சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, May 9, 2013

பரம(ன்) ரகசியம் – 43




வேதபாடசாலையில் இருந்து ஈஸ்வருக்கு அடுத்த நாளே வரச் சொல்லி அழைப்பு வந்தது. வேதபாடசாலையில் தற்போது குருஜி தங்கி இருக்கிறார்  என்றும், ஈஸ்வர் விரும்பினால் அவரையும் சந்தித்துப் பேசலாம் என்றும் சொன்னார்கள். நண்பன் சொன்னதற்காக ஈஸ்வர் வேதபாடசாலை செல்கிறானே ஒழிய மற்றபடி அங்கு செல்வதில் அவனுக்குப் பெரிதாக ஆர்வம் எதுவும் இருக்கவில்லை. ஆனால் குருஜியைச் சந்தித்துப் பேசும் சந்தர்ப்பமும் கிடைப்பதை அவன் எதிர்பாராத அதிர்ஷ்டமாகவே நினைத்தான்.

அவன் குருஜியின் சொற்பொழிவுகளை அவன் தொலைக்காட்சி மூலமாகவும், இணையம் மூலமாகவும் நிறைய கேட்டிருக்கிறான். அவரது அறிவுத்திறனைக் கண்டு பிரமித்துப் போயிருக்கிறான். ஆன்மிகத்தில் அவருக்குத் தெரியாத விஷயங்களே கிடையாதா என்று பல முறை வியந்திருக்கிறான்.  வேதங்கள், உபநிஷத்துக்கள், பிரம்ம சூத்திரம், தம்மபதம், பைபிள், குரான், என்று அவர் அனாயாசமாக மேற்கோள்கள் காட்டிப் பேசுவது பேசும் விஷயத்திற்குத் திணிக்கப்படுவது போல் ஒரு முறை கூட அவனுக்குத் தோன்றியதில்லை. மிகக் கச்சிதமாகப் பொருந்தும்படியாகவே இருக்கும். பதஞ்சலியின்  யோகசூத்திரங்களுக்கு அவர் ஆற்றிய உரைகளை அவன் பலமுறை கேட்டிருக்கிறான். அவனது துறைக்குப் பொருத்தமான எத்தனையோ தகவல்கள் அவர் உரைகளில் இருந்து அவனுக்குக் கிடைத்திருக்கிறது. அவர் ஒரு காலத்தில் இமயமலையில் சித்தர்களுடனும், யோகிகளுடனும் இருந்து நிறைய கற்றிருக்கிறார் என்று கேள்விப்பட்ட பின் அவரை என்றாவது ஒருமுறை சந்திக்க வேண்டும், அவர் அனுபவங்கள் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என சில முறை எண்ணி இருக்கிறான். இப்போது தானாகவே அந்த சந்தர்ப்பம் அமைந்தது அவனுக்கு சந்தோஷமாக இருந்தது.

சொல்லப் போனால் விஷாலியால் காயப்பட்ட மனதுக்கு கிடைத்த முதல் சந்தோஷம் அது தான். வேறெதிலாவது மூழ்கி அவளை மறந்து விட அவன் மனம் ஆசைப்பட்டது. அது முடிகிற காரியமாய் தெரியவில்லை. சில நிமிடங்கள் மறக்க முடிந்தாலும் சீக்கிரமே ஏதாவது ஒரு காரணம் பிடித்துக் கொண்டு அவள் அவன் நினைவில் வந்து கொண்டிருந்தாள். மனம் ரணமானது. அவன் அந்த ரணத்தை வெளியே காண்பிக்காமல் எத்தனை ஜாக்கிரதையாய் பாதுகாத்தாலும் முதலில் கண்டுபிடித்தவள் ஆனந்தவல்லி தான்.

