சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 23, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 55


லீ க்யாங் லாஸா விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது வாங் சாவொ அங்கு அவனுக்காகத் காத்திருந்தான். அவனிடம் பேசுவதற்கு முன் லீ க்யாங் விமான நிலையத்தில் இருந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைத் தன் பார்வையால் அளந்தான். எந்த நேரத்திலும் மைத்ரேயனும் அவனுடைய பாதுகாவலனும் அங்கு வந்து சேரலாம் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் சுறுசுறுப்பிலேயே அவனுடைய ஆட்கள் இருந்ததை ஒரு சுற்றுப் பார்வையிலேயே அவனால் காண முடிந்தது. திருப்தியடைந்தவனாய் அவன் வாங் சாவொவை நெருங்கினான். “என்ன செய்தி?

“மைத்ரேயனும், அவன் பாதுகாவலனும் சம்யே மடாலயத்தை விட்டு எப்படி எங்கே போனார்கள் என்பது தெரியவில்லை சார். அதைத் தாண்டிய பிரதேசங்களில் அவர்களைப் பார்த்தவர்கள் யாருமில்லை....

“இருட்டிய பிறகு தங்கள் பயணத்தை அவர்கள் தொடர்ந்திருக்கலாம். பின் எங்கேயாவது ஒளிந்து கொண்டிருக்கலாம். நாம் அவர்களைத் தேடிக் கொண்டிருப்பது தெரிய வந்திருந்தால் அவர்கள் வேறு வேடத்திற்கும் மாறி இருக்கலாம்...உடனடியாக வந்தது பதில்.

வாங் சாவொவுக்கு வழக்கம் போல் பிரமிப்பு தான் ஏற்பட்டது. முடிவுகளை எட்ட லீ க்யாங்குக்கு எப்போதுமே அதிக நேரம் தேவைப்பட்டதில்லை. மற்றவர்கள் மணிக்கணக்கில் யோசித்து எட்டும் முடிவுகளை லீ க்யாங் சில நிமிடங்களிலோ, நொடிகளிலோ எட்டி விடுவான்.

வாங் சாவொ மரியாதையுடன் தலையசைத்து விட்டுச் சொன்னான். சம்யே மடாலயம் மறுபடியும் போய் அந்தக் கண்சிமிட்டி மனிதன் சேர்ந்த போதே கூட வேறு யாராவது சேர்ந்திருக்கிறார்களா என்பதை மடாலயக் குறிப்பேடுகளில் பார்த்தேன். ஒரே ஒருவன் ஒரு வாரம் கழித்துச் சேர்ந்தவன். அவன் தந்திருக்கும் விலாசம் உண்மையானது. அவனுக்கு இவனுடன் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது விசாரிக்கையில் தெரிந்து விட்டது. கண்சிமிட்டி மனிதன் அங்கு வேலை பார்த்த போது யாருடன் நெருக்கமாய் இருந்திருக்கிறான் என்று விசாரித்துப் பார்த்தேன். யாரிடமும் நெருக்கமாய் இருந்ததாய் தெரியவில்லை. அதனால் அவன் கூட்டாளிகள் யாராவது அங்கு இருந்தாலும் மற்றவர்களுக்குத் தெரியாதபடி தான் இருந்திருக்கிறார்கள். அவன் சில சமயங்களில் அலைபேசியில் பேசுவதை சிலர் பார்த்திருக்கிறார்கள். ஆனால் அந்த அலைபேசி நம் கையில் சிக்கவில்லை. அந்த எண்ணாவது கிடைக்குமா என்று பார்த்தேன். அவன் யாருடன் எல்லாம் பேசி இருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ளலாமே என்று நினைத்தேன். அந்த எண்ணும் கிடைக்கவில்லை

“சம்யே மடாலயக் குறிப்பேட்டில் விலாசத்துடன் அலைபேசி, தொலைபேசி எண்களைக் குறித்துக் கொள்ளும் வழக்கம் இல்லையா?”

