என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, May 17, 2018

இருவேறு உலகம் – 83மாஸ்டர் க்ரிஷைப் பார்த்தவுடனேயே அவனிடம் தெரிந்த மாற்றத்தைக் கவனித்தார். அவனிடம் இந்த இரண்டு நாட்களிலேயே நல்ல முன்னேற்றம் தெரிந்தது. கண்களில் கூடுதலாக ஒளி, முகத்தில் கூடுதலாக தேஜஸ், நடையில் தானாகக் கூடியிருந்த கம்பீரம் முதலானவற்றை எல்லாம் அவரே இவ்வளவு சீக்கிரம் அவனிடம் எதிர்பார்த்திருக்கவில்லை. இது வரை அவரிடம் கற்றுக் கொண்ட மாணவர்களில் மிகச்சிறந்தவன் இவனுடைய இரண்டு நாள் நிலையை எட்ட எட்டு மாதங்கள் தேவைப்பட்டிருந்தன…. முற்பிறவிகளில் முயன்றிருந்தவர்களுக்கே இந்த வேகம் சாத்தியம்…. ஆனால் வெளிப்படையாக தன் கருத்துகளைச் சொல்லாமல் அவன் இந்த இரண்டு நாட்களில் எப்படிப் பயிற்சிகள் செய்தான், என்னவெல்லாம் உணர்ந்தான், வந்த தடங்கல்களை எப்படி எல்லாம் சமாளித்தான் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். அவன் தன் ஆரம்ப நிலைக்கு அற்புதமாகவே எல்லாவற்றையும் சமாளித்திருக்கிறான் என்று தோன்றியது. வேறொரு குறைவான சீடனாக இருந்தால் வெளிப்படையாக அவர் சிலாகித்திருப்பார். ஆனால் இவன் குறைவான மாணவன் இல்லை. அதனால் இவனிடம் அவர் பாராட்டைத் தெரிவிக்கவில்லை….

மாஸ்டர் க்ரிஷைக் கேட்டார். “நீ பயிற்சிகள் தியானம் எல்லாம் செய்து முடித்துத் தனிமையில் உணருவது போலவே மற்ற எல்லா நேரங்களிலும் உணர்கிறாயா?”

க்ரிஷ் யோசித்தான். நிச்சயமாக இல்லை என்றே தோன்றியது. பிராணாயாமம், பயிற்சிகள், தியானம் எல்லாம் முடித்து அதிகாலையில் ஆரம்பத்தில் உணரும் அந்த மிகத்தெளிவான உணர்வுநிலை, மற்ற வேலைகள் செய்யும் போதும், மற்றவர்களுடன் இருக்கும் போதும் இருப்பதில்லை. இழந்து விடுவதில்லை என்ற போதும் அதே தெளிவான நிலையில் இருந்து விடுவதும் இல்லை. சிறிதாவது நீர்த்துப் போய் விடுகிறது தான்…. அவன் அதை வாய்விட்டுச் சொன்னான்.

தன் மாணவனுக்கு மனதில் கூடுதல் மார்க் போட்டார் மாஸ்டர். அவன் சொன்னது தான் நிஜம், அது தான் யதார்த்தம். மகா சித்தர்களும், யோகிகளும் மட்டுமே எல்லா நேரங்களிலும் அந்தத் தெளிவான விழுப்புணர்வுடன் கூடிய உணர்வுநிலையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். அதை அறிந்து கொண்டே தான் மாஸ்டர் கேட்டார். உள்ளதை உள்ளபடி ஒத்துக் கொள்ளும் உயர்ந்த பண்பு ‘ஈகோ’வை முற்றிலும் ஒழித்து விட்டிருந்த மாணவனுக்கே சாத்தியம். க்ரிஷ் அதிலும் ஜெயித்து விட்டான்….

க்ரிஷ் சொன்னதிலேயே அவன் ஹரிணி சீண்டிய போது சமாளித்த விதத்தை அவர் மிகவும் ரசித்தார். அவளைத் தவிர்த்தும் விடாமல், அவளிடம் தடுமாறியும் விடாமல் அவன் பேச்சைத் திசை திருப்பியது புத்திசாலித்தனமான அணுகுமுறையாகத் தோன்றியது. அவன் தர்ம நியாயம் தன் பக்கம் இருப்பதால் கடவுளும் தன் பக்கமாகத் தான் இருப்பார் என்று உறுதியாக அவளிடம் சொன்னதும் ரசிக்க வைத்தது. இந்த அளவு நீதி, நியாய, தர்மத்தில் உறுதியாக இருப்பவனை எப்படி அந்த ஏலியன் மாற்றப் போகிறான், ஏமாற்றப் போகிறான்…….?