என்னடா பாட்டு எதுவும் காணோம். ரெண்டு நாளா இங்கிலீஷ்லயும் தமிழ்லயும் பாடிகிட்டு இருந்தே. இப்ப உம்முன்னு இருக்கே

‘என்னைக் கவனிக்கறதைத் தவிர இந்தப் பாட்டிக்கு வேற வேலையே இல்லையாஎன்று மனதில் நினைத்துக் கொண்ட ஈஸ்வர் வெளிப்பார்வைக்கு அலட்டிக் கொள்ளாமல் சொன்னான். “அப்படி எல்லாம் இல்லையே

“சும்மா மறைக்காதேடா. எதுவா இருந்தாலும் என் கிட்ட சொல்லு. என்னடா பிரச்சனை?என்று அவன் அருகே வந்து கவலையுடன் ஆனந்தவல்லி கேட்ட போது அவள் அன்பில் மனம் இளகியவனாய் ஈஸ்வர் அவள் தோளைப் பிடித்து அணைத்துக் கொண்டு சொன்னான். “ஒன்னுமில்லை பாட்டி

அவளும் அவனது செய்கையால் மனம் குளிர்ந்தாள். மேற்கொண்டு அவள் எதுவும் கேட்பதற்கு முன் அவன் அலைபேசி அவனைப் பாடி அழைத்தது.

அழைத்தவர் பார்த்தசாரதி. ...சீர்காழி கோயில்ல இருந்த பையன் மாயமா மறைஞ்சுட்டான். அவனைப் பத்தியோ, அவனைக் கூட்டிகிட்டு போனவங்க பத்தியோ புதுசா எந்தத் தகவலும் கிடைக்கலை. போலீஸ் போகறதுக்கு கொஞ்ச நேரம் முன்னால் தான் யாரோ கூட்டிகிட்டு போயிருக்காங்க. ... நீங்க சொன்ன ஆன்மிக பாரதம் புஸ்தகம் எழுதின நீலகண்ட சாஸ்திரி பத்தின முழு விவரமும் கிடைச்சுடுச்சு. அவர் காரைக்குடியை சேர்ந்தவர். அவர் இறந்து 22 வருஷம் ஆயிடுச்சு. அவர் மூத்த மகன் இன்னும் இருக்கார். இப்ப சென்னையில மயிலாப்பூர்ல இருக்கார். ஸ்டேட் பேங்க்ல வேலை பார்த்து ரிடையர் ஆனவர். அவரைக் கண்டு பிடிச்சு பேசினேன். அந்த ஆன்மிக பாரதம் புஸ்தகத்தோட ஒரு பிரதியை இன்னும் வச்சிருக்கார். என் கைல குடுத்தார். 178 ஆவது பக்கத்துல உங்க விசேஷ மானஸ லிங்கம் பத்தியும், இன்னொரு நவபாஷாண லிங்கத்தைப் பத்தியும் சொல்லி இருக்கார். படிக்கட்டுமா?

அந்தப் பக்கத்தை பல முறை படித்திருந்தாலும் வேண்டாம் என்றால் பார்த்தசாரதிக்கு சந்தேகம் ஏற்படலாம் என்ற காரணத்தால் குரலில் ஆர்வத்தைக் கொட்டி சொன்னான். “படிங்க சார்

பார்த்தசாரதி படித்தார். அவர் படித்து முடித்த பின் ஈஸ்வர் “ஆச்சரியமாய் இருக்கு சார். இப்ப நடந்ததை எல்லாம் பார்க்கறப்ப அவர் சொன்ன மாதிரி தான் ஆயிருக்கறதா தோணுதுஎன்றான்.

அந்தப் புஸ்தகத்துல எழுதாத இன்னொரு தகவலையும் நீலகண்ட சாஸ்திரி மகன் சொன்னார். நம்ப முடியலை. நம்பாமல் இருக்கவும் முடியலை....

“என்ன சொன்னார் சார்?இப்போது ஈஸ்வர் உண்மையாகவே ஆர்வத்தோடு கேட்டான்.

“நீலகண்ட சாஸ்திரி அந்தப் புஸ்தகம் பிரசுரிச்சு சில வருஷங்கள் கழிச்சு யாரோ ஒரு பெரியவரை சந்திச்சாராம். அவர் விசேஷ மானஸ லிங்கம் பத்தி முழுசா தெரிஞ்சவராம். அவர் சொன்னாராம். 2012, 2013 வருஷங்கள்ல உலகம் எல்லாம் அனர்த்தங்கள் அதிகமா நடக்கப் போகுது. மனுஷன் விலங்குகளை விட மோசமா நடந்துக்கப் போறான். எவனும் நிம்மதியா இருக்க முடியாத மாதிரி சூழ்நிலைகளும், வியாதிகளும், இயற்கை சீற்றங்களும் இருக்கும்.  அந்த நேரத்துல இந்த விசேஷ மானஸ லிங்கமும் கைமாறுகிற சூழ்நிலை வரும். அது சுமுகமா இருக்காது. நிறைய அழிவுகள் வரும். இதுல நம் தேசத்து ஆட்கள் மட்டுமல்லாமல் அன்னியர்களும் சம்பந்தப்படுவாங்க. அந்தக் காலக் கட்டத்துல கலிமுத்தினதுக்கு எல்லா அறிகுறிகளும் தெரியும்...” ”

