சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, July 13, 2015

சீடரை காந்தமாய் இழுத்த குரு!

மகாசக்தி மனிதர்கள்-30 

 பாபாஜியின் ஆணைப்படி கீதை, பைபிள் என்ற இரண்டு புனித நூல்களின் சாராம்சங்களின் ஒருமைத் தன்மையையும், தனித்தன்மைகளையும் விளக்கி ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி 1894 ஆம் ஆண்டு “கைவல்ய தரிசனம்” (The Holy Science) என்ற நூலை எழுதி முடித்தார். அதன் பின் அவர் வாழ்க்கை துறவு வாழ்க்கையாக இருந்தது. தனது செராம்பூர் வீட்டை ஆசிரமமாக மாற்றி பல சீடர்கள் இலவசமாகத் தங்கி ஆன்மிகக் கல்வி கற்றுச் செல்ல வழி வகுத்தார். அது போல பூரியிலும் ஒரு ஆசிரமத்தை அவர் அமைத்தார். அந்த ஆசிரமத்தில் எல்லோரும் ஒரே விதமாக பார்க்கப்பட்டனர். பணக்காரர்கள், ஏழைகள், அறிவாளிகள், அறியாதவர்கள் என்ற பாகுபாடு ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியிடம் இருக்கவில்லை. அங்கு படிக்கும் சீடர்களுக்கு மட்டுமல்லாமல், உணவு உண்ணும் நேரத்தில் வரும் பார்வையாளர்களுக்கும் உணவு இலவசமாக தரப்பட்டது.

ஆசிரமம் அமைத்து வசூல் மன்னர்களாக மாறி ஆன்மிகப் போர்வையில் பணம், புகழ் மட்டுமே குறியாக இருக்கும் பலரை இன்று நம்மால் காண முடிகிறது. அதோடு ஒப்பிடுகையில் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி  தன்னுடைய சொத்தையே இப்படி தர்ம காரியங்களுக்குப் பயன்படுத்தியது அவரது தன்னலமில்லாத உயர்ந்த உள்ளத்தையே காட்டுகிறது அல்லவா?  

அவர் ஒரு கண்டிப்பான குருவாக இருந்ததால் அரை மனதாகப் படிப்பவர்களும், ஆர்வம் இல்லாமல் இருந்தவர்களும் அதிக காலம் அவருடைய ஆசிரமங்களில் தங்க முடியவில்லை. ஆனால் உண்மையான ஆர்வமும், தேடலும் உள்ளவர்கள் அங்கு தங்கி ஆன்மிக அறிவு மட்டுமல்லாமல் குருவின் நேரடிக் கண்காணிப்பில் நல்ல அனுபவ அறிவையும் பெற்றார்கள். அப்படிப்பட்ட சீடர்களில் பரமஹம்ச யோகானந்தர், சுவாமி சத்யானந்த கிரி,  பாபானந்த கிரி, சுவாமி ஹரிஹரானந்த கிரி ஆகியோர் முக்கியமானவர்கள். அவர்களில் பரமஹம்ச யோகானந்தர் தன் ‘யோகியின் சுயசரிதைநூலில் குருவுடனான தன் அனுபவங்களையும், சுவாமி சத்யானந்த கிரி சுவாமி ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி மகராஜ் வாழ்க்கை வரலாறுநூலில் குருவின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்கள்.

இனி ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியுடன் அவருடைய சீடர்களுக்கும், மற்றவர்களுக்கும் ஏற்பட்ட சில சுவாரசியமான நேரடி அனுபவங்களைப் பார்ப்போம்.

பரமஹம்ச யோகானந்தர் தன் ஆன்மிகத் தேடலின் ஆரம்பத்தில் பல இடங்களுக்குச் சென்றவர். கடைசியில் ஒரு ஆசிரமத்தில் சேர்ந்து ஆன்மிக மார்க்கத்திலேயே நிலைத்து விட வேண்டும் என்று முடிவெடுத்து வாரணாசியில் இருந்த ஒரு ஆசிரமத்திற்குத் தன் நண்பனுடன் சென்றார். அங்கு ஆசிரமத்தலைவர் நல்லவராகவும் யோகானந்தர் மீது அன்பு கொண்டவராகவும் இருந்த போதிலும் ஆசிரமத்தில் இருந்த மற்றவர்களுக்கும் யோகானந்தருக்கும் ஒத்துப் போகவில்லை. அவர்கள் கேலியும் கிண்டலும் செய்த வண்ணம் இருந்தனர்.

