ஷ்ரவன் கண்விழித்த நேரம் என்னவென்று அவனுக்குத் தெரியவில்லை. பாதாள அறையில் கடிகாரம் இல்லை. சூரிய வெளிச்சத்தை வைத்துக் கண்டுபிடிக்க அங்கே ஜன்னலும் இல்லை. ஆனால் நீண்ட நேரம் உறங்கியிருக்கிறான் என்பது அவனுக்கு உடல் உணர்ந்த புத்துணர்ச்சியால் புரிந்தது. மனம் பேரமைதியுடன் இருந்தது. எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கிறது என்று தோன்றியது. அந்த யோகியைச் சந்தித்ததும் அப்படித் தான் என்று எண்ணினான். அவரைச் சந்திக்கும் போது கேட்டதும், உணர்ந்ததும் ஒரு பாக்கியம் என்றால், அதை அவன் தன் வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தி உணர்ந்த வாழ்க்கைப் பாடம் பெரும் பாக்கியம் தான். இந்த இக்கட்டான நிலைமை வரா விட்டால் அவன் அவர் சொன்னதைத் தன் வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தி யோசித்திருக்க மாட்டான். இரண்டாவதான இந்தப் பெரும் பாக்கியத்தை இழந்திருப்பான். கடவுள் இது போன்ற கஷ்டங்களையும், பிரச்சினைகளையும் மனிதனின் வாழ்க்கையில் அனுப்புவது இதற்குத் தானோ? படித்தும், கேட்டும் தெரிந்து கொண்டதை வாழ்க்கையில் பயன்படுத்திப் பார் என்று வாய்ப்பு அளிக்கிறானோ? அதை நாம் தான் புரிந்து கொள்ளத் தவறுகிறோமோ?
கழிவறைக்குப் போய் கை,
கால், முகம் அலம்பிக் கொண்டு வந்து ஷ்ரவன் மந்திரஜபத்தை
மறுபடி ஆரம்பித்தான். 1008 முறை அவன் சொல்லி முடித்த போது ஓநாய்
அவனுக்குக் காட்சியளித்தது. ஷ்ரவன் புன்னகையுடன் மனதில் சொன்னான்.
“இப்போது நான் தெளிவு பெற்று விட்டேன். நீ கண்ணுக்குக்
காட்சி அளித்தால் மட்டுமே என்னோடு இருக்கிறாய் என்று அர்த்தமல்ல என்பதை நான் புரிந்து
கொண்டு விட்டேன். நீ காட்சி அளித்தாலும், அளிக்கா விட்டாலும் என்னோடு இருக்கிறாய். இது வரை எனக்கு நீயே வழிகாட்டி இருக்கிறாய். எனக்குத் தெரிந்த காட்சிகளும்
நீ காட்டியது. காட்சிகள் தெரியா விட்டாலும் நீ தான் என் மூலம்
எல்லாவற்றையும் நடத்தியிருக்கிறாய். நன்றி நண்பனே.”
ஓநாய் ஒரு கணம் அவனை அன்புடன் பார்த்தது போலிருந்தது. பின் மறைந்து விட்டது.
இதுவரை நடந்ததை எல்லாம் ஷ்ரவனின் மனம் ஒழுங்குபடுத்திப் பார்த்தது.
நேற்று அவன் கற்பனையில் அந்த ஓநாய் பீரோவுக்குள் நுழைந்ததைச் சொன்னது
வரை யோசித்துப் பார்த்தான். அது அவனாகக் கற்பனை செய்தது தான்
என்றாலும், அந்தக் கற்பனையைச் செய்ய வைத்ததும் அந்தச் சக்தி தானோ
என்ற எண்ணம் மெல்ல எழுந்தது. அந்தப் பீரோவில் உள்ள சொத்துப் பத்திரங்களை
அவன் பார்க்க வேண்டும் என்று தான் அப்படிச் செய்ய வைத்ததோ? ஆரம்பத்தில் வரவுசெலவுக் கணக்கு பற்றிச்
சொன்னது, இப்போது சொத்துப் பத்திரம் பற்றிச் சொல்கிறது.
ஸ்ரேயா சந்திரமோகனின் சொத்து பவர் ஆஃப் அட்டர்னி மூலம் அவர் காணாமல்
போன பின் கிரயமாகி இருக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறாள்.