ஈஸ்வர் திகைப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான். எத்தனையோ வருடங்களுக்கு முன்பே 2012, 2013 வருடங்களில் இப்படி எல்லாம் நடக்கும் என்று சொல்ல முடிந்தது ஜோதிடமா, பெரியவர்களின் தீர்க்கதரிசனமா? பசுபதியை ஒரு வெள்ளைக்காரர் பார்க்க அனுமதி கேட்டார் என்ற தகவலையும், அவர் சிவலிங்கத்தைத் திருடிச் சென்ற கூட்டத்தில் ஒருவராக இருக்கலாம் என்ற பார்த்தசாரதியின் சந்தேகத்தையும் சேர்த்துப் பார்க்கும் போது அன்னியர்களும் சம்பந்தப்படுவார்கள் என்பது பொருந்துகிறது.  அவன் கேட்டான். “கடைசில என்ன ஆகும்னு சொன்னாராம்?

பார்த்தசாரதி சிரித்தார். “நானும் அதைத் தான் கேட்டேன். அதை அந்தப் பெரியவர் சொல்லலையாம். நீலகண்ட சாஸ்திரி மகன் சொல்றார். “அன்னைக்கு அப்பா கிட்ட அந்தப் பெரியவர் சொன்னதெல்லாம் நடந்துட்டு வர்றதுங்கறதை தினமும் நியூஸ்பேப்பர் படிக்கறப்ப நினைச்சுப்பேன். ஆனா விசேஷ மானஸ லிங்கம் பத்தி மட்டும் ஒன்னும் விவரம் தெரியலை. அது இமயமலைப் பக்கம் நடந்துகிட்டிருக்கோ என்னவோ”.  நான் அவர் கிட்ட அது இங்கேயே நடந்துகிட்டு இருக்குன்னு சொல்லப் போகலை... எனக்கு திடீர்னு அந்த ஆளும் சிவலிங்கத்தை திருடிட்டு போன கூட்டத்துல ஒரு ஆளா இருக்குமான்னு கூட சந்தேகம் வந்துச்சு. ஆனா அந்த ஆளால் மூச்சு வாங்காமல் நாலடி நடக்க முடியலை. அதைப் பார்க்கறப்ப அந்தக் கூட்டம் இல்லை எந்தக் கூட்டத்துலயும் இடம் பிடிக்கற அளவு தெம்பு அவர் கிட்ட இல்லைன்னு தோணுது...

ஈஸ்வர் புன்னகைத்தான்.

பார்த்தசாரதி சொன்னார். “நான் உங்க கிட்ட நேர்ல பேச வேண்டியது கொஞ்சம் இருக்கு. நாளைக்கு சந்திக்கலாமா?

“நாளைக்கு வேறொரு இடத்திற்குப் போக வேண்டி இருக்கு. அடுத்த நாள் சந்திக்கலாமா?

பார்த்தசாரதி சம்மதித்தார். தோட்ட வீட்டிலேயே சந்திக்கலாம் என்று சொன்னார். ஈஸ்வர் பேசி முடித்த போது ஆனந்தவல்லி கேட்டாள். “யார் பேசினது?

போலீஸ் ஆபிசர் பார்த்தசாரதி

“அந்த் ஆள் பசுபதியைக் கொன்னவங்களை கண்டுபிடிச்சுட்டானா

“இன்னும் இல்லை

பேச்சுல தான் கெட்டிக்காரன் போல இருக்கு. இப்படி மணிக்கணக்குல பேசிகிட்டு இருந்தா அப்புறம் கண்டுபிடிக்க எப்படி நேரம் கிடைக்கும்?

ஈஸ்வர் வாய் விட்டுச் சிரித்தான். பார்த்தசாரதி இங்கு வராமல் தோட்ட வீட்டில் சந்திக்கலாம் என்று சொல்ல முக்கிய காரணம் ஆனந்தவல்லி தான் என்பதில் அவனுக்கு சந்தேகமேயில்லை.

