என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, July 8, 2013

தியானம் ஏன் அவசியம்?அறிவார்ந்த ஆன்மிகம்-10


ற்கால மனிதன் சௌகரியங்களில் நிறையவே மேம்பட்டிருக்கிறான். விஞ்ஞான முன்னேற்றம் அவனுக்கு எத்தனையோ விஷயங்களைச் சுலபமாக்கித் தந்திருக்கிறது.  ஆனால் அவன் வாழ்க்கையோ அவன் முன்னோர்களின் வாழ்க்கையை விட அதிக சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது. ஏனென்றால் முன்னோர்களை விட தேவைகள் அவனுக்கு அதிகமாக இருக்கின்றன. அதனால் அவன் அதிக விஷயங்களை யோசிக்க வேண்டி இருக்கின்றது. அதிகம் ஓடி உழைக்க வேண்டி இருக்கிறது. இந்த ஓட்டத்தில் அவன் இழக்கும் முதல் முக்கிய விஷயம் நிம்மதி.

நிறுத்த முடியாத ஒரு ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டவனைப் போல அவன் கஷ்டப்படுகிறான். சிறிது தளர்ந்தாலும் பின்னுக்குத் தள்ளப்படுவோம், பரிகசிக்கப்படுவோம், தோற்றுப் போவோம் என்றெல்லாம் சிந்தனைகள் எப்போதும் அவன் மனதில் இருக்கின்றன.  நிம்மதி கிடைக்கும் என்று எதை எதையோ தேடி அலைகிறான். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல அலைகிறான். தேடலில் மகிழ்ச்சியே கிடைக்கவில்லை என்றால் அது பொய்யாகி விடும். மகிழ்ச்சி கிடைக்கிறது தான். ஆனால் எந்த மகிழ்ச்சியும் அற்ப சமயம் தான் நீடிக்கிறது. அதிகம் இருப்பதோ அமைதியின்மை தான்.

இந்தப் பரிதாப நிலைக்கு அடிப்படைக் காரணம் அவன் மனம் தானே ஒழிய அவனுடைய சூழ்நிலைகள் அல்ல. ஏனென்றால் அவன் அந்த சூழ்நிலைகளைத் தேடிக் கொண்டதும்,  வந்து சிக்கிக் கொண்டதும் அந்த மனத்தால் தான். பிரச்சினை எங்கோ தீர்வையும் அங்கே தானே செய்ய வேண்டும்? அதனால் தீர்வையும் அவன் மனதிலேயே தான் தேட வேண்டி இருக்கிறது.  அந்தத் தீர்வு தியானம் தான் என்று ஞானிகள் சொல்கிறார்கள்.

ஞானிகள் சொல்வதை நம்புவதில் தற்கால மனிதனுக்கு நிறைய சிரமங்கள் இருக்கின்றன. அவன் விஞ்ஞான காலத்தவன். ஆராய்ச்சிகளில் ஆராய்ந்து ஆதாரபூர்வமாகத் தெரிவிப்பதை நம்புகிற அளவுக்கு அவனுக்கு மற்ற கருத்துகளை நம்ப முடிவதில்லை என்பதால் அவனுக்கு தியானம் குறித்து ஆராய்ச்சி செய்தவர்கள், குறிப்பாக அவன் பிரமிக்கிற மேலை நாட்டு அறிஞர்கள், ஆராச்சி மூலம் சொல்லும் ஆதாரபூர்வச் செய்திகளைத் தெரிவிப்பது பொருத்தமாக இருக்கும்.

மேலை நாடுகளில் தியானம் ஆரம்பத்தில் ஆன்மிகப் பயிற்சியாகவே கருதப்பட்டது. ஆனால் தியானம் செய்பவர்கள் மன அமைதி பெறுவது மட்டுமல்லாமல் உடல் ரீதியாகவும், அறிவு ரீதியாகவும் கூட சிறந்த பலன்கள் அடைகிறார்கள் என்ற கருத்து வேகமாகப் பரவ ஆரம்பிக்கவே அறிவியல் அறிஞர்கள் தியானத்தை ஆராய்ச்சிக்கு உட்படுத்த முற்பட்டனர்.  பல ஆண்டுகளாக ஆராய்ச்சிகள் நடந்து அதன் முடிவுகள் வெளியாகி வருகின்றன என்ற போதும் சமீபத்திய ஆராய்ச்சிகள் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

