என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, April 16, 2026

சதுரங்கம் 14


 நித்யாவுக்கு அறிமுகமில்லாத எண்ணிலிருந்து வாட்சப் தகவல் வந்தது. “தேங்க்ஸ் நித்யாகீதா


புன்னகையுடன் கீதாவின் எண்ணை அலைபேசியில் சேமித்து வைத்துக் கொண்ட அவளுக்கு, பின் தான் கீதா நன்றி தெரிவித்தது எதற்காக  இருக்கும் என்பது உறைத்தது. காதலைத் தெரிவிக்கச் சென்ற அண்ணன், தங்கை சொன்னதையுமா சேர்த்துச் சொல்வான்! “ஐயே என்னம்மா உன் மகன் மத்த விஷயத்துல எல்லாம் அபார அறிவாளியா இருந்தாலும் காதல் விஷயத்துல இப்படி தத்தியா இருக்கான்.”

 

நித்யாவுக்கு அம்மாவின் முகத்தில் தெரிந்த உணர்ச்சிகளைப் படிக்க முடியவில்லை. ஏதோ உடல் உபாதையால் கஷ்டப்படுவது போல் பானுமதி முகத்தில் வேதனை ரேகைகள் தோன்றி மறைந்தன. அம்மா நித்யாவை பல நேரங்களில் ஆச்சரியப்படுத்தியிருக்கிறாள். அம்மா இன்னது தான் நினைக்கிறாள் என்பதையோ, அம்மாவிடம் பேசும் விஷயங்களில் எந்த விஷயங்கள் அம்மாவைப் பாதிக்கின்றன என்பதையோ நித்யாவால் இன்னமும் யூகிக்க முடிவதில்லை. இப்போது மகனுடைய காதல் விஷயம் பற்றிப் பேசினால் அம்மாவின் முகம் ஏனிப்படி மாறுகிறது என்று அவளுக்குத் தெரியவில்லை.

 

வெல்கம் அண்ணிநித்யாஎன்று குறும்பாக கீதாவுக்கு மறுமொழி அனுப்பி விட்டு அம்மாவிடம் கேட்டாள். “நீ உன் மருமகள் பற்றி என்ன நினைக்கிறே?”

 

யார் என் மருமகள்?” பானுமதி கேட்டாள்.

 

உண்மையாவே உனக்குத் தெரியலையா,. இல்லை தெரியாத மாதிரி என் கிட்ட நீ நடிக்கிறியா?”

 

எனக்கு உங்க மாதிரி அறிவில்லைடி. அதனால தெரியாம தான் கேட்கறேன்.”

 

அண்ணா அவனோட பிறந்த நாளுக்கு ஒரு பொண்ணை வரச் சொல்லி இருந்தானே. அந்தப் பொண்ணு தான். பெயர் கீதா.”

 

அவ கிட்ட நான் எங்கேடி பேசினேன். நீ தான அவ கிட்ட பேசிகிட்டு இருந்தே?”

 

அது தான் உன் பிரச்சனையே. யார் கிட்டயும் நீ பேசறதில்லை. வீட்லயே கூட அதிகமா என் கிட்ட மட்டும் தான் பேசறே, அதுவும் நான் அடிக்கடி வம்பிழுக்கறதால தான் நீ என் கிட்டேயும் பேசறே.”

 

நல்ல வேளை வம்பிழுக்கிறாய்னு ஒத்துகிட்டே.”

 

அப்பறம் என்ன. வீடுன்னா கலகலன்னு இருக்கணும். கொஞ்சம் சுவாரசியமான பேச்சு, கொஞ்சம் சண்டை, கொஞ்சம் வம்பு, கொஞ்சம் சிரிப்புன்னு எல்லாம் கலந்து இருக்கணும்.”

 

அதுக்கெல்லாம் நீ ஒருத்தியே போதும்.”

 

அப்படி பொறுப்பைத் தட்டிக் கழிக்கக் கூடாது. எத்தனை காலம் எல்லாப் பொறுப்பையும் நான் ஒருத்தியே சுமக்கிறது? நான் கல்யாணமாகி வேறொரு வீட்டுக்குப் போகப்போகிறவ. ஞாபகம் இருக்கட்டும்.”

