தடியர்கள் இறுக்கப் பிடித்துக் கொண்ட போதும், கண்ணன் கருப்புத் துணியால் கண்களைக் கட்டிய போதும் ஷ்ரவன் திமிறாமல் அமைதியாக இருந்தது பாண்டியனுக்கு ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக இது போன்ற சமயங்களில் எதிர்த்து எதையும் சாதிக்கப் போவதில்லை என்றாலும், முடிந்த அளவில் எதிர்ப்பை வெளிக்காட்டுவது தான் மனித இயல்பு. அவன் நிஜமாகவே ஒரு புதிர் தான் என்று பாண்டியனுக்குத் தோன்றியது.
ஷ்ரவன் அமைதியாகச் சொன்னான். “நான் உங்களைத்
தப்பு சொல்ல மாட்டேன் ஜி. உங்கள் நிலைமை எனக்குப் புரிகிறது. நீங்கள்
உங்கள் மந்திரவாதியை நம்புகிறீர்கள். அதனால் நான் சொல்வதை
நம்ப உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறது. பரவாயில்லை. உண்மை எப்படியானாலும்
வெளிவந்து தானே ஆக வேண்டும். உங்கள் மந்திரவாதி இங்கே நேரில் வந்து, முறையாக
அவர் சோதித்துப் பார்க்கும் போது நான் சொல்வது உண்மையென்று உங்களுக்கு விளங்கும். நானும்
அதற்குள் என்னால் முடிந்த முயற்சிகளைச் செய்து பார்க்கிறேன். என்னிடம்
இயல்பாக இருக்கும் அந்தச் சக்திகளை முழுவதுமாக உபயோகித்து உங்கள் எதிரியைப் பற்றி முழுவிவரங்களையும், அவன் எங்கே
இருக்கிறான் என்பதையும் தெரிந்து கொண்டு உங்களுக்குத் தெரிவிக்க முயற்சிக்கறேன்.”
பாண்டியன் சொன்னார். “நல்லது”. எதிர்ப்பில்லாமல்
அவனைப் பிடித்து அடைக்க முடியும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அவன் சொல்வதைப்
பார்த்தால் தேவானந்தகிரி கணிப்பில் எப்படியோ தவறு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று தான்
பாண்டியனுக்குத் தோன்றியது. இருந்தாலும் உண்மை வெளிப்படும் வரை அவன் வெளியே போக முடியாமல்
இருப்பது தான் நல்லது.
பாண்டியன் தலையசைக்க ஷ்ரவனை கண்ணனும், அந்தத் தடியர்களும் அழைத்துக் கொண்டு போனார்கள். ஷ்ரவன் அவனை அவர்கள் வெளியே அழைத்துப் போனால் கல்பனானந்தா பார்க்கும் வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்த்தான். கண்களைக் கட்டி அழைத்துப் போவதால் அவன் பிடிபட்டு விட்டதை அவள் அறிந்து கொள்வாள் என்று எண்ணினான். ஆனால் அவர்கள் பாண்டியன் இருப்பிடத்தின் மாடிப்பகுதிக்கு அழைத்துப் போய் பின் பகுதியில் இறங்கி ஒரு பாதாள அறைக்கு அவனை அழைத்துப் போனார்கள். இடையில் ஏதோ ஒரு ரகசியக் கதவு இருக்கலாம் என்று ஷ்ரவன் யூகித்தான். இல்லா விட்டால் அவன் கண்களைக் கட்ட அவசியம் இருக்கவில்லை…
பாதாள அறைக்குப் போனவுடன் அவனுடைய கண்கட்டை கண்ணன் அவிழ்த்து
விட்டார். பாதாள
அறை பெரிதாக இருந்தது. அங்கே ஒரு பக்கச் சுவரில் நிறைய இரும்புக்
கொக்கிகள், வளையங்கள் இருந்தன. இரும்புச்
சங்கிலிகள், கயிறுகள் எல்லாமும் இருந்தன. வழக்கமாய் அவர்கள் சிறைப்பிடிக்கும் ஆட்களை அங்கே தான் அடைத்து வைப்பார்கள்
போல் இருந்தது. சுமார் பத்து ஆட்களை அவர்கள் அங்கே கட்டி வைக்கலாம்.
இரண்டு கட்டில்கள், இரண்டு மர பெஞ்சுகள்,
நான்கு பிளாஸ்டிக் நாற்காலிகள், இரண்டு மின்விசிறிகள்
இருந்தன. அறையின் வலது
கோடியில் கழிப்பறை ஒன்று இருந்தது.
