என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, July 15, 2013

அர்த்தமுள்ள திருமண மந்திரங்கள்!அறிவார்ந்த ஆன்மிகம்-11

ந்துத் திருமணங்கள் என்பவை விரிவான சடங்குகளைக் கொண்டு செய்யப்படுபவை. அவை யாவும் அர்த்தமுள்ளவை. திருமணங்களில் சொல்லப்படும் மந்திரங்களில் பெரும்பான்மை மந்திரங்கள் தேவர்களைப் பணிவதாகவும், மேன்மையான செய்திகளைக் கொண்டதாகவும்  தனிமனித உறுதிமொழிகளாகவும் இருக்கின்றன. திருமணம் என்ற சடங்கில் சொல்லப்படும் மந்திரங்கள் மணமக்களுக்குப் புரியாமல் இருப்பது வருத்தத்திற்குரிய விஷயமே. அதை விட அதிக வருத்தத்திற்குரிய விஷயம் இந்த சமஸ்கிருத மந்திரங்களை ஓதுபவர்கள் கூட அர்த்தம் புரியாமல் எந்திரத் தனமாக வேகமாகச் சொல்லிக் கொண்டே போவது தான். சொல்பவருக்கும் புரிவதில்லை, யாருக்காக சொல்லப்படுகிறதோ அவர்களுக்கும் புரிவதில்லை. வெறும் சத்தங்களும், சடங்குகளுமாகத் திருமணம் நடந்து முடிப்பது வேதனையாகவே இருக்கின்றது.

சில முக்கிய மந்திரங்களுக்கு என்ன அர்த்தம் என்று பார்ப்போம். முதற் கடவுளாகிய வினாயகரைத் துதித்து, பின் நவக்கிரகங்களைப் பூஜித்து மணமகனிற்கும், மணப் பெண்ணிற்கும் கையில் காப்பு கட்டி அக்னியைத் தொழுது சங்கல்பம் செய்வதில் ஆரம்பிக்கிறது திருமணம்.

நோக்கம் என்ன என்று சொல்வது தான் சங்கல்பம். எதற்காக இதைச் செய்கிறோம் என்றும் இந்த புனித சடங்கை இறைவன் நல்லபடியாக நடத்திக் கொடுக்கட்டும் என்றும் வேண்டுகிறார்கள்.  இல்லற தர்மத்தை இவர்கள் இருவரும் சரிவரக் காத்து நன்மக்கள் பெற்று நீடுழி வாழ திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதே சங்கல்பம்.


மணப்பெண்ணின் தந்தை மணமகனை மகாவிஷ்ணுவாகவே பாவித்து அவன் திருவடிகளைக் கழுவுகிறார். அதற்குப் பதிலாக மாப்பிள்ளை சொல்லும் மந்திரம்: ‘‘என் காலைத் தொட்ட இந்தப் புனித நீர் என் அக எதிரிகளைத் தூளாக்கட்டும். நான் இறையொளியில் தேஜஸுடன் திகழ்வேனாக!’’ மணமகனை அழைத்துக் கொண்டு போய் அமர வைக்கும் மணப்பெண்ணின் தந்தை சொல்கிறார்: ‘‘, விஷ்ணுவின் வடிவே! இதோ உங்கள் ஆசனம்! உங்களுக்கு என் இனிய வரவேற்பு!’’


பின் நடக்கும் கன்யாதானத்தில் மணப்பெண்ணின் தந்தை மணமகனிடம் இப்படிச் சொல்கிறார்: ‘‘இதோ, என் மகளை உமக்கு வழங்குகிறேன். இவள் எல்லாக் குணநலன்களும் பொருந்தியவள். இனிய இயல்புடையவள். அறிவில் தெளிவுடையவள். அணிகலன்கள் பூண்டு நிற்கும் இவள் உமது அறம், செல்வம், அன்பு அனைத்துக்கும் காவலாக இருப்பாள்...’’ 