சில வருடங்களுக்கு முன் மசாச்சூட் மருத்துவப் பள்ளி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜான் கபாட் ஜின்ன் (Jon Kabat-Zinn, Ph.D. University of Massachusetts Medical School) என்பவர், தியானம் பயிலுவதற்கு முன், தியானம் பயின்ற பின் நிலைகள் குறித்து ஆராய மன உளைச்சலால் அவதிப்படும் சில தொழிலாளர்களை எடுத்துக் கொண்டார். தியானம் பயிலும் முன் உள்ள அவர்களுடைய மூளை அலைகளையும், சுமார் எட்டு வாரங்கள் தியானப் பயிற்சி கழிந்து ஏற்படும் மூளை அலைகளையும், மேலும் நான்கு மாதங்கள் அவர்கள் தியானம் தொடர்ந்து செய்த பிறகு ஏற்படும் மூளை அலைகளையும் ஆராய்ந்தார்.   தியானம் அவர்களை அமைதிப்படுத்துகிறது என்பதையும் அவர்கள் முன்பை விட அதிக மகிழ்ச்சி உடையவர்களாய் இருக்கிறார்கள் என்பதையும் தன் ஆராய்ச்சியில் அவர் கண்டு பிடித்து இருக்கிறார்.

வேக் ஃபாரெஸ்ட் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த ஃபாடெல் செய்டான் (Fadel Zeidan, a researcher at Wake Forest University School of Medicine) என்பவர் 2010ல் செய்த ஆராய்ச்சி முடிவுகள் மருத்துவப் பத்திரிக்கைகளில் வெளி வந்துள்ளன. அவற்றில் அவர் தியானம் மனதை எளிதாக மாற்ற வல்லது என்பதையும், தொடர்ந்து தியானம் செய்பவர்கள் மன அமைதி அதிகம் பெறுவதோடு மட்டுமல்லாமல் தெளிவாக இருத்தல், புரிந்து கொள்ளல், கவனமாகவும் விழிப்புணர்வோடு இருத்தல் போன்றவற்றிலும் தியானம் செய்யாதவர்களைக் காட்டிலும் முன்னணி வகித்ததாகச் சொல்கிறார். குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் தரப்பட்ட போது தியானம் செய்பவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் வேகமாகவும், சிறப்பாகவும் அலட்டிக் கொள்ளாமலும் செய்து முடித்ததைப் பதிவிட்டிருக்கிறார்.

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிளிஃபோர்டு சாரோன் (Clifford Saron) என்ற நரம்பியல் விஞ்ஞானி பல மில்லியன் டாலர்கள் செலவில் ஷாமந்தா ப்ராஜெக்ட் (The Shamatha Project) என்ற மிகப் பெரிய ஆராய்ச்சியை ஆரம்பித்துள்ளார். இந்த ஆராய்ச்சி மனம், உடல், நடவடிக்கைகள் இவற்றில் தியானம் ஏற்படுத்த முடிந்த மாற்றங்களை விரிவாக ஆராயும்  ஆராய்ச்சியாக இருக்கிறது, இந்த ஆராய்ச்சி இன்னும் முழுமடையவில்லை என்றாலும் ஆரம்ப முடிவுகள் தியானம் கவனக் குவிப்பைக் கூர்மையாக்குகிறது என்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்றும் மற்றவர்களைப் புரிந்து கொள்வதிலும், சமூக அக்கறையுடன் நடந்து கொள்வதிலும் வல்லவர்களாக மாற்றுகிறது என்றும் கூறுகின்றன. இந்த ஆராய்ச்சிகள் முடிவடையும் போது மேலும் கூடுதல் விவரங்கள் நமக்குத் தெரியவரும்.

தியானங்களில் பல வகைகள் உண்டு.  அவற்றில்  பெரும்பாலானவை இந்தியாவின் யோகாவிலிருந்து உருவானவை. கௌதம புத்தர் தன் ஞானத் தேடலின் ஆரம்பத்தில் பல யோகிகளிடம் தியான முறைகளைக் கற்றிருந்தார். ஞானமடைந்த பின்னர் அவர் போதித்த தியான முறைகள் யோகாவையே அடிப்படையாகக் கொண்டிருந்தன. அவரது காலத்திற்குப் பின் அவருடைய சீடர்கள் அந்த தியான முறைகளில் பல ஆராய்ச்சிகள் செய்து, பல அனுபவங்கள் பெற்று மேலும் பல தியான முறைகளை உருவாக்கினார்கள். புத்த மதம் பரவிய பல நாடுகளில் தியான முறைகள் பல்வேறு வடிவம் எடுத்தன. ஜென் தியானம், திபெத்திய தியானம், தந்திரா தியானம், விபாசனா தியானம், போன்ற பல்வேறு தியானமுறைகளை புத்த மதம் உருவாக்கி வளர்த்தது.