எல்லாவற்றையும் வைத்து யோசித்துப் பார்க்கையில் சந்திரமோகன்
இவர்களுடைய பினாமியாக இருந்திருக்கலாம் என்று தோன்றியது. அதன் பின் அவர்களுக்குள்
ஏதாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம். இவர்கள் கொடுத்ததைத்
திருப்பித்தர சந்திரமோகன் மறுத்திருக்கலாம். அல்லது தன் பெயரில்
இருப்பதை அவர் விற்று அனுபவிக்க நினைத்திருக்கலாம். அதனால் அவர்
தீர்த்துக்கட்டப்பட்டிருக்கலாம்.
அதற்கு முன் மிரட்டி, அந்த நிலங்களைக் குறைந்த
விலைக்கு விற்க வைத்திருக்கலாம்… அவர் கொல்லப்பட்டதைத் தான் சைத்ரா
பார்த்திருக்க வேண்டும். யோசிக்கையில் எல்லாம் கோர்வையாக வந்தது.
கல்பனானந்தா மறுநாள் காலையிலும் ஷ்ரவன்
வேலைக்கு வராததைக் கவனித்த போது தான் அவனுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட
ஆரம்பித்தாள். காலை சுமார் எட்டு மணிக்கு பாண்டியன் காரில் வெளியே போவது தெரிந்தது.
அவளுடைய சந்தேகம் உறுதிப்பட்டது. பாண்டியன் இல்லாமல்
ஷ்ரவன் அங்கிருக்க, சாதாரணமாய் வாய்ப்பே இல்லை. அவர்கள் அவனைச் சிறைப்பிடித்து வைத்திருக்க வேண்டும்…
வெளிப்பார்வைக்கு கல்பனானந்தா அமைதியாகவே இருந்தாலும் அவள் உள்ளூர
பதற்றத்தை உணர்ந்தாள். ஷ்ரவன் அவளுக்குச் சொல்லியிருப்பதெல்லாம் நினைவுக்கு வந்தது. தனதறைக்குப் போய் அவன் எழுதித்தந்த
மின்னஞ்சல் முகவரிகளை அவள் முதலில் மனப்பாடம் செய்தாள்.
அலுவலகம் ஒன்பது மணிக்கு மேல் தான் திறக்கப்படும். அங்குள்ள கம்ப்யூட்டர்களில்
தான் அவள் அந்த ரகசியத் தகவலை அனுப்ப முடியும். அவள் தினந்தோறும்
இல்லா விட்டாலும் வாரத்திற்கு மூன்று முறையாவது சென்று, யோகாலயத்திற்கு
வந்திருக்கும் பொது மின்னஞ்சல்களில் சிலவற்றுக்குப் பதில் அனுப்புவது வழக்கம்.
பிரம்மானந்தா தனக்கு வரும் தனிப்பட்ட மின்னஞ்சல்களையும், பெரிய இடங்களில் இருந்து வரும் மின்னஞ்சல்களையும் படித்து அவரே பதில் அனுப்பி
விடுவார். ஆனால் சாமானியர்களின் மின்னஞ்சல்கள் அவருக்குப் பதில்
அளிக்கக் கசப்பானவை. எல்லாவற்றையும் புறக்கணிப்பதோ விமர்சனத்துக்கு
உள்ளாகி விடும் என்பதால், அவற்றில் தேர்ந்தெடுத்துச் சிலவற்றிற்காவது
தகுந்த பதில் அனுப்புவது கல்பனானந்தாவின் வேலை.
கல்பனானந்தா அலுவலகத்திற்குப் போன போது உள்ளூர பெரும் பதற்றத்தை
மறுபடியும் உணர்ந்தாள். மின்னஞ்சல்களில் தேடிய போது ஷ்ரவன் சொன்ன இரண்டு மின்னஞ்சல்களும் கிடைத்தன.
இரண்டில் ஒன்றுக்கு ஏற்கெனவே “ஆசிர்வாதம்”
என்று பதில் அளிக்கப்பட்டு இருந்தது. அதனால் அதற்கு
அவள் மீண்டும் பதில் அளிக்க வழியில்லை.
ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆன்மிக மையம் என்ற பெயரில் இருந்து அனுப்பப்
பட்டிருந்த இன்னொரு மின்னஞ்சலைப் படித்தாள்.
