என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, May 16, 2013

பரம(ன்) ரகசியம் – 44“ஹலோ அம்மா நான் கணபதி பேசறேன்

மகன் குரலைக் கேட்டதும் காமாட்சிக்கு அழ வேண்டும் போல இருந்தது. ஏன் என்று அவளுக்குத் தெரியவில்லை. கண் கலங்க கேட்டாள். “கணபதி எப்படிடா இருக்கே?

அவள் துக்கம் அவள் குரலில் பிரதிபலித்ததால் கணபதி கவலையுடன் கேட்டான். அம்மா உனக்கு உடம்புக்கு ஒன்னுமில்லையே? அக்காங்க ரெண்டு பேரும் நல்லா தானே இருக்காங்க

நானும் அக்காங்களும் நல்லா தான் இருக்கோம். நீ எப்படிடா இருக்கே?

கணபதி சந்தோஷமாகச் சொன்னான். “குருஜி தயவுல நான் ராஜா மாதிரி இருக்கேன். நேத்து கூட ஏ.சி. கார்ல பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலுக்கு போயிட்டு வந்தேன். எனக்கு ஒரு அண்ணா கிடைச்சிருக்கார். எனக்கு பட்டு வேஷ்டி பட்டு சட்டை எல்லாம் வாங்கி தந்திருக்கார். நம்ம பிள்ளையாருக்கும் கூட பட்டு வேஷ்டி வாங்கித் தந்திருக்கார். சரி பிள்ளையார் எப்படி இருக்கார்?

அவருக்கென்ன. நல்லாத்தான் இருக்கார்?

“நீ தினம் போய் பார்க்கிறியா இல்லையா?

“தினம் போய் பார்த்து உனக்காக வேண்டிகிட்டு தான் இருக்கேன்.

எனக்காக எதுக்கு வேண்டறே. ரெண்டு அக்காக்களுக்கும் வேண்டு. நல்ல மாப்பிள்ளைகளாய் கிடைக்கணும்னு வேண்டு.

காமாட்சிக்கு கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. ‘தனக்கென்று எதுவும் கேட்கத் தெரியாத இந்தக் குழந்தைக்காக நானாவது வேண்டிக் கொள்ள வேண்டாமா?

அவள் எதுவும் சொல்லாததைக் கூட கணபதி கவனிக்கவில்லை. “சுப்புணி பிள்ளையாருக்கு ஒழுங்காய் பூஜை செய்யறானா?

ஏதோ செய்யறான். பிள்ளையாருக்கு உன் அருமை தெரியணும்னா இவன் மாதிரி ஆள்கள் இடையில் சில நாள் பூஜை செய்தால் போதும்

கணபதிக்கு வருத்தமாய் இருந்தது. சரி சில நாட்களுக்குத் தானே. பிள்ளையாரே கொஞ்சம் பொறுத்துக்கோ’.  “நீ எனக்கு ஏதோ லெட்டர் வந்திருக்கிறதாய் சொன்னாயாம். அட்ரஸை நல்லா பார்த்து சொல்லு. எனக்கு வந்தது தானா?

“ஒரு பெரியவர் நேராய் வந்து தந்துட்டு போனார்டா. உன் பேர் தான் போட்டிருக்கு. கணபதி, அர்ச்சகர், வரசித்தி விநாயகர் திருக்கோயில், நாகனூர்னு தெளிவாய் எழுதி இருக்கு.

“அந்த பெரியவர் யாரும்மா?

சுப்பிரமணியன்னு பேர் மட்டும் சொன்னார்.

சரி அதுல என்ன தான் எழுதி இருக்குன்னு பிரிச்சு தான் பாரேன்

“அந்தப் பெரியவர் உன்னைத் தவிர வேற யாரும் பிரிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டு போயிருக்கார். அதனால பிரிக்கலை

அம்மா அது ஏதோ கோயில் கும்பாபிஷேக நோட்டீசாய் இருக்கப் போகுதுஎன்று சொல்லி கலகலவென்று கணபதி சிரித்தான்.

காமாட்சிக்கு மகனுடைய கலகல சிரிப்பைக் கேட்ட போது மனம் நிறைந்தது. எத்தனை துக்கம் இருந்தாலும் மகன் அப்படி சிரிப்பதைப் பார்க்கும் போது அவளுக்கு அவை எல்லாமே மறந்து போகும். “அப்படி எல்லாம் இருக்காதுடா. அரக்கு வச்சு மூடின கவர்டா. அந்தப் பெரியவரும் சாதாரண ஆளா தெரியலை. அவர் சொன்னதை வச்சு பார்த்தா முக்கியமாய் இருக்கும்னு தோணுது. நீ வாயேன். வந்து படிச்சுட்டு போயேன். எனக்கும் உன்னை ஒரு தடவை பார்க்கணும்னு தோணுது.

