என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, April 23, 2026

சதுரங்கம் 15


விமல் ரிஷிகேசத்தில் இருக்கிறான். ரிஷிகேசத்தில் துறவிகள் அதிகம். எங்கு பார்த்தாலும் காவி நிற ஆடையணிந்தவர்கள் தான் அதிகம் தென்படுகிறார்கள். விமலும் காவியுடையில் ஒரு ஆசிரமத்தில் தங்கி இருக்கிறான். அவன் ஆன்மீகத்தில் சிறிதும் நாட்டமில்லாதவன். அவனுக்கு இப்படி ஒரு ஆசிரமத்தில் தங்கி வாழ்வது சிறை வாழ்க்கையைப் போல் கொடுமை தான். அதிலும் அவனுடைய காவியுடையைப் பார்த்து விட்டு, உடனிருக்கும் ஆட்கள் அவனிடம் ஆன்மீக விஷயங்களை ஆட்கள் மணிக்கணக்கில் பேச ஆரம்பிப்பது சித்திரவதை தான். ஆனால் உயிருடன் பதுங்கி இருக்க இதைப் போன்ற ஒரு இடம் பாதுகாப்பானது என்று அவனே தேர்ந்தெடுத்து இருப்பதால் இதையெல்லாம் அவன் தாங்கித்தானாக வேண்டியிருக்கிறது.

 

தனிமையில் இருக்கையில் அவன் ஆர்வமாக தமிழ்நாட்டுச் செய்திகளை இணையத்தில் படித்துக் கொண்டிருக்கிறான். அதிலும் நர்மதாவின் கொலை பற்றிப் புதிய தகவல் ஏதாவது இருக்கின்றதா என்று அடிக்கடி பார்க்கிறான். கொலையாளி என்று எவனாவது பிடிபட்டாலோ, இல்லை தற்கொலை என்று வழக்கு முடித்து வைக்கப்பட்டாலோ அவன் நிம்மதியாக தமிழகம் திரும்பலாம்.  ஆனால் இரண்டுமில்லாத சூழல் தான் அங்கு நிலவுகிறது.

 

பத்திரிக்கைகளும், சமூக வலைத்தளங்களும் அடுத்த பரபரப்பான நிகழ்வு வரும் வரை இந்த விஷயத்தை வைத்துத் தான் பிழைப்பு நடத்த வேண்டும் என்பதால் எந்த முடிவுக்கும் மக்களை வர விடாமல், குழப்பமான பல முரண்பட்ட தகவல்களை மாறி மாறித் தந்து கொண்டிருக்கின்றன.  தற்கொலை தான் என்று ஒரு கோஷ்டியும், கொலை தான் என்று ஒரு கோஷ்டியும் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தன.

 

பூட்டிய வீட்டுக்குள் மரணம் நிகழ்ந்திருக்கின்றது, பூட்டு உடைக்கப்பட்டதற்கு எந்த அறிகுறியும் இல்லை என்பதே தற்கொலை கோஷ்டியின் முக்கிய வாதமாக இருந்தது. வீட்டிலிருந்து எதுவும் திருட்டுப் போனதாகத் தெரியவில்லை, விலையுயர்ந்த பொருள்களும் அப்படியே தான் இருக்கின்றன என்பது அவர்களுடைய அடுத்த வாதம். நர்மதாவின் தங்கை கள்ளச்சாவியைப் பற்றி சரியான சந்தேகத்தை எழுப்பி இருந்தாலும், கூடவே விமலைப் பிடித்து விசாரிக்கிறபடி விசாரித்தால் உண்மை தெரியும் என்று சொன்னது அவன் வயிற்றைக் கலக்கியது. எல்லாம் அவனுடைய நேரம்! வீட்டின் கள்ளச்சாவி கொலைகாரனிடம் இருக்கிறது என்பதையும், வீட்டிலுள்ள விலையுயர்ந்த பொருள்களின் மொத்த மதிப்பு குற்றவாளிக்குப் பிச்சைக்காசு என்பதையும் விமல் போலீசில் பிடிபட்டாலும் சத்தமாகச் சொல்ல முடியாது.

