என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, May 21, 2018

சத்ரபதி 21


சாம்பாஜியுடன் சிவாஜி ராஜவீதியில் சென்று கொண்டிருக்கையில் தான் அக்காட்சியைப் பார்த்தான். ஒரு பசுவை வெட்ட கசாப்புக்காரன் ஆயத்தமாகி இருந்தான். சாம்பாஜி தன் பார்வை அங்கு செல்வதைத் தவிர்த்து விட்டான். இது அவன் சிறு வயதிலிருந்தே அடிக்கடிப் பார்க்கும் ஒரு சம்பவம். அவன் கண்கள் பக்கவாட்டில் தம்பியைப் பார்த்தன. தம்பி தந்தையுடன் பசு வதை குறித்து விவாதிப்பதை அவன் கேட்டிருக்கிறான் என்பதால் எச்சரிக்கையோடு தம்பியைப் பார்க்கையில் அருகில் தம்பி இல்லை. திகைத்துப் போன சாம்பாஜி சுற்றும் முற்றும் பார்க்கையில் சிவாஜி அந்தக் கசாப்புக்காரன் மீது பாய்ந்திருந்தான்…

தன் மீது திடீரென்று நடந்த தாக்குதலால் நிலைகுலைந்து போன கசாப்புக்காரன் கையிலிருந்த வெட்டுக்கத்தியைப் பிடுங்கிய சிவாஜி அதை வீசித் தூர எறிந்தான். கயிற்றில் கட்டப்பட்டிருந்த பசுவை விடுவித்து விட்டு காலாந்தகன் போல கடுஞ்சினத்துடன் நின்ற சிவாஜியை கசாப்புக்காரன் திகைப்புடன் பார்த்தான். யாரிவன்?

சாம்பாஜி சிவாஜியின் பின் வந்து நின்ற போது தான் கசாப்புக்காரனுக்கு அவன் ஷாஹாஜியின் இளைய மகன் என்பதை யூகிக்க முடிந்தது. இவனைப் பற்றி அவன் கேள்விப்பட்டிருக்கிறான்…. தூர ஓடிக் கொண்டிருந்த பசுவைத் திகைப்புடன் பார்த்து விட்டு கோபத்துடன் சிவாஜியிடம் சொன்னான். “அந்தப் பசுவை ஏன் விடுவித்தாய்.? நான் அதை விலை கொடுத்து வாங்கியிருக்கிறேன்”

சிவாஜி சினம் குறையாமல் சொன்னான். ”புனிதத்திற்கு விலை இல்லை மூர்க்கனே….. இந்தக் காசுகளை வைத்துக் கொள்….. நல்ல வேளையாக என் கண்முன் அதை நீ வெட்டியிருக்கவில்லை. வெட்டியிருந்தால் உன் உயிரை இழந்திருப்பாய்..” என்று சொன்ன சிவாஜி சில தங்கக் காசுகளை அவன் மீது விட்டெறிந்தான்.

பலரும் அங்கே கூடி விட்டார்கள். சாம்பாஜியிடம் சிவாஜி சொன்னான். “வா போகலாம்……” திகைப்பு குறையாமல் சாம்பாஜி சிவாஜியைப் பின் தொடர்ந்தான்.

செய்தி ஷாஹாஜியை எட்டிய போது அவரும் அதிர்ந்து போனார். ராஜவீதியில் நடந்த இந்த சம்பவம் சுல்தானைக் கண்டிப்பாக எட்டாமலிருக்க வழியில்லை…. கடுங்கோபத்துடன் அவர் சிவாஜியை அழைத்துக் காரணம் கேட்ட போது அவன் அதைவிட அதிகக் கோபத்துடன் பதில் சொன்னான். “இந்த மண்ணில் பூஜிக்கப்படும் பசுவை பூஜிப்பவர்கள் முன்பே வெட்ட ஒருவன் ஆயத்தமாக இருந்தால் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கச் சொல்கிறீர்களா தந்தையே!.... இதையெல்லாம் சகித்துக் கொண்டு வாழ்வதில் என்ன பெருமை இருக்கிறது தந்தையே”