கணபதி யோசித்தான். பிறகு சொன்னான். “நான் எதுக்கும் குருஜி கிட்ட பேசிப் பார்க்கறேன்ம்மா. பிறகு உன் கிட்ட பேசறேன். சரியா? கணபதி போனை வைத்து விட்டான்.

உள்ளே குருஜியும் போனை வைத்து விட்டார். அவர் மனதில் பல கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாய் எழுந்தன. பெரிய திகைப்பில் அவர் மூழ்கிப் போனார். சுப்பிரமணியன் என்ற பெயருடைய பெரியவர் என்றதும் அந்த ஜோதிடர் நினைவு அவருக்கு வராமல் போகவில்லை. அந்த ஆள் அவசரமாக ஏதோ வெளியூர் போனது கணபதியை அவன் ஊரில் சந்திக்கத் தானா? அந்தக் கடிதத்தில் என்ன இருக்கிறது? அதை அரக்கு வைத்து மூடக் காரணம் என்ன? அந்தக் கடிதத்தை அவராகக் கொண்டு போய் தந்திருக்கிறாரா இல்லை யாராவது தரச் சொல்லி அவர் போயிருக்கிறாரா? அவருக்கு கணபதியை எப்படித் தெரியும்?....

கணபதி அவர் அறை வாசலில் தயக்கத்துடன் நின்றான்.

“வா கணபதி. அம்மா என்ன சொல்றாங்க? வந்திருக்கிறது என்ன லெட்டராம்?குருஜி கேட்டார்.

கணபதி தாய் சொன்னதைச் சொன்னான்.

குருஜி அவன் தாய் அவனை வரச் சொன்னதையும், அவனைப் பார்க்க விரும்புவதாய் சொன்னதையும் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.

“உனக்கு வந்த லெட்டரை நீயே படிக்க வேண்டும் என்று உன் அம்மா நினைக்கிறார்கள். அவ்வளவு தானே? கவலையை விடு. நானே ஆள் அனுப்பி அந்த லெட்டரை வாங்கிக் கொண்டு வந்து உன்னிடம் தரச் சொல்கிறேன். சரியா?

முக்கியமாய் யாரிடமோ பேச வேண்டி இருப்பது அப்போது தான் நினைவு வந்தது போல அவர் செல்போனை எடுத்து எண்களை அழுத்த ஆரம்பிக்க வேறு வழியில்லாமல் கணபதி அங்கிருந்து கிளம்பினான். தனக்கு இத்தனை உதவி செய்யும் அந்த மனிதரிடம் குழந்தைத் தனமாய் என் அம்மாவைப் பார்த்து விட்டு நானே அந்தக் கடிதத்தை வாங்கி வருகிறேன் என்று சொல்ல அவனுக்குத் தயக்கமாக இருந்தது. அந்தக் கடிதத்தை வாங்கி வர ஆள் அனுப்புகிறேன் என்று அவர் சொன்னதே அவரின் பெருந்தன்மை என்று தோன்றியது. அவன் அவரை வணங்கி விட்டுக் கிளம்பினான்.

அவன் தலை மறைந்தவுடன் குருஜி சுறுசுறுப்படைந்தார். போன் செய்து கட்டளை பிறப்பித்தார். “உடனடியாய் கணபதி வீட்டுக்குப் போய் அவன் அம்மாவிடம் இருந்து அரக்கு வைத்து மூடிய கவர் ஒன்றை வாங்கி விட்டு வா. அதைத் தப்பித் தவறி கூட அவன் கண்ணில் காட்டி விடாதே. அப்படியே என்னிடம் கொண்டு வந்து தா. மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்

கேஷ் விஷாலியிடம் இப்படிப்பட்ட மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை. எப்போதுமே சமீபத்தில் மலர்ந்த பூவைப் போல இருக்கக் கூடியவள் அவள். எத்தனை வேலைப் பளு இருந்தாலும் எத்தனை பிரச்சினைகளை சமாளிக்க வேண்டி இருந்தாலும் அவள் முகத்தின் மலர்ச்சியை அவை பாதித்து அவன் பார்த்ததில்லை. ஆனால் அதெல்லாம் இப்போது அடியோடு மாறி விட்டது.