கண்ணன் ஷ்ரவனிடம் உணர்ச்சியே இல்லாத குரலில் சொன்னார். ”உன் மீது எங்களுக்கு ஏற்பட்டிருக்கும்
சந்தேகம் இன்னும் உறுதிப்பட்டு விடவில்லை என்பதால் உன்னை நாங்கள் இங்கே கட்டிப் போட
விரும்பவில்லை. இங்கே
கண்காணிப்பு காமிராக்கள் இருக்கின்றன.
நீ என்ன செய்தாலும் அது எங்களுக்குத் தெரியும். உன்னை நாங்கள் கண்காணித்துக் கொண்டே இருப்போம். ஏதாவது
கலாட்டா செய்தாலோ, தப்பிக்க முயற்சி செய்தாலோ உடனடியாக வந்து
உன்னைக் கட்டிப்போட்டு விடுவோம். அதனால் பிரச்சினை எதுவும் செய்யாமல்
அமைதியாக இருப்பது உனக்குத் தான் நல்லது. நீ எங்கள் எதிரி அல்ல என்றால், நீ சொன்னது போல் உன் விசேஷ
சக்தியால் எங்கள் எதிரியைக் கண்டுபிடித்துச் சொல். உடனடியாய்
உன்னை விடுவிக்கிறோம். இல்லை, நீ தான் எங்கள்
எதிரி என்று எங்களுக்கு உறுதியானால் நீ இனி வெளியுலகத்தைப் பார்க்கவே முடியாது.”
ஷ்ரவன் கண்ணனிடம் கேட்டான். “எனக்கு ஒரே ஒரு உதவி செய்ய முடியுமா?”
“என்ன?”
“நான் கண்டிப்பாக உங்கள் எதிரியைக் கண்டுபிடித்துக் கொடுப்பேன். அதற்கு அதிகபட்சமாய் எனக்கு இரண்டு நாள்களுக்கு மேல் தேவைப்படாது. ஆனால் என்னால் என்னேரமும் அதையே செய்து கொண்டு இருக்க முடியாது. இடையே நான் மனதைத் திருப்ப எனக்கு சில புத்தகங்கள் படிக்கத் தர முடியுமா?
புத்தகங்கள் எதுவானாலும் சரி…”
“கேட்டுச் சொல்கிறேன்.”
அவரும் அந்தத் தடியர்களும் அறை மூலையில் இருந்த படிகள் ஏறிப்
போய் மேலே இருந்த கதவைத் தாளிடும் சத்தம் கேட்டது.
பிரம்மானந்தாவுக்கு அன்றைய காலைப் பொழுது இனிதாக இருக்கவில்லை. தியானத்தின் பயன்கள் குறித்த ஒரு சொற்பொழிவை அவர் ஒரு பெரிய அரங்கத்தில் நிகழ்த்தச் சென்றிருந்தார். இதற்கு அவருக்கு கல்பனானந்தாவின் குறிப்புகள் கூடத் தேவையிருக்கவில்லை. பேச நிறைய விஷயங்கள் இருக்கின்றன. பேசிப் பேசிப் பலதும் அவருக்கு மனப்பாடமே ஆகியிருந்ததால் அவர் சீரான நீர்வீழ்ச்சி போல் அழகாகப் பேசியும் இருந்தார். சுமார் ஆயிரத்தைத் தாண்டிய எண்ணிக்கையில் ஆட்கள் வந்திருந்தார்கள். அவர் பேச்சை முடித்த போது கைத்தட்டலால் அந்த அரங்கமே அதிர்ந்தது. அவருக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தாலும் அதை அவர் வெளியே காட்டவில்லை. இதெல்லாம் எனக்கு சர்வசகஜம் என்பது போல் அவர் காட்டிக் கொண்டார்.
அதன் பின் பார்வையாளர்கள் கேள்வி கேட்க அனுமதிக்கப்பட்டது. அப்போது தான் ஒரு பெண் அதிகப்பிரசங்கித்தனமாய்,
“உங்கள் குரு பத்மநாப நம்பூதிரி பற்றிச் சொல்லுங்களேன்” என்று சொன்னாள். ’போடி லூசு’ என்று
மனதில் வசை பாடி அலட்சியமாய் அந்தப் பெண்ணைப் பார்த்து விட்டு அவர் அந்தப் பக்கம் திரும்பிய
போது அவரைக் காப்பாற்றுவது போல் அடுத்த கேள்வியை ஒரு முதியவர் கேட்டார். “தியானங்களில் சிறந்த தியானம் எது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் யோகிஜி?”