ஷாஹாஜி பொறுமையை வரவழைத்துக் கொண்டு சொன்னார். “மகனே. ஆள்பவர்களின் சட்டம் அதைத் தடுக்கவில்லை. அதனால் அதைத் தடுக்க நாம் முயன்றால் குற்றவாளிகளாகவே இங்கே கருதப்படுவோம். இதை ஏன் நீ புரிந்து கொள்ள மறுக்கிறாய்.?...”

சிவாஜி கோபம் குறையாமல் அவரையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். ஷாஹாஜி சொன்னார். “சிவாஜி. உன் நம்பிக்கை உனக்கு. அவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு. நாம் ஒருவர் வழியில் இன்னொருவர் ஏன் குறுக்கிட வேண்டும், யோசித்துப் பார்”

”தந்தையே என் முன் பசுவை அவன் வெட்டும் போது என் வழியில் அவன் குறுக்கிடுகிறான் என்றே நான் நினைக்கிறேன்….”

ஷாஹாஜிக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. பின் மெல்லச் சொன்னார். “மகனே, மதங்கள் வேறானாலும் இங்கே மனிதர்கள் ஒற்றுமையுடனேயே வாழ்கிறார்கள். இந்த மண்ணின் பெருமையும் அதுவாகவே இருக்கிறது. என் பெயர் கூட இந்துப் பெயர் அல்ல என்பதை நீ கவனித்திருப்பாய். பிள்ளைகள் இல்லாத என் தந்தை பிர் ஷாஹா ஷரிஃப் என்ற இஸ்லாமிய பக்கிரியின் சமாதியை வணங்கி நான் பிறந்ததால் தான் எனக்கு ஷாஹாஜி என்ற பெயர் வைத்தார். எனக்குப் பின் பிறந்த என் தம்பிக்கு ஷரிஃப்ஜி என்ற பெயர் வைக்கப்பட்டது…..”

சிவாஜி சொன்னான். “எந்த மதத்திற்கும் நான் எதிரியல்ல தந்தையே. இறைவனை வலியுறுத்துவதாலேயே அனைத்து மதங்களையும் நான் மதிக்கிறேன். அதே போல் மற்றவர்கள் நம்பிக்கைகளுக்கும் நான் எதிரானவன் அல்ல. அது மற்றவர்கள் சுதந்திரத்தை மறுப்பது போல் தவறு என்று நம்புபவன் நான். ஆனால் என் கண் முன் என் தாய் கஷ்டப்படுவதை என்னால் எப்படிச் சகிக்க முடியாதோ அதே போல் பசு வெட்டப்படுவதையும் என்னால் சகிக்க முடியாது…”

சிவாஜி முடிவாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து போய் விட்டான். ஷாஹாஜி ஜீஜாபாயைப் பார்த்தார். அவள் என் மகன் சொல்வதில் என்ன தவறு என்பது போலவே அவரைப் பார்த்தாள். தாங்க முடியாத ஷாஹாஜி நீண்ட யோசனைக்குப் பின் தன் நண்பரும், சுல்தானின் மரியாதைக்குப் பாத்திரமானவருமான மீர் ஜும்லாவின் இல்லத்திற்கு விரைந்தார். நடந்ததை எல்லாம் மனம் விட்டு அவரிடம் சொன்னார்.

மீர் ஜும்லா ஆழமாய் யோசித்து விட்டுச் சொன்னார். “ஷாஹாஜி, உங்கள் மகன் பேசியதில் என்னால் குறை காண முடியவில்லை”

ஷாஹாஜி திகைப்புடன் நண்பரைப் பார்த்து விட்டுக் கேட்டார். “என்ன சொல்கிறீர்கள் நண்பரே. நான் பசு மாமிசம் சாப்பிடுவதில்லை. அது என் மத நம்பிக்கை. அதை நீங்களும் சாப்பிடக்கூடாது என்று உங்களை நான் வற்புறுத்த முடியுமா?”