ஈஸ்வரைப் பற்றி அவதூறு சொல்லி விட்டு வீட்டுக்குப் போன மகேஷ் அங்கு ஈஸ்வரிடமும் வாட்டத்தைப் பார்த்தான். ஆனால் ஈஸ்வர் சீக்கிரமே அதில் இருந்து மீண்டவனாக அவனுக்குத் தெரிந்தான். ஆனந்தவல்லியிடமும், மீனாட்சியிடமும் சிரித்துப் பேச ஆரம்பித்து விட்டான். பாட்டு மட்டும் நின்று போனதே ஒழிய மற்றபடி அவனிடம் பெரிய மாற்றம் எதுவும் பிறகு தென்படவில்லை.

ஆனால் விஷாலி அப்படி துக்கத்தில் இருந்து மீளவில்லை. மகேஷ் மறுநாள் அவள் வீட்டிக்குப் போன போது பலவந்தமாய் அவனைப் பார்த்து ஒரு புன்னகை பூக்க முயன்றாள். ஆனால் அந்தப் புன்னகை மானசீகமாக இருக்கவில்லை. அந்தப் புன்னகையில் ஒரு வலி தெரிந்தது. வழக்கம் போல் அவனிடம் அவள் கதை பேசவில்லை. அவன் பேசினதற்கும் சுருக்கமாய் ஒரு வரி பதில்கள் சொன்னாள். அவன் மறு நாள் எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்தான்.

மறு நாள் வந்த போதும் அவள் நடைப்பிணமாய் தான் அவள் தெரிந்தாள். செயற்கையாய் ஒரு புன்னகையும், எந்திரத்தனமாய் பேச்சுக்களும் அவளிடம் இருந்து வந்த போது அவனால் தாங்க முடியவில்லை. இரண்டே நாளில் இந்த அளவு ஈஸ்வர் அவள் மனதில் வேரூன்றி இருப்பான் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. ஈஸ்வர் மீது அவனுக்கு ஆத்திரமாய் வந்தது. ‘என்னடா செய்தாய் என் விஷாலியை!

மகேஷ் விஷாலியிடம் கேட்டான். “என்ன ஆச்சு விஷாலி உனக்கு?

ஒன்னும் இல்லை மகேஷ்

இந்த அளவுக்கு நான் சொன்னது உன்னைப் பாதிக்கும்னு தெரிந்திருந்தா நான் உன் கிட்ட ஈஸ்வர் சொன்னதை சொல்லியே இருக்க மாட்டேன் விஷாலி

ஒரு நல்ல நண்பன் அதை சொல்லாமல் இருக்க முடியாதுன்னு எனக்கு புரியுது மகேஷ். நீ சொன்னது நல்லது தான். எனக்கு தான் ஜீரணிக்க கஷ்டமாய் இருக்கு. காலப் போக்கில் சரியாயிடும்...”  விஷாலி சொன்னாள். ஆனால் காலப் போக்கில் கூட சரியாகும் என்று அவளாலேயே நம்ப முடியவில்லை. அந்த அளவு அவன் அவள் மனதில் இடம் பிடித்து இருந்தான். என்ன தான் மகேஷ் சொன்ன விஷயங்களை மனதில் இருந்த ஈஸ்வர் பிம்பத்தில் அவள் ஒட்ட வைக்க முயன்றாலும் அவை ஒட்ட மறுத்தன.

அவன் சிரிப்பு, அவன் பேச்சுக்கள், அவனுடன் இருந்த அழகான நினைவுகள் எல்லாம் அவள் மனதை விட்டு அகல மறுத்தன. அவனை மறக்க பல வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாள். தூக்கம் இமைகளை அழுத்தும் வரை அந்த வேலைகளில் மூழ்கினாள். ஆனால் கனவிலும் அவன் வந்தான். அவளிடம் பேசினான். சிரித்தான். அவள் கை விரல்களைப் பிடித்தான். கனவிலும் கூட அதெல்லாம் அவளுக்குப் பிடித்திருந்தது. அவளுக்கு அதை நினைக்கையில் அவள் மீதே வெறுப்பு வந்தது.

அவளுக்கு யாரிடமும் பேசப் பிடிக்கவில்லை. தனிமை தேவலை என்று இருந்தது. எப்போதுமே மகேஷிடம் அதிகமாகப் பேசுபவள் இரண்டாம் நாள் கூட அவனிடம் அதிகம் பேசவில்லை. வெளியே ஏதோ வேலை இருக்கிறது என்று போய் விட்டாள். மகேஷ் இதை எதிர்பார்க்கவில்லை. ஈஸ்வரிடம் உள்ள வெறுப்பு தனக்கு சாதகமாக இருக்கும் என்று அவன் கணக்குப் போட்டிருந்தானே ஒழிய அவள் தன்னிடமும் இப்படி விலகி இருப்பாள் என்று அவன் எண்ணிப் பார்க்கவே இல்லை.

