இருவரும் பரபரப்புடன் தொலைக்காட்சிச் செய்திகளைப் பார்த்தார்கள். நர்மதாவின் தங்கை ஆஸ்திரேலியாவிலிருந்து பேசுவது ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. ஒரு தொலைக்காட்சி எப்படியோ அவளைத் தொடர்பு கொண்டு தொலைபேசி வழியாக அவளைப் பேட்டி எடுத்து, பேட்டியின் ஒலிப்பதிவை வெளியிட்டிருந்தது.
“உங்க அக்கா நர்மதா தற்கொலை செய்து கொண்டதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க.”
“நர்மதா தற்கொலை செய்துகிட்டதா நான் நம்பலை. அவளை நல்லாத்
தெரிஞ்ச யாருமே நம்ப மாட்டாங்க. அவள் தற்கொலை செய்துக்கறதா இருந்தா,
ரெண்டு வருஷத்துக்கு முன்னால் சினிமா வாய்ப்புகள் நின்னு போனப்பவே செய்துகிட்டிருக்கணும்.
அப்பவே தற்கொலை செய்துக்காதவள் இப்ப ஏன் தற்கொலை செய்துக்கணும்?”
“தற்கொலை செய்துக்கறதா அவங்க ஒரு கடிதம் எழுதி வெச்சிருக்காங்க. அது மட்டுமில்லாமல் அவங்க பூட்டியிருந்த பூட்டையோ, கதவையோ
யாரும் உடைச்சு திறந்த மாதிரி தெரியல.”
”அந்த தற்கொலைக் கடிதம் அவள் எழுதினதே கிடையாது. அதுல
கையெழுத்து கொஞ்சம் மாறியிருக்கறதா நிபுணர்களே சொல்லியிருக்காங்க. அதுக்குக் காரணம் அவளோட வலது கட்டை விரல் நுனியில் இருக்கற காயம்னு போலீஸ்
சொல்றதை என்னால ஏற்றுக்க முடியல. வேலைக்காரி கிட்ட சாவிகள்
இருந்திருக்கு. அந்த சாவிகளை வேலைக்காரி
சேஃப்டி லாக்கர்லயா வெச்சிருப்பா. அதுல இருந்து ஒரு டூப்ளிகேட்
சாவி செய்யறது கொலைகாரனுக்குக் கஷ்டமான வேலையா?”
“வீட்டுல இருந்து விலையுயர்ந்த பொருள்கள் எதுவும் திருட்டுப் போகலைன்னு போலீஸ்
சொல்லியிருக்காங்களே?”
“அதை எப்படி போலீஸ் உறுதியாய் சொல்ல முடியும். வீட்டுல
என்னென்ன விலையுயர்ந்த பொருள் இருந்திருக்குன்னு அவங்க கிட்ட எதாவது பட்டியல் இருக்கா?
அதை வெச்சி அவங்க சரி பார்த்தாங்களா? அப்படியே
திருட்டுப் போகலைன்னே வெச்சுக்குவோம். திருட்டு ஒன்னு தான் கொலைக்குக்
காரணமாய் இருந்திருக்கணுமா?”
”நீங்க சந்தேகப்படற மாதிரி யாராவது கொன்னுருந்தா என்ன காரணமாயிருக்கும்னு நீங்க
நினைக்கிறீங்க?”
“அதைப் போலீஸ் தான் கண்டுபிடிக்கணும்.”
“நர்மதாவுக்கு எதிரிகள் யாராவது இருக்காங்களா? அது பற்றி
அவங்க உங்க கிட்ட எதாவது எப்போதாவது சொல்லியிருக்காங்களா?”
“எனக்குத் தெரிஞ்சு அவளுக்கு எதிரிகள்னு சொல்லிக்கற மாதிரி யாரும் இல்லை.
அவள் என்கிட்ட யாரையும் சொன்னதுமில்லை. ஆனாலும் எதிரிகள் யாராவது
இருந்திருக்கணும். இல்லாமல் இந்தக் கொலை நடந்திருக்க வாய்ப்பு
இல்லை.”
“உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கா?”
“அவளுக்கு விமல்னு ஒரு பாய் ஃப்ரண்ட் இருந்தான். அவள்
செத்தவுடனே அவன் தலைமறைவாயிருக்கான். அதுவே எனக்கு சந்தேகமாயிருக்கு.
அவனைக் கண்டுபிடிச்சு விசாரிக்கற முறையில விசாரிச்சா உண்மை தெரியவரும்னு
நான் நினைக்கிறேன்.”