மீர் ஜும்லா சொன்னார். “உங்கள் மகன் எங்களைப் பசு மாமிசம் சாப்பிட வேண்டாம் என்று சொல்லவில்லையே ஷாஹாஜி. உங்கள் கண் முன் பசுவை வெட்ட வேண்டாம் என்றல்லவா சொல்கிறான். இரண்டுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கிறதல்லவா?”

ஷாஹாஜி கவலையுடன் சொன்னார். “மாற்றுக் கருத்துகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தங்களுக்கு இருக்கிறது மீர் ஜும்லா. அதனால் பெருந்தன்மையுடன் இதைச் சொல்கிறீர்கள். ஆனால் பிரச்னை சுல்தான் முன் வருகையில் நான் எப்படி இதைச் சொல்ல முடியும்?”

”நீங்கள் சொல்வதில் சங்கடம் உணர்வது இயல்பே ஷாஹாஜி. ஆனால் நான் சொல்லல்லாம் அல்லவா? நான் சுல்தானிடம் பேசுகிறேன். கவலை வேண்டாம்”

ஷாஹாஜி கண்கள் ஈரமாக நண்பரை இறுக்க அணைத்துக் கொண்டார். “நன்றி நண்பரே….”றுநாள் அரசவையில் சிவாஜி விவகாரம் பேசப்பட்டது. ஷாஹாஜியின் வளர்ச்சியைச் சகிக்க முடியாமல் பொறாமைப்பட்டுக் கொண்டிருந்த ஒருவர் தான் சிவாஜி முந்தைய தினம் செய்த காரியத்தை சுல்தான் முன் எடுத்துச் சொன்னார். ஆதில்ஷா நெற்றி சுருங்க முழுவதையும் கேட்டார். ஷாஹாஜிக்கு சுல்தானைத் தலைநிமிர்ந்து பார்க்க முடியவில்லை….

ஆதில்ஷா ஒரு கணம் ஷாஹாஜியைப் பார்த்து விட்டுப் பின் சபையில் பொதுவாகக் கேட்டார். “இந்தச் சம்பவம் குறித்து அரசவை அறிஞர்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

மற்றவர்கள் எதுவும் சொல்வதற்கு முன் மீர் ஜும்லா முந்திக் கொண்டார். “மன்னரே! நண்பர் ஷாஹாஜியின் இளைய மகன் சிவாஜி தங்களைக் காணும் போது தந்தையைக் காண்பது போல் உணர்ந்ததாகச் சொன்னான். அவன் தன் உணர்வைச் சொன்னாலும் அது பொதுவாகவே கூட மிகச்சரியான உணர்வே என்று நான் சொல்வேன். அரசர் தன் பிரஜைகளுக்குத் தந்தையைப் போன்றவர். அவர்களைப் பொறுத்த வரை தந்தையைப் போல சரிசமமானவர். அவரும் தன் பிரஜைகளைச் சரிசமமாகவே நடத்த வேண்டியவர். இந்துக்களுக்கு பசு தெய்வத்துக்கு இணையானது. அவர்களுடன் சேர்ந்து வாழும் நாம் பசு மாமிசத்தை உண்பதைத் தவிர்க்க முடியாது என்றாலும் அவர்கள் பார்வையில் படும்படி அதைக் கொல்வதையோ, அதை விற்பதையோ தவிர்க்க முடியும். இதில் நாம் இழக்க எதுவுமில்லை…..”

ஆதில்ஷா ஆழ்ந்த சிந்தனையுடன் அவையைப் பார்த்தார். மீர் ஜும்லா சொன்னதற்கு எதிராக எந்தக் குரலும் எழவில்லை.