ஒரு நாள் ஆசிரம வேலையாக யோகானந்தரும் இன்னொரு இளம் சீடரும் வாரணாசி கடைத்தெருவுக்குச் சென்றனர். அவர்கள் செல்கின்ற வழியில் ஒரு இடைப்பட்ட குறுகிய தெருவின் கோடியில் ஸ்ரீயுக்தேஷ்வர் நின்று கொண்டிருந்தார். ஏதோ ஒன்று காந்தமாய் யோகானந்தரை அவரிடம் ஈர்த்தது. போகின்ற வேலையை விட்டு விட்டு முன்பின் பார்த்தறியாத ஒரு நபரிடம் போவது சரியல்ல என்று நினைத்த யோகானந்தர் நேராக நடக்க ஆரம்பித்தார். ஆனால் சிறிது தூரம் போன பிறகு அவரால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. கால்கள் கனக்க ஆரம்பித்தன. திரும்பி அந்த குறுகிய தெரு பக்கம் நடக்க ஆரம்பிக்க கால்கள் இயல்பு நிலைக்குத் திரும்பின. இதென்ன விசித்திரமாக இருக்கிறதே என்று நினைத்த யோகானந்தர் மறுபடி எதிர்பக்கம் நடக்க ஆரம்பிக்க கால்கள் பழையபடி கனக்க ஆரம்பித்தன.

யோகானந்தர் தன் கூட நடக்காமல் முன்னோக்கிப் போவதும் பின்னோக்கிப் போவதுமாக இருப்பதைப் பார்த்ததும் கூட வந்த ஆசிரமத்து சீடனுக்குச் சிரிப்பு தாங்கவில்லை.  “உனக்கு என்ன ஆயிற்று? கிறுக்கு பிடித்து விட்டதா?என்று கேட்டு வயிறு குலுங்க சிரித்தான். பதில் ஏதும் சொல்லாமல் யோகானந்தர் அந்த குறுகிய தெருவை நோக்கி வேகமாக நடந்தார். கால்கள் இப்போது ஒத்துழைத்தன.

குறுகிய தெருவின் மறுகோடியில் இப்போதும் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி அமைதியாக நின்றிருந்தார். ஓடிச்சென்று யோகானந்தர் “குருதேவரேஎன்று அவர் காலில் விழுந்தார். முதல் முறை சந்தித்துக் கொள்பவர்கள் போல் அவர்களுடைய நிலை இருக்கவில்லை. பல ஜென்மங்களாகத் தொடர்கின்ற குரு சிஷ்யன் உறவின் உணர்வாக அது இருந்தது.

சிறிது உரையாடி விட்டு ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சொன்னார். “இன்னும் நான்கு வாரங்கள் கழித்து விட்டு என் ஆசிரமத்திற்கு வந்து சேர். எப்படியும் நீ இப்போதிருக்கும் ஆசிரமத்தில் நீ சந்தோஷமாக இல்லை

யோகானந்தர் தற்போதைய ஆசிரமத்தில் தனக்கு இருக்கும் பிரச்னைகள் குறித்து அவரிடம் சொல்லவில்லை என்ற போதும் தன் ஞான திருஷ்டியால் அதை அறிந்திருந்த ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி அது ஒரு பெரிய விஷயம் என்பது போல காட்டிக் கொள்ளவில்லை. தன்னுடைய அப்போதைய வாழ்க்கை மட்டுமல்லாமல் முழு வாழ்க்கையையுமே குரு அறிவார் என்கிற உணர்வு யோகானந்தருக்கு வந்தது. அப்படி இருந்தும் கர்வம் கொள்ளாத அடக்கம் அவரை வியக்க வைத்தது.

குருதேவரின் ஞான திருஷ்டி தன்னிடம் இல்லாததால் யோகானந்தர் அவரிடம் கேட்டார். “கண்டிப்பாக வருகிறேன் குருதேவரே. உங்கள் பெயரையும் ஆசிரம விலாசத்தையும் தயவு செய்து தெரிவியுங்கள்

ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி தன் பெயரையும் செராம்பூர் ஆசிரம விலாசத்தையும் சொல்லி யோகானந்தரை அனுப்பி வைத்தார். அவர் வாரணாசியில் இருந்த அவருடைய தாயுடன் சில நாட்கள் தங்கி இருக்க வந்த இடத்தில் பிற்கால பிரதான சீடர் யோகானந்தரைச் சந்திக்க நேர்ந்தது விதியின் முன்னேற்பாடாக இருப்பதாகவே தோன்றுகிறது. 

யோகானந்தர் தன் பழைய ஆசிரமத்திற்குத் திரும்பினார். ஆனால் நாளுக்கு நாள் அந்த ஆசிரமத்தில் இருந்த மற்றவர்களுடனான உறவு மோசமாக ஆரம்பித்தது. கடைசியில் அங்கிருந்து கிளம்பி விட்டார். ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியின் செராம்பூர் ஆசிரமத்திற்கு சொன்னபடி நான்கு வாரங்கள் கழித்து போய் சேர்ந்த யோகானந்தரை நிரந்தரமாக ஆசிரமத்தில் இருத்திக் கொள்ள ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சம்மதிக்கவில்லை. பட்டப்படிப்பு படித்து முடித்தே வந்தால் போதும் என்று சொல்லி விட்டார். கல்லூரிப் படிப்பு என்பதே வேம்பாக யோகானந்தருக்குக் கசந்தது என்றாலும் தன் குருதேவரின் கட்டளையை மீறவில்லை. ஆனால் அடிக்கடி ஆசிரமத்திற்கு வந்து தங்க அனுமதி கேட்டார். ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி அதற்கு அனுமதி தந்தார்.