மணமகன் மணப்பெண்ணை ஏற்றுக் கொண்டு மும்முறை உறுதி சொல்கிறான். ‘‘இன்பத்திலும் துன்பத்திலும் இப்பிறப்பிலும் இதற்கப்பாலும் என்றென்றும் நான் இவளது துணைவனாக இருப்பேன்!’’ என்று.

மணப்பெண் தந்தையின் மடியில் அமர, தந்தை சொல்வது: ‘‘ஓ விஷ்ணுவே! அணிகலன்கள் பூண்ட என் மகளை உமக்கு வழங்குகிறேன். இதன் மூலம் எனது முந்தைய பத்து தலைமுறைகள் மற்றும் பிந்தைய பத்து தலைமுறைகள் கர்மவினைகளிலிருந்து விடுதலை பெறட்டும். எனக்கும் முக்தி கிடைக்கட்டும். அது இவள் மூலம் பிறந்த அறவழியில் நிற்கப் போகும் குழந்தைகளின் மூலம் நிகழட்டும்! பூமித்தாயும், எல்லாத் தேவர்களும், அனைத்து உயிரினங்களும் நான் செய்யும் இந்தக் கன்யாதானத்திற்கு சாட்‌சியாய் நிற்கட்டும்!’’

பின் அவர் மணமகனிடம், ‘‘பக்தி, செல்வம், ஆசை இவற்றை நிறைவேற்றிக் கொள்வதில் இவளுக்கு இடையூறு நேரக் கூடாது’’ என்று கேட்டுக் கொள்ள மணமகனும் பதிலுக்கு ‘‘நான் அவளுக்கு இடையூறு செய்ய மாட்டேன்’’ என்று மும்முறை உறுதி கூறுகிறான்.

மணமகன் மணமகள் கழுத்தில் மங்கல நாண் அணிவித்து ஒரு முடிச்சுப் போட, அவனது சகோதரியர் மற்றும் மூத்த சுமங்கலிகள் மற்றும் இரு முடிச்சுகளைப் போடுகிறார்கள். மங்கல நாணை அணிவிக்கையில் சொல்லும் மந்திரம் சினிமாக்களில் கேட்டாவது பலருக்கும் தெரிந்திருக்கும்.
மாங்கல்யம் தந்துநாநேந மம ஜீவித ஹேதுநா |
கண்டே பத்நாமி ஸூபகே ஸஜீவ ஸரதஸ்ஸதம் ||
இது மணமகன் சொல்வதாக அமைந்த மந்திரம்.  ‘‘உன்னோடு நான் நீடுழி வாழ வேண்டி இந்த மங்கல நாணை உன் அழகிய கழுத்தில் அணிவிக்கிறேன். எல்லாப் பேறுகளும் பெற்று நீ நூறாண்டு நிறைவான வாழ்க்கை வாழ இறைவன் அருள் புரியட்டும்!’’

அதன்பின் அக்னியைச் சுற்ற மணமகன் மணமகளை அழைத்து வரும்போது சொல்லும் மந்திரம்: ‘‘பூஷா தேவதை உன்னை அக்னியின் முன்னிலைக்கு பத்திரமாக அழைத்துச் செல்லட்டும். அஸ்வினி தேவதைகள் என் வீட்டுக்கு உன்னை பாதுகாப்புடன் அழைத்து வரட்டும். பல மங்கலமான செயல்களில் என்னைத் தூண்டப்போகும் பெண்ணே! என் வீட்டின் அரசியாக அடியெடுத்து வை!’’


இதற்குப் பின் பாணிக்கிரஹண மந்திரம். மணமகளின் கரத்தைத் தன் கைக்குள் அடக்கிக் கொண்டு மணமகன், ‘‘ஓ பண்புள்ள பெண்ணே! கடவுளர்கள் கருணை மேலிட்டு நான் இல்லறம் பேணுவதற்காய் உன்னை எனக்கு அளித்துள்ளார்கள். முதுமையிலும் நாம் பிரியாமல் நீடு வாழ்வோமாக! உன் திருக்கரம் பற்றியே நான் இல்லறம் எனும் நிலைவாயிலில் நுழைகிறேன். இது வரை உன்னைக் காத்து வந்த சோமன், பகன் மற்றும் அக்னியின் ஆசிகள் எனக்கு இருக்கட்டும்.’ என்கிறான்
பிறகு சரஸ்வதி தேவியையும், வாயுவையும் தொழுது விட்டு. பின் இருவரும் அக்னியை வலம் வருகிறார்கள்.