மீர் ஜும்லா தொடர்ந்து சொன்னார். “தங்கள் அரசவையில் தங்கள் மீது பேரன்பு கொண்ட ஷாஹாஜி போன்ற இந்துக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் கண் முன் பசுவதை, பசு மாமிசம் விற்பனை நடப்பது அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தினாலும் கூட இதுவரை அவர்கள் அதுகுறித்து எதுவும் சொன்னதில்லை. மௌனமாகவே சகித்திருக்கிறார்கள். ஆனால் இந்தச் சூழலில் வளராத சிவாஜி அதை நேரடியாகக் காணும் போது கொதித்தெழுந்தது திட்டமிட்டு நிகழ்ந்ததல்ல. மனம் பதைத்த வேதனையின் உடனடி வெளிப்பாடே அது. இந்துக்களின் உணர்வுகளைத் தங்களுக்குத் தெரியப்படுத்த எல்லாம் வல்ல அல்லா ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பாகவே இதைக் காண்கிறேன்…..”

ஆதில்ஷா ஷாஹாஜியையும், மற்ற இந்துப் பிரபுக்களையும் ஒரு கணம் பார்த்தார். பின் சிறிது நேர யோசனைக்குப் பின் பேசினார். “இன்றிலிருந்து பசு வதை நகரத்தின் உள்ளே நடப்பதற்குத் தடை விதிக்கிறேன். அதே போல பசு மாமிசமும் நகர எல்லைக்குள் விற்பனை செய்யக்கூடாது என்று ஆணையிடுகிறேன். அதே சமயத்தில் நகர எல்லைக்கு வெளியே இந்த இரண்டும் நடக்க எந்தத் தடையும் இல்லை…..”

ஷாஹாஜி உட்பட அனைத்து இந்துக்களும் எழுந்து கரகோஷம் செய்து சுல்தானை வாழ்த்தினார்கள். மீர் ஜும்லா போன்ற சில இஸ்லாமிய பிரபுக்களும் நட்புணர்வுடன் அந்தக் கரகோஷத்தில் கலந்து கொள்ள ஷாஹாஜி பெருத்த நிம்மதியை உணர்ந்தார்.

ஆனால் அந்த நிம்மதி ஒரே வாரத்தில் காணாமல் போகும் என்று அவர் அறிந்திருக்கவில்லை.

(தொடரும்)
என்.கணேசன் 

5 comments:

 1. சுஜாதாMay 21, 2018 at 6:34 PM

  ஷாஹாஜியும் சிவாஜியும் பேசிக்கொள்ளும் இடம் சூப்பர் சார். ஷாஹாஜியின் பெயர் ஒரு முஸ்லீம் துறவியிடையது என்பது எனக்கு இது வரை தெரியாது. புதிய தகவல் இது. உங்கள் கதைகளைப் படிக்கும் போதே சுவாரசியத்துடன் நிறைய நல்ல தகவல்களும் கிடைப்பது எங்களுக்கு போனஸ்.

  ReplyDelete
 2. Conversations between Shahaji and Sivaji and Shahaji and Meer Jumla are classic Ganeshan sir. You have wonderfully took us to Sivaji's times. Thank you.

  ReplyDelete
 3. I like the helpful information you provide in your articles.
  I will bookmark your blog and check again here regularly.
  I'm quite sure I'll learn a lot of new stuff right here!
  Good luck for the next!

  ReplyDelete
 4. ஷாஹாஜி மற்றும் சிவாஜி...
  ஷாஹாஜி மற்றும் மீர் ஜுமலா...
  உரையாடல்கள்...‌ அரசவை விவாதம் அனைத்தும் அருமை...

  "பசுவதையானது நகர்புரத்துக்கு வெளியே நடந்தாலும், உள்ளே நடந்தாலும்... இரண்டுமே ஒன்றுதானே?
  பசு வெட்டுப்படுவது... வெட்டப்படுவது தானே...?"
  இதை சிவாஜி எவ்வாறு ஏற்றுக்கொள்வான்?

  ReplyDelete