யாகசாலையின் பூட்டு உடைக்கப்படவில்லை என்பதைக் கண்டபின் நிம்மதி அடைந்த தனநந்தன் முந்தைய அவசரத்தைக் கைவிட்டு நிதானமாக ரதத்திலிருந்து இறங்கினான். தன் இடுப்பில் சொருகியிருந்த சாவியை எடுத்து சாரதியிடம் தர, சாரதி வேகமாகச் சென்று பூட்டைத் திறந்து யாகசாலைக் கதவுகளைத் திறந்து விட்டான்.
தனநந்தன் பதற்றம் நீங்கி இப்போது கம்பீர
தோரணைக்கு மாறியிருந்தான். அவனுடைய காவலன் அவனது குளியல் உடைகளை எடுத்துக் கொண்டு முன்னால்
போக அவன் கங்கையை ரசித்தபடி சிறிது நேரம் நின்று விட்டு பிறகு மெள்ள யாகசாலைக்குள்
நுழைந்தான்.
ஜீவசித்தி மனதில் எழுந்த பரபரப்பை மறைத்துக்
கொண்டு மெல்ல யாகசாலை வாயிலுக்கு நகர்ந்தான். அவன் தன்
வாழ்நாளில் நேரில் கண்டு ரசிக்க வேண்டிய முக்கிய தருணமாக இதையே நினைத்திருந்தான். இந்தக்
கணத்தில் வாழ்ந்து விட்டு அடுத்த கணமே இறந்து போனாலும் அது பெரிய விஷயமல்ல என்று அவனுக்குத்
தோன்றியது.
உள்ளே நுழைந்த போது தனநந்தனுக்கு முதலில்
யாக குண்டத்தில் எந்தப் பெரிய மாற்றமும் தெரியவில்லை. ஆனால் சற்று
முன்னால் சென்று பார்த்த போது யாக குண்டம் உடைந்திருப்பது புலப்பட்டது. அவனுக்கு
முதலில் தன் கண்களை நம்ப முடியவில்லை. பழைய பயம் எதோ காட்சிப்
பிழையை ஏற்படுத்திக் காட்டுவதாகத் தோன்றியது. அவன் கண்களைக்
கசக்கிக் கொண்டு பார்த்தான். யாக குண்டம் உடைந்திருப்பது காட்சிப்பிழை அல்ல என்பது உறுதியான
போது அவன் இதயத்தை மிகப்பெரிய பாரம் ஒன்று அழுத்த ஆரம்பித்தது.
குளியல் உடைகளைக் கையில் ஏந்திக் கொண்டு
அவன் கட்டளைக்காகக் காத்திருந்த காவலனை ஒரு கணம் வெறித்துப் பார்த்த தனநந்தன் உடைகளை
ஓரமாக வைத்து விட்டு வெளியேறும்படி சைகையால் கட்டளையிட்டான். காவலன்
வெளியேறியவுடன் அவன் விரைந்து யாக குண்டத்தின் அருகே சென்றான். யாக குண்டம்
உடைக்கப்பட்டிருந்தாலும் கவனமாக துளை பெரிதாகத் தெரியாதபடி உடைந்த பகுதிகளைக் கொண்டு
திரும்ப மூடப்பட்டிருந்தது. தனநந்தன் காலால் அவற்றை அப்புறப்படுத்த இப்போது ஒரு ஆளே நுழைய
முடிந்த அளவுக்குத் துளை பெரிதாகவே தெரிந்தது. இதயத்தை இமயம் அழுத்துவது போல் உணர்ந்த தனநந்தனுக்கு இது
கனவாகத் தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. இங்கே புதையல்
இருப்பது யாருக்குமே தெரிய வழியில்லை என்று மனம் கூவியது.
இங்கே உடைந்திருந்தாலும் சுரங்கப்பாதையின்
உள்ளே யாரும் சென்றிருக்க வழியில்லை என்று பிறகு தனநந்தன் நினைத்தான். உள்ளே இருந்த
இருட்டில் புதையல் இருப்பதை அறிந்திருக்க வழியில்லை என்று அவனுக்குத் தோன்றியது. இப்போது அவனே உள்ளே சென்று பார்க்க வேண்டுமானால் தீப்பந்தம்
ஒன்றிருந்தால் தான் பார்க்க முடியும் என்ற நிலை இருக்கையில் புதையல் இருப்பதை அறியாதவர்கள்
அதற்காக மெனக்கெட்டிருக்க மாட்டார்கள் என்று அறிவு சொன்னது. ஆனால் யாக
குண்டம் உடைந்தது எப்படி, உடைத்தது யார் என்ற கேள்விகள் அவன் மனதில் விஸ்வரூபம் எடுத்தன. அதுவும்
வெளியே பூட்டை யாரும் உடைக்காமல் அது பூட்டப்பட்ட நிலையிலேயே தொங்கிக் கொண்டிருந்ததை
நினைக்கையில் குழப்பம் மிகுந்து அவனுக்குத் தலை வெடித்து விடுவது போல் இருந்தது.
