என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, May 28, 2018

சத்ரபதி – 22


பீஜாப்பூரில் பசு மாமிசம் விற்பதும், பசு வெட்டும் கிடங்குகளும் நகர எல்லைக்கு அப்பால் போனது ஷாஹாஜியின் இளைய மகனால் தான் என்று பலராலும் பேசப்பட்டது. பலர் அவனைக் குறித்து மேலும் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினார்கள். அரசவைக்கு சிவாஜி தந்தையுடன் அடிக்கடி வர ஆரம்பித்தான். அவன் வந்த நாட்களில் தினம் ஒரு விஷயம் அங்கு புதிதாக அலசப்பட்டது. சிவாஜியின் அறிவு கூர்மையிலும், வாக்கு சாதுரியத்திலும் ஆதில்ஷாவும் மற்ற பிரபுக்களும் கவரப்பட்டார்கள். இதைக் கண்ட  சிலர் பொறாமையால் வெந்தார்கள்.

புதிய சில நண்பர்கள் பீஜாப்பூரில் சிவாஜிக்குக் கிடைத்தார்கள். ஒருநாள் அவர்களுடன் சேர்ந்து அவன் சென்று வருகையில் நகர எல்லை வாசலில் ஒரு கசாப்புக்காரன் பசு மாமிசம் விற்றுக் கொண்டிருந்தான். நகர எல்லைக்கு வெளியே போய் பசு மாமிசம் வாங்கி வரச் சோம்பல் கொண்ட ஒருசில பீஜாப்பூர்வாசிகள் அவனிடம் அதை வாங்கிக் கொண்டிருந்தார்கள். குதிரையில் வந்து கொண்டிருந்த சிவாஜிக்கு இதைக் கண்டதும் ரத்தம் கொதித்தது.  மின்னல் வேகத்தில் அந்தக் கசாப்புக்காரன் மீது சிவாஜி பாய்ந்தான். ஒரு கணத்தில் கசாப்புக்காரனின் தலை உடலை விட்டுப் பறந்தது. எல்லோரும் சிலையாய் சமைந்து திகைப்புடன் பார்க்க கசாப்புக்காரன் மனைவி ஓவென்று கூக்குரலிட்டு அழ ஆரம்பித்தாள். கூட்டம் கூடியது. சிலர் அவளை சுல்தானிடம் சென்று நியாயம் கேட்டு முறையிடச் சொன்னார்கள். அவளும் ஆவேசத்துடன் சென்று அரசவையில் அழுது முறையிட்டாள்.

ஷாஹாஜி அதிர்ச்சியில் உறைந்து போனார். மற்ற நேரங்களில் பண்பின் சிகரமாகவும், சாமர்த்தியத்தின் அடையாளமாகவும் இருக்கும் அவருடைய இளைய மகன் இந்தப் பசு விஷயத்தில் மட்டும் இப்படி கட்டுப்பாடில்லாத எரிமலையாகி விடுகிறானே என்ற ஆதங்கம் அவர் இதயத்தை அரித்தது. இப்போது சுல்தானிற்கு அவர் என்ன பதில் சொல்ல முடியும்?

நல்ல வேளையாக மீர் ஜும்லா இந்த முறையும் சிவாஜியைக் காப்பாற்ற முன் வந்தார். அவர் கசாப்புக்காரனின் மனைவியைக் கேட்டார். “அம்மணி, அரசர் நகர எல்லைக்கு உள்ளே பசு மாமிசம் விற்பதைத் தடை செய்துள்ள செய்தியை நீயும், உன் கணவனும் அறிவீர்களா?”