 

பானுமதி மகளின் பேச்சை ரசித்து, பொய்க்கோபத்துடன் முறைத்து விட்டு சமையலறைக்குச் சென்றாள். அவள் போன பின் தான் கீதா பற்றிய அபிப்பிராயம் கேட்டதற்கு அம்மா பதிலளிக்கவில்லை என்ற நினைவு நித்யாவுக்கு வந்தது. நினைக்குமளவுக்கு அம்மா வெகுளி இல்லையோ? வேண்டுமென்றே திட்டமிட்டு இப்படித் தப்பிக்கிறாளோ? ஆனால் பின்னாலேயே தொடர்ந்து சமையலறைக்குச் சென்றால் அம்மா ஏதாவது வேலை கொடுத்து விடும் அபாயம் இருக்கிறது என்பதால் அங்கே போய் அதே கேள்வியைக் கேட்பதை நித்யா தவிர்த்தாள்.

 

யோசித்தால், உண்மையில் அம்மா ஒரு தீவு போலத் தான். குடும்பத்தினர் தவிர அவளுக்கென்று நெருக்கமானவர்கள் கிடையாது. தாய்வீட்டுப் பக்கம் எந்த உறவும் கிடையாது. அவளுடைய பெற்றோர் எப்போதோ காலமாகி விட்டார்கள். வேறு உறவினர்களும் அவளுக்குக் கிடையாது. அவளுக்குச் சினேகிதிகளும் கிடையாது. அக்கம் பக்கத்தில் கூட அவள் யாரிடமும் நாலைந்து வார்த்தைகளுக்கு மேல் பேசுவது கிடையாதுவீட்டிலேயே கூட நித்யா தான் அதிகமாக அவளுடன் பேசுபவள். ஞானமூர்த்தியுடனும், அர்ஜுனுடனும் பேசுவது அளவாகத் தான். அடுத்தபடியாக பானுமதியுடன் அதிகம் பேசுபவள் ராஜாராமின் மனைவி மைதிலி. அவளும் நேரில் வந்து அதிகமாகப் பேசுபவள் அல்ல என்றாலும் அலைபேசியில் அழைத்து நன்றாகப் பேசுவாள். ஓரகத்திகள் இருவரும் அதிகமாகப் பேசிக் கொள்வதும் மாமியார் யசோதாவைப் பற்றித் தான் என்பதையும் நித்யா கண்டுபிடித்திருக்கிறாள். இரண்டு மருமகள்களுக்கும் மாமியார் யசோதாவைப் பிடிக்காதுநித்யா புன்னகைத்தாள். குடும்ப அரசியல்… 

 

ராஜாராமின் அந்தரங்க அலைபேசி இசைத்தது. குடும்பத்தினரும், அவருக்கு மிக முக்கியமானவர்களும் மட்டுமே அந்த எண்ணில் அழைப்பார்கள். அந்த அலைபேசி இசைத்தால் மட்டுமே அவர் உடனடியாக எடுத்துப் பேசுவார். மற்ற பொது அலைபேசி இசைத்தால் அவர் மனமிருந்தால் பேசுவார். இல்லா விட்டால் பேசமாட்டார். அழைத்தது யார் என்றறியும் சிரமத்தையும் அவர் அதிகமாக எடுத்துக் கொள்வதில்லை. அந்த அலைபேசியை கையில் எடுக்கும் போது ஒட்டுமொத்தமாகப் பார்த்துக் கொள்வார். அவ்வளவு தான். தேவை இருப்பவர் மறுபடி அழைத்துப் பேச வேண்டும். அடுத்த முறையும், அழைத்துப் பேசுபவருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அவர் பதிலளிக்கக்கூடும். ஆனால் அதுவும் நிச்சயமில்லை. தமிழக அரசியலை, பின்னாலிருந்து இயக்கும் பிதாமகரிடம் காரியம் ஆக வேண்டியவர்கள் பலர் இருக்கிறார்கள். அனைவரையும் உடனுக்குடன் கவனிப்பது அவருக்கு முடிந்த காரியமல்ல.

 

அழைப்பது யாரென்று ராஜாராம் பார்த்தார். அர்ஜுன். அலைபேசியை எடுத்துப் பேசினார். “ஹலோ

 

சித்தப்பா எப்ப வந்தீங்க?”

 

ரெண்டு மணி நேரம் ஆச்சுடா. என்னடா அதிசயமா போன் செஞ்சிருக்கே. என்ன விஷயம்?”

 

சித்தப்பா. எங்க பத்திரிக்கைல தாத்தாவோட நூற்றாண்டு சம்பந்தமா சிறப்புக் கட்டுரை எழுதச் சொல்லியிருக்காங்க. முக்கியமா குடும்பத்தினர் எல்லாரையும் பேட்டி எடுத்து  அவர் சம்பந்தமான சுவாரசியமான விஷயங்களை எல்லாம் எடுத்து எழுதச் சொல்லியிருக்காங்க. உங்க கிட்டயும், பாட்டி கிட்டயும் பேட்டி எடுக்கணும். எப்ப வரட்டும்?”