மணமகளின் பாதம் மணமகன் தொட்டு,  மெட்டி அணிவித்து ஏழு அடிகள் அவள் எடுத்து வைக்க உதவுகிறான் மணமகன். இது சப்தபதிஎனப்படுகிறது. ஒவ்வொரு அடியிலும் மணமகன் சொல்வதாக அமையும் மந்திரத்தின் பொருள் இது.  முதல் அடி எடுத்து வைக்கும்போது கணவன் கூறுவது:

மணமகள் மணமகன் வீட்டிற்கு வந்து புத்திரபாக்கியங்களைப் பெற்று குலவிருத்தி செய்து, அனைவருக்கும் சந்தோஷம் அளிக்கவேண்டும் எனவும், அதற்குத் தேவையான உணவுப் பொருட்கள் போன்றவை குறையாமல் இருக்க நாம் இருவரும் மஹாவிஷ்ணுவைப் பிரார்த்தனை செய்வோம்.

இரண்டாவது அடியின் போது மனைவியின் தேகவலிமைக்கு வேண்டிக்கொண்டும், அவள் ஆசைகள் நியாயமான ஆசைகளாக இருக்கவும், அவை பூர்த்தியடையவேண்டியும், அதற்கான உடல், மன வலிமையை அவள் பெற மஹாவிஷ்ணு தரவேண்டும் எனவும் கேட்டுக்கொள்வான்.

மூன்றாம் அடியின் போது இருவரும் சேர்ந்து வாழப் போகும் புத்தம்புதிய வாழ்க்கையில் இல்லறத்தை நல்லறமாகச் செய்ய வேண்டிய கடவுள் ஒத்துழைக்கவேண்டும் எனவும், எடுக்கும் முயற்சிகளிலும் இருவருக்கும் நம்பிக்கையும், தர்மத்தை மீறாமலும் இருக்கவேண்டியும் விஷ்ணுவைப் பிரார்த்தனை செய்வான்.

நான்காம் அடியின் போது கணவன் தானும், தன் மனைவியும் பூவுலக இன்பங்களை எல்லாம் குறைவின்றி அனுபவிக்க வேண்டும் என்றும் அது முழுமையாகக் கிடைக்க மஹாவிஷ்ணு அருள் செய்யவேண்டும் எனவும் பிரார்த்தனை செய்வான்.

ஐந்தாம் அடியின் போது தன் மனைவியாய் வந்து இல்லற சுகம் என்பது வெறும் உடல் சுகம் மட்டுமில்லாமல்,  மற்ற சுகங்களான வீடு, வாசல், மற்றச் செல்வங்களுமாக இருக்க அந்த மஹா விஷ்ணு அருள் புரியவேண்டும் என்று அவன் வேண்டிக் கொள்கிறான்.

ஆறாம் அடியின் போது பருவ காலங்களின் தாக்கங்கள் தங்களைப் பெரிய அளவில் தாக்காதவாறும் அதன் மூலம் இல்வாழ்க்கையின் சுகமோ, சுவையோ குறையாமலும் இருவர் மனங்களும் அதற்கேற்ற வல்லமையோடு இருக்க மஹாவிஷ்ணுவைப் பிரார்த்திப்பதாகச் சொல்கிறது.

