என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, November 24, 2025

யோகி 131


ஷ்ரவன் எதிரிகளை அவன் வகுத்த பாதையில் ஓட விட்டிருக்கிறான். அவனுடைய வேலையை இப்போது அவர்களுடைய வேலையாக அவன் மாற்றியிருக்கிறான். நிஜ யோகியை இனி அவர்களும் தேட ஆரம்பிப்பார்கள். சைத்ரா மட்டுமல்லாமல் கல்பனானந்தாவும் பார்த்திருக்கும் நிஜ யோகி கிடைத்தால், எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கிடைத்து விடும் என்பது நிச்சயமில்லை. ஆனால் அவர் கிடைப்பதன் மூலம் இப்போதிருக்கும் பல குழப்பங்கள் தெளியும் என்பது நிச்சயம்.

 

ஆரம்பத்தில், நிஜ யோகியைப் பற்றி இளைஞனான அவன் எதாவது பேசினால், அவர்களும் இரண்டையும் சம்பந்தப்படுத்திப் பார்த்தால், அவனுடைய அடையாளம் வெளிப்பட்டு விடலாம் அல்லது அவன் மீது அவர்களுக்கு சந்தேகம் எழுந்து விடலாம் என்ற பயம் அவனுக்கு இருந்தது. இப்போது அவனுடைய அபூர்வ சக்தி மீது அவனை விட அவர்களுக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டு விட்டதால், அவனால் இந்த ஆபத்தான செயலில் ஈடுபட முடிந்திருக்கிறது. இப்போது அவனல்லாத வேறு ஒரு இளைஞனை அவர்களே எதிரியாக கண்டுபிடித்து விட்டது போல் ஆகி விட்டது. அவர்கள் அந்த இளைஞனின் புகைப்படத்தைக் காட்டி ஷ்ரவனிடம் உறுதிப்படுத்திக் கொள்ளும் நிலைமை வந்திருக்கிறது. அந்த இளைஞன் நிஜ யோகியைத் தேடுவதும் அவர்களுக்கு ஏற்கெனவே தெரிந்த உண்மை. அதனால் அவர் காலடி மண் பற்றியும், விசேஷ பூஜை பற்றியும் சொல்லி நிறுத்திக் கொண்டான்.

 

யோகாலயம் வருவதற்கு முன் அவன் படித்த, மாந்திரீகம் குறித்த ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில், யோகி, சித்தர்களின் காலடி மண்ணை, செய்வினை, பில்லி சூனியம் ஆகியவற்றிலிருந்து காப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ளும் வழிபாட்டு முறைகள் பற்றி எழுதியிருந்ததைப் படித்திருந்தான். இந்தியா, திபெத், எகிப்து போன்ற நாடுகளில் இந்த வழிமுறைகள் இருக்கின்றன என்று அந்த ஆராய்ச்சியாளர் எழுதியிருந்தார். அப்படியானால் அதைக் கண்டிப்பாக  தேவானந்தகிரியும் அறிந்திருக்க வேண்டும். அதனால் தான் அவன் யோகியின் காலடி மண், பூஜை என்று சொல்லி நிறுத்திக் கொண்டான். இரண்டும், இரண்டும் என்று சொல்லி அவன் நிறுத்திக் கொண்டால் நான்கு என்ற பதிலை அவர்களுக்குக் கணிதம் தெரியா விட்டாலும், தெரிந்தவரோடு பேசி எட்டி விடுவார்கள் என்று அவன் கணக்கிட்டான். அதன்படியே அவர்கள் அவன் சொன்னதை வைத்து தேவானந்தகிரியிடம் பேசி அந்த முடிவை எட்டி விட்டார்கள். செய்வினையிலிருந்து தப்பிக்கப் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் அவர்கள் இந்த மிகப்பெரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளத் தவற மாட்டார்கள் என்று அவன் கணக்கிட்டது சரியாகப் போய் விட்டது.