 

அண்ணா கிட்ட பேட்டி எடுத்திட்டியாடா?”

 

இல்லை. இன்னைக்கு ஏழு மணிக்கு.”

 

ஞானமூர்த்தியின் நேரம் தவறாமை பிரசித்தமானது. அவரும் அதைக் கடைப்பிடிப்பார். அவரிடம் பழகுபவர்களிடமும் அதை எதிர்பார்ப்பார். சொன்ன நேரத்தில் வராதவர்களைப் பொறுத்துக் கொள்ள மாட்டார். எத்தனை பெரிய மனிதர்களானாலும், நெருங்கியவர்களானாலும் அவரிடம் அதற்கு விதிவிலக்கை எதிர்பார்க்க முடியாது. அதனால் அர்ஜுன் ஏழு மணிக்கு என்று நேரத்தோடு சொன்னதைக் கேட்டு ராஜாராம் புன்னகைத்தார்.

 

சரி. நாளைக்கு வர்றியாடா? மத்தியானம் சாப்பாட்டுக்கே வாயேன்.”

 

சரி சித்தப்பா. உங்க ஆக்ஸ்ஃபோர்டு பயணம் எல்லாம் எப்படி இருந்துச்சு சித்தப்பா

 

சிறப்பா இருந்ததுடா.”

 

பாட்டி சித்தி எல்லாம் சௌக்கியம் தானே சித்தப்பா?”

 

சௌக்கியம் தான்

 

சரி அப்ப நான் காலைல பதினோரு மணிக்கு வந்தா சரியா இருக்குமா சித்தப்பா?”

 

சரியாயிருக்கும் வாடா?”

 

சரி சித்தப்பா. நாளைக்கு பார்ப்போம்.”

 

மகன் அலைபேசியைக் கீழே வைத்தவுடன் யசோதா கேட்டாள். ”யாரு அர்ஜுனா?”

 

ஆமாம்மா

 

என்னவாம்?”

 

அப்பா பத்தின ஒரு சிறப்புக் கட்டுரையை அவன் கிட்ட எழுதச் சொல்லியிருக்காங்களாம். அதுக்கு உன் கிட்டயும், என் கிட்டயும் பேட்டி எடுக்கணுமாம். நாளைக்கு வரச் சொல்லியிருக்கேன்.”

 

யசோதா மௌனமாகத் தலையசைத்தபடி மகனைத் தீர்க்கமான பார்வை பார்த்தாள். ராஜாராமும் தாயைப் பார்த்தார். தாயும் பிள்ளையும் பார்வையிலேயே பேசிக் கொண்டது போல், அதைப் பார்த்துக் கொண்டிருந்த மைதிலிக்குத் தோன்றியது. இந்தக் குடும்பத்தில் பல ரகசியங்கள் இருப்பது போலவும், அது அவளுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்பது போலவும் அவளுக்குப் பல முறை தோன்றியிருக்கிறது. இருவருமே ரகசியங்களைக் காப்பதில் கில்லாடிகள். அழுத்தக்காரர்கள்.

 

தமிழகமே போற்றும் அவளுடைய மாமனார் வாசுதேவனின் மூத்த பிள்ளை என்று எல்லோரும் எண்ணிக் கொண்டிருக்கிற ஞானமூர்த்தி, உண்மையில் அவருடைய வளர்ப்புப் பிள்ளை என்ற உண்மையே அவளுக்குத் திருமணம் ஆகிப் பல ஆண்டுகள் கழித்துத் தான் தெரிய வந்தது. அதையும் கூட, அழுத்தக்காரியான மாமியார் மூத்த பிள்ளை வீட்டிலும் சிறிது காலம் இருந்து விட்டு வரலாமே என்று அவள் ராஜாராமைப் பல காலம் நச்சரித்த பின் தான் ராஜாராம் அந்த உண்மையைச் சொல்லி மனைவியின் வாயை அடைத்தார்.

 

அது போல வேறு ரகசியங்களும் இந்தக் குடும்பத்தில் இருப்பதாக அவளுக்குத் தோன்றியிருக்கிறது. ஆனால் யசோதா, ராஜாராம், ஞானமூர்த்தி மூவருமே அழுத்தக்காரர்கள். அவர்களிடமிருந்து யாரும் அந்த ரகசியங்களைத் தெரிந்து கொள்ள வழியில்லை…! 

(தொடரும்)

என்.கணேசன்




2 comments: