சின்ஹரன் பத்ரசாலிடம் சொன்னான். “நான் முன்பே சொன்னபடி ராக்ஷசர்
போர் முடியும் வரை அமைதியாகத் தான் இருப்பார். போர் முடிந்த பின் தான் அவர் இந்த விஷயத்தைக்
கிளறுவார். நண்பரே, அதனால் அந்தச் சமயத்தில் ராக்ஷசரை விடவும் சக்தியும் அதிகாரமும்
வாய்ந்த ஒருவரின் பாதுகாப்பு வளையத்தில் நீங்கள் இருந்தால் உங்களுக்குப் பிரச்சினை
ஏற்பட வாய்ப்பில்லை அல்லவா?”
பத்ரசால் கவலையுடன்
சொன்னான். ”ராக்ஷசரை விட அதிக அதிகாரம் இருப்பவர் மன்னர் தான். ஆனால் அவர் ராக்ஷசர்
சொல்வதை தேவ வாக்காக எடுத்துக் கொள்பவர்.”
“நீங்கள் தனநந்தனை
மன்னனாகக் கணக்கில் எடுத்துக் கொண்டு சொல்கிறீர்கள். ஆனால் போர் முடிந்த பின் தனநந்தன்
மன்னனாக இருக்கப் போவதில்லை”
சின்ஹரன் சொன்னதைக்
கேட்டதும் பத்ரசாலுக்குத் தூக்கிவாரிப் போட்டது. “என்ன சொல்கிறீர்கள் நண்பரே?” என்று
திகைப்போடு கேட்டான்.
சின்ஹரன் சொல்வதா
வேண்டாமா என்று யோசிப்பவன் போல பாவனை காட்டினான். பத்ரசால் சிறிது படபடப்புடன் சொன்னான்.
“தயவு செய்து வெளிப்படையாகச் சொல்லுங்கள். ஏனப்படி சொல்கிறீர்கள்?”
சின்ஹரன் மிக ரகசியமான
தகவலைப் பகிர்ந்து கொள்பவன் போலத் தாழ்ந்த குரலில் சொன்னான். “நண்பரே. எங்களுக்கு மகாசக்தி
வாய்ந்த ஒரு மகானைத் தெரியும். அவர் சொல்லும் வாக்கு எதுவும் இது வரை பொய்த்ததில்லை.
நாங்கள் முக்கியமாக எது செய்வதானாலும் அவர் ஆலோசனையைக் கேட்டு விட்டுத் தான் செய்வோம்.
அவர் இந்தப் போருக்குப் பின் மகத அரியணையில் தனநந்தன் அமரப் போவதில்லை என்று எங்களிடம்
சொல்லி இருக்கிறார்”
பத்ரசாலுக்கு சின்ஹரன்
அளவுக்கு அந்த மகானின் வார்த்தைகளை நம்ப முடியவில்லை. இப்படி யாரோ ஒருவர் சொல்கிறார்
என்றால் அப்படியே நடக்கும் என்று எப்படி இவர்களால் நம்ப முடிகிறது என்று அவன் ஆச்சரியப்பட்டான்.
அதைப் புரிந்து
கொண்டவன் போல சின்ஹரன் சொன்னான். “உங்கள் ஆச்சரியம் எனக்குப் புரிகிறது நண்பா. நாங்களும்
அந்த மகான் சந்திரகுப்தன் வாஹிக் பிரதேச மன்னனாக வருவான் என்று ஆரம்பத்தில் சொன்ன போது
சந்தேகப்பட்டோம். எந்தப் பின்புலமும் இல்லாத ஒரு சாதாரண மாணவன் சக்தி வாய்ந்த யவனர்களைத்
துரத்தியடித்து எப்படி மன்னனாக முடியும் என்று எண்ணினோம். அது நடந்தது. யவன சக்கரவர்த்தி
அலெக்ஸாண்டர் அற்பாயுசில் இறந்து போய் விடுவான். சொந்த ஊருக்குப் போகும் வழியிலேயே
அது நடந்து விடும் என்றார். அதையும் எங்களால் நம்ப முடியவில்லை. ஏனென்றால் அலெக்ஸாண்டர்
திடகாத்திரமாக இருந்தான். இளமையும், ஆரோக்கியமும் இருக்கும் அவன் எப்படி அற்பாயுசில்
சாவான் என்று சந்தேகப்பட்டோம்.. அந்த மகான் சொன்னபடியே தான் நடந்தது. இப்படி எத்தனையோ
சொல்லிக் கொண்டு போகலாம். எதையும் அவர் சொல்கிற போது நடக்க முடியாத சூழ்நிலைகளே பெரும்பாலும்
இருந்தன. ஆனால் பின் எல்லாம் மாறி அவர் சொன்னபடியே நடக்க ஆரம்பித்த பிறகு எங்களுக்கு
அவர் சொல்வதில் சந்தேகமே வருவதில்லை...”