கசாப்புக்காரன் மனைவி குற்றச்சாட்டு தங்கள் மேல் விழுவது கண்டு விழித்தபடி அறிவோம் என்ற பாவனையில் தலையசைத்தாள். மீர் ஜும்லா கேட்டார். “அப்படி இருக்கையில் மன்னரின் ஆணையை மீறி நகர எல்லை வாசலிலேயே நீங்கள் கடை விரிக்கக் காரணம் என்ன?”{

அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.  ஷாஹாஜி அரசவைக்கு உள்ளே இருந்தாலும் அவர் மனம் அங்கு நடைபெற்ற நிகழ்வுகளில் தங்காமல் சிவாஜியின் அடக்க முடியாத சினம் குறித்த ஆதங்கத்திலேயே தங்கியிருந்தது. ஆதில் ஷா சிவாஜிக்குச் சாதகமாகவே தீர்ப்பு கூறி அந்தப் பெண்மணிக்கு கணவனின் அந்திமச் செலவுக்காக ஒரு தொகையைக் கருணை அடிப்படையில் தருவதாகவும், இனி இது போல் ஆணையை மீறுபவர்களுக்கும் கடும் தண்டனையே வழங்கப்படும் என்று எச்சரித்து அனுப்பியது தூரத்து நிகழ்வாக மனதில் பதிந்தது.

இல்லத்திற்கு வந்தவுடன் ஜீஜாபாய் முன்னிலையில் சிவாஜிக்கு நிறைய புத்திமதி சொன்னார். “… … மகனே மதங்கொண்ட யானையை அடக்குவதை விட மனதில் பொங்கி எழும் சினத்தை அடக்குவது மேலானது. வீரத்தினால் பெறும் மேன்மையைக் கோபத்தினால் ஒருவன் களைந்து விடக்கூடாது. தன்னைக் கட்டுப்படுத்த முடியாதவன் மற்றவர்களுக்குத் தலைமை தாங்கும் தகுதியை இழந்தவனாகிறான். நீ மற்ற நேரங்களில் காட்டும் பக்குவத்திலும், அறிவுக்கூர்மையிலும் ஒரு சிறு பங்கைக் கூட கடுங்கோபத்தில் இருக்கையில் காட்டுவதில்லை. மீர் ஜும்லா உன்னை இரண்டு முறை பெருந்தண்டனையில் இருந்து காப்பாற்றி இருக்கிறார். ஆனால் இனியொரு தடவை இப்படி நீ காப்பாற்றப்பட வாய்ப்பேயில்லை. இப்போதே உன் மேல் பலரும் பொறாமை கொண்டிருக்கிறார்கள். சுல்தான் தன்னை வணங்கவும் மறுத்த ஒரு சிறுவனுக்கு ஆதரவான முடிவுகளை எடுக்கிறார் என்று சிலர் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அது அவர் காதுகளைக் கண்டிப்பாக எட்டும். அவரை மாற்றவும் கூடும். அரசர்கள் நிலையான புத்தியுடையவர்கள் அல்ல. என்னேரமும் மாறக்கூடியவர்கள். இதை என் வாழ்வின் ஒவ்வொரு முக்கியமான கட்டத்திலும் உணர்ந்திருக்கிறேன். தந்தை என்ற ஸ்தானத்திற்கு நீ மதிப்பு கொடுக்கா விட்டாலும் பரவாயில்லை மகனே, வயதில் மூத்தவன், வாழ்க்கையை நிறையப் பார்த்தவன் என்பதற்காகவாவது என் பேச்சைக் கேள். உன் இந்தக் கடுங்கோபம் உன்னைப் புதைகுழியில் அழுத்தி முடித்து விட நீ அனுமதிக்கக் கூடாது…..”

ஜீஜாபாயும் கடுமையாகவே மகனைக் கண்டித்துப் பேசினாள். “ஒரு சபையில் உன் தந்தை உன்னால் முகம் கவிழ்வது உனக்குப் பெருமையல்ல சிவாஜி. எத்தனையோ நேரங்களில் எங்களை நீ பெருமிதப்படுத்தி இருக்கிறாய். ஆனால் இந்த விஷயத்தில் நீ நடந்து கொண்ட முறையில் உன் தந்தை மட்டுமல்ல, நானும் தலைக்குனிவையே உணர்கிறேன். இந்தப் பசுவதை விவகாரத்தில் உன் வயதிற்கும் மீறிய மதிப்பு கொடுத்து சுல்தான் ஒரு சாதகமான ஆணையைப் பிறப்பித்திருக்கிறார். அப்படியிருக்கையில் அந்தக் காட்சியைக் கண்ட நீ சுல்தானிடம் தெரிவித்திருந்தால் அரண்மனை வீரர்கள் அங்கிருந்து அந்தக் கசாப்புக்காரனை அப்புறப்படுத்தியிருப்பார்கள். அதை விடுத்து காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டு நீ சாதித்தது தான் என்ன? யோசித்துப் பார் சிவாஜி…. எதற்குமே ஒரு எல்லையுண்டு. எல்லையைத் தாண்டியும் ஓடுபவர்கள் வீழ்ச்சியையே அடைகிறார்கள்…. இரண்டு வீரவம்சங்களின் வழித்தோன்றல் நீ. உன்னை வைத்து உன் தாய் நிறைய கனவுகள் கண்டிருக்கிறேன் மகனே. எத்தனையோ துர்ப்பாக்கியங்களைப் பார்த்த எனக்கு உன் வீழ்ச்சியைக் காணும் துர்ப்பாக்கியத்தையும் தயவு செய்து ஏற்படுத்தி விடாதே!”     