ஓஷோ, மகரிஷி மகேஷ் யோகி, தீபக் சோப்ரா, திச் நாட் ஹான் (Thich Nhat Hanh), வேதாத்திரி மகரிஷி போன்றோர் பல தியான முறைகளை எளிமைப்படுத்தியும், பிரபலப்படுத்தியும் உலகெங்கும் பலதரப்பு மக்களைச் சென்றடையும் படி செய்துள்ளனர். ஆனால் எல்லா தியான முறைகளும் எல்லாருடைய தன்மைகளுக்கும் ஏற்ப இருப்பதில்லை. அவரவர் தன்மைக்கும், விருப்பத்திற்கும் ஏற்ற தியான முறையை ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்துச் செய்யலாம்.

அப்படித் தேர்ந்தெடுத்த பின் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்த தியானம் செய்வதை பழக்கத்தில் கொண்டு வர வேண்டும். குறைந்த பட்சம் இருபது நிமிடங்களாகவாவது அந்த தியானத்தைச் செய்ய வேண்டும். அதிகாலை மற்றும் மாலை அல்லது இரவு நேரங்கள் தியானத்திற்கு உகந்தது. ஏதாவது ஓரிரு நாட்கள் தியானம் செய்வது, பின் பல காலம் தியானத்தையே மறந்திருப்பது, மறுபடியும் ஓரிரு நாட்கள் செய்வது என்பது தான் அநேகம் பேரின் அனுபவமாக இருக்கிறது. இது எந்த விதப் பெரிய பலனையும் தராது.

தொடர்ந்து தியானம் செய்பவர்களுடைய மன அமைதி அதிகரிக்கும்,  தேவையற்ற தீய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும், கவனத்தையும், விழிப்புணர்வையும் அதிகரிக்கும், உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்பதெல்லாம் ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்ட நன்மைகள் என்பதால் அனைவரும் தியானம் செய்வது அவசியம்.

-என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 14-05-2013

7 comments:

 1. அன்பரே .,

  வெளிநாட்டவர்கள் போல் தியானம் நம்மவர்களுக்கு பெரும்பாலும் எளிதில் சித்தியாவதில்லை .என்றே நினைக்கிறேன் , ஒரு வேலை ., நம் நாட்டிலிருந்து ., உற்பத்தியாகும் உயர் தர பொருட்களின் .முதல் உயர் ரகம் , வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாவது போல் ., தியானத்தை கற்றுகொடுப்பதிலும் அவ்வாரோ ? என்னெனில் ., நம்மில் ., தியானம் என்று அமர்ந்து ., வசதியான நிலையில் அரை தூக்கத்தில் உறங்குகிறோம் , அல்லது ஒரு கற்பனை ஓட்டத்தில் லயிக்கிறோம் ., [சிலர் இந்த கற்பனை உலகில் இருந்து கொண்டு எனக்கு கட்டளை வருகிறது அது தெரிகிறது ., அப்படி இப்படி என்று இவர்களையும் ஏமாற்றி ., மற்றவர்களையும் குழப்பிவிடுகிறார்கள் ]அல்லது ஜோதியை நோக்கு என்பது போல் ., அல்லது கற்றுகொடுக்கும் குருமார்கள் என்று சொல்வோரிடம் செல்பவர்கள் அடிமைகள் ஆகிவிடுகிறார்கள் ., தியானம் என்று ஒன்றை செய்யும் காலம் குருமார்கள் என்போர் இடும் கட்டளைகளை செய்து மனம் லயிப்பதாக உணர்கிறாகள் ., பின்பு வெளியில்வந்தவுடன் , சாதார பாமரனுக்கு இருக்கும் இறக்கம் ., அன்பு கூட அவர்களிடம் இருப்பதில்லை , அனைவரையும் போல தான் இருக்கிறார்கள் ., சுருக்கமாக கூற போனால் பிடித்த விளையாட்டு விளையாடும் போதும் ., பிடித்த செயலில் ஈடுபடுபோதும் ஏற்படும் திருப்தி அவர்கள் தியானம் என்று சொல்லி செய்வது .