ணபதியின் தாய் காமாட்சிக்கு நான்கு நாட்களாய் மனதில் ஏதோ இனம் புரியாத பெரும் பீதி எழுந்து கொண்டே இருந்தது. முதலில் குருஜி சொன்னார் என்ற காரணத்திற்காகவும், தினம் ஐநூறு ரூபாய் கிடைக்கும் என்ற காரணத்திற்காகவும் கணபதி போகிற இடத்தைக் கூட சொல்லாமல் போனது அந்தத் தாய் உள்ளத்திற்குச் சரியாகப் படவில்லை. தன் வயது வந்த பெண்களைக் கூட எங்கு அனுப்பவும் அவள் பயப்பட்டதில்லை. அவர்கள் தங்களைக் காத்துக் கொள்ளத் திறம் படைத்தவர்கள் என்று அவளுக்குத் தெரியும். ஆனால் கணபதி அப்படி அல்ல. தன்னைப் பற்றியோ, தன் லாபத்தைப் பற்றியோ, தன் பாதுகாப்பைப் பற்றியோ நினைக்கத் தெரியாத வெகுளி அவன். அவனை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றி விடலாம்.

ஆனால் அவனை அழைத்துக் கொண்டு போனவர் சாதாரண ஆள் அல்ல, அனைத்து தரப்பினரிடமும் நன்மதிப்பு பெற்றிருந்த குருஜி, அவர் கண் அசைவுக்கு எதையும் செய்ய அதிகார வர்க்கத்தில் இருந்து அன்றாடங்காய்ச்சி வரையும், கோடீஸ்வரர்களில் இருந்து குடிசைவாசிகள் வரையும் தயாராக இருக்கையில் அவர் கணபதியை ஏமாற்றி எதையும்  சாதிக்க வேண்டிய அவசியம் இல்லாதவர் என்பதை காமாட்சி மனதில் திரும்பத் திரும்பச் சொல்லிச் சமாதானப்படுத்திக் கொண்டாள். ஆனாலும் தினமும் கணபதி போனிலாவது பேசிக் கொண்டிருந்தால் நன்றாக இருக்கும் என்று அவளுக்குத் தோன்றி வந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் தான் நான்கு நாட்களுக்கு முன் கணபதியைத் தேடி ஒரு முதியவர் வந்தார். முதலில் பிள்ளையார் கோயிலுக்குப் போனவரை சுப்புணி தான் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்தான். கணபதி இல்லை என்று சொன்னவுடன் அவன் எங்கே போயிருக்கிறான் என்று அவர் கேட்டார். போன இடம் தெரியாது என்று சொன்ன போது அந்த முதியவர் என்ன செய்வதென்று நிறைய நேரம் யோசித்தார்.

சுப்புணி அந்த இடத்தை விட்டுப் போகும் வரை காத்திருந்து விட்டு பிறகு ஒரு முடிவெடுத்தவராக அந்த முதியவர் அரக்கு வைத்த உறை ஒன்றை காமாட்சியிடம் தந்து விட்டு கணபதி வந்தவுடன் அதை அவனிடம் பத்திரமாக, கண்டிப்பாகத் தந்து விடச் சொன்னார்.  

நீங்க யாரு

“சுப்பிரமணியன்என்று மட்டும் அவர் சொன்னார்.

“இதுல என்ன இருக்கு? இதை ஏன் கணபதி கிட்ட தர்றீங்க?

“அதுல என்ன இருக்குன்னு எனக்கே தெரியாதும்மா. கணபதி கிட்ட தரச் சொல்லி எனக்கு உத்தரவு. அதான் தந்துட்டு போக வந்தேன். தயவு செய்து நீங்கள் யாரும் அதைத் திறந்து படிக்க வேண்டாம். அது கணபதி கண்ணில் மட்டும் பட வேண்டியது. நான் வரட்டுமா