“தவத்திரு யோகி பிரம்மானந்தா அவர்களுக்கு,
ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆன்மிக மையத்தின் மெய்யன்பர்கள் சார்பில்
அனந்த கோடி நமஸ்காரங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். நம் நாட்டில் ஆன்மிகத்தைப்
பரப்புவதற்காக திருவண்ணாமலையை அடுத்த போதமங்கலம் கிராமத்தில் ஸ்தாபிக்கப்பட்டது எங்கள்
அமைப்பு. பல ஆன்மிகப் பெரியவர்கள் இங்கு வந்து அழிவில்லாத நம் சனாதன
தர்மம் குறித்து சொற்பொழிவாற்றி இருக்கிறார்கள். தாங்களும்
தயைகூர்ந்து இவ்வருடத்தில் தங்களுக்கு வசதிப்படும் ஒரு நாளில் இங்கு வந்து யோகாவின்
மேன்மையை இங்குள்ள பக்தர்களுக்கும் தந்தருள வேண்டும் என்றும் தங்கள் நூல்களையும், உரைகளையும்
எங்களுக்கு அனுப்பித் தரவேண்டும் என்றும் பாதம் தொழுது நாங்கள் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
கனகசபாபதி
இதற்கு எழுதும் பதிலைத் தான் அவள் ஷ்ரவன்
சொன்ன சங்கேத பாஷையில் எழுத வேண்டும். சாதாரணமாக எழுதுவதானால்
பத்து பக்கங்கள் கூட சிரமம் இல்லாமல் எழுதி விடலாம் போல் இருந்தது. க்ஷேமமாக
இருக்கிறீர்கள் என்று நம்புகிறோம் என்று ஆபத்தை அறிவித்து விட்டு அடுத்தபடியாக இரண்டு
வார்த்தைகள் அடித்து விட்டு மூன்றாவது வார்த்தையை எடுத்துக் கொண்டு அவர்கள் படிக்கும்படி
அவள் அனுப்பும் தகவல் அமைய வேண்டும். ஆனால் யோகாலயத்தில்
யாராவது சந்தேகம் வந்து முழுவதுமாகப் படித்தாலும் அர்த்தமில்லாதபடி இருந்து விடக்கூடாது. கல்பனானந்தா
கஷ்டப்பட்டு ஒரு பதில் அஞ்சல் எழுதினாள்.
“க்ஷேமமாக
இருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்.
யோகாவின் உயர்வினைக் கண்டுபிடித்து, இறையடியார்கள்
உயர்த்தியும் விட்டார்கள். முடிந்ததை பரப்பி, அதனால்
சமூகத்தை உயர்த்த உடனடியாக யோகிஜியின் காணொளிகளை அனுப்பி உள்ளோம். சேமித்து
வைக்கவும். அனைவருக்கும் பயன்படும்.
யோகாலயம்”
அத்துடன் பிரம்மானந்தாவின் யூட்யூப்
வீடியோக்கள் நான்கை இணைத்து அனுப்பி விட்டு அனுப்பிய பிரிவில் இருக்கிறதா என்று அவள்
உறுதிப்படுத்திக் கொண்டு அங்கிருந்து கிளம்பிய போது அவள் இதயம் சம்மட்டி அடிகளை அடிக்க
ஆரம்பித்திருந்தது.
ராகவன் அந்த ரகசிய மின்னஞ்சல் முகவரிக்கு வந்திருந்த தகவலைப்
படித்தார்.
க்ஷேமமாக
இருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்.(நான் ஆபத்தில்
இருக்கிறேன்.)
யோகாவின் உயர்வினைக் கண்டுபிடித்து, இறையடியார்கள்
உயர்த்தியும் விட்டார்கள். முடிந்ததை பரப்பி, அதனால்
சமூகத்தை உயர்த்த உடனடியாக யோகிஜியின் காணொளிகளை அனுப்பி உள்ளோம். சேமித்து வைக்கவும். அனைவருக்கும்
பயன்படும்.
ராகவன் மின்னல் வேகத்தில் இயங்கினார். ஏற்கெனவே
தயார்ப்படுத்தி வைத்திருந்த அவர்களுடைய ஆட்கள் ஐந்து பேருக்கு அவர் அவசரமாகப் போன்
செய்தார். அவர்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை வேகம் எடுத்தது.
(தொடரும்)
என்.கணேசன்


இன்னும் எத்தனை பகுதிகள் உள்ளதோ..பொறுமை காற்றில் பறக்கிறது..
ReplyDeleteMany thanks
ReplyDeleteShravan's foresight is commendable. Already he had prepared kalapanananda in times of crisis. So story heading for a climax. All your heroes are cool and balanced during crisis. A thing that is worth following. Thanks.
ReplyDeleteSuper Thriller!
ReplyDelete