செராம்பூர் ஆசிரமத்தில் இருந்த நாட்களில் யோகானந்தர் குருவின் நிழலாகவே இருந்தார். இரவு உறங்குவது கூட குரு அருகில் தான். செராம்பூர் ஆசிரமத்தில் கொசுக்களின் தொந்திரவு அதிகமாக இருந்தது. கொசுக்கள் பெரியதாக இருந்ததோடு அவர்கள் படுக்க ஆரம்பித்தவுடன் படை எடுத்து வந்தன. யோகானந்தர் வீட்டில் கொசுவலைக்குள் படுத்து பழக்கப்பட்டவர். தலையிலிருந்து கால்கள் வரை கொசுக்களால் கடிக்கப்பட்ட யோகானந்தர் ஒருநாள் குருதேவரிடம் கொசுவலை வாங்கினால் உறங்க வசதியாக இருக்கும் என்று சொன்னார். அனுமதி தந்த குருதேவர் தனக்கும் ஒரு கொசுவலை சேர்த்து வாங்கச் சொன்னார். ‘நீ மட்டும் கொசுவலை போட்டுக் கொண்டால் அத்தனை கொசுக்களும் என்னிடம் வந்து விடும்என்றார். அப்படியே இரண்டு கொசுவலைகள் யோகானந்தர் வாங்கினார்.

ஒவ்வொரு இரவும் கொசுவலை விரிக்க குருதேவர் உத்தரவிட்டால் தான் யோகானந்தர் கொசுவலை விரிப்பார். இரண்டு நாட்கள் அப்படியே நடந்தது. மூன்றாவது நாள் குருதேவர் ஒன்றும் சொல்லாமல் உறங்கப் போய் விட யோகானந்தருக்கு உறக்கம் வரவில்லை. மெல்ல புரண்டு பார்த்தர்ர். கனைத்துப் பார்த்தார். குருதேவர் எழுகிற மாதிரி தெரியவில்லை. குருதேவர் பிணம் போல் படுத்துக் கிடந்தது யோகானந்தருக்கு சந்தேகத்தைக் கிளப்பியது. உடலைத் தொட்டுப்பார்த்தார். உடல் சில்லிட்டிருந்தது. மூக்கில் கை வைத்துப் பார்த்தார். மூச்சு விடுகிற மாதிரி தெரியவில்லை. பயந்து போன யோகானந்தர் மற்றவர்களை எழுப்பி உதவிக்கு அழைக்கலாம் என்று எழுந்த போது ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி குலுங்கிக் குலுங்கி சிரிக்க ஆரம்பித்தார்.

யோகானந்தருக்கு அப்போது தான் அவர் யோகநித்திரையில் இருந்திருக்கிறார் என்பது தெரிந்தது. ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி நீ ஏன் இன்னும் உறங்கவில்லைஎன்று கேட்ட போது வெட்கத்துடன் யோகானந்தர் கொசுக்களைக் காரணம் காட்டினார்.

“நீ ஏன் கொசுக்களின் நினைவாகவே இருக்கிறாய். கவனத்தை அதிலிருந்து திருப்பு. உறங்குஎன்று ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சொன்னார்.  அதன்பின் பேராச்சரியமாக அந்த இரவில் ஒரு கொசு கூட அவரை அண்டவில்லை. அப்போது தான் குருதேவரின் சக்தியின் வலிமையும், அவர் விளையாட்டாகத் தான் அவருக்கும் சேர்த்து கொசுவலை வாங்கச் சொல்லி இருக்கிறார் என்பதும் யோகானந்தருக்கு விளங்கியது.

என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி – 11.03.2015
  

5 comments:

  1. குருவுக்கும் சீடருக்குமான மெய்சிலிர்க்கும் அனுபவங்கள் அருமையான பதிவு.

    ReplyDelete
  2. பதிவிற்கு மிக்க நன்றி
    கைவல்ய தரிசனம் தமிழாக்கம் உள்ளதா சகோதரரே PDF file ஆக இருந்தால் அனுப்ப இயலுமா
    அல்லது எந்த பதிப்பகம் கோவையில் எங்கே கிடைக்கும் என்ற தகவலை தரயிலுமா சகோ

    ReplyDelete
    Replies
    1. அந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும் என்று எனக்கும் தெரியவில்லை. 

      Delete