நானூறு ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு உள்ள திகார் சிறைச்சாலையில் அப்சல்கான் அடைக்கப்பட்டிருந்த பகுதி ஒதுக்குப்புறமாக இருந்தது. தண்டனை பெற்ற ஆபத்தான கைதிகளும், தீவிரவாதிகளும் மட்டுமே அப்பகுதியில் அடைக்கப்பட்டு இருந்தார்கள். அதனால் அங்கு பலத்த இரட்டிப்பு காவல் இருந்தது. அப்பகுதியில் இருந்த கைதிகள் தங்களுக்குள்ளேயே கூட ஒருவருக்கொருவர் சாதாரணமாகப் பேசிக் கொள்ளவும் அதிக வாய்ப்பிருக்கவில்லை. ஏனென்றால் பெரும்பாலானோர் தனித்தனியாகத் தான் அங்கே அடைக்கப்பட்டிருந்தார்கள். அதனால் அங்கிருக்கையில் கைதிகள் பேசுவதானால் காவலாளிகளிடம் மட்டுமே பேச முடியும். தனிமையும் மௌனமும் சேர்ந்திருக்கும் அந்த சிறைவாசம் கொடுமையானது என்பதால் பொதுவாக அந்தக் கைதிகள் வாய்ப்பு கிடைக்கையில் காவலாளிகளிடம் பேச்சு கொடுப்பது வழக்கம். ஆனால் அங்கு தற்போது சிறைப்பட்டிருக்கும் அப்சல்கான் வித்தியாசமானவனாக இருந்தான். அவன் அங்கு சிறைப்பட்டிருக்கும் இந்த இரண்டாண்டு காலத்தில், மற்ற கைதிகளிடம் மட்டுமல்லாமல் காவலாளிகளிடம் கூட ஒரு வார்த்தை பேசியதில்லை. அதற்கான அவசியத்தையும் அவன் உணர்ந்ததில்லை.
சிறையின் அந்தப் பகுதியில் இருக்கும்
கைதிகள் தங்களைச் சந்திக்க வரும் ஆட்களிடம் பேசவும் மிக ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் அவர்களைச்
சந்திக்க வருபவர்களுக்கும் கட்டுப்பாடுகளும், கெடுபிடிகளும்
அதிகம் என்பதால் குடும்பத்தினரும், நண்பர்களும், உறவினர்களும்
அவர்களைச் சந்திக்க வருவதும் குறைவாகவே இருக்கும். அப்சல்கானைச்
சந்திக்க அப்படி குறைவாகக்கூட யாரும் வந்ததே இல்லை. குடும்பத்தினரும், உறவினர்களும்
அவனைச் சந்திக்க விரும்பவில்லை. நண்பர்களையோ அவன் சந்திக்க விரும்பவில்லை. காரணம்
அவனுடைய இயக்கத்திற்கு அப்பாற்பட்ட நட்புகள் அவனுக்கு இருக்கவில்லை. உளவுத்துறையின்
கழுகுப் பார்வை எப்போதும் அவன் மீதிருப்பதால், அவன் இயக்கத்து
நண்பர்கள் பிரச்சினைக்கு உள்ளாவதில் அவனுக்கு விருப்பமில்லை.
எப்போதாவது அவனைச் சந்திக்க வரும் அவனுடைய
வக்கீலிடம் மட்டுமே அவன் பேசி காவலாளிகள் பார்த்திருக்கிறார்கள். அவன் மிகவும்
தாழ்ந்த குரலில் தான் தன் வக்கீலிடம் பேசுவான். அவன் பேசுவது
சற்று தள்ளி நிற்கும் காவலாளிக்கும் கூடக் கேட்காது. அந்த வக்கீலே
கூட அவனை நோக்கி முன்னால் சாய்ந்து மிகவும் உன்னிப்பாகக் கேட்டு சிரமப்பட்டுத்தான்
அவன் என்ன சொல்கிறான் என்பதைப் புரிந்து கொள்வதைக் காவலாளிகள் கவனித்திருக்கிறார்கள்.. அதனால்
அங்கு யாருமே அவனுடைய குரலைச் சரியாகக் கேட்டதில்லை.