அவன் திரும்பி வாயிலைப் பார்த்தான். அவனுடைய
நம்பிக்கைக்குரிய தனிக்காவலனும், காவலர்களின் தலைவனான ஜீவசித்தியும் தெரிந்தார்கள். தனநந்தனுக்கு
நாக்கு அசைய மறுத்ததால் சைகை செய்து தன் காவலனை வரவழைத்தான். உள்ளே நுழைந்த காவலனை, சைகையால்
தூரத்திலேயே நிறுத்தி கஷ்டப்பட்டு “தீப்பந்தம் ஒன்று
கொண்டு வா” என்று சொன்னான். அவன் குரல்
மிகப் பலவீனமாக இருந்ததை அவனே உணர்ந்தான். அவனுக்கே
அது அன்னியமாகத் தெரிந்தது. அந்தக் காவலன் வெளியே வந்து ஜீவசித்தியிடம் மன்னனின் கட்டளையைச்
சொன்னான்.
ஜீவசித்தி மனதின் உள்ளே ஆனந்த ஊற்று
பெருக்கெடுக்க உடனே அதற்கு ஏற்பாடு செய்து அந்தக் காவலனிடம் தீப்பந்தத்தைத் தந்தான். காவலன்
தீப்பந்தத்துடன் உள்ளே விரைய தனநந்தன் அதைக் கையில் வாங்கிக் கொண்டு “வெளியிலேயே
நில்” என்று மெல்லிய குரலில் சொன்னான். அந்தக்
காவலனுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. உடைந்த
யாக குண்டத்தையும் மன்னனையும் குழப்பத்தோடு பார்த்து விட்டு மறுபடி வெளியே சென்று நின்று
கொண்டான்.
தனநந்தன் தீப்பந்தத்துடன் மெல்ல அந்த
சுரங்கப்படிகளில் இறங்க ஆரம்பித்தான். ஒவ்வொரு படி இறங்கும் போதும் அவன் இதயம் சம்மட்டியால் அடிப்பது
போல் சத்தமாகத் துடித்தது. கடைசிப்படியையும் கடந்த பின் அவன் இட்ட ஓலம் அந்தப் பிராந்தியத்தையே
அதிர வைப்பதாய் இருந்தது.
ராக்ஷசர் மூச்சிறைக்க வந்து நின்ற ஜீவசித்தியைக் குழப்பத்தோடு
பார்த்தார். ஜீவசித்தி நடந்ததைச் சுருக்கமாகத் தெரிவித்து விட்டுத் தொடர்ந்து
சொன்னான். “மன்னர் பித்துப் பிடித்தது போல் இருக்கிறார். கையில்
கிடைத்ததை எல்லாம் எடுத்து எறிகிறார். யாரும் அவர் அருகே
செல்வது அவருக்கு விருப்பமில்லை போலவும் தெரிவதால் நாங்கள் யாரும் சுரங்கப் பாதையில்
இறங்க முற்படவில்லை. என்ன செய்வது என்று தெரியாததால் காவலர்கள் யாரையும் அனுப்பாமல்
நானே தங்களிடம் நிலைமையை எடுத்துச் சொல்வதற்காக விரைந்து வந்தேன்.”
ராக்ஷசர் குழப்பம்
அதிகமாக உடனே அவனுடன் கங்கைக் கரையை நோக்கி விரைந்தார். ஜீவசித்தி
உள்ளுக்குள் குதூகலித்தாலும் வெளியே கவலை உள்ளவனாகத் தன்னைக் காட்டிக் கொண்டான். தனநந்தன்
அலறி, பைத்தியம் பிடித்தவன் போல் நடந்து கொண்ட காட்சி அழியாத ஓவியமாய்
அவன் மனதில் பதிந்திருந்தது. இறந்த ஆத்மாக்கள் அனைத்தையும் காண முடிந்த நிலையில் இருந்தால்
கண்டிப்பாக அவன் தந்தையின் ஆத்மாவும், அவருடன் இறந்த மற்றவர்களின்
ஆத்மாக்களும் சாந்தி அடைந்திருக்கும் என்று அவன் நம்பினான். எந்த செல்வத்தின்
ரகசியம் வெளியே தெரியக்கூடாது என்று தனநந்தன் அவர்களைக் கொன்றானோ, அந்தச்
செல்வத்தை தனநந்தனுக்கே தெரியாமல் ஆச்சாரியர் ரகசியமாக அப்புறப்படுத்தியது சரியான நீதியாக
அவனுக்குத் தோன்றியது.