“அந்த மடாலயத் தலைமை பிக்கு குறைவான சம்பளத்திற்கு வேலைக்கு வந்து சேரும் தற்காலிக வேலையாட்கள் பெரும்பாலானவர்களிடம் அலைபேசி இருப்பதில்லை என்றும் அதனால் அவர்களாகத் தந்தால் ஒழிய அவர்களிடம் இருந்து அந்த எண்களை வாங்கிக் குறித்து வைத்துக் கொள்வதில்லை என்றும் சொல்கிறார். அவன் கழுத்து திருகி விழுந்த போது அவனிடம் அந்த அலைபேசி இருந்ததா என்பது தெரியவில்லை. இருந்து அதுவும் கீழே விழுந்து யாராவது எடுத்து வைத்துக் கொண்டார்களா என்பது தெரியவில்லை

வாங் சாவொ எல்லா கோணங்களிலும் சிந்தித்து செயல்பட்டிருக்கிறான் என்று லீ க்யாங் திருப்தியுடன் நினைத்துக் கொண்டான்.

வாங் சாவொ சொன்னான். “அவனைப் பற்றி விசாரித்ததில் ஒரு தகவல் விசித்திரமாகப் பட்டது. அவன் சில சமயங்களில் நள்ளிரவு நேரங்களில் கோங்காங் மண்டப வாயிலில் நின்று கொண்டிருப்பதைச் சிலர் பார்த்திருக்கிறார்கள். ஏன் நின்றான் என்பது தெரியவில்லை. பார்த்தவர்களும் அவனிடம் அதுபற்றிக் கேட்டதில்லை என்கிறார்கள். அப்படிக் கேட்கிற அளவு யாரும் அவனுடன் நெருக்கமாய் இருந்ததில்லை. அவன் அப்படி நிற்கக் காரணம் இருக்கிறதா என்று தலைமை பிக்குவிடம் கேட்டேன். இல்லை என்று அவர் சொன்னார். ஆனால் அந்த விஷயம் அவருக்கே அப்போது தான் தெரிகிறது என்று முகபாவனையை வைத்துப் புரிந்து கொண்டேன். அந்தத் தகவல் அவரைச் சங்கடப்படுத்தியதாகத் தோன்றியது. 

லீ க்யாங் சிறிது யோசித்து விட்டுக் கேட்டான். “நீ கோங்காங் மண்டபத்திற்குப் போய் நன்றாகச் சோதனை செய்ததாய் சொன்னாயே. அங்கே வேறு எதாவது விசித்திரமாய் உனக்குத் தோன்றியதா

“அந்த கோங்காங் மண்டபத்தில் துஷ்ட சக்திகளின் சிலைகளே சற்று விசித்திரமாகத் தான் பார்வைக்குத் தோன்றுகின்றன. மற்றபடி எதுவும் சந்தேகப்படுகிற மாதிரி இருக்கவில்லை

லீ க்யாங் மெல்லக் கேட்டான். “அந்தக் கண்சிமிட்டி மனிதனை கோங்காங் மண்டப வாயிலில் நிற்பதைப் பார்த்ததாய் சொன்னவர்கள் அவன் அதன் உள்ளே போவதையோ, உள்ளே இருந்து வெளியே வருவதையோ எப்போதாவது பார்த்திருக்கிறார்களா?

வாங் சாவொ திகைத்தான். அந்தக் கேள்வியை அவனுக்குக் கேட்கத் தோன்றி இருக்கவில்லை. லீ க்யாங் அமைதியாகச் சொன்னான். “அதைக் கேட்டு எனக்குப் போனில் தெரிவி.

லீ க்யாங் அதற்கு மேல் தாமதிக்காமல் ஒற்றைக்கண் பிக்குவையும் டோர்ஜேயையும் சந்திக்கக் கிளம்பி விட்டான்.


ற்றைக்கண் பிக்கு லீ க்யாங் காரில் இருந்து இறங்குவதை ஜன்னல் வழியாகப் பார்த்தார். அவருடைய இதயம் அதிகப்படியாய் படபடக்க ஆரம்பித்தது.

“லீ க்யாங் வந்து விட்டார்என்று சத்தமாகச் சொன்னார். டோர்ஜே நிலைமையும் அவருடையதாகத் தான் இருந்தது. சமையல்காரன் விழுந்தடித்துக் கொண்டு லீ க்யாங்கை வரவேற்க வெளியே ஓடினான்.