“நீங்களும், உங்க அக்கா நர்மதாவும் ரொம்ப நெருக்கமாய்
இருந்தீங்களா?”
“அப்படியெல்லாம் கிடையாது. அவள் மனசிருந்தால் வாரத்துக்கொரு
முறை பேசுவா. மனசில்லாட்டி வருஷமேயானாலும் பேச மாட்டா.
ரொம்ப நாளாச்சேன்னு நானா கூப்பிட்டாலும் சரியா பேச மாட்டா. அந்த அளவுல தான் எங்க நெருக்கம்
இருந்துச்சு. ஆனாலும் அவள் கொலை செய்யப்பட்டதை என்னால்
தாங்க முடியல.”
“தமிழ்நாட்டு போலீஸ் உங்களைத் தொடர்பு கொண்டு பேசினாங்களா? நீங்க உங்க சந்தேகங்களை அவங்க கிட்ட சொன்னீங்களா?”
“அவங்க பேசினாங்க. நானும் என் சந்தேகங்களை அவங்க கிட்டே
சொன்னேன்.”
“பொறுமையாய் எங்களுடைய கேள்விகளுக்குப் பதில் சொன்னீங்க. ரொம்ப நன்றி”
“நன்றி”
பேட்டியைக் கேட்டு முடித்தவுடன் அர்ஜுன் கீதாவிடம் கேட்டான். “நீ என்ன நினைக்கிறாய்?”
“நர்மதா தங்கை தெளிவா தான் பேசியிருக்கா.”
அர்ஜுன் சொன்னான்.
“முக்கியமா நர்மதா கிட்ட தாராளமாய் பணப்புழக்கம் இருந்துருக்கு.
நான் விசாரிச்ச வரைக்கும் அவளோட வரவு செலவெல்லாம் ரொக்கத்துல தான் இருந்துருக்கு.
நூறு இருநூறு ரூபாயைக் கூட டிஜிட்டல்ல செலவு பண்ண ஆரம்பிச்சிருக்கிற
இந்தக் காலத்துல, கடைசியா வாங்கின வைர நகையைக் கூட அவ ரொக்கத்துல தான் வாங்கியிருக்கா. சினிமா வாய்ப்புகள் சுத்தமா
நின்னு போன நர்மதாவுக்கு எப்படி அவ்வளவு பணம் கிடைச்சிகிட்டிருந்துக்குன்னு தெரியல…”
”நீ இதைப்
பற்றியெல்லாம் பத்திரிக்கைல எழுதியிருந்ததை நான் காலைல படிச்சேன். இந்தப்
பணவரவைப் பற்றி வேற யாரும் எழுதியிருக்கலை. அதே மாதிரி
தற்கொலை பண்ணிச் சாகற அளவு விரக்தியில் இருக்கறவ வைர நகை வாங்குவாளான்னும் கேட்டிருந்தாய். பார்க்கலாம்
இதுக்கெல்லாம் என்ன பதில் வருதுன்னு...”
அதில் முதல் கேள்விக்கு பதில் மாலையில்
வந்தது. நர்மதாவின்
தற்கொலை வழக்கின் விசாரணை அதிகாரி மதுசூதன் நிருபர்களின் கேள்விகளுக்குப்
பதில் அளித்தார்.
“நர்மதாவின்
தங்கை இது கொலை தான் என்று உறுதியாகச் சொல்கிறாரே?”
“அவர் தன்
தரப்பு சந்தேகங்களைச் சொல்லியிருக்கிறார். இந்த விசாரணையில்
அவருடைய சந்தேகங்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு இருக்கிறோம். நர்மதாவின்
வேலைக்காரியிடம் அவரிடமிருந்த சாவி மூலம் நர்மதாவின் வீட்டுச் சாவிக்கு கள்ளச் சாவி
யாராவது தயாரித்திருக்க வாய்ப்பிருக்கிறதா என்று விசாரித்தோம். அதற்கு
வாய்ப்பே இல்லை என்று தீவிரமாக அவர் மறுத்திருக்கிறார். தினமும்
அந்தச் சாவியை அவருடைய வீட்டில் உள்ள பீரோவின் உள்ளே வைத்து பூட்டி விடுவதாகவும், மறுநாள்
வேலைக்குச் செல்லும் போது தான் அதை எடுத்துக் கொண்டு போவதாகவும் தெரிவித்தார். அப்படியே
கள்ளச்சாவி இருந்திருக்கக்கூடும் என்று எடுத்துக் கொண்டாலும் கூட,
அப்படிச் செய்தவர் யார், அவருக்கும் நர்மதாவுக்கும்
இடையே உள்ள பகை என்ன என்பதைத் தெளிவுபடுத்தாமல் வெறுமனே சந்தேகப்படுவதில் அர்த்தமில்லை
என்றே நினைக்கிறேன்.”