அப்சல்கான் வாய்ப்பேச்சுக்கு அதிக முக்கியத்துவம்
தருபவன் அல்ல. அவனுக்கு செயல் மூலம் பேசத்தான் பிடிக்கும். இதுவரை
அவன் அப்படித் தான் பேசியிருக்கிறான். மூன்று வருடங்களுக்கு
முன் புதுடெல்லியில் ஒரு வணிக வளாகத்தில் அவன் வெடிகுண்டு வைத்து பதினைந்து பேர் மரணமடைந்தும், பதினெட்டு
பேர் படுகாயமடைந்துமிருக்கிறார்கள். அந்த சமயத்தில்
அவன் துரதிர்ஷ்டவசமாகப் பிடிபட்டு
டெல்லி உயர்நீதிமன்றத்தில் மரண தண்டனை பெற்று திகார் சிறைக்கு வந்திருக்கிறான்.
இப்போதைக்கு அவனுக்கு இருக்கும் ஒரே
குறிக்கோள் திகாரிலிருந்து தப்பிப்பது தான். ஆனால் அதற்கு
அங்கே சிறிதும் வாய்ப்பிருக்கவில்லை. ஒரு காலத்தில் பிரபலமாக
இருந்த சார்லஸ் சோப்ராஜ் உட்பட சிலர் அங்கிருந்து தப்பித்துப் போயிருக்கிறார்கள். ஆனால் சார்லஸ்
சோப்ராஜ் உட்பட அவர்கள் அனைவரும் சில நாட்களிலேயே பிடிபட்டுமிருக்கிறார்கள், ஒரே ஒரு
கைதியைத் தவிர! தப்பித்துச் சென்று கடைசி வரை பிடிபடாத கைதி அப்சல்கானைப்
போல் பயங்கரவாதி அல்ல. அந்தக் கைதி இன்னொரு கைதியுடன், ஒரு திருட்டுக்
குற்றத்தில் சிறைப்படுத்தப்பட்டவன். அதனால் அவன் தீவிரக்
கண்காணிப்பிலோ, பலத்த காவல் பகுதியிலோ இருக்கவில்லை. தன் சகாவுடன்
சேர்ந்து தப்பித்துச் சென்ற அவன் சகா திரும்ப பிடிபட்டாலும் அவன் பிடிபடவில்லை . அந்த தப்பித்த
கைதியின் அதிர்ஷ்டம் பின் எவருக்கும் அமையவில்லை. சிறைச்சாலைக்
காவலை பின்னர் பல மடங்கு பலப்படுத்தி விட்டார்கள். ஆனாலும் ’முடியாது’ என்று எதையும்
நினைக்காத அவன் இதையும் முடியாது என்று எண்ணி நம்பிக்கை இல்லை. எல்லாவற்றிற்கும்
ஏதாவது ஒரு வழி இருக்கும். அதைக் கண்டுபிடித்து செயல்படுத்துவது தான் வல்லவனின் சாமர்த்தியம்.