லீ க்யாங் விமானநிலையத்தில் பார்த்தது போலவே அங்கும் சுற்றும் முற்றும் பார்த்தான். சந்தேகப்படும்படியான சூழ்நிலைகள் ஏதாவது தென்படுகின்றனவா என்று பார்த்தவனுக்கு அப்படி எதுவும் தென்படவில்லை. தூரத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மட்டும் அவனை சிந்திக்க வைத்தனர். மேலே இருந்து படிகளில் ஓடி வரும் சமையல்காரன் அருகில் வரும் வரைக் காத்திருந்து விட்டு பின் கேட்டான். “அந்தப் பையன்கள் இந்தப்பக்கம் வந்து விளையாடுவதில்லை அல்லவா?

“சில சமயங்களில் வருவதுண்டு. பார்த்தால் நான் துரத்தி விடுவேன்....ஆனால் போதையில் இருக்கையில் எதுவும் என் கண்களுக்குத் தெரியாது, அந்த நேரங்களில் கண்டு கொள்ள மாட்டேன் என்று அவன் சொல்லவில்லை.

லீ க்யாங்குக்கு அவன் சொன்ன அந்த சில சமயங்களே அதிருப்தியை ஏற்படுத்தின. “எதுவும் ஒரு தடவையிலேயே முடித்து விட வேண்டும். அடிக்கடி அது நிகழ்கிற மாதிரி வைத்துக் கொள்ளக்கூடாது. உனக்கு அவர்கள் இந்தப்பக்கம் வருவதைத் தடுக்க முடியாமல் போனால் என்னிடம் சொல்ல வேண்டியது தானேஎன்று கடுமையான குரலில் சொன்னான். அந்தச் சிறுவர்கள் இங்கே விளையாடுவதை டோர்ஜே பார்த்து அவன் மனமும் விளையாட்டில் திரும்புவதை லீ க்யாங் விரும்பவில்லை.

சமையல்காரன் அவசரமாகச் சொன்னான். “இல்லை சார். நான் போன மாதம் திட்டிய திட்டில் அவர்கள் இப்போது எல்லாம் இந்தப் பக்கம் வருவதில்லை. அவர்கள் அதற்கு முன்பு வந்ததைத் தான் சொன்னேன்...

அதற்கு லீ க்யாங் பதில் எதுவும் சொல்லவில்லை. அந்தச் சிறுவர்களைப் பார்த்துக் கொண்டு சிறிது நேரம் நின்றான். அந்தத் தொலைவில் அவர்கள் விளையாடினால் அது டோர்ஜே பார்வையில் விழ வாய்ப்பில்லை. இந்தப் பக்கம் வந்து விளையாடினால் தான் பிரச்னை.... விளையாடும் சிறுவர்களைப் பார்க்கையில் ஆசானும் அவன் நினைவில் வந்து போனார். அவன் முகத்தில் சின்னதாய் ஒரு புன்னகை தோன்றி வந்த வேகத்தில் போனது. கிழவர் இப்போது எங்கே இருக்கிறாரோ?

லீ க்யாங் படியேற ஆரம்பிக்கையில் வாங் சாவொவின் போன் வந்தது. “சார். நள்ளிரவில் கண்சிமிட்டி மனிதனை கோங்காங் மண்டப வாயிலில் பார்த்தவர்களை விசாரித்தேன். அவர்கள் ஒவ்வொரு தடவையும் அவன் வாசலில் நிற்பதைத் தான் பார்த்திருக்கிறார்கள். அவன் அதன் உள்ளே போவதையோ உள்ளே இருந்து வெளியே வருவதையோ பார்த்ததில்லை என்று சொல்கிறார்கள்.....

லீ க்யாங் சந்தேகப்பட்டது உறுதியாகி விட்டது. சிந்தனையுடன் படியேறினான். 


மாராவுக்கு அந்த அவசர அழைப்பு வந்த போது உறங்கி விட்டிருந்தான். தூக்கம் முழுவதும் கலையாமலேயே அலைபேசியை எடுத்துப் பேசினான். “ஹலோ...

திபெத்தில் இருந்த ஒடிசல் இளைஞன் தான் அவனுக்குப் போன் செய்திருந்தான். இந்த நேரத்தில் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்க வேண்டும்.....

