சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, July 1, 2013

யோகியின் பார்வை


கீதை காட்டும் பாதை 26


துக்கத்தின் சேர்க்கைக்கு எதிர்மாறான யோகத்தை விளக்கிய ஸ்ரீகிருஷ்ணர் அடுத்ததாக பேரின்பத்திற்கு வழியைச் சொல்ல ஆரம்பிக்கிறார்.

சங்கல்பத்தால் உண்டாகும் ஆசைகள் அனைத்தையும் முற்றிலும் துறந்து, புலன்களின் கூட்டத்தை மனத்தினாலேயே எல்லா இடங்களில் இருந்தும் இழுத்துக் கட்டுப்படுத்தி,
தைரியத்துடன் கூடிய புத்தியினால் மெள்ள மெள்ள அடக்க வேண்டும். மனத்தை ஆத்மாவிலேயே நிலை நிறுத்தி வேறெதையும் நினைக்காமல் இருக்க வேண்டும்.

நிலையாக நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் மனதானது எந்தெந்த விஷயங்களைத் தேடிச் செல்கிறதோ, அந்தந்த விஷயங்களில் அதைச் செல்லாமல் கட்டுப்படுத்தி ஆத்மாவின் வசமாக்கிக் கொள்ள வேண்டும்.

மனம் சாந்தமாகி, ரஜோ குணம் நீக்கப்பட்டு, மாசு நீங்கி, பிரம்மமாக ஆன இந்த யோகியை மிக உயர்ந்த இன்பமானது வந்தடைகிறது.

இப்படி ஆத்மாவை எப்போதும் யோகத்தில் இருத்திய யோகியானவன் பிரம்மத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பேரின்பத்தை எந்த விதமான சிரமமும் இன்றி எளிதில் அனுபவிக்கிறான்.

எது நமக்குப் பிரதானமோ அதையே நாம் என்றும் பெறுகிறோம். ஆனால் பிரதானமாக நாம் நினைக்கும் விஷயங்கள் நமக்கு அமைதியையும் ஆனந்தத்தையும் தரக்கூடியவை தானா என்று அறிவுபூர்வமாகச் சிந்தித்து செயல்படுவது அவரவர் கையில் இருக்கிறது.

நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொன்றைப் பிரதானமாக நினைத்து ஆசைப்படுகிறோம். அதை அடைய முடிந்தால் அது வெற்றிகரமான வாழ்க்கை என்று நம்புகிறோம். ஆனால் அடைந்த பின்னும் ஏதோ குறைகிறதே, அடைந்த பின்னும் நிம்மதி இல்லையே, சில சமயம் வெறுமையும் சில சமயம் துக்கமும் நம்மை வாட்டுகிறதே என்று எண்ணாதவர்கள் இந்த உலகில் இருக்க முடியாது. இதற்கு என்ன தீர்வு? பிரச்சினை மனதில் உள்ளதால் தீர்வையும் நாம் அங்கேயே தேட வேண்டும்.

முதலில் புலன்கள் பின்னால் போய் அலைந்து அலைக்கழிக்கப்பட்டு ஏமாறும் மனதை அங்கிருந்து புத்தியால் இழுக்க வேண்டும். மனம் தானாக அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதில்லை. எண்ணற்ற முறை ஏமாந்திருந்தாலும், துக்கத்தினால் பீடிக்கப்பட்டிருந்தாலும் இந்த முறை அப்படி நேர்ந்து விடாது என்று மனம் மறுபடி ஆசைப்பட்டு முயலக்கூடியது. ஆசைகளின் பின் ஓடும் ஓட்டத்தின் விளைவுகள் என்றுமே ஒன்று தான் என்று இடித்துச் சொல்லி இழுத்து நிறுத்த புத்தியால் மட்டுமே முடியும். அதையும் ‘மெள்ள மெள்ளதான் சாதிக்க முடியும் என்று ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார். மனதால் எதையுமே நினைக்காமல் இருக்க முடிவதும் கஷ்டம் என்பதால் தான் அடுத்த அறிவுரையையும் தருகிறார் - மனதை ஆத்மாவில் நிலை நிறுத்தச் சொல்லி. மனதிற்குப் பற்றிக் கொள்ள ஆத்மஞானம் இருந்தால் வீணாக வேண்டாததன் பின் செல்ல வேண்டி இராது அல்லவா?