சிறைச்சாலை என்பது ஒரு தனி உலகம். அங்கு இருக்கும்
சட்டதிட்டங்களும் வாழ்க்கை முறையும் வித்தியாசமானவை. கைதிகளில்
விசாரணைக் கைதிகள் அடைக்கப்படும் பகுதியில் கெடுபிடிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் தண்டனை
பெற்றவர்கள் அடைக்கப்படும் பகுதியில் கெடுபிடிகள் அதிகம். அந்தக்
கைதிகளுக்கு வேலையும் அதிகம். திகார் சிறைச்சாலைக்குள் ஒரு தொழிற்சாலையும் இருப்பதால், தண்டனை
பெற்ற கைதிகள் வழக்கமான வேலைகளையோ, தொழிற்சாலை வேலையையோ, சில சமயங்களில்
இரண்டையும் சேர்த்தோ செய்ய வேண்டியிருக்கும். ஆனாலும்
எழுத்து வடிவில் இருக்கும் சட்டதிட்டங்களின்படி பெரும்பாலும் சிறைச்சாலைகளில் எதுவும்
நடப்பதில்லை. பணமும், அதிகார வர்க்கத்தின் ஆதரவும் இருந்தால் அங்கே ஒருவர் கூடுதல்
வசதிகளுடன் வாழலாம். சிகரெட், கஞ்சா, உணவுப்பொருள்கள், மொபைல்
போன்கள் முதலான அனைத்தும், பணம் தந்தால் அங்கே கிடைக்கும். அப்சல்கான்
அப்படிப் பணம் தந்து தன் வசதிகளை அதிகப்படுத்திக் கொள்ளவில்லை. அவன் நினைத்திருந்தால்
அதைச் செய்திருக்கலாம். ஏனென்றால் அவன் இருக்கும் இயக்கத்திற்கு பணம் ஒரு பிரச்சினையே
அல்ல. ஆனாலும் தன்னுடைய மோசமான சிறை வாழ்க்கையை வசதியான சிறை வாழ்க்கையாக
மாற்றிக் கொள்ள அவன் பணம் செலவு செய்யவில்லை.
அதற்குக் காரணம் அந்த மோசமான சிறை வாழ்க்கை
அவனுக்கு ஒரு பொருட்டல்ல என்பதல்ல. அவன் இருக்கும்
அந்த மோசமான சூழலையும், அவனுக்குத் தரப்படும் தரமற்ற உணவையும், அவன் மேல்
சுமத்தப்படும் கடுமையான வேலைகளையும் அவன் மிகவும் வெறுத்தான். சிறையில் இருக்கும் ஒவ்வொரு கணமும் அவனுக்கு நரகமாகத் தான்
நகர்கிறது. ஆனாலும் பணம் தந்து அந்த நரக வாழ்க்கையை சுலபமாக்காமல் அவன்
சுமந்து கொண்டிருப்பது இந்த அரசாங்கத்தின் மீது ஏற்கெனவே இருக்கும் கடுமையான வெறுப்பை
மேலும் அதிகரித்துக் கொள்ளத்தான்.
அன்பை விட சக்தி வாய்ந்தது எதுவுமில்லை
என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். அப்சல்கானுக்கு அதில் உடன்பாடில்லை. அன்பை விடவும்
வெறுப்பு அதிக சக்தி வாய்ந்தது. பழிவாங்கும் உணர்வு ஊக்குவிப்பதைப் போல் வேறெதுவும் அவனை
ஊக்குவிப்பதில்லை. ஒவ்வொரு
வேதனையை உணரும் போதும், “இதற்கெல்லாம் சேர்த்து ஒரு நாள் நான் பதிலளிப்பேன்” என்று அவன்
மனதிற்குள் கறுவிக் கொள்வான். இந்த பழிவாங்கும் உணர்வும் வெறுப்பும் தான் அவன் மூளையைக்
கூர்மையாக வைத்திருக்கிறது. அது தான் அவன் வாழும் வாழ்க்கைக்கு ஒரு நோக்கத்தை, ஒரு குறிக்கோளை, ஏற்படுத்தித்
தந்திருக்கிறது. பழி வாங்குவதற்கு, முதலில்
இங்கிருந்து அவன் தப்பித்தாக வேண்டும். எப்படியாவது அவன்
இங்கிருந்து தப்பிக்க இப்போதைய இந்தக் கஷ்டங்கள்
தான் உந்துகோலாக இருக்கப் போகின்றன. அதனாலேயே இந்தக்
கஷ்டங்களை அவன் சகித்து வருகிறான்.