அன்று நிறைய நேரம் அவர்கள் இருவரும் அபூர்வ சக்திகள் பற்றிப் பேசினார்கள். பேச்சின் போது க்ரிஷ் தன் சந்தேகத்தைக் கேட்டான். “மாஸ்டர் முறையாகப் பயிற்சியோ, சாதகமோ செய்யாமல் கூடச் சிலர் அபூர்வ சக்திகள் பெற்று விடுகிறார்களே அது எப்படி?”

மாஸ்டர் சொன்னார். “தற்செயலாக அந்த உயர் அலைவரிசைகளில் ஏதோ ஒன்றைத் தொடர்பு கொண்டு விடுவது நிறையவே நடக்கிறது. அப்படி நடக்கும் போது சம்பந்தப்பட்ட நபருக்கு சம்பந்தப்பட்ட ஒரு மகாசக்தி கிடைத்து விடுகிறது. அது எப்படி வந்தது என்றும், எப்படி வேலை செய்கிறது என்றும் அந்த நபரால் விளக்க முடிவதில்லை….. வந்தபடியே ஏதோ ஒரு நாள் அந்த சக்தியை அந்த ஆள் இழந்தும் விடலாம். ஏதாவது ஒரு காரணத்தால் அந்த அலைவரிசையில் தொடர்பு வெட்டப்பட்டு விடலாம். மறுபடி அதை எப்படி பெறுவது என்பது தெரியாமல் அந்த ஆள் திண்டாடலாம்…..”

க்ரிஷுக்கு  இந்த சக்திகள் எல்லாமே ஆச்சரியமாகவும் பிரம்மாண்டமாகவும் தோன்றியது. பேரன்பினால் கூடச் சில சமயங்களில் ஒருவர் மற்றவர் குறித்த தொலைதூரச் செய்திகளைப் பெற்று விடுவதும் உண்டு என்று சொன்ன மாஸ்டர் அவன் அமேசான் காடுகளில் இருக்கும் போது அம்மா என்று ஈனசுரத்தில் அழைத்த ஒரு கணம் அப்படிக் கேட்டதாக உணர்ந்து பத்மாவதி அந்தத் திசை நோக்கித் திரும்பிப் பார்த்ததைச் சொன்னார். க்ரிஷ் பேராச்சரியத்துடன் அவரைப் பார்த்தான்.


செந்தில்நாதனை மந்திரவாதியிடம் அழைத்துப் போன குற்றவாளி அந்தக் கட்டிடத்தில் இருந்து வெளியே வந்தவுடன் மெல்லச் சொன்னான். “நீங்கள் தேடுகிற ஆள் பற்றி எனக்குத் தெரியும்னு நினைக்கிறேன்….”

செந்தில்நாதன் அவனை ஊடுருவிப் பார்த்தார். “அதையேன் நீ முதல்லயெ சொல்லலை”

“அந்த மாதிரி சக்திகளைச் சொல்லித் தர்ற ஆளைத்தான் தேடறீங்கன்னு நான் நினைச்சுட்டேன். அந்த மாதிரி சக்திகளைக் கத்துக்க விரும்பி வந்த ஒரு சக்தி வாய்ந்த ஆள்னு கேட்டிருந்தா நான் முதல்லயே சொல்லி இருப்பேன்…..” என்று அவன் தயக்கத்துடன் சொன்னான்.

அவன் சொன்னதும் சரியாகவே அவருக்குத் தோன்றியது. “சரி சீக்கிரம் சொல்லு. அந்த ஆள் எங்கிருக்கான்……”

“அந்த ஆள் எங்கிருக்கான்னு தெரியாது. ஆனா நான் அவனைப் பார்த்திருக்கேன்…..”

செந்தில்நாதன் பரபரப்புடன் சொன்னார். “விவரமாய் சொல்லு”

“இமயமலைப்பகுதில ஒரு சாது இருக்கார். அவருக்குச் சில அபூர்வ சக்திகள் இருக்குன்னு பலர் நினைச்சாங்க. அந்த ஆள் கஞ்சா, போதைல தான் அதிகம் இருப்பார். அவரைப் பார்த்து பலர் பயந்து ஓடறதை நான் பார்த்திருக்கேன்….. நாலஞ்சு வருஷத்துக்கு முன்னால் நீங்க சொன்ன ஆள் அந்த சாது கிட்ட வந்து அந்த சக்திகளைக் கத்துக்க ஒரு மாசம் இருந்தான்…….”

“உனக்கெப்படி இது தெரியும்?”

அவன் தயக்கத்துடன் சொன்னான். “அந்த சாதுக்கு கஞ்சா, போதை மருந்து எல்லாம் நான் தான் சப்ளை பண்ணிட்டிருந்தேன்……”

எழுந்த புன்னகையை அப்படியே அடக்கிக் கொண்டு செந்தில்நாதன் கேட்டார். “அந்த ஆளும் போதை மருந்தெல்லாம் சாப்பிடுவானா?”