ஏழாம் அடியின் போது இல்வாழ்க்கையில் செய்யப் போகும் வேள்விகள் அனைத்துக்கும் நீ உதவியாகவும் துணையாகவும் இருந்து என் மனதையும், உன் மனதையும் ஆன்மீகத்திலும் செலுத்த வேண்டியும் எல்லாக் கடமைகளையும் தவறாமல் நிறைவேற்றவும் வேண்டிய பலத்தை உனக்கு அந்த மஹாவிஷ்ணு கொடுக்கட்டும் என்று மணமகன் கூறுகிறான் 

பிறகு மணமகளை அம்மியை மிதிக்கச் செய்து, மணமகன் சொல்வது: ‘‘இந்த அம்மியின் மீது ஏறி நிற்பாயாக! உன்னை எதிர்ப்பவர்களை இந்தக் கல்லின் வலிமையுடன் எதிர்கொள்வாயாக! அதே நேரத்தில் எதிரிகளுடன் கருணையுடனும் நடந்து கொள்வாயாக! ஏழு முனிவர்களும் வசிட்டரின் மனைவியான அருந்ததியே சாலச் சிறந்தவள் என்று அறிவித்தார்கள். அதை மற்ற ஆறு மனைவியரும் ஏற்றுக் கொண்டார்கள். அதேபோல என் மனைவியும் கற்பில் தலைசிறந்தவள் என்று கருதப்பட்டு எட்டாவது தாரகையாய் மின்னட்டும்’’ என்று பிரார்த்திக்கிறான்.

இதன்பின் மணமக்கள் துருவ நட்சத்திரத்தைப் பார்க்கிறார்கள். ‘‘ஓ துருவனே! நீ உறுதியின் ஊற்று! வாழ்வில் உயிரின் உறுதிக்கு நீயே பொறுப்பு. நட்சத்திர மண்டலங்களின் அச்சாணி நீ. உறுதியைத் தாக்கும் எதிரிகளிடமிருந்து எம்மைக் காப்பாற்று!’’

இப்படி சொல்லப்படும் மந்திரங்களின் அர்த்தம் புரிகையில் தான் திருமணம் என்பது உறுதிமொழிகளிலும், ஒப்பந்தங்களிலும், பிரார்த்தனைகளிலும் உருவாகும் புனிதச் சடங்கு என்பது புரிகிறதல்லவா?
-         
 - என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் - 21-05-2013

7 comments:

 1. பாநிகிருகணம் நடைபெறும்போது சொல்லப்படும் சில மந்திரங்களின் தமிழ் வடிவத்தை தந்ததற்குமகிழ்ச்சி.

  இதில் நாந்தி எனச் சொல்லப்படும் நிகழ்வும், பின் தாலி கட்டி முடிந்தபின்னே நடக்கும் அஷ்டபதி என்று அக்னியை வளம் வரும்போழ்து சொல்லப்படும் மந்திரங்களும் மிகவும் முக்கியம்.

  உண்மையாகப் பார்த்தால், அஷ்டபதி மந்திரங்கள் தான் ஒரு திருமணத்தை உறுதி செய்கின்றன. இது முடிந்து விட்டால் மட்டுமே ஒரு திருமணம் நிறைவு பெறுகிறது.

  தாலி கட்டுவது இந்து சம்பிரதாயங்களிலே ஒரு பிற்காலத்தில் வந்தது தான். இதற்கு சாஸ்த்ர அடிப்படைகள் இல்லை. இருப்பினும் இன்றைய தேதியில் கழுத்தில் மஞ்சள் கயிறு ஒன்றே திருமணம் ஆன பெண்களுக்கு ஒரு சான்றாக கொள்ளப்படுகிறது.

  இருக்கட்டும்.

  மந்திரம் சொல்லும் புரோகிதர்கள் வேத விற்பன்னர்கள் பொதுவாக இல்லை.

  எப்படி ஒரு மோட்டார் மெகானிக்கோ அல்லது டி.வி. ரிபேர் செய்பவரோ எந்த அளவுக்கு தான் கையாளும் யந்திரத்தின் நுணுக்கங்களை அறிவாரோ அந்த அளவுக்குத் தான் இந்த புரோகிதர்களும் அறிவர் அதிக நபர்களுக்கு சம்ஸ்க்ருத அறிவு கிடையாது என்பதும் உண்மையே. இருந்தாலும் அவர்களிடம் அதை எதிர்பார்க்கலாகாது.