பத்ரசாலுக்கு அதைக்
கேட்ட பிறகு மெல்ல சந்தேகம் தெளிந்தது. சந்திரகுப்தன்
அரசனாவான் என்றும் அலெக்ஸாண்டர் அற்பாயுசில் இறந்து போவான் என்றும் முன்கூட்டியே சொல்லியிருந்தால்
அந்த மகான் மிகவும் சக்தி வாய்ந்தவராகத் தான் இருக்க வேண்டும். ஆனால்....
சந்தேகமும், திகைப்பும்
கலந்த தொனியில் கேட்டான். “அப்படியானால் இந்தப் போரில் நாங்கள் தோற்று விடுவோம் என்று
அவர் சொல்கிறாரா?”
சின்ஹரன் சொன்னான்.
“தோற்று விடுவீர்கள் என்று அவர் சொல்லவில்லை. உங்கள் எல்லைப் பகுதிகள் சிலவற்றை எதிரிகள்
கைப்பற்றி விடுவார்கள் என்று சொன்னார். உங்கள் மன்னரின் மனநிலை மோசமாகிக் கொண்டே போய்
கடைசியில் போருக்குப் பின் மன்னர் முடிதுறந்து மகனை அரசனாக்கி வனப்பிரஸ்தம் சென்று
விடுவார் என்று சொன்னார்.”
பத்ரசால் யோசித்தான்.
தனநந்தனின் மனநிலை மோசமாகிக் கொண்டே வருவதைப் பற்றி அரண்மனையில் பணிபுரிபவர்களே தாழ்ந்த
குரலில் பேச ஆரம்பித்து விட்டார்கள். அவன் அந்த நிதி களவு போனதிலிருந்து சில நேரங்களில்
சரியாக இருந்தாலும் பல நேரங்களில் பைத்தியம் பிடித்தவன் போலத் தான் நடந்து கொள்கிறான்....
பத்ரசால் சொன்னான்.
“ஆனால் சுகேஷ் அரசனானாலும் அவனும் ராக்ஷசரின் கைப்பாவையாகத் தான் இருப்பான். அவன்
தனியாக முடிவெடுக்க முடிந்தவனோ, உறுதியானவனோ அல்ல.”
“நான் இளவரசன் சுகேஷைச்
சொல்லவில்லை. சுதானுவைச் சொன்னேன் நண்பரே”
பத்ரசால் குழப்பத்துடன்
கேட்டான். “மூத்தவனான சுகேஷைத் தானே பட்டத்து இளவரசனாக அறிவிக்கப் போவதாகப் பேசிக்
கொண்டிருக்கிறார்கள்?”
“அது நடக்கப் போவதில்லை
நண்பா. நடக்கவிருக்கும் போர் நிறைய பழைய கணக்குகளைப் பொய்யாக்கப் போகிறது. அந்தச் சமயத்தில்
நீங்கள் எதிர்பார்க்காதது எல்லாம் நடக்கப் போகிறது.”
சுதானு கோபக்காரனானாலும்
சுதேஷை விடத் துடிப்பும், வேகமும், உறுதியும் கொண்டவன். யாருக்கும் அடங்க மறுப்பவன்.
அவன் அரசனானால் தனநந்தன் அளவுக்கு ராக்ஷசருக்கு முக்கியத்துவம் தர மாட்டான். ...
பத்ரசால் தயக்கத்துடன்
சொன்னான். “சுதானுவுடன் நான் நெருங்கிய நட்பில் இல்லை. அதனால் அவன் எனக்கு ஆதரவாய்
இருப்பான் என்பது நிச்சயமில்லை...”
“நட்பு என்பது எப்போதும்
நாம் ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது நண்பரே. சென்ற வருடம் நீங்களும் நானும் அன்னியர்களாக
இருந்தோம். ஆனால் இன்று நாம் நெருங்கிய நண்பர்களாகி விடவில்லையா. உங்களுக்குப் பிரச்னை
வரப்போகிறது என்று தெரிந்தவுடன் நான் எந்த ஆபத்தையும் பொருட்படுத்தாமல் உங்களுக்குத்
தெரிவிக்கவும், உதவவும் ஓடி வரவில்லையா? அதனால் நீங்கள் மெல்ல சுதானுவுடன் நட்பை ஏற்படுத்திக்
கொள்ள ஆரம்பியுங்கள்....”
பத்ரசால் மெல்லத்
தலையசைத்தான். சுதானுவும் சீக்கிரம் நட்பை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தவன் அல்ல. அவனுக்கு
வரும் திடீர் கோபங்கள் அரண்மனை வளாகத்தில் மிகவும் பிரசித்தம். இப்போதும் தனநந்தனிடமே
அடிக்கடி சண்டையிடுபவன் அவன் ஒருவனே.