ஆத்மாவில் நிலை நிறுத்தப்பட்ட மனம் சாந்தி அடைகிறது. உண்மையாக மனம் சாந்தி அடையும் போது மூன்று குணங்களில் ஆசைக்கும், அதனால்  நடவடிக்கைகளுக்கும் மனிதனை உந்தும் ரஜோ குணம் நீக்கப்படுகிறது. மனதின் மாசு நீக்கப்படுகிறது. அதன் பின் அந்த மனிதன் இன்பத்தை நோக்கி ஓட வேண்டியதில்லை. யோகியாக மாறும் அந்த மனிதனை, சாதாரண இன்பம் அல்ல, பேரின்பமே தேடி வரும் நிலை ஏற்பட்டு விடுகிறது.

புலன்களுடன் சிற்றின்பம் இணைந்திருப்பது போல பிரம்மத்துடன் பேரின்பம் இணைந்திருக்கிறது. ஆத்மஞானம் பெற்று அமைதியடைந்தவன் அந்தப் பேரின்பத்தை இடைவிடாமல் சிறிதும் சிரமம் இல்லாமல் பெறுகிறான். இப்படி இந்த தியான யோகத்தில் கணிதக் கோட்பாடு சொல்வது போல ஸ்ரீகிருஷ்ணர் பேரின்பத்திற்குப் படிப்படியாக வழி சொல்கிறார்.   

சரி, இப்படி யோகியாக மாறியவன் பார்வை எப்படி இருக்கும்? அவன் உலகை எப்படிப் பார்ப்பான்? அவனுக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள தொடர்பு எப்படி இருக்கும் என்ற கேள்விகளுக்கு ஸ்ரீகிருஷ்ணர் அடுத்ததாகப் பதில் சொல்கிறார்.

யோகத்தில் நிலைத்தவன் எங்கும் சம நோக்குடையவனாய், எல்லா உயிர்களிடத்தும் தானிருப்பதையும், தன்னுள் எல்லா உயிர்களுமிருப்பதையும் காணுகிறான்.

எவன் எங்கும் என்னைக் காண்கிறானோ, எல்லாப் பொருள்களையும் என்னிடத்தே காண்கிறானோ, அவன் என் பார்வையில் இருந்து மறைவதில்லை. நானும் அவன் பார்வையில் இருந்து மறைவதில்லை.

எல்லா உயிர்களிலும் ஒரே நிலையைக் காண்கின்றவனாய், எல்லா உயிர்களிடத்திலுமுள்ள என்னைத் தொழும் யோகி எந்த நிலையிலும், எந்த விதத்திலும் என்னிடமே இருப்பான்.

அர்ஜுனா, இன்பமாயினும், துன்பமாயினும் தன்னைப் போல் எல்லோரையும் சமமாகக் காண்பவன் பரமயோகியாகக் கருதப்படுவான்.

சமநோக்கைப் பற்றிச் சொன்ன அளவுக்கு ஸ்ரீகிருஷ்ணருக்குச் சலிப்பு தட்டவில்லை. இங்கு மீண்டும் அதைப் பற்றி அவர் சொல்கிறார்.
அடுத்தவனை நேசி என்று என்று சொல்கிறார்கள். அவனை நேசிக்க முடியாமல் இருக்கக் காரணமே அவன் அடுத்தவன் என்பது தானே? இன்றைய பெரும் பிரச்சினைகளுக்கும், சீரழிவுகளுக்கும் முக்கியக் காரணமே எல்லை இல்லாத சுயநலம் தானே? அடுத்தவர் நலத்தை அழித்தாவது நம்மை வளர்த்திக் கொள்ள வேண்டும், நாம் சுகம் அனுபவிக்க வேண்டும் என்பது தானே?

எல்லா உயிர்களிடத்தும் தன்னையும், தன்னுள் எல்லா உயிர்களையும் காண முடியும் போது மட்டுமே உண்மையாக அடுத்தவனை நேசிக்க முடியும். யோகியானவன் அப்படிக் காண்கிறான் என்று சொல்கிற ஸ்ரீகிருஷ்ணர் அடுத்த சுலோகத்தில் இன்னும் ஒருபடி மேலே சென்று சொல்கிறார். அந்த யோகி எங்கும் எதிலும் இறைவனைக் காண்கிறான் என்கிறார். இறைவன் எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்திருப்பதை அந்த யோகியினால் பார்க்க முடிகிறது என்கிறார்.