அவன் தென்னரசுவின் அறைக்குப் போனான். அவர் மகள் போவதையே ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தார். அவனைப் பார்த்தவுடன் சொன்னார். விஷாலி அவங்கம்மா இறந்தப்ப கூட இவ்வளவு சோகமாய் இருந்து நான் பார்க்கலை. இந்த ரெண்டு நாளாய் அவளைப் பார்க்க சகிக்கலை

மகேஷ் மனதார சொன்னான். “எனக்கும் அவளை இப்படிப் பார்க்க கஷ்டமாய் இருக்கு அங்கிள்

அவனை உட்காரச் சொல்லி விட்டு அவரும் அவனருகே உட்கார்ந்தார். “அவள் கிட்ட என்ன நடந்ததுன்னு கேட்டுப் பார்த்துட்டேன். அவள் பதில் சொல்லலை. ராத்திரி எல்லாம் தூங்காமல் முழிச்சிருக்கா. சில நேரம் ரகசியமா அழறா. அப்படி எல்லாம் மன தைரியம் இழக்காத பொண்ணு அவள் மகேஷ். எனக்குத் தாங்க முடியலை மகேஷ்சொல்லும் போது அவர் கண்களும் ஈரமாயின.

பின் கண்களைத் துடைத்துக் கொண்டு அவனிடம் அவர் கேட்டார். “அவள் இப்படி இருக்கக் காரணம் உனக்குத் தெரியுமா?

மகேஷ் ஜாக்கிரதையானான். சரியாத் தெரியலை. ஆனால் ஈஸ்வர் காரணமாய் இருக்கலாம்னு நினைக்கிறேன்.

தென்னரசு அவனையே வெறித்துப் பார்த்தபடி சொன்னார். “ஒருத்தரை மனசுல உள்ளே அனுமதிக்கறது சுலபம். ஆனால் மனசுக்குள்ளே வந்த ஆளை வெளியே அனுப்ப முடியறது நம்ம கைல இல்லை

மகேஷுக்கு சுருக்கென்றது. விஷாலி ஈஸ்வரைக் காதலிப்பதை தென்னரசு கவனித்து இருக்கிறார்....  எப்படி அவர் கவனிக்காமல் இருந்திருக்க முடியும். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் விதத்தைக் கண்டால் சாதாரண அறிவு உள்ளவனுக்குக் கூடத் தெரியாமல் போகாது... நினைக்க நினைக்க மகேஷிற்குத் தாங்கவில்லை.

மகேஷ் மெல்ல சொன்னான். “அவன் திமிர் பிடிச்சவன். அவள் கிட்ட என்ன சொன்னான், எப்படி நடந்துகிட்டான்னு தெரியலை.... அது அவளை காயப்படுத்தி இருக்கலாம்....

அவங்கப்பா சங்கர் கிட்ட சொல்லி பெருமைப்பட எத்தனையோ விஷயங்கள் இருந்துச்சு. ஆனால் எனக்குத் தெரிஞ்சு அவன் பெருமையாய் சொன்னது தன் மகன் ஈஸ்வரைப் பத்தி தான்

மகேஷ் வெளிப்பார்வைக்கு இயல்பாக இருந்தாலும் அவனுக்கு உள்ளே ரத்தம் கொதித்தது. விட்டால் இங்கே எல்லாரும் ஈஸ்வருக்கு ஒரு ரசிகர் மன்றமே ஆரம்பித்து விடுவார்கள் போல இருக்கிறது... மகேஷ் சொன்னான். “ஈஸ்வருடைய இன்னொரு முகம் தெரியணும்னா அவன் எங்க தாத்தா கிட்ட நடந்துக்கறதைப் பார்க்கணும். அவன் அந்த முகத்தை விஷாலி கிட்ட காண்பிச்சு இருக்கலாம்....  