  மந்திரம் வேறு, அதை செய்யும் தந்திரம் வேறு. அனாடமி, பிசியாலஜி போன்று. . ஒன்று ஸ்ட்ரக்சர். இன்னொன்று
  செயலாக்கும் திறன். இரண்டிலும் தேர்வு பெற்று இருப்பது நல்லது தான். இருந்தாலும் அதை முற்றிலும் எதிர்பார்க்கலாகாது.

  மருத்துவருக்கு ஒரு மருந்தின் மாலிக்யூல் எப்படி இருக்கிறது என்று விவரிக்கத் தெரியுமா சொல்லுங்கள். அது எப்படி செயல்படும் என்று வேண்டுமானால் சொல்வார்.

  சுப்பு தாத்தா
  www.subbuthatha72.blogspot.com
  www.subbuthatha.blogspot.com

  ReplyDelete
 2. sury SivaJuly 15, 2013 at 7:08 PM

  //பின் தாலி கட்டி முடிந்தபின்னே நடக்கும் அஷ்டபதி என்று அக்னியை வlலம் வரும்போது சொல்லப்படும் மந்திரங்களும் மிகவும் முக்கியம்.

  உண்மையாகப் பார்த்தால், அஷ்டபதி மந்திரங்கள் தான் ஒரு திருமணத்தை உறுதி செய்கின்றன. இது முடிந்து விட்டால் மட்டுமே ஒரு திருமணம் நிறைவு பெறுகிறது.//

  ’அஷ்டபதி’ என்பது பஜனை.

  ’ஸப்தபதி’ என்பதே பெண்ணின் மெட்டியை மாப்பிள்ளை பிடித்தபடி ஏழுஅடி எடுத்துவைத்தல்.

  ReplyDelete
  Replies
  1. Thanks a lot.
   I stand corrected. Ashtapathi is actually a poetic ecstasy by Jayadeva in Sanskrit. Sapathapathi is as you have correctly pointed out is the most important ritual in the panigrihana . After the seven steps are walked together , the wedding is complete.Every step has a rationale behind it.
   Once again thanks to Mr.Vai.Go.

   subbu thatha.

   Delete
 3. எந்த ஒரு தானம் செய்யும் போதும் தானம் கொடுப்பவர் நின்று கொண்டும், தானம் பெறுபவருக்கு ஆசனம் அளித்து அவரை அமரச்சொல்லியும் தான் செய்வது வழக்கம்.

  கன்னிகாதானம் ஒன்றுக்கும் மட்டுமே இதில் விதிவிலக்கு உள்ளது.

  தானம் செய்யப்படும் கன்னிகையை அவள் தகப்பனார் தன் மடியில் உட்கார வைத்துக்கொண்டு, தானும் உட்கார்ந்து கொண்டு, தானம் பெறும் மாப்பிள்ளையை நிற்க வைத்து கன்னிகாதானம் அளிக்கப்பட வேண்டும் என்பதே சாஸ்திரமாக உள்ளது.

  கன்னிகாதானத்திற்கு அவ்வளவு ஒரு விசேஷம்.

  [இன்று 99.99% நடப்பவைகளெல்லாம் கன்னிகாதானமே அல்ல. பெண்ணுக்கு 18 வயதான பின்னரே திருமண்ம் செய்யப்பட வேண்டும் என்று இன்றுள்ள நம் நாட்டு சட்டப்படியும் கன்னிகாதானம் செய்யவே வழியும் இல்லை]

  பயனுள்ள விஷயங்களைப் பதிவாகக் கொடுத்துள்ளதற்கு நன்றி.

  ReplyDelete
 4. "Action may speak louder than the words but intention speaks loudest". When we can't even understand the spoken words, then the intention behind the words too disappears. Blindly uttering mantras have no benefits. We have enough evidence in Indian mythology for this. We should use our mother tongue or the language that we understand so that we can really mean what we say.

  ReplyDelete