மாரா தன் தனிப்பட்ட சௌகரிய அசௌகரியங்களுக்கு என்றுமே அதிக முக்கியத்துவம் கொடுத்தவன் அல்ல. தலைவன் என்பவன் எல்லா முக்கிய சமயங்களிலும் தொடர்பு கொள்ளக்கூடியவனாக இருக்க வேண்டும் என்பது அவனுடைய உறுதியான கொள்கை. கிடைக்கின்ற தகவல்களை வைத்து மிக முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியவன், அந்தத் தகவல்கள் சொல்பவர்களுக்கு அந்த நேரத்தில் கிடைக்கா விட்டால் எல்லாமே தாமதப்படும். சில நேரங்களில் அந்தத் தாமதமே ஒரு வீழ்ச்சிக்குக் காரணமாகி விடலாம். எனவே சிறிதும் முகம் சுளிக்காமல் முழுமையாக விழித்துக் கொண்டவனாக மாரா சொன்னான். “பரவாயில்லை சொல்

வாங் சாவொ சம்யே மடாலயம் வந்து சிலரிடம் கேட்ட அந்த விசித்திரக் கேள்வியைத் தெரிவித்து விட்டுச் சொன்னான். “நம் ஆட்கள் இதை உங்களிடம் தெரிவிக்கச் சொன்னார்கள்....

மாராவுக்கு அந்தக் கேள்விக்குப் பின்னணியில் லீ க்யாங் தெரிந்தான். லீ க்யாங்கின் கவனத்துக்கு வந்தாகி விட்டது என்பது நல்ல செய்தி அல்ல. கழுத்து திருகிய முட்டாளின் முட்டாள்தனமான கோபத்திற்கு கிடைத்திருக்கும் பரிசு இது.... மாரா அமைதியாகச் சொன்னான். “இன்னும் சில நாட்களுக்கு கோங்காங் மண்டபத்திற்கு நடுநிசி பூஜைக்குப் போக வேண்டாம் என்பதை நம் ஆட்களிடம் தெரிவித்து விடு.

“சரி

மைத்ரேயன் சம்யே மடாலயத்தில் இருந்து கிளம்பியாகி விட்டதா?

“இன்னும் இல்லை. நான் வெளியே மறைவில் இருந்து கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறேன்....

மாரா தெளிவாக அழுத்தம் திருத்தமாகச் சொன்னான். “இனி மைத்ரேயனை வைத்துக் கொண்டு அந்த ஆள் அங்கேயே இருக்க மாட்டான். அது அவனுக்கு ஆபத்து என்று புரிந்திருப்பான். அதனால் அவன் இன்றைக்கு இரவே அங்கிருந்து தப்பித்துப் போகும் வாய்ப்பு அதிகம். அதனால் தயாராக இரு. அவனைப் பின் தொடர்ந்து போ. ஆனால் ஒரு இடைவெளியை எப்போதும் வைத்துக் கொள். இப்போதைக்கு அவர்கள் எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்கு ஒவ்வொரு கணமும் தெரிந்து கொண்டிருந்தால் போதும்....

“சரிஎன்றான் ஒடிசல் இளைஞன். மாரா அனாவசியமான யூகங்களைச் சொல்பவன் அல்ல. மிக உறுதியாகத் தெரிந்தால் ஒழிய இன்றே அவர்கள் தப்பித்துச் செல்ல முயல்வார்கள் என்று சொல்ல மாட்டான். அதனால் இன்று அவர்கள் தப்பிப்பது உறுதி என்று நம்பிய ஒடிசல் இளைஞன் அன்றைய இரவுக்காகக் காத்திருந்தான்.

(தொடரும்)
என்.கணேசன்

  

3 comments:

  1. Very interesting and lively and realistic characterization Ganesan sir.

    ReplyDelete
  2. விஷ்ணுJuly 23, 2015 at 9:59 PM

    செம விறுவிறுப்பு. செம கேரக்டர்ஸ்.

    ReplyDelete
  3. Ini enna nadakkum? Enpathai kanikka mutiyatha alavukku.... Arumaiyaka sentru kondirukirathu....intha thodar

    ReplyDelete