சிவாஜி பெற்றோர் முன் மண்டியிட்டுச் சொன்னான். “உங்களைப் புண்படுத்தியதற்கும், மனமுடைந்து இப்படி அறிவுரை சொல்லும் சூழலை ஏற்படுத்தியதற்கும் என்னை மன்னித்து விடுங்கள் பெற்றோரே. இந்த மண்ணின் பெருமையைக் கேட்டு வளர்ந்தவன் நான். கேட்டு வளர்ந்த புனிதங்களைப் போற்றி வாழ்பவன் நான். பசுவை நான் புனிதமாகவே எண்ணி வணங்குவது என் இரத்தத்தில் கலந்து விட்டது. எல்லாச் செயல்களையும் சிந்தித்துச் செய்ய நேரம் எடுத்துக் கொள்ளும் நான் புனிதங்களின் அவமதிப்பைக் காண்கையில் இரத்தம் கொதித்து அனிச்சையாகவே செயல்பட ஆரம்பித்து விடுகிறேன். அதைப் பொறுத்துக் கொண்டு போவதை விட தடுத்து மடிவது மேல் என்று என் அந்தராத்மா அலறுகிறது. இது அறிவீனமாகவே தங்களுக்குத் தோன்றலாம். ஆனால் இந்த அறிவீனத்தை நீக்க நானும் வகையறியாமலேயே நிற்கின்றேன். இதைப் பக்குவமாய் கையாள்வதற்கு நான் முடிந்த வரை முயல்கிறேன். ஆனால் எனக்கு அது சாத்தியமாகும் வரை இந்தச் சூழலிலிருந்து என்னைத் தயவுசெய்து விடுவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்”

இருவர் கால்களையும் தொட்டுத் தலை தாழ்த்தி வணங்கிவிட்டு சிவாஜி அங்கிருந்து சென்று விட்டான். ஷாஹாஜி ஜீஜாபாயைப் பார்த்தார். அவர் முகத்தில் தெரிந்த வேதனை ஜீஜாபாயை உருக்கியது. அவள் அவரிடம் மென்மையாகச் சொன்னாள். “இந்த ஒரு குறையைத் தவிர நம் பிள்ளையிடம் வேறு பெரிய குறைகள் இல்லை. அவன் வயதினரை விட எத்தனையோ விஷயங்களில் மிக உயர்ந்தே இருக்கிறான். இவனைப் பெற்றவளாக நான் பெருமை பேசவில்லை. கூர்ந்து உலகத்தைக் கவனித்து வருபவளாகச் சொல்கிறேன். அப்படிப்பட்டவன் இவ்வளவு ஆழமாக சிலவற்றை உணர்வதையும் என்னால் குற்றம் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அத்தனையும் சொல்லிக் கொடுத்து வளர்த்தவள் நான் தான்.  அதனால் அவனுக்கு முன் என்னையே நான் குற்றப்படுத்திக் கொள்ள வேண்டும். அவன் சொல்வது போல காலம் அவனைப் பக்குவப்படுத்தும் வரை இந்தச் சூழலிலிருந்து அவன் தள்ளிப் போவதே நல்லது என்று எனக்கும் தோன்றுகிறது”