எங்கும் எதிலும் இறைவனைக் காண முடிந்தால் உலகமே பவித்திரமாக அல்லவா மாறி விடுகிறது? சித்தாந்தங்கள் வைத்து அந்த யோகி அப்படிச் சொல்வதில்லை. அனுபவத்தில், உணர்வு பூர்வமாக அதை உணர்கிறான். அந்த நிலையை அடையும் போது அவன் நடிக்க வேண்டி இருப்பதில்லை. இருவேறு நிலைகள் இருந்தால் அல்லவா நடிக்கும் அவசியம்? இறைவனைக் காண முடியாமல் மறைக்கும் அறியாமை கூடிய மனநிலைகள் இல்லாததால் அந்த யோகிக்கு இறைவனை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்க முடிகிறது. அதே போல் இறைவன் பார்வையில் இருந்தும் அவன் எப்போதும் மறைவதில்லை.

இதற்கு அடுத்த மேல் நிலை ஒன்று உண்டு. இறைவன் பார்வையில் இருப்பதை விடவும் உயர்ந்த அந்த சிறப்பு நிலை என்னவென்றால் அது இறைவனிடத்திலேயே இருக்கும் நிலை. பார்வையில் இருப்பது என்றால் கூட இறைவனுக்கும் இவனுக்கும் ஒரு இடைவெளி இருக்கிறது என்றாகிறது. இறைவனிடத்திலேயே இருப்பது என்றால் அந்த இடைவெளியும் அற்றுப் போகிறது. அந்த நிலை எப்போது வரும் என்றால் ஒவ்வொரு உயிரிலும் இறைவன் இருப்பதை அறிந்திருப்பதோடு நின்று விடாமல் அந்த உயிரில் இருக்கும் இறைவனைத் தொழ முடியும் பக்குவம் வரும் போது வருகிறது. அப்படித் தொழ முடிந்த யோகி எந்த நிலையிலும் எந்த விதத்திலும் என்னிடத்திலே இருப்பான் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். இங்கு அவர் தேவகி புத்திரனும், அர்ஜுனன் நண்பனுமாகிய கண்ணனைச் சொல்லவில்லை, இறைவனையே குறிப்பிடுகிறார்.

இன்ப காலத்தில் மனிதன் நடந்து கொள்ளும் விதமே வேறு, துன்ப காலத்தில் நடந்து கொள்ளும் விதமே வேறு. இன்ப காலத்தில் கனிவாக நடந்து கொள்ளும் எத்தனையோ பேர் துன்ப காலத்தில் எதிர்மறையாக நடந்து கொள்வார்கள். கோபம், ஆற்றாமை, எல்லாம் அவர்களை மற்றவர்களிடம் வேறு மாதிரி நடந்து கொள்ள வைத்து விடும். இதற்கு நேர்மாறான ஆட்களும் இருக்கிறார்கள். கஷ்டகாலத்தில் அடக்கமாகவும், அனுசரணையாகவும் நடந்து கொள்வார்கள். ஆனால் கஷ்டம் எல்லாம் நீங்கி சுகங்கள் வர ஆரம்பித்தாலோ அவர்கள் தோரணையே மாறி விடும். அடக்கம், அனுசரணை எல்லாம் போய் கர்வம், அலட்சியம் ஆகியவை அவர்களை ஆட்சி செய்ய ஆரம்பித்து விடும்.

இன்பத்திலும் துன்பத்திலும் ஒரே போலவும் சரியாகவும் நடந்து கொள்ளக் கூடியவர்கள் மிக மிக அபூர்வம். அந்த இரண்டு நிலைகளிலும் தன்னைப் போலவே அடுத்தவர்களைக் காண்பதும், அதற்கேற்ப நடந்து கொள்வதும் முடிவதும் அதையும் விட மிக அரிதானது. அது மிக உயர்ந்த யோக நிலையை அடைந்தவன் யோகிகளிலேயே சிறந்த பரமயோகி என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

பாதை நீளும்.....

என்.கணேசன் 

4 comments:

  1. கீதை விளக்கங்கள் அருமை. தாங்கள் இன்று தினத்தந்தியில் எழுதிய ஓம் மந்திர சிறப்பு படித்தேன். விஞ்ஞானம் ஆன்மிகம் இரண்டையும் தாங்கள் இணைக்கும் விதம் இளைய தலைமுறையினரையும் ஆன்மிக மார்க்கத்தில் ஈர்க்க தங்கள் எழுத்துக்கள் உதவும். தொடரட்டும் தங்கள் சேவை. வாழ்த்துக்கள். -நரசிம்மமூர்த்தி

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு.
    வாழ்த்துக்கள் அண்ணா.

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ள மற்றும் அவசியமான பகுதி இது...மனத்தை அடக்கும் வழியை எளிமையாக கூறுவது...சிறப்பு...

    ReplyDelete