  ஆக மனதை புத்துணர்ச்சி செய்தல் ., தெளிவுபடுத்தல் என்பதற்கு "பிராணாயாமம் " செய்தல் "சுவாசத்தை சீர்படுத்தல்" என்ற முறையும் சொல்லும் தான் பொருத்தமானதாக இருக்கும் ., இதை மட்டும் செய்தால் போதும் ., உள்ளத்தெளிவு ஏற்படும் ., நாம் "பிராணாயாமம் " செய்து விட்டு தியானம் என்று சொல்லி அமர்ந்து பிராணாயாமத்தின் பலனை இழக்கிறோம் ., என்றே நினைக்கிறன் .


  தியானம் என்ற சொல் மிக உயர்வானது .,பரிபுரண ஆத்ம விசாரத்தில் லயித்து பின்பு பற்பல நிலகளைகடந்து ., காலத்தை கடக்கும் யோகமார்கத்தின் முதல் படி . தியானம் என்பது எண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பது ., இறை அனுமதித்தால் அது தவமாகலாம் .,

  நீண்ட பின்னூட்டத்திற்கு மனிக்கவும் ., தவறாக இருந்தாலும் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் .,

  ReplyDelete
  Replies
  1. ஐயா, தியானத்தை பற்றிய இதே கேள்விகளோடு இணையத்தில் தேடியபோது, கீழ்க்கண்ட வலைத்தளத்தில் (மேலைநாட்டவர்) சொல்லப்பட்ட முறை, தியானத்தை பற்றிய ஒரு நல்ல அறிமுகத்தை தந்தது. இந்த படித்துவிட்டு தங்கள் பின்னூட்டத்தை பகிறவும்.
   http://www.unlock-your-happiness.com/conscious-mental-rest.html

   Delete
 2. அனைத்தும் அவரவர் மனதைப் பொறுத்தது...

  ReplyDelete
 3. ஓரிரு நாட்கள் தியானம் செய்வது, பின் பல காலம் தியானத்தையே மறந்திருப்பது.நீங்கள் சொல்வது உண்மை தான். குரங்கைக் (மனதை) கட்டுப்படுத்துவது அவ்வளவு சுலபமல்ல இது என்னுடைய அனுபவம்.

  ReplyDelete
 4. Very good post!!

  ReplyDelete
 5. //நிறுத்த முடியாத ஒரு ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டவனைப் போல அவன் கஷ்டப்படுகிறான். சிறிது தளர்ந்தாலும் பின்னுக்குத் தள்ளப்படுவோம், பரிகசிக்கப்படுவோம், தோற்றுப் போவோம் என்றெல்லாம் சிந்தனைகள் எப்போதும் அவன் மனதில் இருக்கின்றன. நிம்மதி கிடைக்கும் என்று எதை எதையோ தேடி அலைகிறான். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல அலைகிறான்.// - அருமையான விமர்சனம்.

  //ஏதாவது ஓரிரு நாட்கள் தியானம் செய்வது, பின் பல காலம் தியானத்தையே மறந்திருப்பது, மறுபடியும் ஓரிரு நாட்கள் செய்வது என்பது தான் அநேகம் பேரின் அனுபவமாக இருக்கிறது. இது எந்த விதப் பெரிய பலனையும் தராது// - முற்றிலும் யதார்தம்

  ReplyDelete
 6. மிக நன்றி G உங்கள் தியானம் பற்றிய எல்லா எழுத்து வகுப்பையும் படித்தேன் தெளிவாக இருந்தது குழப்பமும் விலகியது நமக்காவை நாம் தேர்ந்தெடுப்பதில் உள்ளது என்பதிலேயே முன்னேற்றமுள்ளது ஒருதடவை புளித்துவிட்டது என்பதால் எபோதும் பால் குடிக்கமாட்டேன் என்று சொல்வது நியாயமாகுமா வாழ்நாளில் என்பது போல் நினைத்து கொண்டேன் கைக்கொள்வதும் முயற்சிப்பதும்நமக்குள் தூர்வாருவதும் நாமே செய்வேண்டியவை நம் பசிக்கு நாம் சாப்பிடுவது போல் பசிக்கு சாப்பிடுவது போல்

  ReplyDelete