்து ஒரு சிட்டிகையை மிகவும் கவனமாக எடுத்து மூக்கருகே கொண்டு போய் நீண்ட மூச்சிழுத்து ஒரு நிமிடம் சொர்க்கத்தை அனுபவித்த அந்த சாதுவின் குரல் மீண்டும் பேசுகையில் மிக மென்மையாக இருந்தது.

“அவன் என்னிடம் வருவதற்கு முன்பே நிறைய சக்திகள் பெற்றவன். நான் பத்து வருடங்களில் கற்றுத் தேர்ந்ததை அவன் ஒரு மாதத்தில் கற்று விட்டான்…… அவன் மனிதனே அல்ல…… சைத்தான்…… அவன் கற்று முடிக்கும் வரை என்னை சரியாகத் தூங்கக் கூட விடவில்லை. அதிகத் தூக்கம் அனாவசியம் என்று நினைத்தான். அதிகப் பேச்சு சக்தி விரயம் என்று நினைத்தான்…… போதை தற்கொலை என்று நினைத்தான்…….” சொல்லும் போது குரல் மிகப் பலவீனமாகியது.

“அதை அவன் வாய்விட்டுச் சொல்லவில்லை. ஆனால் அவன் அப்படி நினைத்தது எனக்குத் தெரியும். அது நிஜம் என்றும் தெரியும். வாழ்க்கையைத் திரும்பி வாழ முடிந்திருந்தால் நான் இதில் எடுத்த முதல் முயற்சியையே தடுத்து நிறுத்தியிருப்பேன். ……. எல்லாம் முடிந்த பிறகு பேசுவதில் அர்த்தமில்லை……”

அவருடைய சுய பச்சாதாபத்திலிருந்து பேச்சை மறுபடி எதிரி பக்கம் செந்தில்நாதன் திருப்பினார்.    ”அவன் உங்க கிட்ட ஒருமாதம் இருந்து கற்றுகிட்டப்ப உங்க கூடவே இருந்தானா, இல்லை எங்கேயாவது தங்கி கற்றுக்க மட்டும் வந்தனா?”

“கூடவே இருந்தான். அவனுக்கு வசதிகள் எல்லாம் முக்கியம் அல்ல. கற்றுக்கறது தான் முக்கியம். முதல் பத்து நாள், பின்னாடி பத்து நாள் முழுவதுமே நான் இருக்கற இடத்துலயே இருந்தான்….”

செந்தில்நாதன் சந்தேகத்தோடு கேட்டார். “இடைப்பட்ட பத்து நாள் எங்கே இருந்தான்.?”

“டெல்லி போயிட்டான். அமெரிக்கால இருந்து யாரோ மனோதத்துவ மேதை வர்றார்னு சொன்னான். அவர் கிட்ட எதோ வேலை இருக்கறதா சொல்லிட்டுப் போனான்….. அந்த ஆள் நிறைய புத்தகம் எல்லாம் எழுதியிருக்காராம்….?”

“அவர் கிட்ட என்ன வேலையாம்?”

“அது தெரியலை….. அவன் எதையும் வாய் விட்டுச் சொல்ற ரகமல்ல…. டெல்லியிலிருந்து வர்றப்ப ஒரு புத்தகம் கொண்டு வந்தான். பகல் எல்லாம் இடையிடையே அந்தப் புத்தகத்தையும் படிச்சான். ஆழமா படிச்சான்……”

“அது என்ன புத்தகம்?”

“மனம் சம்பந்தப்பட்ட புத்தகம். அவன் பார்த்துட்டு வந்த அந்த மேதை தான் அதை எழுதியிருக்கணும்னு நினைக்கிறேன்….. நோக்குவர்மம் பயிற்சி செய்து களைச்சுப் போய் ஓய்வு எடுக்கறப்ப அந்தப் புத்தகத்தைப் படிப்பான். அவனுக்கு ஒரு வேலை செய்து களைச்சுப் போறப்ப இன்னொரு வேலை தான் ஓய்வு….. அற்புதமான மனிதன்….. கொஞ்சம் விசித்திரம் தான்….. ஆனால் அவனை மாதிரி ஒரு மனிதனை நான் பார்த்ததேயில்லை…….” சாதுவின் குரலில் பிரமிப்பு தங்கியிருந்தது.

“நோக்குவர்மத்தில் அவன் முழு தேர்ச்சி பெற்றுட்டானா?”

“அப்படிப் பெறாமல் இருந்தால் அவன் போயிருக்க மாட்டான்……” அந்த சாது இயற்கை விதி ஒன்றைச் சொல்வது போல் சொன்னார்.

“நோக்குவர்மத்தில் ஒருத்தர் என்ன எல்லாம் செய்ய முடியும்…”

“முழுமையாகத் தேர்ச்சி பெற்றவனுக்கு மதயானையை ஸ்தம்பிச்சு நிறுத்தி வைக்க முடியும்…… விலங்கு மட்டுமில்லாமல் மனுஷங்களையும் அப்படி நிறுத்தி வைக்க முடியும். சொல்லப் போனால் பார்வையிலேயே அவங்க இதயத்துடிப்பைக் கூட நிறுத்திட முடியும். வெளிப்பார்வைக்கு மாரடைப்புன்னு தோணும். ஆனா நோக்குவர்மத் தாக்குதல் அதுன்னு அந்தக் கலையைத் தெரிஞ்சவங்களுக்கு மட்டும் தான் புரியும்….. உங்க போலீஸ் எல்லாம் ஒன்னும் பண்ண முடியாது. உங்க விஞ்ஞானக்கருவி எல்லாம் எதையும் கண்டுபிடிச்சுட முடியாது…..”

செந்தில்நாதன் திகைப்புடன் அந்த சாதுவைப் பார்த்தார். அவர் மனதில் ராஜதுரையின் மரணம் நிழலாடியது….. இதயக் கோளாறு உள்ளவர் தான் என்ற போதும் இறப்பதற்கு முந்தைய நாள் வரை ராஜதுரை மிகவும் துடிப்பாக இருந்தாரே. செந்தில்நாதனும் முந்தைய நாள் நிறைய நேரம் அவரிடம் பேசி இருக்கிறாரே. ஒரு சின்ன உடல் உபாதை இருந்தது போல் கூடத் தெரியவில்லையே. எதிரிக்கு அந்த மரணத்தில் பங்கு இருக்க வாய்ப்பில்லை, வெளிப்படையாகக் காரணம் எதுவும் தெரியவில்லை என்ற போதும் அது நோக்குவர்மத் தாக்குதல் மூலம் நடந்த மரணமாக இருக்க வாய்ப்பு இருக்குமோ என்ற சந்தேகம் பலமாக அவர் மனதில் எழுந்தது.

(தொடரும்)
என்.கணேசன்


3 comments:

 1. Amazing and excellent.

  ReplyDelete
 2. கதை நன்றாக, சுவாரஸ்யமாக போகிறது... தொடருங்கள்...!

  ReplyDelete
 3. நோக்குவர்மம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை சுருக்கமாக கூறியது அருமை...

  செந்தில்நாதன் ராஜதுரையின் மரணத்தை கண்டறிந்து விடுவாரோ?

  ReplyDelete