பிரம்மானந்தா அதற்கு விரிவான பதில் சொல்ல ஆரம்பித்தார். சற்று முன் அவருக்குப் பிடிக்காத
கேள்வி கேட்ட பெண் சிறிது நேரம் நின்று பார்த்து விட்டு உட்கார்ந்து விட்டாள்.
ஆனாலும் அப்போது அவர் இழந்த மன அமைதி யோகாலயம் திரும்பி வரும் வரைக்கும்
அவருக்குத் திரும்பக் கிடைக்கவில்லை. இந்தக் கூட்டத்தில் யாராவது
ஒரு கிறுக்கன் அல்லது கிறுக்கி அந்தப் பெண் கேட்டதை வீடியோ எடுத்து, “ஒரு கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல் யோகி பிரம்மானந்தா திணறல்” என்று யூட்யூபில் போட்டு விட வாய்ப்பு இருக்கிறது. அதிகப்பிரசங்கிகள்
ஓரிருவர் அல்ல ஏராளம் பேர் இருக்கிறார்கள்.
அவர் பத்மநாப நம்பூதிரியை வெற்றிகரமாய் இருட்டடிப்பு செய்து
பல வருடங்கள் முடிந்து விட்டன.
பத்மநாப நம்பூதிரியும் சாகும் வரை அவரைத் தொந்தரவு செய்யவில்லை.
யோகம், தியானம் இரண்டையும் அதிகபட்ச
ஆட்களிடம் பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர, தன் பெயரை எல்லா
இடங்களிலும் ஸ்தாபிதம் செய்யும் உத்தேசம் பத்மநாப நம்பூதிரிக்கு இருக்கவில்லை. அது
பிரம்மானந்தாவுக்கு வசதியாகப் போய் விட்டது.
அவர் கோரக்கரையும், பதஞ்சலியையும், சுந்தரமகாலிங்கத்தையும் தவிர வேறு யாரையும் தன் குருவாக இப்பொதெல்லாம் சொல்வதில்லை.
அப்படி இருக்கையில் இது போன்ற அதிகப்பிரசங்கிகள் அவ்வப்போது கொசுக்களாய்
வந்து தொந்தரவு செய்கிறார்கள். அவர் அத்தனை நன்றாகப் பேசியதைப்
பற்றி எல்லாம் பேசாமல், அந்தப் பெண்ணின் கேள்விக்குப் பதில் சொல்லாமல்
நழுவியதை மட்டுமே பிரதானப்படுத்தி இன்னொரு ஒரு கொசு அவரைக் கேலி, கிண்டல் செய்யும் வாய்ப்பு உண்டு…
பாண்டியன் அவரைச் சந்திக்க வந்த போது அவர் முகம் கடுத்திருப்பதைக்
கவனித்தார். எத்தனை தான் எதையும் பொருட்படுத்தாத
மனிதராய் பிரம்மானந்தா வெளியிடங்களில் நடித்தாலும், யோகாலயம் வந்தவுடன் அதை எண்ணிக் குமுறுவது அடிக்கடி
நடப்பது தான்.
தேவானந்தகிரி அனுப்பிய செய்தியை பாண்டியன் பிரம்மானந்தாவிடம்
சுருக்கமாகச் சொன்னார். பிரம்மானந்தா அதிர்ந்து போனார். கொசுக்கள் மறக்கப்பட்டார்கள்.
ஷ்ரவன் என்ற கொரில்லா பிரதானமானான். அவர் படபடப்புடன்
கேட்டார். ”நீ என்ன நினைக்கிறாய் பாண்டியன்?”
“என்ன நினைப்பது என்றே தெரியவில்லை யோகிஜி. அவன் சொல்வதும்
சரியாகத் தான் தெரிகிறது. அவர் எச்சரித்ததையும் என்னால் அலட்சியப்படுத்த
முடியவில்லை. அதனால் முன்னெச்சரிக்கையாக நான் அவனைச் சிறைப்படுத்தி
விட்டேன்.” என்ற அவர், நடந்ததையெல்லாம்
பிரம்மானந்தாவிடம் சொன்னார். பின் முடிவில் சொன்னார். “இரண்டு நாளில் எதிரியைக் கண்டுபிடித்துச் சொல்வதாய் அவன் சொல்லியிருக்கிறான்.
பார்ப்போம். அவனுக்கு உயிர் பிழைக்கும் யோகம் இருந்தால்
சொல்லட்டும்.”


What's going to happen in 2days? Will manthra meditation help him? Thanks.
ReplyDelete