 

அந்தப் பிச்சைக் காசிலும் சிறிது தான் விமல் நர்மதாவைக் கேட்கச் சொன்னான். அது கூட ஆற்றில் இருந்து ஒரு சொம்பு தண்ணீர் எடுப்பது போலத் தான். அது அவளுடைய உயிரைப் பறிக்கும் என்பது தெரிந்திருந்தால் அவன் அப்படிச் சொல்லியிருக்க மாட்டான். ஏனென்றால் அவள் தான் அவனுடைய ஏ.டி.எம் மெஷின். அவளை இழப்பது அவனுக்கு வாழ்வாதாரத்தையே இழப்பது போல் தான். அவன் கணக்கு தவறி விட்டதால். அவன் வாழ்வாதாரத்தை இழந்தது மட்டுமல்ல, உயிருக்கே ஆபத்தான நிலையில் இருக்கிறான். பணம் கேட்கச் சொன்னவன் அவன் தான் என்ற சிறிய சந்தேகம் எதிர்தரப்பிற்கு வந்தால் கூட, அவன் கண்டுபிடிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அவன் பிணம் கங்கையில் மிதக்கும் வாய்ப்பு உண்டு.

 

நர்மதா கொலை செய்யப்பட்டிருக்கிறாள் என்று சந்தேகப்படும் பத்திரிக்கைகளும் ஊடகங்களும் அவனைத் தான் முதலில் சந்தேகிக்கிறார்கள். அவன் தலைமறைவானது அவர்கள் சந்தேகத்திற்கு வலு சேர்ப்பதாக இருக்கிறது. ஒரு பத்திரிக்கை அவள் கடைசியாக அழைத்துப் பேசியது அவனிடம் தான் என்பதை கொட்டை எழுத்தில் தனிச்செய்தியாக வெளியிட்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அவள் இறந்த பின்னும் அவளை அலைபேசியில் அழைத்திருக்கும் நபரும் அவன் தான் என்பதையும் சொல்லியிருந்தது. முந்தைய நாள் பேசியதில் அவர்களுக்குள் சண்டை வந்திருக்கலாம் என்றும், அவன் கொன்று விட்டு, அவன் மீது பழி விழாமல் இருக்க, விஷயம் தெரியாதவனைப் போல், அவன் காலையிலும் அவளை அலைபேசியில் அழைத்திருக்கக் கூடும் என்றும் தன் யூகத்தை எழுதியிருந்தது. விமலுக்கு அதைப் படிக்கும் போதே மனம் பதைத்தது.  பாவிகள் எப்படி மனசாட்சி இல்லாமல் தங்கள் இஷ்டத்திற்கு எழுதுகிறார்கள்?

 

விடிவெள்ளி என்ற பத்திரிக்கை நர்மதா இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு ஒரு நகைக்கடையில் நகை வாங்கியதைக் குறிப்பிட்டு, தற்கொலை செய்து கொள்ளப் போகிறவள் நகை வாங்குவாளா என்ற கேள்வியையும் எழுப்பி இருந்தது. அதற்குப் பதில் சொல்லும் வகையில் ஒரு ஊடகம் ஒரு உளவியல் நிபுணரைப் பேட்டி எடுத்து வெளியிட்டது.

 

அதில் அதே கேள்வி அந்த உளவியல் நிபுணரிடம் கேட்கப்பட்டிருந்தது. “சமீபத்தில் நடிகை நர்மதா தற்கொலை செய்துகிட்ட செய்தியை நீங்களும் கேள்விப்பட்டிருப்பீங்க. அவங்க தற்கொலைக்கு இரண்டு நாள் முன்னாடி நகைக்கடையில் நகை வாங்கியிருக்காங்க. அது ஒரு முரண்பாடாய் இருக்குன்னு சில பத்திரிக்கைச் செய்திகள் வந்திருப்பதையும் பார்த்திருப்பீங்க. இதில் உளவியல் நிபுணரான உங்கள் கருத்து என்ன?”

 

அந்த உளவியல் நிபுணர் பதிலளித்திருந்தார்.  தற்கொலைங்கறதே பல சமயங்கள்ல திடீர்னு எடுக்கற முடிவு தான். திடீர்னு அவங்க ஒரு கணத்தில் ஆழமாய் உணர்கிற மன அழுத்தமும், விரக்தியும்  தற்கொலைக்கு அவங்கள தூண்டறதாயிருக்கும். அந்த ஒரு நிமிஷத்துல அவங்க அதைச் செயல்படுத்தாமல் கடந்துட்டா தற்கொலை செஞ்சுக்காமல் தப்பிக்கும் வாய்ப்பு உண்டு. அதனால தற்கொலை செய்துகிட்டவங்க ரெண்டு நாள் முன்னாடி சந்தோஷமா இருந்தாங்க, முந்தின நாள் சிரிச்சாங்கன்னு எல்லாம் சொல்றதுல அர்த்தமில்லை.”

