என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, May 6, 2013

உண்மையான பக்தி
அறிவார்ந்த ஆன்மிகம் - 5


உண்மையான பக்திக்கு நம் நாட்டு புராண இதிகாசங்களில் என்றுமே முதலிடம் இருந்திருக்கின்றது. வேள்விக்கும் தவத்திற்கும் கூட இறைவன் தாமதமாக அருள் புரிவதுண்டு, ஆனால் பக்திக்கு இறைவன் விரைந்து வந்து அருள் புரிவான் என்று முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். அனுமாருடைய பக்தி அவருக்குக் கொடுத்த எல்லையற்ற சக்தி பற்றி வால்மீகியும், கம்பனும் சலிக்காமல் சொல்கிறார்கள். உண்மையான பக்தி அடியாருக்காக இறைவனை மண் சுமக்கவும், பிரம்படி படவும் வைத்ததென்று திருவிளையாடல் புராணம் சொல்கிறது.


உண்மையான பக்திக்கு அத்தனை சக்தியும் பெருமையும் இருக்கின்றது. உண்மையான பக்தியில் பக்தன் என்ன செய்தாலும் இறைவன் பொறுத்துக் கொள்கிறான். அதே போல உண்மையான பக்தியில் இறைவனுக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய பக்தனும் தயாராக இருக்கிறான். இதற்கு கண்ணப்ப நாயனார் கதையை விடப் பொருத்தமான உதாரணத்தைச் சொல்ல முடியாது.


பொதப்பி நாட்டிலுள்ள உடுப்பூரில் வேட்டுவ இனத்தில் பிறந்தவர் திண்ணனார். குல மரபிற்கேற்ப வில், அம்பு, ஈட்டி, வாள் முதலானவற்றில் பயிற்சிகளைக் கற்றுச் சிறப்படைந்தவர். ஒரு நாள் திண்ணனார் நாணன், காடன் என்ற நண்பர்களோடு தன் முதல் வேட்டைக்குச் சென்றார். சென்ர இடத்தில் வேட்டைக்காக விரித்த வலைகளை அறுத்துக்கொண்டு ஒரு பன்றி மட்டும் தப்பி ஓடியது. விடாது துரத்திச் சென்று, புதருள் மறைந்த அந்தப் பன்றியைத் திண்ணனார் தம் குறுவாளால் வெட்டி வீழ்த்தினார். இதனைக் கண்ட நண்பர்கள் வியந்து, திண்ணனின் வலிமையைப் பாராட்டினார்கள்.


இளைப்பாறும் போது அருகே ஓடும் பொன்முகலி ஆற்றையும் வானாளாவ நிற்கும் காளத்தி மலையையும் கண்டு வியந்தார் திண்ணனார். இதனைக் கண்ணுற்ற நாணன் “இம் மலையின் மீது குடுமித் தேவர் இருக்கிறார். அவரைக் கும்பிடலாம் வா” என்றான். சம்மதித்து அவனுடன் மலை ஏறும்போது குடுமித் தேவருக்கு சிவ கோசாரியார் என்பவர் ஆகம விதிமுறைப்படி தினமும் பூஜை செய்வதனை நாணன் மூலம் திண்ணனார் அறிந்தார். மலையேறிய திண்ணனாருக்கு குடுமித் தேவரைக் கண்டவுடன் இன்பமும் பெரும்பக்தியும் ஏற்பட்டன. அவரை வணங்கியும், கட்டித் தழுவியும் ஆடிப் பாடினார். பின் பசியோடிருப்பார் இறைவன் என்ற எண்ணம் வரவே சென்று நண்பன் காடன் ஆற்றங்கரையில் தீயில் இட்டுப் பக்குவப் படுத்திய இறைச்சியைத் தன்னுடைய ஒரு கையில் எடுத்துக் கொண்டார். மறு கையில் வில் இருந்ததால் வாய் நிறைய ஆற்று நீரையும், அருகில் இருந்த மரத்தின் மலர்களைத் தலையில் செருகியும் கொண்டு வந்தார். குடுமித் தேவருக்குத் திருமஞ்சனமாகத் தன் வாய் நீரையும், அமுதமாகப் பன்றி இறைச்சியினையும் தலையில் சூடிய மலரை வழிபாட்டு மலராகவும் இட்டு ”இனிய ஊன் நாயனீரே; நானும் சுவை கண்டேன்; அமுது செய்தருளும்" என்று சொல்லி படைத்து வணங்கினார். இரவில் கொடிய விலங்குகள் வரும் என்று அஞ்சி திண்ணனார் இரவு முழுவதும் வில்லேந்திக் காவல் புரிந்தார். காலையில் மீண்டும் இறைவனுக்குத் திருவமுது தேடி வரப் புறப்பட்டார்.