காலம் அவனுக்கு ஆதரவாக இல்லை. ஆனால் அதை
அவன் முடிந்த வரை நீட்டித்துக் கொண்டிருக்கிறான். உச்சநீதிமன்றத்திலும் அவனுக்கு தண்டனை குறைய வாய்ப்பில்லை
என்று அவன் வக்கீல் அவனிடம் வெளிப்படையாகச் சொல்லி இருந்தார். இப்போதெல்லாம்
குடியரசுத் தலைவரும் இது போன்ற விஷயங்களில் கருணை காட்டுவதில்லை. அதனால்
வழக்கு வேகமாக முடிவது அவன் வாழ்க்கையை வேகமாக முடிப்பது போலத் தான். அதனால் டெல்லி உயர்நீதிமன்றத்தின்
மரண தண்டனை தீர்ப்பை எதிர்த்து அவன் உச்சநீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் மேல்முறையீட்டு
வழக்கை அவனும் அவனுடைய வக்கீலும் முடிந்த வரை தாமதப்படுத்தி ஆமை வேகத்தில் நகர்த்திக்
கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் முடிவில்லாமல் அப்படி அவர்கள் வழக்கை நீட்டிக்க முடியாது. அதனால்
தான் சில நாட்களாக அவன் மனம் அவசரத்தை உணர்ந்து வருகிறது.
அவன் தினமும் தவறாமல் செய்யும் காரியம்
சிறையில் படிக்கக் கிடைக்கும் தினசரிப் பத்திரிக்கைகளை ஒரு வரி கூட விடாமல் படிப்பது
தான். அவற்றில் இருக்கும் ஏதாவது ஒரு தகவல் அவன் இங்கிருந்து தப்பிப்பதற்கு
உதவிகரமாக இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பை அவன் இதுவரை இழக்கவில்லை. ஒவ்வொரு
நாளும் பொறுமையாக அவன் அந்த நாளிதழ்களைப் படித்து வருகிறான். ஒவ்வொரு
நாளும் நம்பிக்கையுடன் நூலக அறைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வது வாடிக்கையாகி
விட்டாலும் மறுநாளும் நம்பிக்கையோடு வருவது தடைப்படவில்லை.
இன்றும் அவன் அப்படித் தான் நம்பிக்கையோடு
அந்த நூலக அறைக்குள் நுழைந்தான். அவன் படித்த செய்திகள் அனைத்தும் அவனுக்கு வழக்கமான ஏமாற்றத்தையே
தந்தன. நாளிதழ்களைப்
படித்து முடித்து விட்டு அங்கே பரந்து கிடந்த மற்ற வார, மாத இதழ்களை
மேலோட்டமாகப் பார்த்தான். அவற்றில் அவனால் சிறிதும் ரசிக்க முடியாத சினிமா மற்றும்
குடும்பக் கட்டுரைகள் மட்டுமே இருக்கும். அதைப் படித்து காலத்தை
வீணாக்கிக் கொள்ள அவன் விரும்பவில்லை. ஆனால் அங்கிருந்த
வார இதழான உமன்ஸ் வர்ல்டில் இருந்த அட்டைப்படமும், அதன் தலைப்பும்
ஒரு கணம் அவனை யோசிக்க வைத்தன. யோசனையுடன் அந்த வார இதழை எடுத்துப் புரட்டினான். அட்டைப்படம்
சம்பந்தமான ஒரு குடும்பக் கட்டுரை உள்ளே இருந்தது. அவன் அதைப்
படிக்க ஆரம்பித்தான். படித்து முடித்த பின் அவன் நம்பிக்கையுடன் நிமிர்ந்து உட்கார்ந்தான். திகார்
சிறைக்கு வந்ததிலிருந்து ஒரு முறை கூடப் புன்னகைத்திராத அவன் முதல் முறையாகப் புன்னகைத்தான்.
திகாரிலிருந்து தப்பிக்கும் வழி அவனுக்குப் புலப்பட்டு விட்டது.


Thank you
ReplyDeleteBest wishes for this novel sir. Is this already a finished novel? How long is the novel? If it is too long like the previous one kindly post twice in a week sir. Humble request from your long term reader.
ReplyDeleteமுதல் எபிசோட்லேயே டாப் கியர் போட்டாச்சு
ReplyDeleteWelcome Akshay.Thanks for the new series. It's going to be a super hit.
ReplyDeleteNice narrative story with thriller and suspense
ReplyDelete