ராக்ஷசர் யாகசாலையை
அடைந்த போதும் தனநந்தன் பாதாள அறையிலிருந்து வெளியே வந்திருக்கவில்லை. காவலர்கள்
பதற்றத்துடன் யாகசாலையில் நின்றிருந்தார்கள். ராக்ஷசர் அனைவரையும்
வெளியே நிற்க உத்தரவு பிறப்பித்து விட்டு ஒரு தீப்பந்தத்தைக் கையில் பிடித்துக் கொண்டு
யாக குண்டத்தின் கீழே இருந்த சுரங்கப்பாதையில் கீழிறங்கினார். இரண்டு
கைகளையும் தலையில் வைத்தபடி அமர்ந்திருந்த தனநந்தன் அவர் வருவதை வெறித்துப் பார்த்துக்
கொண்டிருந்தான். அலறி, கொந்தளித்து, கையில் கிடைத்ததை
எல்லாம் வீசி, ஓய்ந்து முடிவில் விரக்தியுடன் சாய்ந்து அமர்ந்திருந்த அவனை
வணங்கி நின்ற ராக்ஷசர் மெல்லக் கேட்டார். “என்ன ஆயிற்று
அரசே?”
தனநந்தன் ஒன்றும் பேசாமல் இரு கைகளையும்
விரித்தான். ராக்ஷசருக்குக் குழப்பமாக இருந்தது. பன்னிரண்டு காலி மரப்பெட்டிகள் அங்கிருந்ததைக் கவனித்த போது
தனநந்தன் அவற்றில் செல்வத்தை முன்பு ஒளித்து வைத்திருந்திருக்கலாம் என்பது மெல்ல அவர்
அறிவுக்குப் புலனாகியது. அது புரிந்த பின் அந்தக் காலிப்பெட்டிகளையும், தலையில்
இடி விழுந்தது போல் உட்கார்ந்திருந்த தனநந்தனையும் பார்க்கையில் செல்வம் களவு போயிருப்பதும்
உடனே அவருக்குப் புரிந்தது. கூடுதல் தகவல்கள் எதையும் கேட்டு அவனைத் துன்புறுத்த விரும்பாமல்
அவர் அமைதியாகச் சொன்னார். “எதுவாக இருந்தாலும் நாம் அரண்மனைக்குப் போய்ப் பேசிக் கொள்ளலாம்
மன்னா. கிளம்புங்கள்”.
அவருடைய வருகையும், அவருடைய
அமைதியும் ஓரளவு அவனைத் தெளிவடைய வைத்தது. ஒன்றும்
பேசாமல் விரக்தியுடன் எழுந்த அவனை அழைத்துக் கொண்டு ராக்ஷசர் மேலே
வந்தார். ஜீவசித்தியும், மற்ற காவலர்களும்
யாகசாலை வாயிலில் பதற்றத்தோடு நின்றிருப்பதைப் பார்த்து அவர் அமைதியான கண்டிப்புடன்
அவர்களிடம் சொன்னார். “இங்கு நடந்தது எதுவும் வேறு யாருக்கும் தெரிய வேண்டியதில்லை. விஷயம்
வெளியே கசிந்தது தெரிந்தால் கசிய விட்டவர்கள் தண்டிக்கப்படுவது உறுதி”
அனைவரும் தலையசைத்தார்கள். அவர் அனாவசியமாக
வார்த்தைகளை வீசுபவர் அல்ல. அவர்கள் வெளியே வந்தவுடன் சாரதி அவசர அவசரமாக கதவை இழுத்துப்
பூட்டி சாவியை அவன் வழக்கம் போல் தனநந்தனிடம் நீட்டினான். தனநந்தன்
அவனை எரித்து விடுவது போல் ஏன் பார்த்தான் என்பது அவனுக்கு விளங்கவில்லை. ராக்ஷசர் அந்தச்
சாவியை அமைதியாக அவனிடமிருந்து வாங்கிக் கொண்டார்.
கைத்தாங்கலாக தனநந்தனைப் பிடித்து ரதத்தில்
ஏற்றி அமர வைத்த அவர், ரதம் கிளம்பியதும் தானும் குதிரையில் பின் தொடர ஆரம்பித்தார்.
(தொடரும்)
என்.கணேசன்