“என்ன காரணம்னு தெரியலை. ஆனால் அவள் என்கிட்ட கூட சொல்லாத அளவுக்கு அதைப் பர்சனலா நினைக்கிறாள் போல் இருக்கு

“விஷாலி சீக்கிரமே பழைய விஷாலியாயிடுவாள் அங்கிள். நீங்கள் கவலைப்பட வேண்டாம்

தென்னரசு அதை நம்பியது போல தெரியவில்லை. மகேஷையே கூர்ந்து பார்த்துக் கொண்டு இருந்த அவர் முகத்தில் இன்னும் மகள் பற்றிய கவலை தெரிந்தது. அப்படி ஆகலைன்னா என்னால தாங்க முடியாது. இந்த உலகத்துல அவளோட சந்தோஷத்தை விட முக்கியமானது எனக்கு எதுவுமே இல்லை

எதுவுமே என்ற சொல்லுக்கு அவர் அதிகமாகவே அழுத்தம் தந்ததை மகேஷ் கவனித்தான். “ஈஸ்வர் ஒரு மாதம் தான் லீவு போட்டிருக்கிறான்னு கேள்விப்பட்டேன். ஐந்து நாள் முடிந்தாச்சு. இன்னும் 25 நாள்ல போயிடுவான். அப்புறம் எல்லாம் சரியாயிடும்

அவன் போறப்ப என் பொண்ணோட சந்தோஷத்தையும் சேர்த்துக் கொண்டு போயிடாமல் இருக்கணும்கிறது தான் என் கவலை மகேஷ்

மகேஷ் அவர் அறையில் மாட்டி இருந்த விஷாலியின் புகைப்படத்தைப் பார்த்தான். முகமெல்லாம் மலர்ச்சியாக கண்களில் நட்சத்திரங்கள் மின்ன அவள் அதிலிருந்து அவனைப் பார்த்தாள். தென்னரசுவிற்கு என்ன சொல்லி தைரியப்படுத்துவது என்பது அவனுக்குத் தெரியவில்லை. எத்தனையோ விஷயங்களைப் பற்றி இருவரும் பேசினாலும் கூட விஷாலியைப் பற்றிப் பேசுவதில் ஏதோ ஒரு அசௌகரியத்தை அவர்கள் உணர்ந்ததால் அவனும் அவரும் அதிகமாக விஷாலியைப் பற்றி பேசியது இல்லை.

ஒரு பெருமூச்சு விட்ட தென்னரசு வேறு ஒரு முக்கியமான விஷயத்திற்கு மாறினார். “நாளைக்கு காலைல என்னைப் பார்க்க பார்த்தசாரதி வர்றதாக சொல்லி இருக்கார்....

மகேஷும் ஒரு கணம் விஷாலியை மறந்தான். “அந்த ஆள் எதற்கு உங்களைப் பார்க்க வரணும்?

“ஏதோ கேட்கணுமாம்

மகேஷ் அவரைத் திகைப்புடன் பார்த்தான்.

தென்னரசு அவனைக் கூர்மையாகப் பார்த்தபடி சொன்னார். “அவர் வர்றப்ப உன்னை இங்கே பார்க்கறது நல்லது இல்லை. அதனால் ரெண்டு நாளைக்கு நீ இங்கே வராமல் இருக்கிறது நல்லது.

அவன் மெல்ல தலையாட்டினான். அவன் முகம் வெளிறிப் போனது.

(தொடரும்)

-          என்.கணேசன்


7 comments:

 1. வாடிய மலராய் விஷாலி ..!

  விரைவில் உண்மை உணர்ந்து
  புதுப்பொலிவு பெறட்டும் ..!

  ReplyDelete
 2. வரதராஜன்May 16, 2013 at 5:36 PM

  படுசுவாரசியமாக பரமன் ரகசியம் செல்கிறது. காமாட்சி போன்ற சின்ன கேரக்டர் கூட உங்கள் கை வண்ணத்தில் உயிர் பெற்று கண் முன் நிற்கிறது. பாராட்டுகள்.

  ReplyDelete
 3. அடுத்த என்ன நடக்குமோ எனும் ஆவல்... சுவாரஸ்யத்துடன் செல்கிறது...

  ReplyDelete
 4. அந்த கோயில் குளத்தில் இருந்து அழைத்துச்செல்லப்பட்ட ஆளின் கதி என்னயாயிற்று......

  ஆவலுடன் அடுத்தவாரம் வரை காத்திருக்கிறோம்....

  ReplyDelete
 5. Why not, Eshwar quite deserves a fan club :-)

  /PK Pillai

  ReplyDelete
 6. Iraivan potta kanakku eppavume thappakaathu. Naam potta kanakkuthaan thappaakum. Ithai Magesh seekkiram purinthu kolvaan. Magesh initially succeeded in separating the genuine lovers, but finally will cry to see them together.

  ReplyDelete
 7. ஆவலுடன் அடுத்த வாரம் வரை

  ReplyDelete