அவன் தயக்கத்தை உணர்ந்தவன் போல் சின்ஹரன் தாழ்ந்த குரலில் சொன்னான். “நண்பரே. சுதானுவும் அந்த மகானின் பக்தனே. அவனும் அவரை மிகவும் நம்புகிறான். அவரைப் பற்றிப் பேசியே நீங்கள் அவனிடம் சீக்கிரமாகவே நெருக்கமாகி விட முடியும்….”
கூடவே
எப்படி அதைச் செய்ய வேண்டும் என்பதையும் சின்ஹரன் விவரித்துச் சொல்லவே பத்ரசால் எல்லாவற்றையும்
முன்கூட்டியே யோசிக்க முடிந்த நண்பனின் புத்திசாலித்தனத்தை எண்ணி வியந்தான். இவன் யோசித்து
இருக்காத விஷயமே இருக்காது போலிருக்கிறதே…
சின்ஹரன்
இயல்பாய் தெரிந்து கொள்ள விரும்புபவன் போல கேட்டான். “நண்பரே. இந்தப் போரில் நீங்கள்
எங்கே இருப்பீர்கள்? தலைநகரிலேயே இருப்பீர்களா? இல்லை வெளியே சென்று விடுவீர்களா?”
பத்ரசால்
சொன்னான். “சரியாகத் தெரியவில்லை நண்பரே. நிலவரம் பார்த்துப் பின் முடிவு செய்யலாம்
என்று தீர்மானித்திருக்கிறோம்.”
தலையசைத்தபடி
சின்ஹரன் சொன்னான். “அதுவும் நல்லது தான் நண்பரே. அது தீர்மானமாகும் வரை என்ன நடந்தாலும்
உங்களுக்கு உதவ நான் பாடலிபுத்திரத்திலேயே மறைவாய் இருக்கிறேன். வேண்டிய நேரத்தில்
வந்து விடுவேன். இனி நான் அதிக நேரம் இங்கே தங்கினால் அது தேவையில்லாத கேள்விகளை எழுப்பிவிடும்.
அதனால் விடைபெறுகிறேன் நண்பரே.”
சின்ஹரன்
விடைபெற்றான்.
மறுநாள் பத்ரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பிரிவுகளை
எல்லைப் பகுதிகளுக்கு அனுப்பும் வேலையில் ஈடுபட்டிருக்கையில் ராக்ஷசர் முன் தினம்
போலவே வந்து சிறிது நேரம் மேற்பார்வை பார்த்து விட்டுப் போய் விட்டார். அவர் எதுவும்
சொல்லவில்லை என்றாலும் குதிரை மாற்ற விவகாரத்தை அவர் அறிந்து விட்டார் என்ற நினைவே
பத்ரசாலுக்கு நெருடலாக இருந்தது. இந்தப் பாழாய்ப் போன போர் எழுந்திருக்கா விட்டால்
ராக்ஷசருக்கு இந்த விவகாரம் தெரிய வராமலேயே
இருந்திருக்கும்…
ராக்ஷசர்
சென்ற பிறகு சிறிது நேரத்தில் சுதானு அங்கே வந்தான். சுதானுவைப்
பார்த்தவுடன் பத்ரசால் நட்புடன் புன்னகைத்தான். சுதானுவும் புன்னகைத்தாலும் அவன் சிறிது
யோசித்தது போல் இருந்தது. பத்ரசால் தான் செய்து கொண்டிருந்த வேலையை தன் இரு படைத்தலைவர்களிடம்
ஒப்படைத்து விட்டு சுதானு அருகில் வந்து சின்ஹரன் சொன்னது போலவே ஆரம்பித்தான்.
“இளவரசே.
நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் என்னைப் பைத்தியக்காரன் என்று நினைக்க மாட்டீர்கள் என்று
வாக்களித்தால் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன்.”
சுதானு
சிரித்துக் கொண்டே சொன்னான். “நாம் ஒவ்வொருவரும் யாரோ ஒருவர் பார்வையில் பைத்தியக்காரர்களாகவே
இருப்போம் சேனாதிபதி. அது தவிர்க்க முடியாதது. அதனால் நான் என்ன நினைக்கிறேன் என்பதைப்
பற்றிக் கவலைப்படாமல் வெளிப்படையாகச் சொல்லுங்கள். என்ன விஷயம்?”
(தொடரும்)
என்.கணேசன்
“நாம் ஒவ்வொருவரும் யாரோ ஒருவர் பார்வையில் பைத்தியக்காரர்களாகவே இருப்போம் சேனாதிபதி. அது தவிர்க்க முடியாதது" Well said
ReplyDeleteஇன்னும் சில காலம் அவகாசம் கொடுத்தால் 'சின்ஹரன்' ஒரு ஆளே மகத அரியணையில் இருந்து தனநந்தனை இறக்கி விடுவான் போலிருக்கிறதே....
ReplyDelete