அவள் மற்ற கேள்விகளை நினைப்பதற்குள் அவர் போய் விட்டிருந்தார். காமாட்சிக்கு ஒன்றுமே புரியவில்லை. யார் அவர், இதைக் கணபதியிடம் தர அவருக்கு உத்தரவு போட்டவர்கள் யார் என்றெல்லாம் அவர் தெளிவாகச் சொல்லாமல் விட்டது அவள் வயிற்றில் புளியைக் கரைத்தது. ஆனாலும் அது கணபதி கண்ணில் மட்டும் பட வேண்டியது என்பதை அந்த முதியவர் அழுத்திச் சொன்னதால் அவள் அந்த உரையைப் படிக்கப் போகவில்லை. ஆனால் நான்கு நாட்களாக அவளுக்குள் ஒரு பெரும்பயம் அடிக்கடி எழுந்து அவளைப் பயமுறுத்திக் கொண்டே இருந்தது. நான்காம் நாள் இரவிலோ கணபதியின் உயிருக்கே ஆபத்து வருவது போல் கனவு வந்தது. அந்த அரக்கு வைத்த உறை கூரிய கத்தியாய் மாறி கணபதியின் கழுத்தை அறுப்பது போல வந்த கனவு கலைந்து அலறியபடி விழித்தவள் பின் உறங்கவே இல்லை.

மூத்த மகள் சொன்னாள். “பேசாமல் அதைப் பிரிச்சு பார்த்துடேன்

அவர் அதை அவன் மட்டும் தான் பார்க்கணும்னு சொன்னாரேடி

அப்படின்னா அவன் வந்து படிச்சுக்கட்டும். விட்டுடுஇரண்டாம் மகள் சொன்னாள்.

“அவன் படிச்சே ஆக வேண்டிய முக்கியமான விஷயம் அதில் இருக்கும் போல இருக்குடி. அந்தப் பெரியவர் சொன்னது எனக்கு அப்படித் தான் பட்டுது. அவன் அதை லேட்டாகப் பார்த்தால் ஏதோ ஆபத்து இருக்கும்னு தோணுதேடி

“சரி அப்படின்னா அதை அவனுக்கு அனுப்பிடேன்

எப்படிடி அவன் எங்கே இருக்கான்னே தெரியலையேடி

“அவன் எங்கே இருக்கான்கிறது அந்தக் குருஜி கிட்ட கேட்டால் சொல்லிட்டுப் போறாரு.

“அவர் போன் நம்பர் நம்ம கிட்ட இருக்காடி?

மூத்த மகள் கணபதி தொலைபேசி எண்கள் எழுதி வைத்த பாக்கெட் டைரி ஒன்றை எடுத்துப் பார்த்தாள். இதுல குருஜி வீட்டு லேண்ட்லைன் நம்பர் இருக்கு

உடனடியாக காமாட்சி அந்த எண்ணிற்குப் போன் செய்தாள். குருஜியின் காரியதரிசி பேசினான். குருஜி வெளியூர் சென்றிருப்பதாகவும் அவர் ஒரு வாரம் கழித்து தான் வருவார் என்றும் சுரத்தில்லாமல் சொன்னான். இதைச் சொல்லிச் சொல்லியே அவனுக்கு அலுத்து விட்டிருந்தது.

“சரி கணபதி எங்கே இருக்கான்?

அவன் திடுக்கிட்டுப் போனான். “யார் பேசறது?

“நான் கணபதியோட அம்மா பேசறேன்

கணபதி இங்கில்லையேம்மா. என்ன விஷயம்மா?

“அவனுக்கு ஏதோ முக்கியமான கடிதம் வந்திருக்கு. அதை அவன் கிட்டே தரணும். அதான் கேட்டேன். அது பத்தி எப்படியாவது அவன் கிட்ட நான் அதைப் பேசியாகணும். அவன் இருக்கற இடத்துப் போன் நம்பர் தாங்ககாமாட்சியின் குரலில் அசாதாரண உறுதி தெரிந்தது.

காரியதரிசி சொன்னான். நான் கணபதியையே உங்க கிட்ட கொஞ்ச நேரத்துல பேசச் சொல்றேன்ம்மா

அடுத்து அவன் அவசர அவசரமாகக் குருஜியை அழைத்துத் தகவலைச் சொன்னான். குருஜியின் மூளை மின்னல் வேகத்தில் வேலை செய்தது. ஒரு நிமிஷம் யோசித்து முடித்து விட்டு கணபதியை உடனடியாக அங்கு அழைத்து வரச் சொன்னார்.

கணபதி வந்தான். “என்ன குருஜி?

உங்கம்மாவுக்கு உன்  கிட்டே பேசணுமாம்

கணபதி முகத்தில் கலவரம் பரவியது. “எங்கம்மாவுக்கு என்ன ஆச்சு?

“ஒன்னும் ஆகலை. உனக்கேதோ லெட்டர் வந்திருக்காம். அது பத்தி பேசணுமாம். நீயே போன் செஞ்சு பேசு.

கணபதி நிம்மதி அடைந்தான்.. “எனக்கு லெட்டர் போடறா மாதிரி யாருமே இல்லையே குருஜி. ஒருவேளை அது அட்ரஸ் மாறி வந்திருக்கும். எங்கம்மாவுக்கு அது கூட தெரியலை போல இருக்கு. நம்ம பையனுக்கும் ஏதோ லெட்டர் வந்திருக்குன்னு பெருமையா போன் பண்றா போல இருக்குசொல்லி விட்டு கலகலவென கணபதி சிரித்தான்.

புன்னகைத்த குருஜி சொன்னார். “எதுக்கும் நீ போன் செய்து பேசினா தெரிஞ்சுடும். அவங்களுக்கும் உன் கிட்ட பேசின திருப்தி இருக்கும்இந்தப் போன்லயே பேசு. வேணும்கிற அளவு பேசு. நான் உள்ளே போறேன்.

குருஜி உள் அறைக்குப் போனார்.

கணபதி நன்றியுடன் தலையாட்டி விட்டு போன் எண்களை அழுத்த ஆரம்பித்தான். அவனுக்கும் அம்மாவிடம் பேச வேண்டும் போல இருந்தது. ‘அம்மா கிட்ட பேசி எத்தனை நாளாச்சு...

உள் அறையில் நுழைந்தவுடன் போன் ரிசீவரை எடுத்த குருஜி கணபதியின் தாய் என்ன சொல்லப் போகிறாள் என்பதைக் கேட்கத் தயாரானார்.

(தொடரும்)
-          என்.கணேசன்




7 comments:

  1. அம்மா கிட்ட பேசி எத்தனை நாளாச்சு...”

    தந்திரம் நிறைந்த குருஜி ...!

    ReplyDelete
  2. கணபதியின் தாயின் துடிப்பு அப்படியே கண்கள் முன் விரிகின்றது உங்கள் எழுத்தால்.

    அப்படியே விஷாலியையுன் ஞியாபகப்படுத்திவிட்டீர்கள்.....

    அந்த உரையை குடுத்தது யார் என்று எங்களையும் துடிக்க வைத்துவிட்டீர்கள்.....

    ......

    வாழ்த்துகள்.தொடரவும்.....

    ReplyDelete
  3. கதையை சரியாக தற்காலத்திற்கு இணைத்தது மிகவும் அருமை......


    படிப்பவர்கு உண்மையாகவே அப்படியோரு மானஷ லிங்கம் இருக்குமோ என்று சந்தேகம் வரும் வண்ணம் தத்ரூபமாக இருக்கும் உங்கள் எழுத்துக்கு வாழ்த்துகள் பலகோடி

    ReplyDelete
  4. பெரியவர்கள் சொன்னது உண்மையாக இருக்குமோ...!?

    வாழ்த்துக்கள்... தொடர்கிறேன்...

    ReplyDelete
  5. சுந்தர்May 9, 2013 at 7:23 PM

    இக்காலத்தில் நடப்பது போலவே நிகழ்ச்சிகளைக் கொண்டு போவது அருமை. 2012, 2013 ல் அப்படித்தானே நடக்கிறது. ஒவ்வொரு வாரமும் சுவை குறையாமல் பரபரப்பாக கதையை நகர்த்துவதற்கு பாராட்டுகள். கணபதி கேரக்டர் அருமை. (ஒருவேளை அது அட்ரஸ் மாறி வந்திருக்கும். எங்கம்மாவுக்கு அது கூட தெரியலை போல இருக்கு. நம்ம பையனுக்கும் ஏதோ லெட்டர் வந்திருக்குன்னு பெருமையா போன் பண்றா போல இருக்கு” சொல்லி விட்டு கலகலவென கணபதி சிரித்தான்). கணபதி கண் முன் நிற்கிறான். அவனுக்கு ஒன்றும் ஆகி விட கூடாது என்று மனம் தவிக்கிறது.

    ReplyDelete
  6. Hmm. interesting. I don't want Ganapathy will be in danger. I want him to be alive all the way :)

    ReplyDelete