“நர்மதாவின் ஆண் நம்பர் விமல் என்பவரைப் பிடித்து விசாரித்தால் உண்மை வெளியாகலாம்
என்று நர்மதாவின் சகோதரி சொல்கிறாரே?”
“நர்மதா கடைசியாகப் பேசியது விமலிடம் தான் என்பதால் அந்தப் பேச்சு குறித்த விவரங்களை
அறிய அவரைத் தேடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர் எங்கே சென்றார்
என்று தெரியவில்லை. நர்மதாவின் வீட்டின் கள்ளச்சாவி அவரிடமும்
இருந்திருக்கலாம் என்ற கோணத்திலும் கூட விசாரித்து வருகிறோம். அவரை விசாரிக்க முடிந்தால் மட்டுமே அதுகுறித்த உண்மையைத் தெரிந்து கொள்ள முடியும்.”
“நர்மதாவிடம் பணப்புழக்கம் இருந்து வந்தது, அவர் விலை
உயர்ந்த பொருள்களையும் சமீப காலங்களில் ரொக்கம் தந்தே வாங்கினார் என்றும் சொல்கிறார்களே,
அதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?”
“ஒரு காலத்தில் பிரபல நடிகையாக இருந்த அவரிடம் கருப்புப் பணம் நிறைய இருந்திருக்கக்கூடும்.
அதை இப்போது எடுத்து அவர் செலவு செய்து கொண்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது….”
“தற்கொலை செய்து கொள்ளப் போகிறவர் வைர நகை வாங்குவாரா என்ற கேள்வி கூடச் சிலரால்
எழுப்பப்படுகிறதே?”
“இதற்குப் பதிலை உளவியல் வல்லுனர்கள் சொல்வது தான் சரியாக இருக்கும்.”
ப்ரேம் மதுசூதனின் பேட்டியைப் பார்த்துக்
கொண்டிருந்தான். நிருபர்களின் கேள்விகளை மதுசூதன் கச்சிதமாகக் கையாண்டதாகத் தான் அவனுக்குத்
தோன்றியது.
நர்மதாவின் தங்கையின் பேட்டி அவன் சற்றும் எதிர்பார்த்திருக்காத
ஒன்று. நர்மதா
உயிரோடு இருந்த வரை தங்கையுடன் அதிகமாகத் தொடர்பில் இருக்கவில்லை. அதை அந்தத் தங்கையே ஒப்புக் கொண்டாலும் தேவையில்லாமல் தன் சந்தேகத்தை எழுப்பி
குட்டையைக் குழப்புகிறாள்…
அவளைப் போலவே வில்லங்கமான கேள்விகளை எல்லாம் எழுப்பும் அர்ஜுன்
மீது அவனுக்கு எரிச்சலாக இருந்தது.
ஆனால் அர்ஜுன் பெரிய வீட்டுப் பிள்ளை. அவன் வாயை
அடைப்பது சுலபத்தில் முடிகிற காரியமல்ல. சகித்துத் தானாக வேண்டும்.
தற்கொலை செய்யப் போகிறவள் வைர நகையை விரும்பி வாங்குவாளா என்ற அவன் கேள்விக்குப்
பதில் சொல்ல ஒரு உளவியல் நிபுணர் ப்ரேமுக்கு அவசரமாகத் தேவைப்படுகிறார். அது ஒரு பிரச்னையில்லை. இரண்டு நாளில் ஒரு நிபுணரிடம்
பேட்டி எடுத்து வெளியிட்டு விடலாம்…
விமல் தொடர்ந்து தலைமறைவாக இருப்பது இதுபோன்ற சூழலில் நல்லது
தான். தொடர்ந்து
பிரச்சினையாகி, கடைசியில் கொலை தான் என்று ஒத்துக் கொள்ள வேண்டி
வந்தால், அந்தக் குற்றத்தை அவன் மீது சுமத்தி விடலாம்.
தவறு செய்யாதவன் ஏன் தலைமறைவாக வேண்டும்?
ப்ரேம் புன்னகைத்தான்.
(தொடரும்)
என்.கணேசன்


Many thanks
ReplyDelete