 

தொடரும் விசாரணை குறித்த செய்திகளில் அவனைப் பற்றி வந்த செய்திகளை அவன் கவனமாகப் படித்தான். அவன் நடித்த தொலைக்காட்சித் தொடர்களைப் பற்றி எழுதியிருந்தார்கள். அவனுக்கும் நர்மதாவுக்கும் இடையே இருந்த நெருக்கத்தைப் பற்றி எழுதியிருந்தார்கள். இப்போது அவனுக்கு நடிக்கும் வாய்ப்புகள் இல்லை என்றும் எழுதியிருந்தார்கள். அவன் அவளிடம் பணம் கேட்டுத் தொந்தரவு செய்திருக்கலாம் என்றும், அவள் மறுத்து இருக்கலாம் என்றும், அதனால் அவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டு இருக்கலாம் என்றும்…. அவன் அதற்கு மேல் படிக்கவில்லை. பழியை அவன் மேல் போட்டாலும் அதை நம்ப மக்கள் மனதைத் தயார் செய்து விட்டார்கள். மொத்தத்தில் தலைக்கு மேல் தொங்கும் கத்தி போல் தான் அவனுடைய பரிதாபகரமான நிலைமை….

 

அவனுக்குத் தெரிந்து இதுவரைக்கும் யாரும் அவனைப் பின் தொடர்ந்து வரவில்லை. இப்போது வரை அவன் கண்காணிக்கப்படவும் இல்லை.  அவன் ஊரிலிருந்து கிளம்பும் போதே அலைபேசியில் இருந்துசிம்மைக் கழற்றி சாக்கடையில் வீசி விட்டு வந்திருக்கிறான். தெரிந்த யாரையுமே அவன் இது வரை அழைத்துப் பேசவில்லை. இனி பேசப்போவதுமில்லை. அவன் வங்கிக் கணக்கில் இரண்டு லட்சத்து சொச்ச ரூபாய் இருக்கிறது. அதை அவன் எடுப்பது அவன் இருப்பிடத்தை அவர்களுக்குக் காட்டிக் கொடுத்து விடும் என்பதால் அதையும் அவன் எடுக்கப் போவதில்லை. ரொக்கமாக அவனிடம் ஒன்றே முக்கால் லட்சம் ரூபாய் இருக்கின்றது. இந்த ஆசிரமத்தில் பத்தாயிரம் கட்டி விட்டால் ஒரு வருடத்திற்குத் தங்கிக் கொள்ளலாம். உணவு இலவசம் தான் என்பதால் அவனுக்கு வேறு செலவு எதுவுமில்லை.  

 

ஒரே பிரச்சினை என்ன என்றால், அவன் அசைவப்பிரியன். ஆசிரமத்திலோ சைவ உணவு  தான் சாப்பிடக் கிடைக்கிறது. அதுவும் புளி, காரம் எதுவுமில்லாமல் மிகவும் சப்பென்று தான் இருக்கிறது. இதையே தொடர்ந்து சாப்பிட்டால் நாக்கு செத்து விடும். ஆங்கில கூச்சல் இசையும், நடனமும் அவனுக்கு மிகவும் பிடிக்கும். இங்கோ பஜனை பாட வேண்டியிருக்கிறது. பக்தி சொற்பொழிவுகள் கேட்க வேண்டியிருக்கிறது. அத்தனையும் அவன் பொறுத்துக் கொண்டு அங்கே இருக்கிறான். காரணம் அவன் உயிரோடு இருக்க ஆசைப்படுகிறான்.

 

தமிழ்நாட்டுச் செய்திகளை மடிக்கணினியில் பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு தொலைக்காட்சியில் ஒரு பேட்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. பேட்டி எடுக்கப்படும் நபரைப் பார்த்தவுடன் விமலின் இரத்தம் கொதித்தது. அந்த ஆள் தான் நர்மதாவின் கொலைக்குக் காரணமானவன்.

 

பார்ப்பவர்களுக்கு அவன் மிக அமைதியாகவும், நாகரிகமாகவும், உத்தமனாகவும் தெரிந்தான். கொலைகாரச் சுவடு அவனிடம் சிறிதும் தெரியவில்லை. யாருமே அவனிடம் நர்மதாவைப் பற்றிக் கேள்வி கூடக் கேட்டு விடமுடியாது. அப்படிக் கேட்பதே அபத்தமாக அனைவருக்கும் தோன்றும். அப்படியே கேட்டாலும், ’யாரிடம் போய், யாரைப் பற்றிக் கேட்கிறாய்என்று மக்கள் பாய்வார்கள். மிக வலிமையான, பாதுகாப்பான இடத்தில் இருக்கும் அந்த நபர் காமிராவைப் பார்த்துப் புன்னகைத்தான். விமலுக்கு அந்த நபர் அவனையே பார்த்துப் புன்னகைப்பது போலிருக்க,  இரத்தம் உறைந்தது.  


(தொடரும்)

என்.கணேசன்





No comments:

Post a Comment