வழக்கம் போல, பூஜை செய்ய வந்த சிவ கோசாரியார் இறைவன் மீதிருந்த இறைச்சி முதலானவற்றைக் கண்டு வருந்திப் புலம்பினார். பின் அவற்றை நீக்கித் தூய்மை செய்து பூஜை செய்து சென்றார். அடுத்து திண்ணனாரும் வந்து இறைச்சி முதலானவற்றை வைத்து வழிபட்டார். மறுநாளும் இறைச்சி முதலானவை இருப்பது கண்டு வருந்திய சிவ கோசாரியார் இறைவனிடம் முறையிட்டு வீட்டிற்குச் சென்று உறங்கினார். அவரது கனவில் சிவபிரான் தோன்றி திண்ணனாரை “நமக்கினியன்” என்று சொல்லி திண்ணனாரின் அன்பு வழிபாட்டை நாளை மரத்தின் மறைவில் நின்று பார்க்கும்படி கூறிவிட்டு மறைந்தார்.


மறு நாள் திருக்காளத்தி நாதரும், குடுமித் தேவருமான சிவபெருமான் திண்ணனாரின் அன்பின் பெருமையைக் காட்ட, வலக் கண்ணில் இருந்து உதிரம் பெருகும்படிச் செய்தார். அதனைக் கண்ட திண்ணனார் பதறி செய்வதறியாமல் திகைத்தார். பின் தம் கைகளால் துடைத்துப் பார்த்தார். காடெங்கும் திரிந்து பச்சிலை பறித்து இட்டார். ஆயினும் உதிரம் நிற்கவில்லையே என வருந்தி நின்றபோது ஊ’னுக்கு ஊன்’ என்ற பழமொழி அவரது நினைவுக்கு வந்தது. உடனே தம் வலக்கண்ணை அம்பினால் தோண்டி எடுத்து அப்பினார். உதிரம் நின்றுவிட்டது. இதைக் கண்டு அவர் மகிழ்ந்து ஆடினார்.


சிவபிரான் இடக்கண்ணிலும் உதிரம் பெருகும்படிச் செய்தார். தம் இடக்கண்ணையும் பெயர்த்து எடுத்து அப்பினால் உதிரம் நின்று விடும் என்று உணர்ந்தார் திண்ணனார். தம் மறு கண்ணையும் பெயர்த்துவிட்டால் இறைவனின் இடக்கண்ணைச் சரியாகக் கண்டறிய முடியாது என்பதால், அடையாளத்துக்காகத் தம் காலின் பெருவிரலை இறைவனின் உதிரம் பெருக்கும் கண் மீது ஊன்றிக் கொண்டார். அம்பினால் தம் இடக்கண்ணைப் பெயர்க்கத் தொடங்கினார். உடனே காளத்தி நாதர் ”நில்லு கண்ணப்ப” என்று கூறித் திண்ணனாரைத் தடுத்தருளினார்.


இதனைக் கண்ட சிவ கோசாரியார் தம்மை மறந்து சிவன் அருளில் மூழ்கித் திளைத்தார். அன்று முதல் இறைவனுக்கே தம் கண்ணைப் பிடுங்கி அப்பியதால் திண்ணனார் கண்ணப்பர் என்று அழைக்கப்பட்டார்.


ஆதிசங்கரர் தனது சிவானந்த லஹரியில் ஒரு சுலோகத்தில் பக்திக்கு இலக்கணமாக கண்ணப்பரையே கூறுகிறார். அச்சுலோகத்தின் பொருள்:“வழிநடைநடந்த மிதியடி பசுபதியின் அங்கத்திற்கு குறிகாட்டியாகிறது;


வாயிலிருந்து உமிழ்ந்த நீர் புரங்கள் எரித்தவனுக்கு நீராடலாகிறது;


சிறிதுண்டு சுவைகண்ட ஊனமுது தேவனுக்கும் படையலாகிறது;