ஷாஹாஜி சொன்னார். “சூழல்களில் இருந்து ஒருவனைத் தள்ளி வைப்பது வாழ்க்கையின் நிஜத்திலிருந்தே தள்ளி வைப்பது போலத்தானே ஜீஜா. அவன் தன் வாழ்க்கையின் போக்கைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டம் வந்து விட்டது. சாம்பாஜி பீஜாப்பூரின் படைப்பிரிவில் சேர்ந்து விட்டான். இவனும் ஏதாவது முடிவெடுத்தே ஆக வேண்டும். சாம்பாஜியைக் காட்டிலும் பல விதங்களில் இவன் ஒருபடி மேலாகவே இருக்கிறான். அதனால் இவன் வீரத்திற்கும், அறிவுக்கும் முகலாயப் படையில் கூட நல்ல வரவேற்பிருக்கும். அங்கு செல்வத்திற்கும், செல்வாக்குக்கும் கூட எந்தக் குறையுமிருக்காது…..”

ஜீஜாபாய் கவலையுடன் சொன்னாள். “ஆனால் அங்கும் சூழல் இது தானே!”

ஷாஹாஜி சொன்னார். “ஆமாம். சொல்லப் போனால் இதை விட மோசம். இங்காவது இவன் கருத்தை மதித்துக் கேட்கும் மனம் இருக்கிறது. ஆனால் அங்கு இது போன்ற கருத்துக்கள் புரட்சியாகப் பார்க்கப்படும். இங்கேயானதால் இவன் இன்று காப்பாற்றப்பட்டிருக்கிறான். அங்காக இருந்தால் இன்னேரம் சிரத்சேதம் உறுதியாகியிருக்கும்”

ஜீஜாபாய்க்கு எண்ணிப் பார்க்கவே மனம் பதறியது. ஷாஹாஜி தொடர்ந்து சொன்னார். “இப்போது அவன் கேட்டுக் கொண்டது போல மறுபடி பூனாவுக்கு அனுப்புவதில் பிரச்னை இல்லை ஜீஜா. ஆனால் நான் அவன் எதிர்காலத்தை யோசிக்கிறேன்.  அவன் ஏதோ ஒரு கனவுலகில் வசிப்பது போலத் தோன்றுகிறது. அது தான் என்னைப் பயமுறுத்துகிறது. அவன் கனவுகளிலிருந்து மீள வேண்டும்…. அது முக்கியம்….”

ஜீஜாபாய் சொல்ல முடியாத பல உணர்ச்சிகள் மனதில் எழ,  சாளரத்தின் வழியே தெரிந்த மூன்றாம் பிறை நிலவைப் பார்த்துக் கொண்டே குரல் கரகரக்கச் சொன்னாள். “நாம் தான் நம் கனவுகளைத் தொலைத்து விட்டோம். அவனிடமாவது அந்தக் கனவுகள் தங்கட்டும். அவனுக்காவது அவற்றை நிஜமாக்கும் பாக்கியம் வாய்க்கட்டும்”

(தொடரும்)
என்.கணேசன்

4 comments:

 1. சுஜாதாMay 28, 2018 at 6:18 PM

  அருமை. அருமை.

  ReplyDelete
 2. Conversations between parents and son & conversation between parents are very meaningful. Hats off sir.

  ReplyDelete
 3. கதை மாந்தரின் உணர்வுகளை இதைவிட துல்லியமாக யாராலும்ளிப்படுத்திவிட முடியாது ....அமானுஷ்யம் , மர்மம் , சமூகம் மட்டுமல்லாது சரித்திர கதையிலும் முத்திரை பதித்து சமகால எழுத்தாளர்களில் தனித்துவம் பெற்று விளங்கிடும் உங்களுக்கு பாராட்டுதலைத் தெரிவிக்கிறேன் ....

  ReplyDelete
 4. இப்படிபட்ட இக்கட்டான சூழலில்... சிவாஜி எவ்வாறு தன் கனவுகளை நிஜமாக்குவான்..?
  ஜீஜா அவர்கள் சொன்னபடி சிவாஜிக்கு அந்த பாக்கியம் வாயக்குமா?

  ReplyDelete