 

அடுத்ததாய் மோகன் ராவுக்குப் பதிலாய் அந்த வேலையை யாரிடம் ஒப்படைப்பது என்ற தீவிர ஆலோசனையில் ஷ்ரவன் இறங்கினான். அவன் ஏற்றுக் கொள்ளும் ஆபத்தான, ரகசியமான வேலைகளில் மிக மிகக் குறைவான எண்ணிக்கையில் உள்ள ஆட்களையே அவன் நம்பினான். ஒவ்வொரு வேலைக்கு ஒவ்வொருவர் என்று அவர்களுடைனேயே அவன் எப்போதும் ஒரு குழுவாகச் செயல்பட்டவன். அவர்களுடைய அரசுத் துறையில் எத்தனையோ வல்லுனர்கள் இருந்தாலும் அவன் அவர்களுடைய உதவியை நாடியது கிடையாது. காரணம், அவர்கள் திறமைக்கு இணையாக நேர்மை இருக்கிறதா என்பதை அவன் தனிப்பட்ட முறையில் சோதித்துத் தெளிந்து கொண்டதில்லை. மோகன் ராவ் போன்ற அவன் குழு ஆட்கள் முன்பே அவனால் சோதிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் அவன் தன்னை நம்பும் அளவுக்கே முழுமையாக நம்பினான். அதனால் இப்போது மோகன் ராவை இந்த வேலையில் ஈடுபடுத்த முடியாததை  அவன் கையுடைந்ததைப் போல உணர்ந்தான்.

 

ராவ் வரும் வரை அவனால் காத்திருக்க முடியாது. அவனுக்கு முழு நம்பிக்கை இல்லாதவர்களிடம் அவனால் இந்த வேலையை ஒப்படைக்கவும் முடியாது. காரணம் யோகாலயத்திற்கு எதிரான எதாவது தகவல்களைக் கண்டுபிடிக்கும் திறமைசாலிகள், கண்டுபிடித்ததை அவனிடம் சொல்வதற்குப் பதிலாக யோகாலயத்திடம் சொல்லி, அதை அவர்களுக்கு விற்று, பல கோடிகள் சம்பாதித்து விட முடியும். அது அவர்களுடைய பேரம் பேசும் சாமர்த்தியத்தைப் பொறுத்தது.

 

ஆயிரங்களில் விலை போகாதவர்கள், இலட்சங்களில் விலை போகலாம். இலட்சங்களில் விலை போகாதவர்கள். கோடிகளில் விலை போகலாம். சில கோடிகளில் விலை போகாதவர்கள், பல கோடிகளில் விலை போகலாம். ஒரே ஒரு முறை நேர்மை தவறினால், பின் வாழ்நாள் முழுதும் வேலை எதுவும் செய்யாமல் ஆடம்பரமாய் வாழ முடியும் என்றால் எத்தனை நேர்மையாளர்கள் மிஞ்சுவார்கள் என்பது கேள்விக்குறியே. அதனால் பல கோடிகளுக்கும் விலை போகாதவர் என்று அவன் நம்பி இந்த வேலையை யாரிடம் தருவது என்ற பெருங்குழப்பத்தில் ஷ்ரவன் இருந்தான். திறமையும் நேர்மையும் சேர்ந்து உச்சத்தில் இருக்கும்படியான, ராவுக்கு நிகரான நபரை இங்கிருந்து கொண்டு அவன் எப்படித் தேடுவது?

 

நீண்ட நேரம் யோசித்துச் சலித்த போது தான் அவனுக்கு ஸ்ரேயாவின் நினைவு வந்தது. அவளும் கம்ப்யூட்டர் சயன்ஸ் படித்தவள். அவளுடைய வேலையும் கிட்டத்தட்ட அவன் வேலை சார்ந்ததே. கூடுதலாக சூட்சும உள்ளுணர்வும் இருக்க வேண்டும். அதுவும் அவளிடம் இருக்கிறது. அவளிடம் கொடுத்தால் என்ன? அவளும் இந்த வழக்கில் ஏதாவது வேலை செய்யும் ஆவலை அன்று சொல்லியிருக்கிறாள்அலுவலக வேலை வேறு, இது போன்ற துப்பறியும் வேலை வேறு…. இருந்தாலும் ஆர்வம் இருந்தால் இந்த வேலையும் அவளுக்கு முடியாதது அல்ல. நேர்மை விஷயத்தில், அவளை அவன் தனக்கு நிகராக நம்பினான். அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை.   

 

மறுநாள் காலை சித்தானந்தா குளிக்கச் சென்றிருக்கும் போது ஷ்ரவன் அவசர அவசரமாக ஒரு சிறிய காகிதத்தில் எதோ ஒரு அலைபேசி எண்ணை எழுதுவதை முக்தானந்தா கவனித்தார். அவர் அவனிடம் எதையும் கேட்கவில்லை. சித்தானந்தா காய்ச்சல் குணமாகி அறைக்குத் திரும்பி வந்ததிலிருந்தே அவர் முன்பு போலவே மாறி விட்டிருந்தார். சித்தானந்தா முன்னிலையில் அவர் ஷ்ரவனிடம் மிக அபூர்வமாகவே பேசினார். அப்படி எதாவது பேசியதும் ஓரிரு வார்த்தைகளுக்கு உள்ளாகவே இருந்தது. ஷ்ரவனும் முக்தானந்தாவிடம் நெருக்கமாகி விட்டதை வெளிக் காட்டவில்லை.   