பக்தி என்னதான் செய்யமாட்டாது? அன்பரென்போர் வேடுவனன்றி வேறு எவர்?”
இறைச்சி, உமிழ்நீர், தலையில் சூடி வைத்திருந்த மலர் ஆகியவற்றை இறைவனுக்குப் படைத்தது ஆகமவிதிப்படி பெரும் குற்றங்களே. ஆயினும் கண்ணப்பரை “நமக்கினியன்” என்று சிவகோசாரியாரின் கனவில் கூறியது இறைவன் கண்ணப்பர் முன்பே அறிந்திருந்த அறிவையும், அவர் தன் மேல் வைத்திருந்த பக்தியின் அளவையும் வைத்தே என்பதில் சந்தேகமில்லை. இறைவன் செயலை மட்டும் பார்க்கவில்லை. அதன் பின் இருந்த நோக்கத்தையும் மிக முக்கியமாகப் பார்த்தார்.


பின் கண்ணைக் கொடுத்ததும் மற்றொரு கண்ணையும் தர முன்வந்ததும் அதுவரை யாரும் கண்டிராத பக்தி என்பதால் தான் ஆதிசங்கரரே அவரைப் பக்திக்கு உதாரணமாகச் சொன்னார். பின் மிதியடி கொண்ட காலால் இறைவனை மிதித்ததும் ஆகம விதிப்படி பெருங்குற்றமானாலும், நோக்கத்தின் படி அளவு கடந்த பக்தியின் செய்கையாகவே கருதப்படுகிறது.


இப்படிப்பட்ட பக்தி மிக மிக அபூர்வம். அதனால் தான் மாணிக்கவாசகரே


”கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்

என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி”


என்று ’கண்ணப்பனுக்கு ஈடான அன்பு என்னிடம் இல்லாவிட்டாலும் கூட இறைவர் என்னையும் ஆட்கொண்டருளியதாக’த் திருக்கோத்தும்பியில் குறிப்பிடுகின்றார்.


மாணிக்கவாசகர் சொன்ன நிலையிலேயே நாம் எல்லோரும் இருக்கிறோம். நாமும் இறைவன் அருளுக்குப் பாத்திரமாக வேண்டி நிற்கிறோம். இறைவன் அருள் கிடைக்க நாம் கண்ணப்பரைப் போல அபரிமிதமான பக்தி கொள்ளா விட்டாலும் உண்மையான பக்தியாவது கொண்டிருக்க வேண்டும்.


உண்மையான பக்தி எப்போது பார்த்தாலும் அதைக் கொடு, இதைக் கொடு என்று விண்ணப்பித்துக் கொண்டிருக்காது. உண்மையான பக்தி கடவுளுக்குச் செய்ததை எல்லாம் கணக்கு வைத்துக் கொண்டிருக்காது. உண்மையான பக்தி இறைவனிடம் பேரம் பேசாது. உண்மையான பக்தி எந்த நிலையிலும் இறைவனை சந்தேகிக்காது. உண்மையான பக்தியில் மகத்தான நம்பிக்கை இருக்கும். உண்மையான பக்திக்கு வெளி வேஷங்கள் தேவைப்படாது. எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையான பக்தியில் இறைவனிடம் கேட்க ஒன்றுமில்லாத நேரத்திலும் கூட பிரார்த்திக்கும் மனம் இருக்கும்.


இப்போது யோசியுங்கள். உங்கள் பக்தி உண்மையா?


- என்.கணேசன்


நன்றி: தினத்தந்தி - ஆன்மிகம் - 09-04-20133 comments:

 1. //// உண்மையான பக்தியில் இறைவனிடம் கேட்க ஒன்றுமில்லாத நேரத்திலும் கூட பிரார்த்திக்கும் மனம் இருக்கும்... ///

  அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 2. Ganesan Sir, One small obligation.....When u copy and paste text in your blog, Please do ""Clear text formating"" while creating post, then you will not find such white background on those copied contents.

  இந்த வாரத்தில் இதில் உள்ள அறிவியலை விளக்காமல் விட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்...(தோண்றியதை சொல்லிவிட்டேன், பிழையென்றால் மன்னிக்கவும்)


  வாழ்த்துகள் தொடரவும்......

  ReplyDelete
  Replies
  1. ஆலோசனைக்கு நன்றி. தாங்கள் சொன்னபடி செய்திருக்கிறேன்.

   Delete