“அவனுக்கு அந்தப் பழக்கம் எல்லாம் இருக்கலை போல. அவன் சாப்பிடல. அவன் அந்தப் பழக்கத்தை அருவருப்போட பார்த்த மாதிரி இருந்துச்சு. நான் அந்த சாது கிட்ட அந்த போதைப் பொருள் தர்றப்ப எல்லாம் அந்த மாதிரி தான் அந்த சாதுவை அவன் பார்த்தான்…..”

“ஆனா வாய்விட்டு எதுவும் அவன் சொல்லலை…. அதைத் தடுக்கலை. இல்லையா?”

“தடுக்கலை. சொல்லப்போனா அந்த ஆள் தான் அந்த ஒரு மாசத்துல அந்த போதைப் பொருளுக்கு பணம் குடுத்தான்….. அந்த ஒரு மாசத்துல அந்த சாது  கைல காசு இஷ்டத்துக்கு விளையாடுச்சு. ரொம்ப விலையுயர்ந்த சரக்கா தான் வாங்குவாரு…”

“அந்த ஆள் தான் நான் தேடி வந்த சக்தி வாய்ந்த ஆள்னு எப்படி சொல்றே?”

“அந்த சாதுவே கடைசி கடைசில அந்த ஆளப் பார்த்து பயந்த மாதிரி இருந்துச்சு…… அவர் பார்வைல ஒரு பயம் தெரிய ஆரம்பிச்சதை நானே கவனிச்சிருக்கேன்…..”

இவனைப் போன்ற குற்றவாளிகளின் பார்வைகள் கூர்மையானவை. அதுவும் இந்த பயம் மாதிரி உணர்வுகளை உடனுக்குடனே மோப்பம் பிடித்து விடுவார்கள்….. இவன் சொல்கிற ஆளாகவே எதிரி இருக்க வேண்டும் என்று உள்ளுணர்வு சொன்னது.

“சரி அந்த ஆள் பார்க்க எப்படி இருப்பான்னு விவரி பார்ப்போம்…..” என்றார்.


நடுத்தர வயது, திடகாத்திரமான உடல்வாகு, தீட்சணியமான கண்கள், தலையில் ஒரு காவித் துண்டு, சிறிய தாடி என்று குற்றவாளி வர்ணித்தான். முதல் மூன்றும் சரியாக இருக்கலாம்….. காவித்துண்டு, தாடி எல்லாம் வேடமாக இருக்கலாம், என்று அவர் போலீஸ் புத்தி சொன்னது.

”அவனை அப்பறமா நீ பார்க்கவே இல்லையா?”

“இல்லை சார்”

“அந்த சாது?”

“அவர் இன்னும் இங்கேயே தான் சுத்திகிட்டிருக்கார்….”

“இப்பவும் அந்த ஆளுக்கு நீ சப்ளை பண்றியா?” என்று நட்புடன் கேட்டார்.

“இப்ப எல்லாம் அவர் கிட்ட காசுப் புழக்கம் அதிகம் இல்லங்க சார்”

“அப்ப பொருளைக் கண்ணுல காட்டினா ஆள் கிட்ட தகவல்களைக் கறந்துடலாம் இல்லையா”. அவர் சொன்னதைக் கேட்டு அவன் புன்னகையோடு தலையசைத்தான்.

“அந்த ஆளைப் பேச வைக்க எதாவது பொருள் இப்ப வச்சிருக்கியா?” அவர் கேட்ட போது தயக்கத்துடன் அவரைப் பார்த்தான்.

“பாரு நான் ஒரு போலீஸ் அதிகாரிங்கறதையே மறந்துடு. செலவு பத்தியும் மறந்துடு. எனக்கு நான் வந்த வேலை ஆகணும்.. அவ்வளவு தான்…..”

குற்றவாளி தயக்கம் நீங்கி தன் தொள தொள சட்டையின் உள் பாக்கெட்டிலிருந்து பல பொட்டலங்களை மெல்ல வெளியே எடுத்தான்.

(தொடரும்)
என்.கணேசன் 

3 comments:

 1. Interesting and thought provoking

  ReplyDelete
 2. "அவளைத் தவிர்த்தும் விடாமல், அவளிடம் தடுமாறியும் விடாமல் அவன் பேச்சைத் திசை திருப்பியது புத்திசாலித்தனமான அணுகுமுறை"....//// இது நல்ல ஒரு பயனுள்ள குறிப்பு...
  செந்தில்நாதனின் வித்தியாசமான அணுகுமுறையும்..மர்ம மனிதனை சிறிது சிறிதாக கண்டறிவதும் சூப்பர்...

  ReplyDelete
 3. Great Ganeshan sir, Got the book and Finished :) that too Krish acceptance, climax end and book end with their number 666 :) awesome combo ending

  ReplyDelete