 

ஷ்ரவன் அந்தச் சிறிய காகிதத்தை மறைத்து வைத்துக் கொண்டு காலையில் தோட்ட வேலைக்குப் போனான். குமரேசன் தொலைவில் ஒரு பகுதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். இன்று எப்படியாவது இந்தக் காகிதத்தை அவனிடம் கொடுத்துப் பேசிவிட வேண்டும் என்று ஷ்ரவன் உறுதியாய் இருந்தான். கல்பனானந்தா அவனுக்கு எங்கே வேலையைத் தருகிறாளோ, தெரியவில்லை. யோசனையுடன் கல்பனானந்தாவை அவன் நெருங்கிய போது அவள் அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. குமரேசனை அவன் பார்த்து நின்றதைக் கவனித்திருப்பாளோ?

 

கல்பனானந்தா அவனுக்கு குமரேசன் வேலை பார்த்துக் கொண்டிருந்த இடத்திற்கு சுமார் நூறடி தள்ளி இருந்த தோட்டத்திலேயே வேலையை ஒதுக்கினாள். அவன் தேவையைப் புரிந்து கொண்டு அந்த வேலையை ஒதுக்குகினாளா, இல்லை தற்செயலாக ஒதுக்கினாளா என்று அவனுக்குப் புரியவில்லை. ஒருவேளை தெரிந்தே அதைச் செய்தாள் என்றால், நேற்று வரை கூடுதல் உதவி எதுவும் செய்யத் தயாராக இருக்காத அவளுடைய  மனமாற்றத்திற்கு எதாவது காரணம் இருக்க வேண்டும். “நன்றி சுவாமினிஎன்று ஆத்மார்த்தமாக அவன் சொன்ன போது அவள் புன்னகையுடன் தலையசைத்தாள்.

 

குமரேசன் ஷ்ரவன் வருவதைக் கவனித்தான். அருகிலிருக்கும் கண்காணிப்பாளன் யார் என்பதைப் பார்த்தான். இருபதடி தள்ளி நின்று கொண்டு எதிர்ப்பக்கம் பார்த்துக் கொண்டிருந்த அந்தக் கண்காணிப்பாளன் மிகவும் கூர்மையான பார்வை உடையவன் என்பது குமரேசனின் அனுபவம். ஷ்ரவனுக்கு எச்சரிக்க வேண்டியதேயில்லை. அவன் கவனமாகத் தான் இருப்பான்குமரேசன் தன் வேலையை அமைதியாய் பார்க்க ஆரம்பித்தான்.

 

ஷ்ரவனும் அருகிலிருந்த தோட்டத்தில் தன் வேலையைச் செய்ய ஆரம்பித்தான். களைகளைப் பிடுங்கிப் போட்டவன், கண்காணிப்பாளன் வேறு ஒரு பக்கத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, களைகளோடு சேர்ந்து அந்தச் சிறிய காகிதத்தையும் போட்டான். அதை குமரேசன் கவனித்தான்.

 

கண்காணிப்பாளன் வேறொரு துறவியை நோக்கி நடப்பதைப் பார்த்து அவன் அவசரமாக ஷ்ரவன் போட்ட களைகளை எடுக்க வந்தான்.  ஷ்ரவன் வேலை பார்த்துக் கொண்டே குமரேசனிடம் சொன்னான். “இது ஸ்ரேயாவின் போன் நம்பர். அவ கிட்டே இந்த வேலையை ஒப்படைக்கலாம்னு நினைக்கிறேன். நம்ம அவசியம் என்னங்கறத மட்டும் ராகவன் சார் அவ கிட்ட சொன்னால் போதும்…”

 

ஷ்ரவன் சற்று தள்ளி உள்ள செடிகளைப் பராமரிக்கப் போனான். குமரேசன் அந்தச் சிறிய காகிதத்தை எடுத்து அதில் உள்ள அலைபேசி எண்ணை மனப்பாடம் செய்து கொண்டிருக்கையில் பின்னாலிருந்து கண்காணிப்பாளன் குரல் பின்னால் இருந்து கேட்டது. ”என்ன காகிதம் அது?”

 

(தொடரும்)

என்.கணேசன்





2 comments:

  1. Achoo, check vechiteengale!

    Have to wait one week., uuhhh

    ReplyDelete